\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இனி ஒரு விதி செய்வோம்

Filed in கதை, வார வெளியீடு by on August 2, 2020 0 Comments

 

“ஊழல்லில்லாத அரசாங்கம், பஞ்சத்தில் வாடாத மக்கள், பாரங்கள் வாட்டாத கல்வி, இருள் கவ்வாத சீரான மின்சாரம் என்று எத்தனையோ அடுக்கடுக்கான சாதனைகள் உங்களோட நான்குமுறை ஆட்சி காலத்திலேயும் நடந்திருக்கிறது. டூ தௌஸண்ட் டுவென்டியில் நிறைய முரண்பாடான சிக்கல்களையும் கசக்கி பிழிய பட்ட மக்களுக்கு கிடைச்ச விடிவெள்ளியாக உங்க ஆட்சி அமைந்திருக்கிறது. எப்படி சார்? தெளிந்த நீரோடை போல வாழ்க்கையை மக்களுக்கு வழங்க சர்த்தியமாக்க முடிந்தது?”

“எங்களை பாதித்த வாழ்க்கையை, தப்பான வழிகள்ல யோசித்து, திருப்பி சம்பந்தப்பட்டவங்களுக்கு இரண்டு மடங்கு வேதனையை கொடுக்கணும்னு நினைக்கலை. நல்லவழி மூலம், நல்ல விதமாக மூளையை செலவழிச்சதோட பலன், பல அடிகளை வாங்கி வந்த  வரம்ணும்னுதான் சொல்லனும்….”

“மக்கள்கிட்ட  நல்ல பேர் சம்பாதிச்சிட்டு, அவங்க வேலையை காட்டுவாங்க. அப்பதான் இந்த மக்களுக்கு சாட்டையடி வாங்குன மாதிரி ஆக போகுதுன்னு எதிர்க்கட்சிகள் கோஷமிடுதே……”

“எல்லா கருத்துக்களையும் தாங்குகிற சக்தியோடதான் வந்திருக்கிறோம். சந்தர்ப்பத்திற்காக மக்கள் கால்களை பிடிச்சிட்டு, பிறகு வாரிவிட்டு மாறி, மாறி பச்சோந்தி ஆட்சி நடத்தின காலத்தையெல்லாம் கடந்து வந்துவிட்டோம். இந்த ஒரு சதவிகித எதிர்கட்சிகளும் மாறும். இது ஜனநாயக நாடு. எல்லோரையும் ரோஜா இதழ்கள்ல நடக்க வைக்க எடுத்துக்கிட்ட முயற்சியிது. நம்ம உழைப்பை கொடுத்திட்டு போயிக்கிட்டேயிருப்போம். தானே அதை விரும்பி வர்ற மக்கள் வருவாங்கன்னு நடத்தபடுகிற ஆட்சியிது…..”

தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பேட்டியை பார்த்துக் கொண்டிருந்த முதல்வரும், துணை முதல்வரும ஒருவரையொருவர் கைகளை பிடித்துக்கொண்டார்கள்.

“அழகா, தெளிவா உண்மையை சொல்லியிருக்கடா……” என்று சொன்ன துணை முதல்வாரன நண்பனை பார்த்து சிரித்தார் முதல்வர்.

“உள்ளத்திலிருந்து வாயில வந்தது. இதை உன்கிட்ட கேட்டிருந்தாலும் இதைதானே சொல்லியிருப்பே….”

“நிச்சயமா, நாம ரெண்டுபேரும் வருஷகணக்காக மனசுல ஊறபோட்ட திட்டங்களாச்சே. இதை சாத்தியப்படுத்த முட்களிலிருந்து பெரிய, பெரிய குன்றுகள், மலைகள்ன்னு எவ்வளவு வலிகளை தாண்டி வந்திருக்கிறோம்ல……” நண்பர்கள் இருவர் கண்களிலும் நீர் கோர்த்தது.

“இப்போ திரும்பி பார்க்க போய்தான் தாண்டி வந்த பாதையோட கரடுமுரடுகள் தெரியுது. அந்த நேரம் மனசுல விழுந்த வைராக்கியத்துல, எதுவுமே பெருசில்லன்னு, தூசி மாதிரி தட்டி விட்டுட்டுதானே வந்தோம்….”

