\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மினசோட்டா மாநிலச் செயலருடன் …

Please click here for English version

நிருபர்: வணக்கம் திரு. சைமன் அவர்களே! நலமாக உள்ளீர்களா?

செயலர்: வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்?

நி: எங்களுக்காக நேரம் ஒதுக்கிக் கொடுத்தமைக்கு நன்றி. 

செ:கண்டிப்பாக!

நி:பனிப்பூக்கள் மினசோட்டாவைத் தலைமையகமாகக் கொண்ட தமிழ்ப் பத்திரிகை. இதன் வாசகர்கள் அமெரிக்கா முழுவதும் வியாபித்து உள்ளனர். எங்களுக்காக நேரம் ஒதுக்கிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இன்றைய நாட்டு நடப்புப் பற்றி உங்களிடம் பேசலாம் என்று நினைக்கிறோம். நாட்டின் பொருளாதாரம் உயர்வு தாழ்வுகளை மாறி மாறிச் சந்திக்கின்றது என்பதை அறிவோம். மினசோட்டாவைப் பொறுத்தவரை புதிய தொழில்கள்,நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றனவா? அவை எவ்வாறு நடக்கின்றன?

செ:நான் சற்று தினங்களுக்கு முன்னர் இது குறித்த விபரங்களை மீண்டும் கூர்ந்து கவனித்தேன். மகிழ்ச்சிகரமான ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். மினசோட்டாவில் புதிய தொழில் தொடங்குவது எப்பொழுதும்போல நல்ல நிலையிலேயே நீடிக்கிறது. கோவிட்-19ஐக் கருத்தில் கொண்டு, இது பெரிய அளவில் வீழ்ச்சியடைந்திருக்குமென்றுதான் நினைத்திருப்பீர்கள், ஆனால் அப்படி அல்ல. அவை ஸ்திரமான நிலையிலேயே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. பொருளாதார ரீதியாக, இந்த பேரிடரைச் சமாளித்து வெளிவருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு குறிப்பிடும்பொழுது, பலவிதங்களிலும் துயருக்குள்ளாகியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் துயரைக் குறைத்துக் கூறுவதாக ஆகிவிடாது. பொதுவாகப் பார்க்கையில்,இந்த நிலை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

நி: ஓ, அது மிகவும் மகிழ்ச்சிக்குறிய செய்தி. கொரோனா-19 பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில்,வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் வாக்களிப்போருக்கு எந்த வகையிலான,கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன?

செ: இரண்டு முக்கியமான விஷயங்கள். முதலில்,மினசோட்டா வாக்காளர்கள் அனைவரையும் வீட்டிலிருந்தே வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.வாக்களிப்பதற்குத் தகுதியான அனைவரும் www.mnvotes.org என்ற இணையதளத்திற்குச் சென்று, பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தபின்,ஐந்து நிமிடங்களில் வாக்குச்சீட்டை வீட்டிற்கே அனுப்பி வைக்கக் கோரலாம். அதன் பின்னர்,வீட்டில் சோஃபாவிலோ டைனிங்க் டேபிளிலோ அமர்ந்தவாறே ஒரு சில தினங்களிலோ, வாரங்களிலோ, மாதங்களிலோ வாக்குப் பதிவைச் செய்யலாம். 

இந்த முறை வீட்டிலிருந்தவாறே வாக்குப் பதிவு செய்வது மேலுமொரு பொதுச் சேவையாகக் கருதப்படும். வீட்டிலிருந்தே வாக்குப் பதிவு செய்யும் ஒவ்வொருவரும், வாக்குச் சாவடிக்கு வரும் மற்ற பொதுமக்களுக்கும்,பணியாளர்களுக்கும் பாதுகாப்பைக் கூட்டியதாகவே அமையும். 

இரண்டாவதாக,பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது குறித்து பேசக் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவரையும் வீட்டிலிருந்தே வாக்குப் பதிவு செய்யக் கேட்டுக் கொண்டாலும்,சிலர் அதனை விரும்ப மாட்டார்கள் என்பது புரிகிறது. அவ்வாறு,வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்க விரும்புவர்களுக்காக,தேர்தல் தினத்தன்று, பாதுகாப்பு குறித்து பல நடவடிக்கைகள் திட்டமிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக,மினசோட்டா முழுவதுமுள்ள 3,000க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் முகக் கவசமும்,சானிடைஸரும் வைக்கப்படும். வாக்குச் சாவடிப் பணியாளர்களுக்காக மட்டுமின்றி, தேவைப்படும் வாக்காளர்களின் உபயோகத்திற்கும் இவை விநியோகிக்கப்படும். சானிடைஸர்களையும்,  துடைப்பதற்கு தேவையான வைப்ஸ்களையும் தேவைக்கேற்ப வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், வாக்குச் சாவடியிலுள்ள  பேனா, பதிவுப் புத்தகம், மேசை ஆகிவற்றைச் சுத்தம் செய்யும் முறைகளையும் தயார் செய்துள்ளோம். சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதும், அதனைக் கண்காணிக்கும் முறைகளும் கட்டாயமாக்கப்படும். எங்களால் முடிந்த அத்தனை முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனாலும்,வாக்காளர்கள் அனைவரையும்,வீட்டிலிருந்தே வாக்களிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். வாக்குச் சீட்டுக்கள் வீட்டிற்கு வந்தவுடன், அதனைப் பூர்த்தி செய்து, அவரவர்களின் வசதிக்கேற்ப, தபால் மூலமாக அனுப்பலாம் அல்லது நேரடியாக வந்து பெட்டிகளில் போட்டுவிட்டுச் செல்லலாம்,. 

நி: மிகஅருமை. வாக்குப் பதிவு தினத்தன்று,வாக்குச் சாவடிகளில் வேலை செய்பவர்களுக்கான பாதுகாப்புக்கு மாஸ்க்,சானிடைஸர், சோஷியல் டிஸ்ட்டன்ஸிங்க் போன்றவை அவசியமென்று  புரிகிறது; இவை தவிர,வேறு ஏதேனும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யவிருக்கின்றீர்களா? இவை தவிர அவர்களுக்கு கூடுதல் மருத்துவக் காப்பீடு, அல்லது கண்ணாடி திரை  போன்ற ஏதேனும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்  திட்டம் இருக்கிறதா?

செ: ஆம்,முதலிலேயே கூறியது போல், மினசோட்டா மாநிலத்திலிருந்து தேவையான மாஸ்க்,சானிடைஸர்ஸ், வைப்ஸ் போன்ற பொருட்களை தேர்தல் பணியாளர்களுக்கு வழங்குகிறோம். இவை தவிர,மத்திய அரசிடமிருந்து வரும் தொகையிலிருந்து, மேலும் சில உபகரணங்களையும் வாக்குச் சாவடிகளில் பொருத்தும் திட்டமுள்ளது. தேவையான அனைத்து பாதுகாப்புப் பொருட்களை  அனுப்புகிறோம்.  இவை போதுமான பாதுகாப்பையளிக்குமென்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும் அந்தந்தப் பகுதிகளில், நகரசபை அமைப்பினர்,  தங்களின் அதிகார வரம்பிற்குட்பட்ட வாக்குச் சாவடிகளில், வேறு பல பொருட்களையும் வழங்குவதாகச் சொல்லி இருக்கிறார்கள். சில தனியார் கடைகளும்,சில்லறை வியாபரிகளும் வைத்திருப்பது போன்ற ப்ளெக்ஸி க்ளாஸ் கவசங்களை பணியாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் வழங்குவதாகச் சொல்லியிருக்கின்றனர்.  இது, எதிர்பார்ப்பைக் காட்டிலும் கூடுதல் வசதி என்றுதான் சொல்ல வேண்டும். உங்கள் வாசகர்களுக்கு, இந்த வசதிகள் குறித்து ஏதேனும் கேள்வி இருப்பின்,அவர்களது நகரசபைக் கௌன்சில்களைத் தொடர்பு கொள்ளலாம்.

நான் ஏற்கனவே கூறியதை மீண்டும் வலியுறுத்திக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். வீட்டிலிருந்து கொண்டே வாக்களிப்பது சாலச் சிறந்தது. www.mnvotes.orgஇணைய தளத்திற்குச் சென்று,உங்களது வாக்குச் சீட்டுக்களை வீட்டிற்கே அனுப்பக் கோரி,அவற்றைப் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பது மிகவும் எளிதான,பாதுகாப்பான முறையாகும். 

நி: நீங்கள் கூறியதுபோல இந்த இணைய தளத்திலிருந்து வாக்குச் சீட்டைக் கேட்டு இன்று பதிவு செய்தால்,வாக்குச் சீட்டு வந்து சேர்வதற்கு எத்தனை நாட்கள் ஆகும்?எவ்வளவு நாட்களில் பூர்த்தி செய்யப்பட்ட வாக்குச்சீட்டைத் திரும்ப அனுப்ப வேண்டும்?

செ: ஆகஸ்ட் 11ஆம் திகதி நடக்க இருக்கும் மினசோட்டா மாநிலத்தின் வேட்பாளர் தேர்தல்களுக்கான (Primary elections) “நேரில் வரவியலாதவர்களுக்கான வாக்குச்சீட்டு” (absentee ballot) பதிவு செய்யும் வசதி  ஜூன் 26 அன்று துவங்கப்பட்டது. இணையதளத்தில் பதிவு செய்தால் இரண்டு மூன்று தினங்களுக்குள் வாக்குச்சீட்டு உங்கள் வீடுகளை வந்தடையும். பூர்த்தி செய்யப்பட்ட வாக்குச்சீட்டுக்களை அஞ்சலில் தேர்தல் நாளுக்கு முன்னர் சேர்த்துவிடவேண்டும். தேர்தல் நடந்து முடிந்த அடுத்த இரண்டு தினங்கள்வரை தபால் வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்படும். அதற்காக,கடைசி தினம்வரைக் காத்திருக்காமல் சில தினங்களுக்கு முன்னரே அனுப்பிவிடுவது உசிதமாக  இருக்கும்.

நவம்பரில் நடக்கவிருக்கும் மிகவும் முக்கியமான அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு,வாக்குச்சீட்டுக்கள் செப்டம்பர் 18ஆம் திகதியிலிருந்து அனுப்பப்படும். மீண்டும் சொல்கிறேன், நீங்கள் இன்று இணையத்தில் பதிவு செய்தீர்களானால்,வாக்குச்சீட்டு உங்கள் இல்லங்களை செப்டம்பர் 18ஆம் திகதி வந்தடையும். அன்றைய தினத்திலிருந்தே வாக்களிக்கத் தொடங்கலாம். நவம்பர் தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு ஏதுவாக இருக்கும். 

நி: வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல். நன்றி. இந்தத் தேர்தலின் வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்து,தங்களின் எதிர்பார்ப்பு என்ன?அஞ்சல் மூலமாகவும்,நேரடியாகவும் வரவிருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறீர்களா?

செ: கடந்த இரண்டு தேர்தல்கள் – 2018 மற்றும் 2016 தேர்தல்களில் – மினசோட்டா மாநில வாக்குப் பதிவு செய்தோரின் எண்ணிக்கை அமெரிக்கா முழுமைக்கும் முதலிடம் வகித்தது. இந்தத் தேர்தலிலும்,மிக அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வாக்குப் பதிவிடுவர் என எதிர்பார்க்கிறேன். கடந்த அதிபர் தேர்தலில்,மினசோட்டா வாக்காளர்களில் கிட்டத்தட்ட 74.7% பேர் வாக்குப் பதிவு செய்திருந்தனர். இது நாட்டிலேயே முதலிடம். வரும் தேர்தலிலும் அவ்வாறிருக்குமா என்று கணிப்பது கடினம்,ஆனால் முதல் மூன்று இடங்களில் இருப்போம் என்று எதிர்பார்க்கலாம். மினசோட்டா மக்கள் தேர்தலையும்,வாக்களிப்பையும் முக்கியக் கடமையாகக் கருதுகின்றனர். நமது சட்டங்களும் வாக்களிப்பதை ஊக்குவிப்பதாகவும்,வாக்காளர்களுக்குப் பாதுகாப்புத் தரும் விதமாகவும் அமைந்திருப்பது அதற்கு ஒரு காரணம் எனலாம். இப்பொழுது இருக்கும் நாட்டு நடப்பு,மற்றும் அதிபர் தேர்தலுக்கான முக்கியத்துவம் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்பொழுது, இந்த முறையும் வாக்குப் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவே இருக்கும் என நினைக்கிறேன்.

