காமன் டிபி கலாச்சாரம்
கடந்த சில ஆண்டுகளாகக் காமன்டிபி (Common DP) கலாச்சாரம் என்று ஒன்று தொடங்கி வெகு விமரிசையாக நடந்து வருகிறது. டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகத் தளங்களில் இருக்கும் பயனர் புகைப்படத்தை (Display Picture) சுருக்கமாக டிபி (DP) என்கிறார்கள். ஏதேனும் ஒரே நிகழ்வை ஒட்டி, பெரும்பாலோர் அந்த நிகழ்வு சம்பந்தமான ஒரு புகைப்படத்தைத் தங்களது பயனர் படமாக வைத்துக்கொள்ளும்போது, அது நல்லதொரு கவனத்தைப் பெறும் என்பதால், அதற்கான புகைப்படத்தை நன்றாக வடிவமைத்து அனைவரிடமும் பகிர்ந்து, தங்களது டிபியாகவும் அந்தப் புகைப்படத்தை வைத்துக்கொள்கிறார்கள்.
ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற தளங்களை அமெரிக்கர்கள் உருவாக்க, அதில் இந்தக் காமன் டிபி போன்ற விஷயங்களை இந்தியர்கள் பெரிய அளவில் ஆர்வத்துடன் முன்னெடுத்து விழா எடுத்து வருகிறார்கள். எப்படி அமெரிக்கர்கள் கண்டுபிடித்த செல்போனில் இந்தியர்கள் மிஸ்ட் கால் கொடுப்பதைக் கண்டுபிடித்தார்களோ, அது போலத்தான் இதுவும்.
முக்கியமாகத் திரைப்பட ரசிகர்கள் தான் அதிகமாகக் காமன் டிபி உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள். தங்களது ஆஸ்தான நடிகர்களின் பிறந்தநாள், திரைப்பட வெளியீடு, திரைப்பயண ஆண்டுவிழா, திரைப்படத்தின் நினைவாக ஆண்டுவிழா என முக்கிய நிகழ்வுகள் முதல் பைசா பெறாத விஷயங்களுக்கெல்லாம் காமன் டிபி வைபவம் எடுப்பார்கள். இது கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் என்று அடுத்து சில வட்டங்களுக்குத் தொடர்கிறது. இயக்குனர், இசையமைப்பாளர், நாடகம் எபிசோட் சாதனை, ஆட்சி சாதனை போன்றவைக்கும் வருங்காலத்தில் இது நீடிக்கலாம்.
போஸ்டர், கட்-அவுட், பேனர் போன்றவற்றின் டிஜிட்டல் நீட்சி என்று தான் இந்தக் காமன் டிபி என்கிற விஷயத்தை எடுத்துக்கொள்ள முடியும். அதீத ஆர்வம் கொண்ட ரசிகர்கள் இணையத்திற்கு வந்து, சேர்ந்து, கூடி, தங்களது அபிமானத்தை ஆசைத்தீர வெளிப்படுத்துவதற்கான ஒரு வடிவம் தான் இந்த காமன் டிபி.
முன்பெல்லாம் சாதாரணச் சாமானிய ரசிகர்கள் மட்டும் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருந்த காமன் டிபி படங்களை, இப்பொழுதெல்லாம் திரை நட்சத்திரங்களும் வைத்துக்கொள்கிறார்கள், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். சமீபத்தில் ரஜினிகாந்தின் 45 ஆண்டுத் திரையுலகப் பயணத்தை முன்னிட்டு உருவாக்கிய பொது வரைப்படத்தை மம்முட்டி, மோகன்லால், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட 45 பிரபலங்கள் வெளியிட்டனர். நல்லவேளை, பிரதமரும், குடியரசு தலைவரும் இதுவரை இதில் தலையிடவில்லை.
இந்தக் காமன் டிபி கலாச்சாரம் தொடங்கிய ஆண்டாக, முக்கியமாகத் தமிழ் வட்டாரத்தில் 2011ஆம் ஆண்டைச் சொல்லலாம். அந்தாண்டு வெளியான மங்காத்தா, வேலாயுதம், 7ஆம் அறிவு ஆகிய படங்களுக்காக முறையே அஜித், விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் சிறிதாகப் பொது வரைப்படங்களைப் பகிர்ந்தார்கள். பின்னர், இது தொடர்ச்சியாக முன்னேற்றமடைந்து பிறந்தநாள், ஆண்டுவிழா எனப் பரிணாம வளர்ச்சியடைந்து, இது சார்ந்து போட்டியும் உருவானது. பெரிய திட்டமிடல்களுடன் நுணுக்கமான பல தகவல்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் வைத்து வரைப்படங்களைச் செதுக்கினார்கள். டிகோடிங் அனாலிசிஸ் (Decoding analysis) தொடங்கியது. முப்பரிமாண (3டி) காமன் டிபி வீடியோக்கள் வெளியிடப்பட்டன. பெரிய நட்சத்திரங்கள் மட்டுமின்றி, சிறுசிறு சினிமா நடிகர்களுக்கும் இது போல் பொது வரைப்படங்கள் உருவாக்கினார்கள்.
கடந்த மாதம் சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட காமன் டிபி 6 மில்லியன் முறை, அதாவது இதுவரை அதிகம் பகிரப்பட்ட டிபி என அவரது ரசிகர்களால் மார்தட்டிக்கொள்ளப்பட்டது. சென்ற ஆண்டு விஜய் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட வரைப்படத்தில் தமிழகத்தின் முக்கிய அடையாளங்களுடன் விஜய்யின் பிரமாண்ட உருவமும் இருக்க அதில் மக்கள் பெருந்திரளாக ஏறுவது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்தாண்டு ரஜினியின் 45வது ஆண்டுக் கலைப்பயணத்திற்காக உருவாக்கப்பட்ட வரைப்படத்தில் ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளியான அவரது படத்திலிருந்து ஒரு கதாபாத்திரம், வெவ்வேறு தொழில்நுட்பத்தில் வெளியான படங்களில் ஒரு கதாபாத்திரம் எனப் பலவகையில் யோசித்து உருவாக்கியிருந்தார் வரைகலை கலைஞர் யுவராஜ் கணேசன். இந்தப் படத்திற்காக ரஜினியிடமிருந்து நேரடியாகப் பாராட்டுகளையும் அவர் பெற்றார்.
இப்படிப் பெரிய நட்சத்திரங்களின் பொது வரைப்படம் ஒருபக்கம் ஆரவாரத்துடன் பெரிய அளவில் வெளியிடப்பட, இன்னொரு பக்கம் யாரென்றே தெரியாத நடிகர்களுக்கும் அவர்களைக் குளிர்விக்க ஒரு சிலரால் இது போன்ற வரைப்படங்கள் வெளியிடப்பட்டு, அது நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறது. பெரிய நடிகர்களோ, சிறிய நடிகர்களோ, கிரிக்கெட் வீரர்களோ, அரசியல்வாதிகளோ எவராக இருந்தாலும், இந்தப் படங்களின் உருவாக்கம் கவனிக்க வைக்கும்படியாக உள்ளது. அதிலுள்ள அழகியல், பிரமாண்டம், நுணுக்கம் கூர்ந்து நோக்க வைக்கிறது. தொடர்ந்து இது போன்ற வரைப்படங்கள் வரும் ஆண்டுகளில் அதிகமாகும்; மேலும் கவனிக்கத்தக்க அம்சங்கள் சேர்க்கப்பட்டு வளர்ச்சியடையும்; பகிர்வில் புதிய சாதனைகள் படைக்கப்படும். இவை எல்லாம் ரசிகக் கண்மணிகளுக்குப் பெரும் மகிழ்வை அளிக்கும் படைப்புகள்; இவற்றை உருவாக்கும் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வாய்ப்புகள். பொதுஜனங்களுக்கு? ஜஸ்ட் எ டைம் பாஸ்!!
- சரவணகுமரன்