\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சுமை தாங்கி

Filed in கதை, வார வெளியீடு by on August 2, 2020 0 Comments


“வாங்க,வாங்க”என்று பாசத்துடன் வரவேற்ற பெற்றோரைப் பார்த்து நெகிழ்ந்து போனாள் ராதிகா .தன் இரு பிள்ளைகளையும் காரிலிருந்து இறக்கி வாடகையைக் கொடுத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.”எல்லோரும் சௌக்யமா? மாப்பிள்ளை வரவில்லையா? எப்படி இருக்கிறார்?”என்று கேட்ட அப்பாவின் அன்பான கேள்விகளின் பதிலுக்கு ‘எல்லோரும் நலமே’ என்று தலையசைத்தாள் நந்திதா.

“வா! காபிகுடி, டிபன் சாப்பிடு, களைத்து போய் வந்திருப்பே, வெந்நீரில் குளிச்சுட்டு வாங்க’ என்று இரு பேரன்களையும் கட்டியணைத்தபடி கூறினாள் அம்மா. இந்த வீட்டில்தான் எத்தனை மகிழ்ச்சி அலைகள்,.இதிலிருந்து ஒரு துளியாவது என் வீட்டிலும், என் மனதிலும் தெளிக்கக்கூடாதா? இறைவா! என மனதிலேயே வரம் கேட்டாள் நந்திதா.

காபி, டிபன் முடிந்தவுடன், குழந்தைகளை, தோட்டத்தைக் காட்ட வேலைக்காரன் கூட்டிச்சென்றான்.
சொத்துகளையும் சொந்தங்களையும், பற்றி அம்மா பேசிக்கொண்டிருந்தாள். நந்திதாவின் தங்கையும், அண்ணனும் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர். கோயம்புத்தூருக்கு அருகில் கொச்சின் இருப்பதால்தான் அன்பு மகள் நந்திதா ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது அம்மா அப்பாவைக் காணவந்துவிடுவாள்…

எம்.ஏ., எம்.பில் ஆங்கிலம் படித்து லெக்சரராகப் பணிபுரிந்த, மூன்றே மாதத்திற்குள் நந்திதாவிற்கு திருமணம் நடந்துவிட்டது. கணவர் ரவிரஞ்சன் கொச்சினில் இருதய மருத்துவ நிபுணர்… தனது உழைப்பினாலும், திறமையினாலும் சிறுவயதினிலேயே பிரபலமடைந்து பெயர் பெற்றவர். ராஜ்பவனைப் போல பங்களா, விதவிதமான கார்கள், வேலை ஆட்கள், தோட்டங்கள்… ஆனால்…. மகிழ்ச்சி….! எங்கே தொலைந்துவிட்டது? நந்திதா மனதில் குமுறுகிறாள்.

ரவிரஞ்சனின் அடுத்த பங்களாவில் தான், டாக்டர் ரமாசந்திரன் இருக்கிறாள். இருவரும் நல்ல நண்பர்கள். தொழில்ரீதியாக, ஒரே மருத்துவமனையில் பணிபுரிபவர்கள்……. . இப்படித்தான் நந்திதா நினைத்தாள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் நடவடிக்கை நட்பின் எல்லையைத்தாண்டி வேறுவிதமாகத் தென்பட்டது . ஹோட்டல், கடைகளில் இருவரையும் கண்டு நந்திதா அதிர்ச்சியுற்றாள். இதைப் பற்றி ரவியிடம் கேட்டதில்… ‘நாங்க காதலர்களாக இருந்தவர்கள்… பெற்றோர்களின் சந்தோஷத்திற்காக உன்னை, மணந்து கொண்டேன்.. இது பற்றி அவளது கணவனுக்கே தெரியும், நீயும் கண்டுகொள்ளாதே !” என்று நல்ல காரியம் செய்வதுபோல், உபதேசித்தான். அன்று தலையில் விழுந்த இடிதான், நந்திதா இன்றுவரை அதிலிருந்து எழுந்திருக்கவில்லை.

“என்னம்மா, ஒரு மாதிரியா இருக்கே? உடம்பு சரியில்லையா? அப்பாவின் கேள்வியைக்கேட்டு இந்த உலகத்திற்கு வந்தாள் நந்திதா.

“ஒன்றுமில்லை அப்பா, நான் நல்லாத்தான் இருக்கிறேன்” என்றவள்.
கையில் உள்ள கைபேசி ஒலிக்க “ஒரு நிமிடம் அப்பா” என்று தோட்டத்திற்குள் ஓடினாள் நந்திதா.

“ஹலோ.. நந்திதா எப்படியிருக்கே? எப்ப வந்தே? அப்பா, அம்மா, பசங்கள், எல்லோரும் நலமா? என்று அக்கறையுடன் விசாரித்தாள் அவளின் உயிர்தோழி வசந்தி.

