மீண்டு வாராய்!
இறந்து விட்டான் என்றிருந்தோம்..
இனிய கம்பன் – இறந்தே விட்டானென்றிருந்தோம்..
இல்லையெனச் சொல்வதற்கும் இகம் மகிழச் செய்வதற்கும்
இன்னுமொரு முறை பிறந்து வந்தான்!!!
சிலம்பதனை இசைத்து விட்டுச்
சிதைநோக்கிப் போனான் இளங்கோ – எனச்
சிதைந்துபோன தமிழ் மனங்கள்
சிலிர்ப்புறவே மீண்டு வந்தான்!!
ஔவையவள் பெண்ணுருவாய்
அவதரித்துச் சென்று, பின்னர்
ஆசையாய் ஆண் பிறப்பெடுத்து
அவனியிலே பிறிதொருமுறை பிரவேசித்தாள்!!
பறந்து போனான், நமையெல்லாம் மறந்து போனான்
பாரதியெனப் பாரெலாம் புலம்பிற்று..
பரலோகம் சென்ற அவன்
பாதியிலே திரும்பி வந்தான்!
இன்னும்பல கவிஞர்களும்
இனியபல படைப்பாளர்களும்
இறந்துபட்ட பின்னாலும்
இவனுருவில் வந்து சேர்ந்தனர்!!!
வந்துசேர்ந்த வள்ளலவன்
வரைமுறையின்றி வாழ்ந்திடினும்
வஞ்சனையின்றிப் படைத்தெடுத்தான்
வந்தவழி போயும் சேர்ந்தான்!!!
கவியரசைக் கவர்ந்து சென்ற
கருப்புதினத்தன்று மீண்டுமனுப்பிவைக்க
கருணைமிகு கடவுளவனைக்
கால்பிடித்து இறைஞ்சுகின்றோம்!!!!
-வெ. மதுசூதனன்
Tags: Kannadasan, கண்ணதாசன், கவியரசர், கவியரசு