\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பெர்க் (RBG)

இந்தியாவில் பாலின வேறுபாடுகள் தலை விரித்தாடிக் கொண்டிருந்த காலத்தில் பெண் ஆணுக்குச் சமம், சமூகத்தில் பெண்கள் ஆணுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை என்ற புரட்சியை எழுப்பி, அஞ்சா நெஞ்சத்துடன் அதற்குத் தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி. இன்றும் பெண்ணுரிமைக்கான அடையாளமாகத் திகழ்பவர்களில் முக்கிய இடம் பெறுபவர் மருத்துவர் முத்துலட்சுமி. உலகெங்கும் ஆண், பெண் இன பேதங்கள் அகற்றப்பட வேண்டுமென்ற குரல்கள் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் கூட ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அப்படி ஒலித்து வந்த வலுவான குரலொன்று அடங்கிப் போனது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளில் ஒருவராக 27 ஆண்டுகள் பணியாற்றிய ரூத் பேடர் கின்ஸ்பெர்க் செப்டம்பர் 18 ஆம் நாள் மறைந்தார். ஆர்.பி.ஜி (RBG) என்ற செல்லப் பெயரால் அழைக்கப்பட்ட திருமதி கின்ஸ்பெர்க்கின் இயற்பெயர் ஜோன் ரூத் பேடர். அவரது பள்ளியில் பல பெண்கள் ஜோன் என்ற பெயரில் இருந்ததால் ‘ரூத்’ என்று அழைக்கப்பட்டார். படிப்பில் ரூத் கெட்டிக்காரராக இருந்தார். வறுமை காரணமாக, குடும்பத்தின் ஆண் வாரிசாக இருந்த ரூத்தின் அண்ணனைக் கல்லூரிக்கு அனுப்புவதற்காக, ரூத்தின் கல்லூரிப் படிப்புக்குத் தடை விழுந்தது.  ஆனாலும் மகளைப் பட்டதாரியாக்கி, ஆசிரியர் பணிக்கு அனுப்ப அவரது தாயார் சீலியா பெரு முயற்சி செய்தார்.

கொர்நெல் பல்கலையில் கலைத்துறைப் பட்டம் பெற்ற ரூத், கல்லூரியில் சந்தித்த மார்ட்டின் கின்ஸ்பெர்க் என்பவரை மணந்தார். இராணுவப் பணி காரணமாக மார்ட்டின் ஒக்லஹாமாவுக்குச் செல்ல வேண்டி வந்தபோது ரூத்துடன் குடிபெயர்ந்தார். இங்கு தான் ரூத்தின் மனதில் பாலினப் பாகுபாடுகள் வடுக்களாகப் பதிந்தன. ஒக்லஹாமாவில் சோஷியல் செக்யூரிட்டி அலுவலகத்தில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார் ரூத். வேலையில் சேர்ந்த சில மாதங்களில் ரூத் கர்ப்பமடைய அவரது பதவி இறக்கப்பட்டு, சம்பளமும் குறைக்கப்பட்டது. இது குறித்து சட்டங்களைப் படிக்கத் துவங்கிய ரூத் சட்டப்படிப்பில் ஆர்வம் கொண்டார். மார்ட்டின் வருமான  வரி தொடர்பான பட்டப் படிப்பைத் தொடர, ரூத் ஹார்வர்ட் பல்கலையில் சட்டப் படிப்பைத் துவங்கினார். 500மாணவர்கள் படித்த சட்டக் கல்லூரியில் 9 பெண்கள் மட்டுமே இருந்தனர். ஹார்வர்ட் சட்டக் கல்லூரி முதல்வர் இவர்களிடம், “நீங்கள் 9 பெண்களும் இந்தக் கல்லூரியில் படித்து, சிறந்த வழக்கறிஞராக வர வேண்டிய 9 ஆண்களின் வாய்ப்புகளைப் பறித்து விட்டீர்கள்” என்று நேரடியாகவே கூறினார்.     