“வசந்தி, உன்னுடன் நிறைய பேசணும், நம்ப கூட்டத்தோடு ஆர்.எஸ், புரம் பார்க்கிற்கு இன்று மாலை ஐந்து மணிக்கு கட்டாயம் வந்துவிடு” என்றாள்.

வசந்தி “எதற்கும் அவசரப்படாதே நந்து. எவிடென்ஸ் எதாவது கிடைக்குமான்னு பாரு” போன் கட்டாகிவிட்டது. நந்திதா, வசந்தி, மஞ்சு, ரீனா கபூர் நால்வரும் பத்தாம் வகுப்பிலிருந்து, பல்கலை கழகம்வரை சேர்ந்து படித்தவர்கள். நல்ல தோழிகள். வசந்தி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வைஸ்பிரின்சிபாலாக பணி புரிபவள், ரீனா கபூர் வடநாட்டுப் பெண். தமிழ்நாட்டில் வளர்ந்து, தரமான உயர்கல்வியால், ஓர் போலீஸ் அதிகாரியாக, பணிபுரிபவள். தமிழை நேசித்து, பெற்றோரின், சம்மதத்துடன், தமிழனைத் திருமணம் புரிந்து அவதிபடுகிறாள். மஞ்சு, ஒரு தனியார் நிறுவனத்தில் எம்.டி.யாகப் பணிபுரிபவள். நந்திதா கோவை எப்போது வந்தாலும் அவளைக் காண வசந்தி லீவ் போட்டுவிட்டு வந்து விடுவாள்

நந்திதா, தன் ரூமிற்குச் சென்று, கணினியை ஆன் செய்தாள். ரவியின் மெயிலைத் தேட ஆரம்பித்தாள். நான்கு நாட்களுக்கு முன்புதான், மிகவும் சிரமப்பட்டு ரவியின் பாஸ்வேர்டைக் கண்டுபிடித்திருந்தாள். மெயிலைத் திறந்து பார்த்தாள். எதுவுமில்லை. ஸ்பாமில் தேடினாள் .அவள் நினைத்தபடியே ஓர் கடிதம் இருந்தது. அதை ஆவலுடன் படித்தாள் ..

‘அன்புள்ள தாத்தாவிற்கு எனது வங்கியில் அடுத்த வாரம் மூனார் செல்லலாம் என்றிருக்கிறோம்’ என்று தங்கும் விலாசம் தந்து அவனையும் அழைத்திருக்கிறாள்.

“அடிப்பாவி அடுத்தவரின் குடும்பத்தை அழிப்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி உனக்கு? நந்திதா நினைக்கும்போதே மொபைல் அடித்தது.

“என்ன! நந்திதா கண்டுபிடிச்சுட்டியா! கொலம்பஸ் கண்ணா, என் பேரனின் கடிதத்தை? வஞ்சகச் சிரிப்புடன் ரவியின் ஃபோன் கட்டானது.

நந்திதா வழக்கம் போல் வசந்திக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னாள். அதற்கு வசந்தி ‘அவசரப்படாதே, மாலையில் பேசுவோம்’ என்றாள். நந்திதாவிற்கு விஷயத்தை அப்பா அம்மாவிடம் கூறலாமா? வேண்டாமா? ஒரே குழப்பமாயிருந்தது. மனம் தவித்தது. வேண்டாம், வேண்டாம்.. வயதான காலத்தில் அவர்களின் நிம்மதியை அவள் கெடுக்க விரும்பவில்லை. அப்பாவும், அம்மாவும் குழந்தைகளுடன் மருதமலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நந்திதா அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டாள்.
.
ஐந்து மணிக்கு நந்திதா சொன்னபடி மூன்று தோழிகளும் சந்தித்தனர். நால்வரும் சேர்ந்து காபி சாப்பிட்ட பின் பார்க்குக்கு வந்துசேர்ந்தனர்

நந்திதா வசந்தியைக், கண்டவுடனேயே கட்டி அணைத்துக்கொண்டு கண்கலங்கினாள்.. “பைத்தியமே! வருத்தப்படாதே!” என வசந்தி அன்புடன் கூறினாள்.

ரீனாவும், மஞ்சுவும் நந்திதாவைக் கட்டி அணைத்தனர். “வசந்தி எல்லாம் சொன்னாள். என்ன செய்யப்போறே?” கொஞ்சும் தமிழில் ரீனா கேட்டாள்

“டைவேர்ஸ் தான்..” குறுக்கே பேசினாள் மஞ்சு!

“சற்று அமைதியாய் இரு அவளைச் சிந்திக்க விடு” வசந்தி கூறினாள் .மேலும் போலீசுக்கோ, கோர்ட்டுக்கோ கொண்டு செல்ல, உன் கணவன். சிட்டியில் உள்ள பிரபலமான ஒருவர் என்பதை மறந்துவிடாதே ” என்றாள்.