எங்களின் தயார் நிலை குறித்த உங்கள் கேள்வி மிக முக்கியமான பிரச்சனையை முன்னிறுத்துகிறது. இந்த முறை மிக அதிகமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் அஞ்சல் முறையில் வாக்களிப்பர் என்று நான் நம்புகிறேன். இது வாக்குச் சாவடிகளின் பாரத்தைப் பெருமளவு குறைப்பதாக அமையும். குறைந்த அளவு வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குச் சென்றால்,வரக்கூடிய பிரச்சனைகளும் குறைந்த அளவாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் அஞ்சல் மூலம் வாக்குக்களைப் பெறுவதிலும் பிரச்சனைகள் வரக்கூடும். அதனால்தான்,அஞ்சல் மூலம் வாக்களிக்கத் திட்டமிட்டிருக்கும் வாக்காளர்களை அக்டோபர் மாதம்வரைக் காத்திருக்காமல்,இப்பொழுதே அனுப்பக் கோருகிறேன். இப்பொழுதே, கோடைகாலம் முடிவதற்குள் அனுப்பி வைக்கவும். www.mnotes.orgஇணைய தளத்திற்கு இன்றே சென்று,உங்களது வாக்குச்சீட்டைப் பெறுவதற்குப் பதிவு செய்யவும். 

பெருமளவு வாக்குகள் ஒரே நேரத்தில் எங்களை வந்தடைவதைக் குறைத்து,அவற்றை இப்போதிலிருந்தே சிறிது சிறிதாக கையாள்வதே எங்களின் திட்டம். பொதுமக்கள் பெருமளவு எண்ணிக்கையில் இப்பொழுதே இது குறித்து விசாரிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிகரமான விஷயம். ஆனால் இந்த வாக்குக்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக, கடைசி நேரத்தில் எங்களை வந்தடையாமல் இருப்பது நல்லது. இறுதிநாட்களில் கட்டுக்கடங்கா அஞ்சல் வாக்குகளைக் கையாள்வது  பெருமளவு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக்கூடும்.

உங்கள் வாசகர்களை நான் கேட்டுக் கொள்வது இதுதான்; 

வாக்காளர் தேர்தலுக்கான அவர்களது வாக்குகளை இப்பொழுதே அனுப்பி வைக்கலாம். அதிபர் தேர்தலுக்கான வாக்குகளை செப்டம்பர் 18  முதல்  அனுப்பத் தொடங்கலாம். அவர்களுக்குத் தாங்கள் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளும் உரிமையும் உள்ளது. அதாவது, அஞ்சல் மூலம் வாக்களிக்க  இணையதளத்தில் பதிவு செய்து,பின்னர் கொரோனாவின் தாக்கம் குறைந்து நிலைமையில்  மாற்றம் தெரிந்தால்  வாக்குச் சாவடிகளுக்கே சென்று வாக்குப் பதிவு செய்யலாம் என்று நினைத்தால், தேர்தல் தினத்தன்று வாக்குச் சாவடிக்கே சென்று வாக்கைப் பதிவு செய்யலாம். இன்று அஞ்சலில் வாக்கிடுவது என்று முடிவு செய்தால், அந்த முடிவை மாற்ற இயலாது என்று நினைக்க வேண்டாம். 

நி:  ஓ, அது மிகவும் பயனுள்ள செய்தி. ஆனால்,வாக்களர்களுக்கு அந்த உரிமை இருப்பதுபோல் தேர்தல் பணியாளர்களுக்கும் தேர்தல் பணிக்கு வர இயலாது என்று கூறும் உரிமை உள்ளதா? 

செ: இல்லை.

நி: அவர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது?அவர்களுக்கு விருப்பமில்லாத சூழ்நிலையில் விடப்பட்டதாக எண்ணுகிறார்களா… 

செ: ஆம். மினசோட்டாவில் தேர்தல் நடத்துவதற்கு கிட்டத்தட்ட 30,000க்கும் மேலான பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.. சாதாரணமாக இந்த வேலைக்குப் பணியாளர்களை நியமிப்பதில் எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. ஆனால் இந்த முறை சில சவால்களைச் சந்திக்க வேண்டிவரும் என்று நினைக்கிறேன், நீங்கள் கூறியதுபோல,இதற்கான காரணங்கள் அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக தேர்தல் நடுவர்கள் (election judges) பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களாக,பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களாக இருப்பதால்,கோவிட்-19 பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமுள்ளவர்களாக இருப்பதால், இந்த முறை தேர்தல் பணிகளுக்கு வர மறுக்கக்கூடும். அதுபோன்றவர்களின் இடங்களை நிரப்ப தேவையுள்ளது. இதுபோன்ற இடங்களை நிரப்ப,இரண்டு விஷயங்களைத் தெளிவாக்க விரும்புகிறேன்:

  1. வாக்காளர்களை வீட்டிலிருந்தே வாக்களிக்குமாறு ஊக்குவிப்பதன் மூலம், வாக்குச் சாவடிகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைக்க முடியும் என்று நம்புகிறோம். இதன் மூலம், தேவையான தேர்தல் பணியாளர்களின் எண்ணிக்கையையும் குறைக்க இயலும். இதனையொட்டி நடைபெறும் இதரச் சேவையாளர்களின்  எண்ணிக்கையையும் பெருமளவு கட்டுப்படுத்த முடியுமென நம்புகிறோம்.
  2. பாதுகாப்புப் பொருட்கள் அனைத்தும் தேவையான அளவுக்கு வைக்கப்பட்டிருக்கும். மினசோட்டா அரசாங்கமும்,மத்திய மற்றும் நகர அரசாங்கங்களும் சேர்ந்து, இப்பொருட்களைத் தேவையான அளவுக்கு வைத்திருப்பதால்,வாக்குச் சாவடிகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்க இயலுமோ அந்த அளவுக்குப் பாதுகாப்புச் செய்யப்படும் என்பது உறுதி. 

இந்த இரண்டு விஷயங்களும்,பெரும்பாலானவர்களைப் பாதுகாப்பாகக் கருத வைக்கும் என்று நம்புகிறோம். தவிர,இன்னொரு விஷயத்தையும் தெளிவாக்க நினைக்கிறேன். மினசோட்டாவைப் பொறுத்தவரை, தேர்தல் பணி செய்பவர்களுக்குச் சம்பளம் உண்டு. பலரும் இது தன்னார்வலர் சேவை என்று நினைக்கிறார்கள். அது தவறு. இதற்குச் சம்பளம் உண்டு,இரண்டு மணி நேரம் பயிற்சி எடுத்தால் போதுமானது,மிகவும் கடினமான வேலையும் இல்லை. 

 நி: மிகவும் உபயோகமான தகவலுக்கு நன்றி. மற்றுமொரு கேள்வி. ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தால்,மக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டிருப்பது நாமறிந்ததே. இதற்காக,ஏதேனும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

செ: முக்கியமான சவால் என்னவென்றால்,மினசோட்டா சட்டத்தின்படி,சட்ட அமலாக்கப் பிரிவைச் (காவல் துறைபோன்ற) சார்ந்த ஒருவரும் வாக்குச் சாவடிகளுக்கு அருகில் இருக்கக் கூடாது. பலப் பல வருடங்களாக மினசோட்டாவில் நடைமுறையில் இருந்துவரும் சட்டமிது.  இவ்வகை நடவடிக்கைகள் ஒருசில வாக்காளர்களை மிரட்டும் விதமாக அமைந்துவிடும் என்ற காரணத்தினால் இவை தவிர்க்கப்படுகின்றன. சட்ட ஒழுங்கைப் பாதிக்கும் அசம்பாவித சம்பவங்கள்  நடக்குமெனில் காவல் துறையை வரவழைக்கலாம்,அதுபோன்ற எதுவும் நிகழாத நிலையில்,காவல் துறையையோ, இராணுவத்தையோ வாக்குச் சாவடிகளைச் சுற்றி நிறுத்தி வைப்பதை சட்டம் அனுமதிப்பதில்லை.

