ஓர் அன்பு வேண்டுகோள்
2020 ஆண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிரச்சினை அளிக்கும் ஆண்டாக இருக்கையில், மினசோட்டாவில் வசித்துவரும் விஜயின் குடும்பத்திற்குப் பேரிடி கொடுத்த ஆண்டாக அமைந்துவிட்டது. சென்னையைச் சேர்ந்த 35 வயதான விஜய் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்குப் பலரையும் போல கணினி வேலை நிமித்தம், அவருடைய குடும்பத்துடன் வந்தார். அவருடன் அவருடைய மனைவியும், ஐந்து வயதான மகனும் மினியாபொலிஸ் நகரத்தில் வசித்து வருகின்றனர்.
நான்கு மாதங்களுக்கு முன்பு, அவருக்கு உணவுக் குழாயில் கேன்சர் நோய் இருப்பது கண்டறியப்பட்டு, யூனிவர்சிட்டி ஆஃப் மினசோட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கீமோதெரபி சிகிச்சைக்குத் தயாராவதற்காக, செயற்கை உணவுக் குழாயை அவருடைய வயிறுக்குள் செலுத்த முயற்சிக்க, அவருடைய உடல் அதனை ஏற்றுக்கொள்ளாமல் போக, இருமுறை அம்முயற்சி தோல்வியடைந்தது.
சோதனை மேல் சோதனை என்பதுபோல் இதற்கிடையே, இந்த முயற்சிகளால் அவருடைய சிறுகுடலில் ஒரு துளையும், வயிற்றில் புண்ணும் உருவாகிவிட்டன. சிறுகுடல் துளை தானாகவே குணமாகும் என்றும், வயிற்று புண்ணிற்கு உடல் அறுவை சிகிச்சை தேவை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இன்னொரு பக்கம், கேன்சருக்கான சிகிச்சையும் இதனால் தாமதமாகி வருகிறது. இதனுடன் கொரோனா பாதிப்பு வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவரை அடிக்கடி சென்று பார்ப்பதிலும் மனைவிக்கும் குழந்தைக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் பொதுவான மருத்துவச் சிகிச்சைக்கே பெருமளவு பணச்செலவு ஏற்படும் நிலையில், இதைப் போன்ற அசாதாரண மருத்துவத்திற்கு ஆகும் செலவைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
நான்கு மாதங்களாக மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கும் விஜய்க்கும், நிலைகுலைந்திருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் நம்முடைய உதவியும், பிரார்த்தனையும் தேவைப்படுகிறது. நமது உதவி அவர்களுக்கு மனதளவில் ஒரு ஆறுதலாக அமையும். சொந்தங்கள் அருகில் இல்லை என்ற குறையின்றி, துணை நிற்க மக்கள் உண்டு என்று சொல்லும் விதமாக, நம்மால் இயன்ற உதவியைச் செய்திடுவோம். நம்முடைய நண்பர்களுக்கும் இச்செய்தியைப் பகிர்ந்திடுவோம்.
விஜய் இச்சோதனையிலிருந்து உடல் நலத்தோடு மீண்டு வரவும் அவருடைய குடும்பத்துடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் வாழ்த்துவோம்.