மார்ட்டினுக்கு நியூயார்க்கில் வேலை கிடைத்ததால், மீண்டும் குடும்பம் நியூ யார்க்குக்குக் குடிபெயர்ந்தது. ரூத் கொலம்பியா பல்கலையில் சட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இந்தச் சமயத்தில் மார்ட்டினுக்குப் புற்று நோய்த் தாக்கம் ஏற்பட்டது. கணவனின் நோய்க்கான பணி விடைகள் செய்து, கணவனின் மேற்படிப்புக்கான பாடங்களை அவருக்குப் படித்துக் காண்பித்துத் தேர்வுக்குத் தயார்ப்படுத்தி, கைக் குழந்தையைக் கவனித்துக் கொண்டு, வீட்டுப் பணிகளுடன் தனது படிப்பையும் கவனித்துக் கொண்டார் ரூத். இந்த நாட்களில் தினம் 3 மணி நேரத் தூக்கம் மட்டுமே அவருக்கு ஓய்வு.

மிகச் சிறந்த நற்சான்றிதழ்களுடன் படிப்பை  முடித்துச் சட்ட அலுவலகங்களில் உதவியாளராகச் சேர முனைந்த ரூத்துக்கு யாரும் வாய்ப்புத் தர முன்வரவில்லை. இதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டவை

  1.       அவர் ஒரு யூதர்
  2.       அவர் ஒரு பெண்
  3.       அவர் ஒரு குழந்தையின் தாய்   

அந்த நேரத்தில், அமெரிக்காவில் மிகக் குறைந்த சதவீத வழக்கறிஞர்கள் மட்டுமே பெண்கள். நாடு முழுதிலும் இரண்டு பெண்கள் மட்டுமே நீதிபதிகளாகப் பணியாற்றி வந்தனர். கொலம்பியா சட்டக் கல்லூரிப் பேராசிரியரின் தொடர் பரிந்துரையால், நியூயார்க் தென் மாவட்ட நீதிமன்றத்தில் கிடைத்த எழுத்தர் பணியில் ஒட்டிக் கொண்டார் ரூத். இங்கு பல நாட்டு சட்டத்துறை பற்றி ஆய்வு செய்தபோது ஸ்வீடன் நாட்டில் பெண்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் குறித்து ஈர்க்கப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு சட்டக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகச் சேர்ந்தார். இங்கும் வழக்கமாகப் பேராசியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தை விட பெண்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதைக் கண்டு அதிர்ந்தார்.  அந்நாட்களில் அமெரிக்காவில் இருபதுக்கும் குறைவான பெண் பேராசியர் மட்டுமே இருந்தனர். இவையெல்லாம் ரூத்தின் மனதில் ஆழப் பதிந்து மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற எண்ணத்துக்கு உரமிட்டன. ‘பாலினப் பாகுபாடுகள்’ (Sex Discrimination) என்ற குறிப்பேட்டை (Case book) உருவாக்கி கல்லூரிப் பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்தார்.

பெண்ணுரிமை செயல்திட்டம்

1972 ஆம் ஆண்டு “அமெரிக்க சுதந்திரக் குடிகளின் சங்கம்” (American Civil Liberty Union – ACLU) எனும் சங்கத்தின் அங்கமாக இவர் துவங்கிய “பெண்ணுரிமைச் செயல்திட்டம்” சட்டத் துறையில் புரட்சிகர மாற்றங்களைக் கொணர்ந்தது. “பெண்கள் பாதுகாப்பு” என்ற போர்வையில் அவர்கள் மீதான அடக்குமுறை சட்ட விதிகளை வெளிச்சமிட்டுக் காட்டி அவற்றை மாற்ற பெரும் காரணமாக அமைந்தது “பெண்ணுரிமைச் செயல்திட்டம்”. பெண்களுக்கான தனியுரிமை என்பதைக் காட்டிலும் இரு பாலினத்தவருக்கும் சம உரிமை என்ற கோட்பாட்டை வலியுறுத்தியது இந்தச் செயல் திட்டம். இதனை நிலை நிறுத்திட ரூத் மேற்கொண்ட சில வழக்குகள் மிக முக்கியமானவை. அமெரிக்கச் சட்டத்துறையில் பல மாற்றங்களை, திருத்தங்களை இந்த வழக்குகள் நிகழ்த்திக் காட்டின.