“அந்த முதல் விதை மனசுல விழுந்ததற்கு காரணமே நீதானடா….” என்றார் முதல்வர்.

“ச்சே, ச்சே, அன்னைக்கு நீ சொன்ன வார்த்தைகள் ரெண்டு பேரையுமே பக்குவப்படுத்தியது. நல்லா யோசிச்சுப்பாரு. அப்போ நாம ரெண்டு பேரும் செவன்த் படித்தோம். நான் ஸ்கூல் பஸ்ல வெளியே பார்த்தபடியே வந்தேன். நீதான் என்னன்னு கேட்டே….. இப்படி நல்ல விமர்சனங்களை கேட்கும் போது என்னால் நீ சொன்ன வார்த்தைகளை உரசி பார்த்து நினைக்காமயிருக்க முடியலைடா…..” என்ற துணை முதல்வாரன ரவியும் முதல்வாரன முகிலனும் பழைய நினைவுகளில் ஆழ்ந்தார்கள்.

“ஏன்? என்னாச்சி? முகமெல்லாம் வாடி போயி கிடக்குது?” என்று முகத்தை தன் பக்கம் திருப்பிய முகிலனை ஆறுதலாக பார்த்தான் ரவி.

“பச், ஒன்னுமில்லைடா. பேஸ்ட் மணம் கூட போகாத வாயில சாப்பிடவே முடியலை. அம்மா சத்தம் போட்டாங்க. தூங்கு, எழுந்திரு. பாத்ரூம் போ, சாப்பிடுன்னு…. இதெல்லாம் ப்ரீகேஜிலயிருந்து ஆரம்பிச்ச அவஸ்தைகள். எப்படா மாறும். ச்சே, ஏன்தான் விடியுதோன்னு இருக்குதுடா…..” என்ற நண்பனின் கைகளை பிடித்துக் கொண்டான் முகிலன்.

“ச்சீ, என்ன பேச்சிது? எனக்கு கூடதான் காலையிலேயே குளு குளுன்னு ஊட்டச்சத்து பானம் குடிக்க பிடிக்கலை. மூனு இட்லி, முடியாமதான் சாப்பிடிருக்கேன். பிடிவாதம் பிடிச்சா, அம்மா சொல்வாங்க நாங்கள்ளாம் வீட்ல அஞ்சு பிள்ளைங்க. எங்கம்மா போட்டு தருகிறதோட சரி. நாங்களே சாப்பிட்டு பையை தூக்கிட்டு போவோம். உங்களை கவனிச்ச மாதிரியா பாத்தாங்கன்னு….. ஒரு அதட்டல்தான் பறக்கும், நடுக்கம் வந்துரும். அதுக்கு பயந்தே அள்ளி போட்டுருவேன்…”

“அதுதான்டா முகிலன் சுதந்திரம். அவங்கள்ளாம் மேகம் மாதிரி சுதந்திரமா வானத்துல தவழ்ந்திருக்காங்க. நம்மளை பட்டம் மாதிரி கைக்குள்ளே வச்சிக்கிட்டு, போட்டு ஆட்டுறாங்க. தாங்க முடியலைடா….” என்ற நண்பனை வாஞ்சையோடு பார்த்தான் முகிலன். அவனுக்குள்ளும் கஷ்டமான எண்ணங்கள் ஓடியது.

“டேய், என்னடா மார்க்கிது?” இந்த ஒரு கேள்விக்காகவே முகிலன் மனதிற்குள் கிடுகிடுத்து கிடப்பான். ஹாப் இயர்லி எக்ஸாம் ரிசல்ட்டின் விளைவு.

“இந்த முறையும் ஒரு சப்ஜக்ட்டை கோட்டை விட்டுட்டியே….” என்ற அம்மா தன்னை நோக்கி பாய்ந்து வர, அடியை எதிர்ப்பார்த்து கண்களை மூடிக்கொள்வான். “சொத்” என்று அடி விழுந்து, தலை “விர்” ரென்று வலியை ஏற்படுத்த, உதடுகள் பிதுங்கி, துடித்து அழுகையை வரவழைக்கும்.

“உன்னை எத்தனைமுறை சொல்லியிருக்கேன். காலையிலேயே விழிச்சி படி, மண்டையில ஏறும்ன்னு, ஒரே தூக்கம்……” தொடர்ந்து மண்டை ஓட்டில் “நறுக்” குட்டு வலிக்கவும், முகிலன் அழுதே விடுவான். ஸ்கூல்விட்டு வீடு திரும்பிய அந்த அயர்ச்சியான நேரத்தி;ல் கூடுதலாகவே அழுதுதீர்ப்பான்.

அழுது முடித்த சோர்வு, உடம்பெங்கும் படிப்பு சுமையின் வலி, தூக்கம் கண்களை தழுவ சிறிது அயர்பவன், சட்டென்று விழித்து தூக்கத்தை விரட்டியடிப்பான். டியுஷன் சென்று வந்ததை அம்மா சரிபார்த்து, படித்ததிலிருந்து கேள்வி கேட்டு, பதில் சொன்ன பிறகு சாப்பாடு தந்து, பால் குடிக்க வைத்து, யுரின் பாஸ் பண்ணி…… அப்பாடி, மீண்டும் தூக்கம் அழுத்துவதை தவிர்ப்பான்.

“விடுடி பிள்ளையை, நாமெல்லாம் படிப்புக்காக இப்படியா கசக்கப்பட்டோம்? இப்பதான் என்னமோ படிப்பு, படிப்புன்னு எக்கச்சக்க மெட்ரிகுலேஷன்கள் முளைச்சி, பிள்ளைங்களை அங்க சேர்த்து படுத்துறோம்” எனும் அப்பாவை ஆறுதலாக பார்ப்பான் முகிலன்.

“நீங்க சும்மாயிருங்க சொல்லிட்டேன். ஒவ்வொரு அப்பாக்களை போல பாடம் சொல்லி கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை. வீணா போன தத்துவங்களை பேசி கெடுக்க வேண்டாம் சொல்லிட்டேன்.” என்ற அம்மாவை பார்க்கும் பார்வையில் அதிகமாகவே சோர்வு இருக்கும்.

“உன்னையும் விட்டு வைக்கலையே இந்த அயல்நாட்டு மோகம். பச்சை மண்ணுலதான் பதியும்ன்னு அதிகமாக திணிக்கிறது யதார்த்தம். அதுவே விரக்தியாகிரும்னு சொல்றது வேதாந்தம். ம்கும் எங்கே போயி சொல்றது? வெள்ளைக்காரன் பணத்தை இலக்காக்கி, பாசத்தை பின்னே வைக்கிறான். நாங்களும் அதைதான் பின்பற்றுவோம், எண்ணற்ற முதியோர் இல்லங்களை திறப்போம்னா என்ன செய்ய முடியும்?” என்று பரிந்து பேசும் அப்பா மடியில் பாசத்தோடு கவிழ்த்து கொள்வான் அவன்.

அப்பா மனசுல பட்டதை சொல்லாமல் விடமாட்டார். சூ, ஷாக்ஸை கழற்றி, சுருங்கி கிடக்கும் உள்ளங்கால்களை எடுத்து தடவிவிடும் அப்பா சொல்வார்.

“வெள்ளைக்காரன் குளிர் போகுறதை தடுக்கிறதுக்காவே சூவை மாட்டி மறைச்சி வைக்கிறான். இதப்பாரு பிள்ளை சூடு தாங்காம தண்ணீரை ஊத்தி குளிரவச்சிருக்கிறான். இங்க அடிக்கிற வெயிலுக்கு இந்த கருமத்தையெல்லாம் போட்டால் ஏன்? உடம்பு சூடாகி கட்டிகள் வராது”

“அப்போ நம்மை போல கேவலமா செருப்பு மாட்டிக்கிட்டு போக சொல்றீங்களா?”

“ஏன்? தப்பில்லையே, வெளியழகு எதுக்குடி? வெளியே கழட்டி போட்டு போறதையெல்லாம், படிக்கிற இடத்துலேயே மாட்டிக்கிட்டு….. நல்லாவாயிருக்குது?”

“வெளியில பேசி வைக்காதீங்க. இதுல நீங்க ஒரு புரோபஸர் வேற….”

“அதனால்தான் என்னால பேச மட்டும் முடியுது. நல்லதை ஏத்துக்கிட்டு ப்ராக்டிக்கலா நம்ம சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி வாழ சொல்றதுக்கு யாராயிருந்தால் என்ன?” என்று இன்னும் ஏதேதோ பேசி உற்சாகப்படுத்தும் அப்பாவைதான் மனம் அடிக்கடி நினைத்துக்கொள்ளும்.

“சரி விடு ரவி. பெத்தவங்க கசங்கினாலும், நாம பணகஷ்டமில்லாமதான் வளர்கிறோம். இந்த மாதிரி சின்ன சின்ன இக்கட்டுகள்தான் அடக்கத்தையும், அன்பையும் கற்றுத் தரும்னு அப்பா சொல்வாங்கடா. நீ ஒன்னும் பீல் பன்னாதே” என்றான் முகிலன் வாஞ்சையோடு.

“அது சரிதான். ஆனா தாத்தா, பாட்டியெல்லாம் சொல்றதை பார்க்கும் போது, படிக்காதவங்களாயிருந்தாலும் பிள்ளைங்களை பிரீயா வளர்த்திருக்காங்க. ஓடு, ஓடுன்னு வாழ்க்கை பின்னாடியே ஓட சொல்ற குதிரைகளா வளர்க்கலை. நம்மளை போல இந்த வயசுல மெச்சூர்டா சிந்திக்கலை பேசலை, அவங்க பிள்ளைங்க, சீக்கிரம் எல்லாத்தையும் கத்துக்கவுமில்லை. கற்றுக் கொடுக்கவுமில்லை. ஆனா அது தேவையுமில்லைன்னு நினைச்சி மெதுவாகத்தான் சொல்லி கொடுத்திருக்காங்க……”

“ஸ்கூல், டியுஷன், ஹிந்தி, கம்ப்யூட்டர், ஸ்விம்மிங், கராத்தே கிளாஸின்னு டைம்மை பார்த்து விரட்டி விரட்டி அடிக்கல. ஏன்? அவங்கள்ளாம் யாருமே எதுவுமே கத்துக்கலையா? அவங்கள்ளாம்தானேப்பா பெரிய, பெரிய அதிகாரிகளாகவும், ஆட்சியாளர்களாகவும், பெத்து வளர்க்கிறவங்களாவும் முன்னேறி வந்திருக்காங்க. நாமும் அவங்களை போல வரமுடியாதா?” என்ற நண்பனின் கேள்விக்கும், அவன் வார்த்தைகளிலிருந்து வந்த வேதனையும், தடிப்பும், முகிலன் சிறிது நேரம் மௌனித்தே போனான்.

“நானும் உன்னi போல சிந்திச்சி, வெறுப்படையறப்போ அப்பா சொல்வாங்க…… கடுமையான சொற்களும், கசப்பான வார்த்தைகளும் பலவீனமான கொள்கையோட அறிகுறியாம். எந்த சூழ்நிலையையும் கோபத்தோடவும், வெறுப்போடவும் சந்திச்சால் தப்பாதான்டா தெரியும். அது நம்மை புதைகுழில தள்ளாம விடாதாம்…..”

“சரி முகிலன். அப்பா நல்லாதான் சொல்லியிருக்காங்க. படிப்பு, பாரம்ன்னு எல்லாம் விரட்டட்டும். ஓடுவோம். வாரத்துல ஒரு நாள் மட்டும் நம்ம விருப்பத்துக்கு செலவழிக்க சுதந்திரம் கிடைச்சா போதும். பேசலை. முடியுமா? இப்படிபட்ட வாழ்க்கையை நினைக்கும் போது வெறுப்படையாம என்னடா செய்ய முடியும்?” என்ற நண்பனின் வாயை அடைத்தான் முகிலன்.

“வேண்டாம். அப்பா சொல்றதுதான் சரியாயிருக்கும். நாம ஒன்று செய்வோம். நமக்கு வயசிருக்குது. உறுதுணையாய் நல்ல பெத்தவங்கயிருக்காங்க. வேகமா ஓடுகிற உலகத்துக்கு இணையாக நம்மை மட்டும் விரட்டலையே. பெத்தவங்களும் சேர்ந்துதானே ஓடுறாங்க. நாமும் ஓடித்தான் பார்ப்போமே. நமக்கு திணிக்கப்படுகிற இந்த மெச்சூர்டை வச்சி நன்மையை செய்ய பார்ப்போமே. நெகட்டிவ்யை பாசிட்டிவ்வாக்கி நல்லது செய்வோமே. நம்மளை அழுத்துற பாரங்களை நீக்கி வருங்கால குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாக்கி சாதிச்சு காட்டுவோமே, நன்மையை நினைப்போம் நல்லதே நடக்கும். அப்பா சொல்ற மாதிரி வாழ்ந்து காட்டுவோமே! என்ன சொல்றே?” என்ற முகிலனின் கேள்விக்கு இரண்டு நாள் நீளமான மௌனத்தை எடுத்து கொண்ட ரவி சொன்னான்.

“ஓ.கேடா. நம்பிக்கையே நல்ல எதிர்காலத்தை உருவாக்கும்ன்னு சொல்றாங்க அப்பா. பெரியவங்க சொல்ற மாதிரி சாதிக்கிறதை இலக்காக்கி வாழ்க்கையை எதிர்க்கொண்டு ஜெயிச்சுத்தான் பார்ப்போமே” என்ற நண்பனை அன்றே சேர்த்தனைத்தான் முகிலன்.

“உங்களோட நண்பரும், துணை முதல்வரும் கருத்து வேறுபாடுகள் உள்ளதாகவும், அவரை பிரிக்க சதிகள் நடக்குறதாகவும், உங்களுக்கு எதிரா கட்சி ஆரம்பிப்பாருன்னும் கருத்துக்கள் நிலவுகிறதே….”

“கண்டிப்பா, இப்படி குளறுபடிகளை உண்டாக்குகிற சின்ன, சின்ன கூட்டங்களை ஒடுக்குவோம், அடக்குவோம், திருத்துவோம். இந்த நல்லாட்சிக்குள்ளே சதியோ, சண்டை, சச்சரவுகளுக்கோ இடமில்லை. ஒரே கொள்கைதான். பகிர்ந்து சாப்பிடுகிற நோக்கம் வந்த பிறகு யார் ஆண்டாலும் சந்தோஷம்தான். நல்லாட்சி வழங்கனும்னு துடிக்கிற நல்ல உள்ளங்களுக்கு தாராளமா இடம் கொடுத்து ஒதுங்கி நிற்போம். ஓன்னு மட்டும் உறுதி. குள்ள நரிகள் ஊடுருவ மட்டும் ஒரு பொட்டு இடம் கிடையாது இந்த நல்லாட்சிக்குள்ளே.

“அப்படிப்பட்ட நல்ல உள்ளங்களோட வருங்கால சந்ததிகள் உருவாக உங்க கருத்துக்கள் என்ன சார்?”

“கண்டிக்கிற பெற்றோரும், ஆசிரியரும் கரை சேர்த்துருவாங்கன்னு அவங்களுக்கு பணிஞ்சு நடந்தாலே போதும், வாழ்க்கையை கத்துக்கட்டு பக்குவமாகி வெளியே வந்து, கிடைச்சதை நாமும் உண்டு, மக்களுக்கும் கொடுத்து, நாடாண்டு நல்லாட்சி வழங்கலாம். நன்றி, வணக்கம்….” என்ற நண்பனை ஏறிட்டார் துணை முதல்வாரன ரவி.

“அருமையான கருத்து, நாம படிச்சிட்டு இருந்த காலத்துல எவ்வளவு அசிங்கமான நடப்புகள் எல்லாம் நடந்தது இப்ப எல்லாம் மறந்து விட்டது. இனி வரும்  காலங்கள்ல இருக்கிற சின்ன, சின்ன கரும்புள்ளிகள் கூட மறைய எல்லா பிள்ளைங்களுக்கும் உனக்கு கிடைத்த மாதிரி அப்பா அமையனும் எனக்கு அமைந்தது போல உற்ற  தோழனும் கிடைக்கனும் கடவுளே”, என்ற நண்பணை அணைத்த முதல்வரும் துணை முதல்வரும் அலுவல்களை கவனிக்கப் புறப்பட்டார்கள்.

அவர்களை சுற்றி எந்த பட்டாளமும் இல்லை, கோஷங்களும் இல்லை. அவரவர் அவர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். நாட்டை வல்லரசாகவே வைத்திருக்க நினைத்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad