கவிதை காணவில்லை
கவிதையைக் காணவில்லை!
தேடி கொடுப்பீர்களா?
பாதித்த சொற்களைக் காப்பாற்றி
எழுதி வைத்திருந்தேன் நெஞ்சாங்கூட்டில்
மீண்டும் மீண்டும் தியானித்தேன்
தனிமையில் உலாவினேன்.
கால்வாறும் மக்கள் சந்தையில்
சிக்கல் பொருட்களின் பரிமாற்றத்தில்
கவிதையைக் காணவில்லை
தேடி கொடுப்பீர்களா?
அங்கெங்கோ கேட்டது போலிருந்தது
என் சொந்த கவிதை வரிகள்
யாரோ எழுதிய பாட்டின் இரு புறத்திலும்
அய்யகோ!
சினம் கொண்டதோ கவிதை
இல்லை
திருடிவிட்டாரோ யாராவது
அடடா
புரிந்தது இப்போது
சிறையிலிட்டிருந்தேன் நானே
ஆணவத்தின் சிறைச்சாலையில்
அதற்காகத்தான் எட்டிப் பார்க்கின்றன
கவிதை வரிகள்
அவர், இவர் மனதின்
எழுத்துகளில்
ஓ கவிதையே மன்னித்துவிடு என்னை!
நீ முழு சுதந்திரம் படைத்தவள்
எழுதுவது மட்டும் என்னுடைய கடமை!
செவிசாய்ப்பவர் கையில்
உனது ஜாதகம்!
கவிதையே
நீ யார் மனதிலாவது
புகுந்துகொள்!
இயற்றியவர் பெயரின்
அடையாளம் மட்டும்
காப்பாற்றிக் கொள்!
கன்னட மூலம் : கவிஞர் லிங்கேஷ் ஹுணசூர்.
தமிழாக்கம்: பேராசிரியை Dr. மலர்விழி