  1. 1972 ஆம் ஆண்டு – ஃப்ராண்டியரோ VS ரிச்சர்ட்சன் –

    அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வந்த ஷாரன் ஃப்ராண்டியரோ என்ற பெண் உடல்நிலை காரணமாக ஓய்வு பெற நேர்ந்த போது, அவரது கணவருக்கு ‘சார்புரிமை உதவித்தொகை’ (Dependent Allowance) வழங்கப்படாது எனும் விதியை எதிர்த்து ஷாரன் தொடர்ந்த வழக்கு. ஆண்கள் ராணுவத்தில் இருந்து விலகும் சமயத்தில் அவர்களது மனைவியர்‘சார்புரிமையாளர்’ (Dependent) என்று கருதப்பட்டு வந்தனர். ஆனால் பெண்களின் கணவர் ‘சார்புரிமையாளர்’ கிடையாது (அந்தப் பெண்ணைச் சார்ந்து அவரது கணவர் இல்லை என்ற அடிப்படையில்) என்று எதிர்த்து வாதாடிய அரசு வழக்கறிஞரை, தனது வாதத் திறமையால் திணறடித்து அந்த விதியில் பெண்கள் ஆண்கள் என்ற அடிப்படையில் பாகுபாடு இருக்கக்கூடாது எனும் மாற்றங்கள் சேர்க்கக் காரணமாக இருந்தார் ரூத்.

  1. 1973 ஆம் ஆண்டு – கான் VS ஷெவின் –

    ஃப்ளாரிடா மாநில சொத்து வரி விதிப்பில், குடும்பத் தலைவன் இறக்க நேர்ந்தால் அந்தக் குடும்பத்துக்கு $500 வரிச் சலுகை தரப்பட்டு வந்தது. அதே சமயம் குடும்பத் தலைவி இறக்க நேர்ந்தால், மனைவியை இழந்த கணவருக்கு இந்த வரிச் சலுகை வழங்கப்படாததை எதிர்த்து மெல் கான் என்பவர் தொடர்ந்த வழக்கு இது. இதில் வாதாடிய ரூத், தலைவனை இழந்த குடும்பம் அடையும் சிக்கல்களும் தலைவியை இழந்த குடும்பம் சந்திக்கும் சிக்கல்களும் வெவ்வேறு உருவில் இருந்தாலும் இரண்டும் ஒரே வகையான தாக்கங்களை உண்டாக்குகின்றன. ஆகையால் இதில் ஆண், பெண் பேதம் கூடாது என்று வாதாடி வெற்றி பெற்றார். இதன் காரணமாக ஃப்ளாரிடா மாநிலம் மட்டுமின்றி பல மாநில வரிச் சட்டங்கள் மாற்றப்பட்டன.

  1. 1975 ஆம் ஆண்டு – வெய்ன்பெர்கர் vs வீசன்ஃபெல்ட்

    ஸ்டீஃபன் வீசன்ஃபெல்ட்டின் மனைவி பாலா பிரசவத்தின் போது இறந்துவிட, பிறந்த குழந்தையை ஸ்டீஃபன் முழுநேரமும் கவனித்துக் கொண்டார். பணிக்குச் செல்ல முடியாத நிலையில் வருமானத்துக்கு, மனைவியின் சமூகப் பாதுகாப்பு உதவித்தொகைக்கு (Social Security Benefits) விண்ணப்பித்தார். ஆனால் இந்த உதவித்தொகை பாலாவின் வாரிசாகப் பிறந்த குழந்தைக்கு மட்டுமே கிடைக்கும், பாலாவின் கணவருக்குக் கிடைக்காது என்றிருந்த விதியை எதிர்த்து ஸ்டீஃபன் தொடர்ந்த வழக்கில், அவர் சார்பில் ரூத் வாதிட்டு, சட்ட மாற்றங்களை இடம்பெறச் செய்தார்.

  1. 1978 ஆம் ஆண்டு – டூரன் vs மிசௌரி

    ஒரு கொலை வழக்கில் சிக்கிக்கொண்ட பில்லி டூரன், வழக்கு விசாரணையில் இடம் பெற்று தீர்ப்புகளை நிர்ணயிக்கும் தீர்ப்பாயக் குழுவில் பெண்கள் இடம் பெறாததைக் குறிப்பிட்டு வழக்குத் தொடர்ந்தார். இதில் வாதாடிய ரூத், தீர்ப்பாயக் குழுவில் பெண்கள் அவசியம் இடம் பெற வேண்டும், இதில் பேதங்கள் இருக்கக்கூடாது என்ற சட்டத் திருத்தத்துக்கு வழி வகுத்தார்.

நீதிபதி பணி

தனது ஒவ்வொரு வழக்கிலும், தனது வாதத் திறமையால் முற்போக்கு எண்ணங்களை விதைத்து வந்தார் ரூத். இதன் விளைவாக, 1980-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் முயற்சிகளால், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கொலம்பியா மாவட்டத்துக்கான நீதிபதியாக ரூத் கின்ஸ்பெர்க் நியமிக்கப்பட்டார்.இங்கும் ஆண் பெண் பேதங்கள், பாரபட்சம்  இருக்கக்கூடாது என்பதில் அதிகக் கவனம் செலுத்தினார்.

பெண்ணுரிமையின் பிம்பமாகத் தோன்றிய ரூத் பேடர் கின்ஸ்பெர்க், 1993-ல் அதிபர் பில் கிளிண்டனால் உச்ச நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.இங்கும் இவரது மாறுபட்ட பெண்ணுரிமைப் பார்வை, பல அதிரடித் திருத்தங்களைக் கொண்டு வந்தது.

VMIஎனப்படும் வெர்ஜினியா மிலிடரி இன்ஸ்டிட்யூட்டில் பயிற்சி பெற பெண்களுக்கு இடமில்லை என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பெண்களுக்காகத் தனியாக ஒரு கிளையைத் தொடங்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக வாக்களித்து, ஆண்கள் பயிற்சி பெறும் அதே நிலையத்தில் பெண்களும் பயிற்சிபெற வழி வகுத்தார்.

 

குட் இயர் நிறுவனத்தில் நிலவிய ஆண், பெண் ஊதிய வேறுபாடுகளைக் களைந்து, ஒரே பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஆண் பெண் பாலின வேறுபாடின்றி ஒரே ஊதியம் வழங்கப்பட வேண்டுமென்ற திருத்தத்தை வலியுறுத்தினார்.

கருச்சிதைவு (Abortion) குறித்த முடிவுகளை,சம்பந்தப்பட்ட பெண்ணே எடுக்க முடியும்,எடுக்க வேண்டும் என்ற திருத்தங்களை முன் மொழிந்தார்.     

சில மாநிலங்களில் நடந்து வந்த தேர்தல் தில்லுமுல்லுகளை ஒடுக்க வேண்டுமெனில், ‘ஆப்பிரிக்க அமெரிக்கர்களை’ பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளைத் தளர்த்தி அவர்கள் மீது தக்க நடவடிக்கை வேண்டுமென தேர்தல் துறையினர் பரிந்துரைத்த போது, “சூறாவளிக்கு நடுவில் மழையில் நனைய ஆசைப்பட்டு  குடையை மடக்கி வைத்துவிட்டு வெளியில் செல்வது போன்றது”என்று அந்தப் பரிந்துரையை நிராகரித்தார்.

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவியேற்ற இரண்டாவது பெண் கின்ஸ்பெர்க். (இவருக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில், 1981 ஆம் ஆண்டு நீதிபதி பதவியேற்ற முதல் பெண்மணி சாண்ட்ரா ஓ கானர். இவர் 2006ஆம் ஆண்டு பணி ஒய்வு பெற்றார்).அமெரிக்காவில் உச்ச நீதிமன்ற நீதிபதிக்குப் பதவிக்காலம் என்ற வரையறை இல்லை. ரூத் கின்ஸ்பெர்க் கால் நூற்றாண்டுக்கும் மேல், தான் இறந்த நாள் வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.

ரூத் கின்ஸ்பெர்க் உருவத்தில் மிகச் சிறியவராக இருந்தாலும், சட்ட வல்லுனராக உயர்ந்து, நாடு முழுதும், குறிப்பாக இளைஞர், சிறுவர்களுக்குப் பாலினச் சமத்துவத் திருவுருவாகப் படர்ந்திருந்தார். ஒவ்வொரு நாளும் அயராது பணியாற்றி வந்த ரூத், தனது கணவர் மார்ட்டின் கின்ஸ்பெர்க் துணையின்றி இது சாத்தியப்பட்டிருக்காது என்றார். தங்களது 56 ஆண்டு காலத் திருமண வாழ்வில் கருத்து பேதங்கள் ஏதுமின்றி வாழ்ந்ததற்குத் தங்களிடையே இருந்த காதலும் புரிதலும் தான் காரணம் என்பவர்,மார்ட்டின் தன்னை ஒரு நாள் கூட சமைக்க விட்டதில்லை என்று பெருமிதப்பட்டுக் கொண்டதுண்டு. ‘ரூத் சமையல் குறித்த எந்த அறிவுரையும் எனக்குச் சொல்வதில்லை; நான் ரூத்துக்குச் சட்டத்துறை பற்றிய அறிவுரை சொல்வதில்லை’இதுவே எங்களது தாம்பத்தியத்தைச் சீராக வைத்து வந்தது என்று தன் பங்குக்கு, மார்ட்டின் கிண்டலடித்ததும் உண்டு. 2010 ஆம் மார்ட்டின் புற்று நோயால் இறந்து விட்ட போது,அடுத்த நாள் பணிக்குத் திரும்பி வழக்கமான வேலைகளைத் தொடர்ந்தார் ரூத்.

இவர்களது குடும்பத்தைத் தொடர்ந்து அச்சுறுத்தி, பாதித்து வந்த புற்று நோய், ரூத்தையும் விட்டு வைக்கவில்லை. 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக புற்று நோய்க்கான அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார் ரூத். அதைத் தொடர்ந்து நடந்த கீமோதெரபி, ரேடியேஷன் சிகிச்சை நாட்களில், மருத்துவமனையிலிருந்து நேராக அலுவலகத்துக்குத் திரும்பி, தொடர்ந்து பணிகளைச் செய்து வந்தார். மீண்டும் மீண்டும் புற்றுநோய் அவரைத் துரத்திய காரணத்தினால் தொடர்ந்து ஐந்து முறை அறுவைச் சிகிச்சை,கீமோதெரபி என்று மிகத் துணிவுடன் போராடினார் ரூத் கின்ஸ்பெர்க். இந்த சிகிச்சைகளினால் உடல் நலிவடைந்த நிலையிலும்,உடற்பயிற்சி செய்து தனது மன, உடல் வலிமையைப் பாதுகாத்து வந்தார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் மிக வயதானவர்  ரூத் கின்ஸ்பெர்க். இரண்டாண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தில் கால் இடறிக் கீழே விழ, அவரது பேத்தி ஒருவர் “இந்த வயதில், இவ்வளவு உபாதைகளுக்கு நடுவில் நீங்கள் வேலை செய்ய வேண்டுமா? ஓய்வு பெறலாமே?” என்று வினவ “அமெரிக்க அதிபர் பதவியில் புதிய நபர் நிறுவப்படும் வரை நான் மாற்றப்படக் கூடாது என்பதே என் தீவிர விருப்பம்” என்றார்.  

2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர்,  வேட்பாளராகயிருந்த, தற்போதைய அதிபர் டானல்ட் ட்ரம்பை “அவர் ஒரு போலி. எந்தவிதமான நிலைத்தன்மையும் இல்லாதவர். தன் தலையில் தோன்றுவதைப் பேசுகிறார். அவருக்கு உண்மையில் ஒரு ஈகோ உள்ளது. அவர் ஜனாதிபதியானால் நாடு என்னவாக இருக்கும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது.” என்று ஒரு பேட்டியில் சொல்லிவிட்டு, பின்னர் அதற்காக வருத்தம் தெரிவித்தார். “நீதிபதியாக நான் எந்த அரசியல் கருத்தையும் பேசியிருக்கக் கூடாது,என்னை நான் திருத்திக் கொள்கிறேன்”என்று மன்னிப்புத் தெரிவித்தார்.

கின்ஸ்பெர்க்கின் அதிரடி முடிவுகளால் கவரப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் டம்ளர் (Tumblr) சமூக ஊடகத்தில், அவரது உறுதியான முடிவுகளைப் பாராட்டும் வகையில் ‘மோசமான ஆர்.பி.ஜி’ (Notorious RBG) என்று குறிப்பிட்டு பதிவிட்ட தகவல் மிகப் பிரபலமடைந்து, அந்தப் பெயர் பலருக்கும் பரிச்சயமாகியது. அதே பெயரில் ஆவணப்படம், புத்தகங்களும் வெளியாயின.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முன்னாள் அதிபர் ஒபாமா “அந்தச் சிறிய உருவம் மிகப்பெரிய காரியங்களைச் சாதித்தது. அவர் புற்றுநோயுடன் மட்டுமல்ல, ஜனநாயகத்துக்காகவும் கடைசி வரை போராடியவர்’ என்று நெகிழ்ந்திருக்கிறார்.

பெண்ணுரிமையின் அடையாளச்சின்னமாக விளங்கிய ரூத் பேடர் கிங்ஸ்பெர்க் (RBG)அவர்களது ஆன்மா சாந்தியுறட்டும்.

ரவிக்குமார்

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad