அமெரிக்காவில் ஆடி மாதத்தில் அம்மனுக்குத் திருவிளக்குப்பூஜை
தமிழ்நாட்டில் பொதுவாகக் கோவில்களில்தான் விளக்குப்பூஜை செய்வார்கள்.
2002-ஆம் ஆண்டில், இங்கு அமெரிக்காவில், செயிண்ட்லூயிஸில், ஒரே அடுக்கு மாடி இல்லங்களில் (apartment homes) இருந்த தோழிகள் நாங்கள் சேர்ந்து வீட்டில் விளக்குப்பூஜை செய்யலாம் என்று பேசினோம்.
அதன்படி, விநாயகர் துதியில் ஆரம்பித்து, ஹனுமான் சாலீசா, கந்தசஷ்டி கவசம், அஷ்டலஷ்மி ஸ்லோகம், மஹிஸாசுர மர்த்தினி (தமிழில் ‘உலகினைப் படைத்து’ என ஆரம்பிக்கும்), அதன் பிறகு 108 அம்மன் போற்றி, பிறகு மங்களம் என ஸ்லோகம் பட்டியல் தயார் செய்தோம்.
ஆரம்பத்தில் நாங்கள் எல்லா ஸ்லோகங்களையும் கையால் தாள்களில் எழுதி, நகல் எடுத்தோம்.
பிறகு தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து அனைத்தையும் கணிணியில் தட்டச்சு செய்து வைத்துக் கொண்டேன். புதிதாக யார் சேர்ந்தாலும் , ஸ்லோகங்களை அச்சுப்பொறியில், (printer) அச்செடுத்துக் கொடுப்பேன்.
2002-ல் ஒரு ஆடி வெள்ளிக்கிழமையில், முதல் பூஜை எங்கள் வீட்டில் ஏழெட்டுப் பேருடன் ஆரம்பித்தது. மிகவும் கவனமாக, அலுமினியத்தாள் விரித்து அதன் மேல் தட்டு வைத்து, அதன் மேல் விளக்கு ஏற்றிப் பூஜை செய்தோம். சூடம் ஏற்ற மாட்டோம். ஆரத்திக்கு நெய் விளக்குதான். இன்று வரையிலும் அப்படித்தான், எல்லோருடைய விளக்குகளும் ஏற்றப்பட்டிருப்பதால், சின்னக் குழந்தைகளுக்குப் பூஜையில் அனுமதி இல்லை. அப்பாக்களின் கவனிப்பில் அவரவர் வீட்டில் இருப்பார்கள்.
ஒவ்வொரு மாதமும், கடைசி வெள்ளிக்கிழமையன்று மாவிளக்கிட்டு , எங்கள் வீட்டில் பூஜை செய்ய ஆரம்பித்தோம். பிறகு விரும்பிய தோழிகள் வீட்டிலும் பூஜை செய்தோம், யார் வீட்டில் பூஜை நடக்கிறதோ, அவரே எல்லோருடைய விளக்குகளுக்கும் வேண்டிய நெய், மலர்கள், அர்ச்சனைக்குரிய குங்குமம் அனைத்தையும் ஏற்பாடு செய்வார்.
மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்து 8.00 மணிக்குப் பூஜை முடியும். ஒவ்வொரு தோழியும், ஒரு பிரசாதம் எடுத்து வருவார். அதிக கூட்டம் சேர்ப்பதில்லை. 15 இலிருந்து 20 பேருக்குள் தான் அழைப்போம்.
பூஜை முடிந்து, நைவேத்தியம் ஆன பிறகு எல்லோரும் சேர்ந்து பிரசாதம் சாப்பிட்டுவிட்டு, கணவருக்கும், குழந்தைகளுக்கும் எடுத்துச் செல்வார்கள். அரட்டை அடிப்பதில்லை. யார் வீட்டில் பூஜை செய்கிறோமோ அவர் குங்குமம், வெற்றிலை, பாக்கு பழங்களுடன் ஒரு சிறிய பரிசுப்பொருளும் வைத்துத் தருவதை வழக்கமாக்கிக் கொண்டோம். இதற்காகவே, விடுமுறைக்குத் தமிழ்நாட்டிற்குச் சென்று வரும்போது, பரிசுப் பொருட்கள் வாங்கி வருவோம்.
சில வருடங்களுக்குப் பிறகு, அம்மனுக்கு மிகவும் உகந்த ஆடி, தை என்ற இரு மாதங்களில் மட்டும் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விளக்கு பூஜை செய்ய முடிவு செய்தோம். தங்கள் வீட்டில் பூஜை செய்ய விரும்பும் தோழிகள் முன்னரே பேசி, உறுதி செய்து கொள்வார்கள். அதன்படி, கடந்த 18 வருடங்களாக விளக்குப் பூஜை அன்னை பராசக்தியின் அருளால், மிகவும் அருமையாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சிலர் ஊர் மாறி சென்று விட்டார்கள், சிலர் புதிதாக வந்து சேர்ந்து கொண்டார்கள்.
2019-ல் எங்கள் குடும்பம் மினசோட்டா வந்து விட்டோம். இங்குள்ள தோழிகளுடன் 2020 ஜனவரியில் (தை மாதம்) விளக்குப் பூஜை ஆரம்பித்து விட்டேன். செயிண்ட்லூயிஸில் தோழி கீதா கணிக்கண்ணன், அங்குள்ள விளக்குப்பூஜையைக் கவனித்துக் கொள்கிறார். அவரின் முயற்சியால், விளக்குப் பூஜைக்கு, ஆதிபராசக்தியின் அழகான அட்டைப் படத்துடன் புத்தகம் போடப்பட்டுள்ளது.
தமிழ் தெரியாத தோழிகளுக்காக, ஆங்கிலத்திலும், ஸ்லோகங்களை ஒலிபெயர்ப்பு (transliterate) செய்து வைத்திருக்கிறோம்.
இப்பொழுது கொரோனாவின் தாக்கத்தால், மிசெளரி, மினசோட்டாவிலிருக்கும் நாங்கள் எல்லோரும் இணைந்து அவரவர் வீட்டிலிருந்தே ஸ்கைப்பில் 40-45 பேர் விளக்குப் பூஜை செய்கிறோம்.
எவற்றாலும் தடுத்து விட முடியாத அளவிற்கு நம் விளக்குப்பூஜை தடையின்றி நடக்க அன்னை பராசக்தி அருள் செய்து நம் அனைவரையும் காப்பாள்.
ஓம் சக்தி! பராசக்தி!!
-மீனா கணபதி