மாஸ்க் மகோன்னதங்கள்
ஒரு கடைக்குள் நுழைந்தோமானால், நாம் காணும் அனைவரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். முகத்தில் கண்கள் மட்டும் தெரிகிறது. அதிலும் சந்தேகப் பார்வை. இல்லை, அப்படியும் சொல்ல முடியாது. என்ன நினைக்கிறார்கள், நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்களா, முறைக்கிறார்களா என ஒன்றும் புரியவில்லை. சினேகமாக எப்போதும் போல் மற்றவர்களைக் காணும் போது புன்னகைக்கிறோம். நாம் புன்னகைப்பது அவர்களுக்குத் தெரியாது என்று புரிந்தும் சிரித்து வைக்கிறோம். அந்த நட்பான புன்னகை நமது மாஸ்கினுள் அடக்கமாகி விடுகிறது.
கர்ம சிரத்தையாக, பெரும்பாலோர் மாஸ்க்குடன் பய பக்தியுடன் சுற்றினாலும், சிலருக்கு அது இடைஞ்சலாக இருப்பது நன்றாகத் தெரிகிறது. பேசும் போது இடைஞ்சலாக இருந்தால், எதற்கு அதைப் போட்டிருக்கிறோம் என்பதையே மறந்து, கீழே இறக்கி விட்டு, பேசிய பிறகு பழையபடி மாட்டிக் கொள்கிறார்கள்.
பெண்கள் பிறரது மாஸ்க்கினை குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டே செல்கிறார்கள். “இந்த மாதிரி அடுத்த முறை புடவை எடுக்கணும்” என்பது போல் அடுத்த மாஸ்க் என்ன கலரில், டிசைனில் வாங்க வேண்டும் என்று யோசித்து வைத்துக் கொள்கிறார்கள். ஆண்கள் பிரச்சினை வேறு. சைட் அடிப்பது என்ற கலையில் சில பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்கள். முகத்தில் செலவிடும் வெகு சொற்ப நிமிடங்கள் மேலும் சொற்பமாகிவிட்டது. ஆள் பாதி ஆடை பாதி என்பது போய் இப்போது ஆள் கால் ஆடை முக்கால் என்றாகி விட்டது.
இப்போதாவது பரவாயில்லை, மாஸ்க் பல வகைகளில், பல தினுசுகளில் கிடைக்கிறது. ஆரம்பத்தில் அதற்குத் தட்டுப்பாடு இருக்கும் சமயத்தில், அவரவர் அவர்களது கைவினைத் திறனுக்கேற்ப, முகக்கவசம் என்ற பெயரில் எதை எதையோ முகத்தில் கட்டிக் கொண்டு திரிந்தார்கள். கேரி பேக், மஞ்சள் பை, தாவணி, துப்பட்டா, கைக்குட்டை எனக் கைகளில் கிடைத்ததை மாஸ்க் என்று சொல்லிக் கொண்டு ஏமாற்றி மாட்டிக் கொண்டு சுற்றினார்கள். நல்லவேளை, பிறகு சைனா தயவில் மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு, பரவலாகக் கிடைக்க, அந்தக் கொடுமையில் இருந்து தப்பித்தோம். இவுங்களே பாம் வைப்பாங்களாம், பிறகு இவுங்களே அதை எடுப்பாங்களாம் (முதல்வன் ரகுவரன் குரலில் வாசிக்கவும்).
இந்த மாஸ்க் போட ஆரம்பித்த பிறகு தான், பலருக்கும் ஒரு விஷயம் புரிந்தது. அது என்னவென்றால், அவர்களுடைய வாயில் இருந்து வந்த துர்நாற்றம். மாஸ்க் போட்டுக் கொண்டு சிறிது நேரம் கழித்த பின்பு, ஏதோ எலி செத்த நாத்தம் அடிக்கிறதே என்று சுற்றும் முற்றும் பார்த்தவர்களுக்கு, பிறகு தான் புரிந்தது, அதற்குக் காரணம் தாங்கள் தான் என்று. வெங்காயம், பூண்டு என்று சாப்பிட்டு விட்டு மாஸ்க் போட்டுக் கொண்டு வெளியே செல்பவர்கள், அதற்கு பின் பெரும் தாக்குதலுக்கு உள்ளாவார்கள். தங்களுக்குள் இப்படி ஒரு துர்பேராற்றல் இருப்பது இவர்களுக்கு மாஸ்கினால் தான் தெரிய வந்தது. அதற்கு இவர்கள் மாஸ்க்கிற்கும், முடிந்தால் கொரோனாவிற்கும் நன்றி சொல்லிவிட்டு வாயை சுத்தப்படுத்தும் வழிகளில் இறங்க வேண்டும். கொரோனாவிடம் மட்டுமின்றி, இவர்களிடம் இருந்தும் நம்மைக் காப்பாற்றும் மாஸ்க்கிற்கு நாமும் நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும்.
மாஸ்க்கில் ஒரு சில அளவுகள் மட்டுமே இருப்பதால், பலருக்கும் அதைச் சரியாகப் போட்டுக் கொள்வதில் சிரமங்கள் இருப்பதைக் காண முடிகிறது. சிறிய முக அளவு கொண்டவர்கள், பெரிய சைஸ் பேண்ட்டைத் தூக்கிக் கொண்டே நடக்கும் சிறுவனைப் போல், ஒரு கையால் மாஸ்க்கைத் தூக்கிக் கொண்டே நடப்பார்கள், சிலர் புத்திசாலித்தனமாகக் காதில் மாட்டும் துணியை இழுத்துக் கட்டியிருப்பார்கள். ரொம்பவும் இழுத்துக் கட்டினால், இன்னொரு பக்கம் மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு வந்து சேரும். கொரோனாவுக்குப் பயந்து இப்படி மூச்சை விட்டு விடக் கூடாது.
தடுப்பு மருந்து இல்லாத காரணத்தால், இப்போதைக்கு முகக் கவசமும், சமூக இடைவெளியுமே தடுப்பு நடவடிக்கைகளாக முன் வைக்கப்படுகின்றன. அதனால் இப்போது இவற்றைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. “இப்போதைக்குப் போடுங்க முகக்கவசம், இல்லாட்டி வைப்பாங்க திவசம்” எனும் புதுமொழிக்கேற்ப சமூகப் பொறுப்புணர்வோடு நடப்போம். கொரோனாவில் இருந்து தப்பிப் பிழைப்போம்.
– சரவணகுமரன்.