தொழிலாளர் தினம்
“உங்களது பணிநேரம் உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை நிரப்புகிறது. வாழ்வில் மகிழ்ச்சியுறும் ஒரே வழி சிறந்த வேலை என்று நீங்கள் நம்புவதைச் செய்வதே ஆகும். அதை வெற்றிகரமாகச் செய்திடும் ஒரே வழி நீங்கள் செய்யும் பணியை நேசிப்பதே ஆகும்.” – ஸ்டீவ் ஜாப்ஸ்
உலகின் பெரும்பான்மை நாடுகள் மே மாதம் முதல் தேதியைத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடி வந்தாலும், அத்தினம் உருவாக முக்கியக் காரணமாகயிருந்த அமெரிக்கா, செப்டம்பர் மாத முதல் திங்கட்கிழமையைத் தொழிலாளர் தினமாக மேற்கொண்டது.
1830 களில், தொழிலாளர்கள் பலர் 12 முதல் 16 மணி நேரம் பணிபுரிய வேண்டியிருந்தது. குறிப்பிட்ட வார விடுமுறை ஏதுமில்லாமல் இயந்திரம் போல மக்கள் பணியாற்றி வந்தனர். ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் இந்த நிலை தான் இருந்தது. அமெரிக்கக் கப்பல் கட்டுமானம், ரயில்வே துறை, நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் பலரும் ஒன்றிணைந்து குறைவான, குறிப்பிட்ட வேலை நேரம் கோரி போராடத் துவங்கினர். பல மாநிலங்களின் தொழிலாளர் இயக்கங்களை ஒன்றிணைத்து “அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கத்தினை உருவாக்கி, தொழிலாளார் ஒற்றுமையைக் காட்ட, பேரணி நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவின் படி, தினசரி எட்டு மணி நேர வேலை, வாரத்துக்கு ஆறு வேலை நாட்கள் போன்ற கோரிக்கைகளுடன், 1886 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தைத் துவங்கினர். மே 3 ஆம் நாள் சிகாகோவின் ‘மெக்கார்மிக் ஹார்வஸ்ட்’ நிறுவனத்தின் நுழைவாயிலில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை போலீசார் கலைக்க முயன்றபோது கலவரம் வெடித்து அதில் சிலர் இறந்தனர். இதனைக் கண்டித்து நாடெங்கிலும் பல போராட்டங்கள் வெடித்தன. மே நான்காம் நாள் சிகாகோவின் ‘ஹே மார்க்கெட்’ (Hay Market ) சதுக்கத்தில் நடந்த மாபெரும் கண்டனக் கூட்டத்தில் போலீசார் மீது குண்டு வீசப்பட்டு எழுந்த வன்முறையில் பலர் உயிரிழந்தனர். இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட சில தொழிற்சங்கத் தலைவர்களுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக உலகமெங்கும் பல தொழிற்சங்கங்கள் முளைத்து, உழைப்பாளர்களின் கோரிக்கை வலுப்பெற்று வெற்றியடைந்தது. இந்த வெற்றியைக் கொண்டாடவும், மே முதல் நாள் தொடங்கப்பட்ட போராட்டக் களத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் வகையிலும் பல நாடுகள், அத்தினத்தைத் தொழிலாளர் தினமாக அறிவித்தன. தொழிற்சங்கங்கள் ஒன்று கூடி, தொழிலாளர் நலன், மேம்பாடு குறித்த ஒருங்கிணைந்த முடிவுகள் எடுக்க இந்த நாளை அங்கீகரித்தனர். இன்று அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் மே முதல் தேதியை உழைப்பாளர் தினமாகக் கொண்டாடுகின்றன.
அமெரிக்க நாட்டில், முதலாளித்துவக் (Capitalism) கொள்கைகள் பரவலாகக் கடைபிடிக்கப்பட்டு வந்ததால் ரஷ்யா , ஜெர்மனி போன்ற பொதுவுடைமை பரவியிருந்த நாடுகளுடன் சேர்ந்து மே முதல் தேதியை உழைப்பாளர் தினமாகக் கொண்டாடுவதில் தயக்கம் காட்டினர், மே மாதப் போராட்டத்தில் கலந்து கொண்ட வீரர்கள் இறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்றும் கோடைக் கால விவசாயப் பணிகள் பாதிக்கப்படக்கூடாது போன்ற காரணங்களைச் சாக்காக வைத்து மே முதல் தினத்தைத் தவிர்த்தனர் .
இலையுதிர்காலம் தொடங்கும் செப்டம்பர் மாதத்தின், முதல் திங்கட்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்து உழைப்பாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் பீட்டர் மெக்கயர், மாத்யூ மெக்காயர் போன்றோர் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அன்றைய அதிபர் க்ரோவர் கிளீவ்லேண்ட், ஜூன் 28, 1894 அன்று, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர் தினமாக, தேசிய விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கையெழுத்திட்டார். இன்று அமெரிக்கா, கனடா, பெர்முடா போன்ற மிகச் சில நாடுகள் செப்டம்பர் முதல் திங்களைத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடி வருகின்றன.
காலப்போக்கில், முதலாளித்துவக் கொள்கைகள் வலுப்பெற, அமெரிக்காவில் தொழிற்சங்க அமைப்புகள் முடங்கிப் போயின. தொழிலாளர் தினத்தின் உன்னத நோக்கம் வலுவிழந்து, கோடைக்காலம் முடிவுற்று இலையுதிர் காலத்தினை வரவேற்கும் கொண்டாட்டத் தினமாகத் தொழிலாளர் தினம் மாறிப் போனது. பள்ளிகள் துவங்கும் முன்னர் குடும்பத்தினர் மேற்கொள்ளும் கடைசிப் பயணம் அல்லது ஒன்று கூடல் நிகழ்வாக இத்தினம் பார்க்கப்படுகிறது. இந்நாளின் முதன்மை நோக்கமான தொழிற் சங்கப் பேரணிகள், கூட்டங்கள் நடைபெறுவது, அமெரிக்காவில் மிக, மிகச் சொற்பம். இன்னும் சொல்லப் போனால் நான்கில் ஒரு தொழிலாளி உழைப்பாளர் தினத்தன்றும் விடுமுறையின்றி பணி செய்யும் சூழ்நிலைதான் உள்ளது.
2020 தொழிலாளர் தினம்
இந்தாண்டு, கொரோனா பெருந்தொற்று உலகப் பொருளாதாரத்தையே நிலை குலையச் செய்துள்ளது அறிந்ததே. வல்லரசு நாடான அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. தொழில்கள் முடங்கி, தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில்,ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர். பல குடும்பங்கள், பொருளீட்டி வந்த குடும்பத் தலைவனை இழந்துவிட்டன. வேலையில் நிலைத்திருப்போருக்கு, பணி செய்யும் விதமும், பணியிடமும் மாறிப் போயின. பெரும்பாலான வீடுகள், அலுவலகமாகவும், பள்ளியாகவும், மருத்துவமனையாகவும் இயங்கி வருகின்றன. பணியிட உரிமைகளின் முக்கியத்துவம் குலைந்துவிட்டது எனலாம்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் பணியிடங்களும், அலுவலகங்களும் மெதுவாகத் திறக்கப்படுகின்றன. ஒருபுறம் இது நல்ல செய்திதான் என்றாலும், தொழிலாளர் நலனுக்கும் பாதுகாப்புக்கும் ஒரு புதிய சவாலை உருவாகியிருக்கிறது.
இந்திய நாட்டில் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவதற்கு, தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை நேரத்தை, 12 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும்; தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழிற்சங்கச் சட்டம் மற்றும் தொழிற்சாலைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை முடக்கினால்தான் தொழிற்சாலைகள் சுதந்திரமாக இயங்க முடியும் என்று தொழிற்துறைக் கூட்டமைப்புகள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளன. இது போன்ற முயற்சிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உலகெங்கும் பரவும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
ஏற்கனவே வேலைக்குத் திரும்பிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பெரும்பாலும் பாதுகாப்பற்ற மற்றும் ஆரோக்கியமற்ற வேலைச் சூழல்களில் பணியாற்றுகின்றனர் . குறிப்பாக, உடலுழைப்புப் பணியாளர்கள் (‘blue collar workers’) வேலையிழப்பு என்ற அச்சத்தால் தொழிலாளர் உரிமைகளை இழக்கத் துணிகின்றனர். தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் பாதுகாப்பு விதிகளுடன், கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும் – ஆனால் இது நடைமுறையில் நிரப்பந்திக்கப்படவில்லை.
தொழில் நிறுவனங்கள் மற்றும் நிர்வாகத்தினர், ஊதியக் குறைப்பு, பணி நேரக் குறைப்பு, விருப்ப ஓய்வுக்கான தூண்டுதல் போன்ற சில நகர்வுகள் மூலம் தங்களது வணிகச் சுமையைத் தொழிலாளர்களின் தோள்களுக்கு மாற்ற முயல்கிறார்கள். இவை தொழிலாளர்களுக்கு உளவியல் பாதிப்புகள், வேலை-குடும்ப சமநிலைச் சவால்கள் (work-life balance), விடுப்பு, பணி நேர முரண்பாடுகள் போன்ற சிக்கல்களை உருவாக்கலாம் எனும் எச்சரிக்கைச் சமிக்ஞைகள் தோன்றுகின்றன.
தொழிற்சங்க அமைப்புகள் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி, நலத் திட்டங்களைப் பெற்றுத் தர உதவும். எந்த ஒரு தனி நபரும் தொழிற்சங்கம் உருவாக்கவும், ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்சங்கத்தில் இணைவதற்கும் முழு உரிமை பெற்றவர். மாநில அரசுகளும் வெவ்வேறு துறைகளுக்கு ஏற்றாற்போல் தொழிலாளர் உரிமை மற்றும் நலச் சட்டங்களைத் திருத்தி வருகின்றன. உங்களுக்கு நேரடியாகத் தேவைப்படாது என்று தோன்றினாலும் இச்சட்டங்கள் பற்றிய அடிப்படை புரிதல் அவசியமென்றே தோன்றுகிறது .
–ஆசிரியர்
மினசோட்டா மாநில தொழிலாளர் உரிமை, நலச் சட்டங்கள் : https://www.dli.mn.gov/workers/worker-rights-and-protections