தீபச்செல்வனின் ‘நடுகல்’ பின் குறிப்புக்கள்
இன்றுதான் தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடங்கியது முதல் முடியும்வரை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் கதை நகர்கிறது. நான் வாழ்ந்த மண்ணில், நான் நடந்த வீதியில், நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் தரிசிக்க முடிகின்றது. கதையின் பல இடங்களில் நான் பட்ட அனுபவங்கள் கண் முன்னே படமாக விரிகின்றன. போர் தின்ற பூமியில் வாழ்ந்த எல்லோருடைய அனுபவங்களும் இவையாகவே இருந்தன, இருக்கின்றன.
கிளிநொச்சியில் தொடங்கும் கதை விரிந்து பரந்து வன்னியின் பெரும்பாலான இடங்களுக்கு நகர்கிறபோது நானும் என்னை அறியாமல் அந்த இடங்களுக்கே சென்று விடும் உணர்வைத் தந்தது. ஒரு தாயின் பாசப் போராட்டமும் மகனின் தாய் மண் பற்றிய ஏக்கமும் கதையெங்கும் இழையோடி நிற்கிறது.
அண்ணன் – தம்பி, அம்மா – மகன் உறவை இம்மியளவேனும் குறைவின்றிச் சொன்ன விதம் அழகு. சண்டை நடந்த காலத்துத் துயரங்களையும், சண்டைக்குப் பிந்திய இராணுவ அடக்குமுறை பற்றியும், தமிழர்களின் தியாகங்கள் பற்றியும் காலங்கடந்து வரும் எங்கள் சந்ததிகள் அறிந்து கொள்ள வேண்டிய பலதரப்பட்ட ஆவணங்களின் தொகுப்பாக இந்த நாவலைப் பார்க்க வேண்டி இருக்கிறது.
எங்கள் பூர்வீக மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் எங்கள் இளஞ் சந்ததிகள் ஒருமுறையேனும் இந்த நாவலைப் படித்துப் பார்க்க வேண்டும். அதற்காகவேனும், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பன்மொழிப் புலமை உள்ள எழுத்தார்வம் உள்ளவர்கள் இந்த நாவலை வேற்று மொழிகளில் மொழி பெயர்க்க முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.
போர் எவ்வளவு கொடுமையானது என்பது, பிறந்த நாளில் இருந்து போரோடு வாழ்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு நன்கு தெரியும். உலகில் யாரும் போரை விரும்புவதில்லை. உரிமைகள் மறுக்கப்படும் போது தவிர்க்க முடியாமல் போரே எங்கள் வாழ்வைத் தீர்மானித்தது. போர் எங்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட போது அதற்குள் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாய நிலை வந்தபோது போரும் எங்கள் வாழ்வின் அங்கமாகிப்போனது.
அன்றாடம் தினச் சாவுக் குறிப்புக்களால் எழுதப்பட்ட முற்றுப் பெறாத நினைவுகளை, அகதி வாழ்வின் அந்தர நிலைகளை, பெற்ற பிள்ளையைப் போரில் பறிகொடுத்த பெற்றோரின் நிலையை, கணவனை இழந்த மனைவியின் துயரை, தந்தையை இழந்த பிள்ளைகள் – சகோதரங்களைப் பறிகொடுத்த உறவுகளின் சொல்லொணாத் துயரங்களை முற்றுப் பெறாத தொடர் கதையாய் நீளும் போருக்குப் பின்னைய அடக்குமுறைகளை விரிந்த காட்சி அமைப்பில் கொண்டு வந்து ஒரு படம் போலக் கண் முன்னே விரிய வைக்கிறார். எல்லாவற்றையும் மீறி வெள்ளையன், கதை முழுவதையும் ஆக்கிரமிக்கிறார்.
போருக்குள்ளும் ஒரு அழகியல் சார்ந்த வாழ்விருந்தது என்பதை இக்கதையில் ஆங்காங்கு தொட்டுச் செல்லும் எழுத்தாளர் போரினால் ஏற்பட்ட வலிகளை வரிசைப்படுத்திச் சொன்ன விதமும் கையாண்ட இயல்பான மொழிநடையும் வாசிப்போரைத் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு கடுகதித் தொடர்வண்டி போல இழுத்துச் செல்கிறது.
போரும் அதனால் ஏற்பற்ற இழப்புகளும் எம் வாழ்வில் ஏற்படுத்திய சொல்லொண்ணாக் காயங்களை ஒரு உள்ளிருந்த பார்வையாக வெளிக் கொண்டு வருவதற்கு, தீபச்செல்வன் போன்ற ஒரு சிலரால் மட்டுமே இன்று முடிகிறது. இன்றைய காலகட்டத்தில் இது அவ்வளவு இலகுவான காரியமல்ல, கத்திமேல் நடப்பதிலும் கொடியது. தெரிந்தும் பேனாவைக் கையில் தூக்கிய தீபச்செல்வனைப் பாராட்டியே ஆகவேண்டும்.
ஒன்று மட்டும் உறுதி இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்தக் கதை என்னைத் தூங்க விடாமல் ஏதோ செய்யப் போகிறது என்பது மட்டும் தெரிகிறது.
நன்றி
தியா
Tags: நடுகல்