பொதுவாக அது போன்ற எந்த அசம்பாவிதங்களும் மினசோட்டாவில்,தேர்தல் காலங்களில்,நிகழ்ந்ததில்லை. இப்பொழுதும் அதுபோன்று நிகழாதென்று எனக்கு நம்பிக்கை உள்ளது. குறிப்பாக,அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பலருக்கும் தேர்தல் நல்ல விளைவுகளைத் தரும் ஒரு வழி என்பது புரிந்த விஷயம். தேர்தலில் குழப்பம் விளைவிப்பது அதுபோன்ற நல்ல விளைவு வருவதைத் தடுக்கும் விதமாக அமையும் என்ற கருத்து அனைவரையும் மிக நன்றாக அடைந்துள்ளதாக நம்புகிறேன். 

நி:மிகவும் பயனுள்ள கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. உங்களின் சொந்தப் பாதுகாப்புக் குறித்து.. இந்தப் பணி நீங்கள் வீட்டிலிருந்து கொண்டே செய்யும் பணியல்ல,பல ஊர்களுக்கும் பயணிப்பதைத் தவிர்க்க இயலாது. எந்த வகையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்கிறீர்கள்?எவ்வளவு பயணங்களை மேற்கொள்கிறீர்கள்?

செ: கோவிட்-19க்கு முன்னர்,மாநிலம் முழுவதும் மிக அதிக அளவில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு வருடமும்,87 மாவட்டங்களுக்கு (county) பயணம் மேற்கொள்வேன். அதனை ஒரு பெருமையாகவே கருதுகிறேன். ஆனால்,இந்த வருடம் அதனைச் செய்ய இயலவில்லை. முடிந்த அளவு ஆன்லைன் தொடர்பிலும்,கூட்டங்களிலும் எனது பணியைச் செய்கிறேன். தனிப்பட்ட முறையில்,எல்லா இடங்களுக்கும் பயணம் செய்வது என்பது பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்குப் போவதே பெருமளவு குறைந்துள்ளது. இந்த நிலை குறிப்பாகப் பணியிடம் குறித்து என்னுடைய கண்களைத் திறந்துள்ளது எனலாம்; பலரின் கண்களையும் திறந்துள்ளது என்பதே உண்மை. ஒரே இடத்தில் ஒன்றாக இல்லாவிடினும்,ஒரே குழுவாகச் செயல்படுவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் எங்களால் முடிந்த அளவு எடுத்துக் கொண்டிருக்கிறோம். உலகத்தில் அனைவரும் இதே நிலையில் உள்ளனர் என்று நினைக்கிறேன்.

நி: இன்று நிலவும் கோவிட்,மற்றும் பல சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு,இந்தத் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு எனக் கூற இயலுமா?

செ: ஒத்தி வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் பூஜ்யத்துக்கு மிக அருகாமையான அளவே. தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதற்கு,அதிலும் குறிப்பாக அதிபர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதற்கு,காங்கிரஸ் சட்டத் திருத்தமொன்றிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அது நடக்குமென எனக்குத் தோன்றவில்லை. அவ்வப்பொழுது தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்ற வதந்தியோ அச்சுறத்தலோ கேட்டிருக்கக் கூடும். ஆனால்,அது நடப்பதற்கான சாத்தியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதனால்,நம்முடைய நேரத்தையும் கவனத்தையும் நவம்பர் மூன்றாம் தேதி வரவிருக்கும் தேர்தலை எதிர் கொள்வது எப்படி என்பதில் செலவிடுவதே அனைவருக்கும் நல்லது.

நி:நன்றி பல. உங்களது வேலைப்பளுவுக்கு மத்தியில்,எங்களுக்கு நேரமளித்து அனைத்துக் கேள்விகளுக்கும் விளக்கமாகவும்,பொறுமையாகவும் பதிலளித்தமைக்குப் பனிப்பூக்களின் வாசகர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

செ:உங்களுக்கும் எனது நன்றி. உங்களது வாசகர்களுக்கு,தேர்தலுக்கு முன் வேறேதேனும் கேள்விகள் கேட்கவேண்டுமெனில் தயக்கமில்லாமல் அணுகவும். அந்தக் கேள்விகளுக்கு விடையளிப்பதும் எனது கடமை. நன்றி. 

பேட்டி: பிரபு ராவ்

தமிழாக்கம்: வெ. மதுசூதனன்.

 

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad