மலேசியாவின் $100 பில்லியன் காட்டு நகரம்
சிங்கப்பூர் கரையோரம் சீனாவின் நிதியுதவியுடன் மும்முரமாகக் கட்டப்பட்டு வந்த அமெரிக்க $100 பில்லியன் பெறுமானம் வாய்ந்த காட்டு நகரம் (Forest City) எனப்படும் புதிய நகரம் கொரோனா தொற்று நோய்காரணமாகப் பிற்போடப்பட்டுள்ளது.
இந்த நகரம் பிரதானமாக சீன விருப்புக்கேற்ப நான்கு தீவுகளை இணைத்து மலேசிய ஜோஹோர் மாநிலத்தில் அமைக்கப்பட்டது. புதிதாக அமைத்து வரப்படும் கட்டடங்களை சிங்கப்பூர் மற்றும் சீன முதலீட்டாளர்களுக்கு விற்பதில் எதிர்பார்த்தளவுக்கு வரவேற்பு கிடைக்காமல் ஆர்வம் குன்றியே காணப்படுகிறது.
காட்டு நகர அல்லது காட்டுப்பட்டண உருவாக்கத்தில் மலேசிய அரசு 2012 தொடங்கி திட்டமிட்டு அமைத்து வருகிறது. இதுவரை ஏறத்தாழ $4 பில்லியன் (RM 17 பில்லியன்) செலவழித்து உள்ளூர் சமூகத்தைக் கட்டியெழுப்ப முனைந்துள்ளது என்பது இவ்விடம் குறிப்பிடத்தக்கது. இதை விட மலேசிய உள்ளூர் கம்பனிகளுக்கு $340 மில்லியன் பெறுமானமுள்ள வேலைகளையும் தந்து, இந்த முயற்சி மூலம் $70.2 மில்லியன் வருமான வரியையும் மலேசிய தேசிய அரசும் ஜோஹோர் மாநிலமும் பெற்றுள்ளது.
கொரோனாவின் தொடக்கம் முதலிலிருந்தே இந்தக் கட்டட கண்காட்சிக்கு வரும் முதலீட்டாளர்கள் படிப்படியாகக் குறைந்து வர , இன்று வருபவர் தொகை 90 சதவீதம் குறைந்து வெறிச்சோடிப்போய் உள்ளதாம். மார்ச் மாதத்துக்கு முன்பு வரை உற்சாகமாகவிருந்த முதலீட்டாளர்கள், தொற்று நோயின் பரவலுக்குப் பின்னர் உலகளவிலான பொருளாதார மாற்றங்களால், தொடர்ந்து இதுபோன்ற புதிய நகரக் கட்டடங்களில் தமது பணத்தை முதலீடு செய்யத் தயங்குகின்றனராம்.
இந்த காட்டுப் பட்டணமானது மூன்றில் இரண்டு பகுதி சீன பாரிய சொத்துரிமைத் தாபனமான கண்ட்ரி கார்டன் (Country Garden) என்பதன் உரிமை. மீதி முன்றில் ஒரு பகுதியை மலேசிய ஜோஹோர் சுல்தான் இப்பிராஹீம் இஸ்மாயில் மேலாண்மையில் உள்ள உள்ளூர் தாபனமொன்று உரிமை கொண்டாடுகிறது.
சிங்கப்பூரின், கடலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட செந்தோசா தீவைக் (Sentosa Island) காட்டிலும் ஏறத்தாழ மூன்று மடங்கு பெரியதாகும் இப்பட்டணம். நான்கு தீவுகளால் உருவாக்கப்பட்ட இந்தப் பட்டணம் சுமார் 1,740ஹெக்டேர் நிலப்பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. வேலை, பொதுவாழ்வு, வர்த்தகம், தொழிற்சாலைப்பிரதேசங்கள் என பிரிவுகளையும் உள்ளடக்கியது. மக்கள் சிங்கப்பூரிலிருந்து வந்து தங்கிப் போக, விருந்தோம்பல் சௌகரியக் குறிக்கோளைப் பிரதானமாகக் கருத்தில்கொண்டு அமைக்கப்பட்டது இந்தக் காட்டுப்பட்டணம் .
குறிப்பாக வாழ்க்கைச் செலவு அதிகமான சிங்கப்பூரிலிருந்து வெளியேறி செலவு குறைந்த மலேசியாவை நோக்கி நகர எண்ணுபவர்கள் , அதே சமயம் பெருநகர வாழ்க்கையைப் பேண விரும்புவோருக்கு இந்தப் பட்டணம் கவர்ச்சியாக அமையும் எனும் பெரும் எதிர்பார்ப்புடன் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பட்டணம் 2035இல் 700,000 புதிய குடியிருப்பாளர்களை எதிர்பார்க்கினும் 2019 இறுதியில் சுமார் 15,000 முதலீட்டாளர்களையே வரவேற்றது. இந்தப் பட்டண அமைப்பு 8 கட்டங்களைக் கொண்டது. இதுவரை முதலாவது கட்டம் முடிந்து இரண்டாவது கட்டத்தை அணுகியுள்ளது. வசதியுள்ள உள்ளூர், மற்றும் சிங்கப்பூர்,இந்தோனேசிய,வியட்னாம்,தென் கொரிய,யப்பானிய, தாய்வான், ஹொங்கொங் முதலீட்டாளர்களும் இங்கு வந்து தங்கக்கூடும் என்று மலேசிய அரசு எதிர்பார்க்கிறது.
காட்டுப்பட்டணத்தின் முதல் தீவில் ஏற்கனவே மக்கள் குடியேறி வாழுகிறார்கள். இது 5 நட்சத்திர விடுதிகள், தொழிலுற்பத்தி கட்டடங்கள், சர்வதேச பள்ளிக்கூடம், மற்றும் 100 சில்லறைக்கடைகள் கொண்ட வர்த்தகப்பிரதேசங்களைக் கொண்டுள்ளது. மேலும் சீன தொழில்நுட்ப, தொடர்பு சாதனக் நிறுவனமான ஹுவாவே டெக்னாலஜி (Huawei Technologies) உதவியுடன் காட்டுப் பட்டணம் முழுவதும் ‘அனைத்திலும் இணையம்’ ( Internet of things IoT) எனும் நவீன தொழில்நுட்பம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காட்டுப் பட்டணத்தின் இரண்டாவது தீவில், கடலிலிருந்து நிலத்தை மீட்டெடுத்து உருவாக்கும் பணி தொற்று நோய் சார்பான ஊரடங்குகளால் பாரிய அளவில் பின் தங்கியுள்ளது. இரண்டாம் தீவு கட்டவேலை 2000 ஏக்கர்கள் கொண்ட மத்திய வர்த்தக, மற்றும் உல்லாசப் பிரதேசங்களைக் கொண்டு அமையவுள்ளது. இத்துடன் விளையாட்டரங்கு, மத்தியப் பூங்கா, வைத்தியசாலை மற்றும் படகு முனையம் ferry terminal போன்றவற்றைக் கொண்டிருக்கும்.
இவை யாவும் முன்னேற்றமாகக் காணப்படினும் சிங்கப்பூர் முதலீட்டு வங்கிகளின் அனுமானிப்பில், பிரதான கட்டடச் சொத்து உருவாக்குபவர்கள் (property developers) தமது முதலீட்டுகளை நிறுத்தி வைத்து, தங்களது தற்போதைய சொத்துக்களைக் காசாக்குவதில் நாட்டம் காட்டி வருகிறார்கள். மலேசிய தேசிய சொத்துத் தகவல் தாபனத்தின் படி Malaysia’s National Property Information Center (NAPIC) புதிய முதலீடுகள் 2018இல் இருந்து இறங்குமுகத்தில் உள்ளது. இது 2019 இல் மேலும் 9.2% சதவீதம் குன்றியது. இதனால் 2019 இல் வெறும் 59,968 தனிப்பட்ட வீடுகளே விற்கப்பட்டன.
இந்தாண்டின் முதல் ஆறுமாதங்களில் மனை விற்பனை வெகுவாகக் குன்றியே காணப்படுகிறது. இது 2020 இறுதியில் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய அரசு தனது வீட்டு உரிமை (Home Ownership) எனும் வர்த்தகப் பிரச்சாரத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் மக்களை காட்டுபட்டணம் நோக்கி நகர்த்தலாம் என எதிர்பார்க்கிறது. எனினும் வீட்டுக் கடன்களில் மலேசியர் ஏற்கனவே அதிகளவு கடனில் உள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன. சாதாரண மலேசிய மக்கள், வெளி நாட்டவரைக் காட்டிலும் இந்த கட்டடங்களை வாங்கும் பொருளாதார வசதியில் உள்ளார்களா என்பது மிகப் பெரிய கேள்வியே!
- ஊர்க் குருவி
உச்சாந்துணைகள்
- https://www.forestcitycountrygarden.com.my/
- Chinese Companies Are Worse at Business Than You Think https://foreignpolicy.com/2019/11/21/malaysia-china-forest-city-development-project/
- Malaysia’s Forest City to hand over more than 20,000 residential units this year as it unveils new golf course – South China Morning Post, September 9, 2019
- A would-be city in the Malaysian jungle is caught in a growing rift between China and its neighbors https://www.washingtonpost.com/world/asia_pacific/a-would-be-city-in-the-malaysian-jungle-is-caught-in-a-growing-rift-between-china-and-its-neighbors/2018/09/10/d705cb18-b031-11e8-9a6a-565d92a3585d_story.html
- Homeownership Schemes in Malaysia for First Homebuyers, Tan Teck Hong
Tags: Forest City, Malasia