ரீனா சொன்னாள் “வசந்தி சொல்வது உண்மைதான், இதைப் பொறுமையாகத் தான் சமாளிக்கவேண்டும்.” அடடா! எவ்வளவு நல்ல நாடு ஒரு பேராசிரியரும், ஒரு பெண் போலீஸ் அதிகாரியும் எவ்வளவு பாதுகாப்பு தறாங்க, மஞ்சு கேலியாகச் சிரித்தாள் .

“மஞ்சு நீ கல்யாணம் ஆகாதவ, உனக்கு எதுவும் தெரியாது .உனக்காவது கணவன் ஸ்ரீராமனைப்போல வரட்டும்” என்றாள் ரீனா.

“அம்மாதாயே! மனைவியைச் சந்தேகப்படும ராமனும் வேண்டாம், ராச க்ரீடை புரியும் கிருஷ்ணனும் வேண்டாம், உங்களை எல்லாம் பார்த்த பிறகு எனக்கு கல்யாணமே வேண்டாம்” என தீர்மானிச்சுட்டேன்”. என்றாள் மஞ்சு.

“அப்ப இந்த ஔவையார் எந்த இலக்கியம் எழுத போறாளோ?” வசந்தியின் கிண்டலுக்கு எல்லோரும் சிரித்துவிட்டனர்.

வசந்தி நந்திதாவின் முதுகைத் தழுவியபடி “நந்து, நீயோ படித்தவள், வேலைக்கு போ சற்று அமைதி கிடைக்கும் போலீஸ் அதிகாரியான ரீனாவே கஷ்டத்தை அமைதியாகச் சமாளிக்கிறா, அவளுடைய கணவனின் அமில சொற்களைத் தாங்கி கொண்டு எத்தனை பணத்தை புகுந்த வீட்டிற்கு வாரிகொடுத்திருக்கிறாள் .

“ஆமாம்,அன்று சுதந்திர தின விழாவில் இந்த அம்மா பெண் விடுதலை பட்டிமன்றத்துக்குத் தலைமை தாங்கி கொண்டிருந்தபோது அவள் கணவன் மொபைலில் தேளைப்போல இவளைக் கொட்டிக் கொண்டிருந்தார் .ரொம்ப நல்லா இருக்கு பெண் விடுதலை !!” மஞ்சு சீண்டினாள்.

“அது தான் வாழ்க்கை” என்றாள் வசந்தி.

“நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு போலி வாழ்க்கை வாழ்வதைவிட நம் சம்பாத்தியத்தில் நாமும் சந்தோஷமாக இருந்து, நாலு ஏழை மக்களுக்கு உதவி செய்து வாழலாமே ! எல்லா சம்பளத்தையும் வீட்டுக்குக் கொட்டி, அந்த நன்றியைக் கூட நினைக்கத் தெரியாத ஒரு அரக்கனிடம் கல்யாணம் என்கிற பெயர்ல் மாட்டிக்கொண்டு நினைக்கவே வேதனையா இருக்கு” என்று சொல்லிக்கொண்டே மஞ்சு தொடர்ந்தாள்….

“ரீனா மாதிரி போலீஸ் அதிகாரிகள் இருக்கிறதினால்தான் தில்லியில் தினம் தினம் பெண் கொடுமைகள் நடந்துவருகிறது .தப்பு பண்றவர்களுக்கு கடும் தண்டனை துபாய் நாட்டைப் போல குடு, ஐந்து வயது சிறுமி வெளியில் நிம்மதியாக விளையாட முடியாத சூழ்நிலை, சீச்சி. பொது இடங்களில் பீடி சிகரட் ஊதினால் அபராதம் போடு. நாட்டுக்கும் பணம் வரும், உடம்பும் கெடாமல் இருக்கும். இங்க தான் டாஸ்மாக்கை அரசே நடத்தி வருகிறதே? எல்லா சேனல்களிலும் பெரிய சினிமா நடிகர்களின் மூலமாக புகையிலை, குடியினால் வரும் தீங்குகளை பற்றி அடிக்கடி விளம்பரம் கொடு டிவி மிக்சி கொடுப்பதற்கு பதிலாக தரமான கல்வி கொடு, நாடு முன்னேறும்”…ஆவேசமாகப் பேசினாள் மஞ்சு.

மஞ்சுவின் தோளில் கைவைத்தபடி ரீனா கூறினாள் “அடியே! மஞ்சு ! இதற்கெல்லாம் அரசோ, போலீசோ பொறுப்பேற்க முடியாது. மனிதன் தானாகத்தான் திருந்தவேண்டும். அவனுடைய தாய், தந்தை, நண்பர்கள்l வளர்ந்த சூழ்நிலை… இப்படி பல காரணங்கள் அவன் குணத்துடன் சேர்ந்துவிடும்.. எந்தப் பள்ளிக்கூடத்திலும், பல்கலைக் கழகங்களிலும் தீயவனாக மாற்றும் கல்வி சொல்லித்தரப்படவில்லை .தாயை மதிப்பவன் பெண்களை மதிப்பான் .தாயே இல்லாமல் வளர்பவர் கூட பெண்ணை அதிகம் நேசிக்கும் பழக்கம் வைத்திருப்பார்கள். காந்தியடிகள் வைஷ்ணவ ஜனதோ பாடலில் உள்ள மற்ற பெண்களைத் தாய்மார்களாகப் பார் என்ற பொருளை எவ்வளவு வலிவுறுத்தியிருக்கிறார். சில தனி மனிதர்கள் மிருகத்தைவிட கீழ்த்தனமா நடந்துக்கொண்டால் யார் பொறுப்பேற்க முடியும்?”

“சபாஷ்! பலே.. அரசாங்க போலீஸ் உயர் அதிகாரின்னு நிரூபித்துவிட்டாய். நல்ல பிரசங்கம்” என்றாள் மஞ்சு.

“அவளேதும் தவறாகச் சொல்லவில்லையே? வசந்தி இன்று பாரதியின் புதுமைபெண் ஓர் நடமாடும் ஏ.டி.எம் கார்டாக மாறிவிட்டாள் குடும்பத்திலுள்ள கடன்களைத் தீர்க்கும் கல்பகத்தரு அவள்தான். எல்லோரும் டைவர்ஸ் பண்ண முடிவெடுத்தால் எவனுக்கும் நாட்டில் பெண் கிடைக்காமல் வருங்காலத்தில் திண்டாடுவான். மஞ்சு சொன்னதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா? மஞ்சு ! உனக்கென்ன குறைச்சல்? கல்யாணம் வேண்டாமென்று சொல்லிக்கொண்டிருந்தாய், இப்போது வைரமுத்துவின் ‘முதிர்கன்னி’ கவிதைப்போல்நிற்கிறாய்” என சிரித்தாள்.

போதும் பட்டிமன்றம், நந்திதாவை பற்றிபேசுவோம்” நந்திதா நீ வேலைக்கு போ, பணத்திற்காக இல்லை, மனநிம்மதிக்காக, இந்த பிரச்சினையை ஆண்டவனிடம் விட்டுவிடு, அவர் கட்டாயம் வழிகாட்டுவார்.” என்றாள் வசந்தி.

“நல்ல முடிவுதான் வசந்தி!” என்றாள் ரீனா

“அட, போலீஸ்காரம்மா, பிரின்சிபாலம்மா 21ம் நூற்றாண்டில் நல்ல அட்வைஸ் பண்றீங்க. சபாஷ்” மஞ்சு நகைத்தாள். வாழ்க்கை ஒரு முறைதான் கிடைக்கும். யோசித்து செயல் படு நந்து, கிளம்பலாம்
என்று வசந்தி கூற எல்லோரும் விடைபெற்றனர்.

இரண்டு வருடம் கழித்து வசந்தியை ரிசீவ் செய்ய கொச்சின் ஏர்போர்ட்டுக்கு நந்திதா வந்திருந்தாள்.

வசந்தியை அணைத்தபடி நந்திதா சொன்னாள் “நீங்க சொன்னது போலவே நடந்தது வசந்தி, ஓர் விபத்தில் அவள் இறந்துவிட்டாள். இறக்கும்முன் என்னிடமும், ரவியிடமும் பாவமன்னிப்பும் கேட்டாள்…” சொல்லி கண்ணீரை துடைத்துக் கொண்டாள். எதிரிக்காகவும் கண்ணீர் சிந்தும் தன்தோழியின் பொன்னான மனதைக் கண்டு வசந்தி

“உன் கதைதான் சினிமாவைப் போல் முடிந்தது. மத்த பேர் எப்படி இருக்காங்க?” காபியை சிப் செய்தபடி கேட்டாள் வசந்தி “ரீனா வீடு வாங்கி செட்டில் ஆயிட்டா. அவரிலும் நல்ல மாற்றம் வந்திருக்கிறதாம் .நம்ப முதிர் கன்னி ஏதோ ஓர் சமுதாய நல இயக்கத்தை நல்லபடியாக நடத்திவருகிறாள்” என்றாள் நந்திதா

“வந்ததிற்கு நல்ல செய்தி சொன்னாய். உன் மனம் நல்லது. மனம் போல் மாங்கல்யம் என்பார்கள். அது உன் விஷயத்தில் சரியாகிவிட்டது ” சிரித்தபடி கூறினாள் வசந்தி .

-டாக்டர் லட்சுமி அய்யர்
ராஜஸ்தான் மத்திய பல்கலைகழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad