\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

உண்மைக்கும் அபிப்பிரயாத்திற்கும் இடையுள்ள வேறுபாடுகள்


மின்வலயத்தகவல் நொடிக்கு நொடி பாய்ந்து வரும் இந்தத் தரணியில் தகவலைப் பகுத்தறியும் ஆற்றலுக்கு சவாலும் அதிகரித்தவாறேயுள்ளது. பகிரப்படும் தகவல்களில் எது உண்மை, எது வெறும் அபிப்ராயம் / கருத்து என்று அறிந்து, அதற்கேற்ப நாம் கிரகித்துத் தொழிற்படுவது அவசியமாகின்றது.

எது உண்மை, எது அப்பிப்பிராயம், எது செய்தி, எது வதந்தி என்று தெரிந்து தகவலைக் கிரகிப்பது தற்போது அத்தியாவசியமாகிறது. மின்னியல் தகவலே வாழ்வு என்று அமையும் இந்தத் தருணத்தில் வாழ்வில் ஏமாறாமல் இருக்கவும், ஊடகப் பொதுநலனை  பேணவும் சில வழிமுறைகளை  நாம் தெரிந்து கொள்ளலாம்.

உண்மை (Fact) என்பது என்ன?

தமிழில் தலைமுறை தலைமுறையாக தரமான நல்லேடுகள் பல இது பற்றி விவரிக்கின்றன. எனினும் எமது சிறு நேர அவகாசத்தில் இது பற்றி அலசுவோம் வாருங்கள். உண்மை என்பது அதன் உருவக ஆழத்தில் ஒரு கூற்று மாத்திரமே. இந்தக் கூற்றின் தன்மையை, உட்பொருளை அவதானிப்பின் மூலமோ அல்லது பரிசோதிப்பின் மூலமோ அறிந்து கொள்ளக்கூடியது.

இதற்கு உதாரணமானதொரு  கூற்று. “சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும்”. இதை நிருபித்துக்கொள்ள ஒருவர் வீட்டின் வெளியே ஒரு திசை காட்டி உடன் சென்று, காலையிலும் மாலையிலும் சூரிய உதயத்தையும் , அஸ்தமனத்தையும்  பலநாட்கள் பலதடவை அவதானித்து அறிந்து கொள்ளலாம்.

அதே சமயம் அபிப்பிரயமானது ஒருவரது  சிந்தனை,உணர்வு எனலாம். அபிப்பிராயத்தை நிரூபிக்கமுடியாது. ஒரு அபிப்பிராயத்தை இன்னொருவர் எதிர்மறையாகவும் சிந்தித்துக்கொள்ளலாம். 

இதற்கு உதாரணமான கூற்று. “நான்கு பருவக்  காலநிலைகளில் சிறந்தது வெப்பமான, இலை, குழை நிறைந்த கோடைகாலம்.” இது தனிப்பட்ட ஒருவரது  உணர்வு மாத்திரமே. இதைப் பொதுவான மெய்க்கூற்று என்று நிரூபிக்க முடியாது, காரணம் கோடைகால வெட்ப தட்பம் பிடித்தவர்களும் உண்டு, பிடிக்காதவர்களும் உண்டு.

எனவே ஒரு தகவலின் உண்மைத் தன்மையைக்  கீழேயுள்ள குணாதிசயங்கள் தெளிவுற புரிந்து கொள்ள உதவும்.

  • உண்மை எனும் கூற்று சரிபார்த்து அறிந்து கொள்ளக் கூடியது
  • அது ஒரு நம்பிக்கையோ அல்லது உணர்வுகளையோ உள்ளடக்கியது அல்ல
  • உண்மையானது அதை வாசிப்பவரை விவாதிக்கவோ, எந்தவித பக்கசார்ந்த ஆதரவையோ பெற வைக்காது.
  • அதை அவதானிப்பு, பரிசோதிப்பு மூலம் நிரூபிக்க முடியும்
  • உண்மையானது யார் எதை நினைப்பினும் அந்த சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டது
  • உண்மைக் கூற்றை விவரிக்க துல்லியமான மொழி விவரணை, அளவீடு சார்ந்த தேதி, இடம், எண்ணிக்கை போன்ற விடயங்கள் பாவிப்பில் இருக்கும்
  • உண்மைக் கூற்று கட்டுக்கடங்காத வாக்கியங்களைக் கொள்ளாது. உதாரணமாக “எல்லோரும், எப்போதும், யாரும் இல்லை, வேறு யாரும் இல்லை” போன்ற சொற்கள் பொதுவாக வராது. வருகினும் அவை நிரூபிக்கக் கூடியவையாக அமையும்.

அபிப்பிராயம் (Opinion) என்றால் என்ன?

நாம் உண்மைக்கும், அபிப்பிராயத்திற்கும் இடையிலான வித்தியாசங்களைப் பார்ப்பதால் அடுத்து அபிப்பிராயங்களின் குணாதிசயங்களைப் பார்ப்போம். 

  • அபிப்பிராயமானது உணர்வுகள், பார்வைகள், எண்ணங்கள், தீர்ப்பு, மற்றும் நம்பிக்கை போன்றவை – இவற்றைப்  பொதுவாக நிரூபிக்க முடியாதது

 

  • சிலசமயம் இது ஒருவரின் உண்மைக்கூற்றுச் சார்ந்த விளக்கம், பகுப்பாய்வின்  முடிவாக அமையலாம்.

 

  • மேலும் சிலநேரங்களில்  இது ஒரு கூற்றின் விவாதம், எதிர்வாதமாகவும் அமையலாம் . 

 

  • அபிப்பிராயமானது நிருபிக்க முடியாததொன்று. அதே சமயம் இன்னொருவர் எதிர்மறையாக அபிப்பிராயம் கொண்டிருக்கவும் முடியம்

 

  • அபிப்பிராயங்கள் “நான் எண்ணுகிறேன், நீங்களும் இப்படி யோசிக்க வேண்டும், நான் நம்புகிறேன், இப்படி நான் உணரகிறேன்”  போன்ற நேரடியாக, அல்லது உட்பொருள் கூடிய குறிச்சொல்லாக, கலைச்சொல்லாக,  சூத்திரமாக, பிரயோகச் சொற்றொடராகக் காணப்படும்.

 

  • வழக்கமாக அபிப்பிராயங்கள் ஏதாவது ஒரு தீர்ப்பு மொழிதனையும், அதே சமயம் “சிறந்தது” “குறைந்தது” “வல்லமையுள்ளது” “வல்லமையற்றது” போன்ற சொற்பதங்களையும் கொண்டிருக்கும்.

 

  • மேலும் கட்டுக்கடங்காத வார்த்தைப் பிரயோகங்கள் கொண்டிருக்கும் . “எல்லோரும், எப்போதும், யாரும் இல்லை, வேறு யாரும் இல்லை, என்றும் இல்லவேயில்லை” போன்ற சொற்கள் பிரயோகத்தில் இருக்கும்.

வதந்திகளைச் செய்திகளிலிருந்து பிரித்து அறிவது எப்படி?

நாம் சில அன்றாட உரையாடல்களைக் கொண்டு இதை எடுத்துப் பார்க்கலாம். 

திகில் முகத்தில் படர  ஒருவர் “கேட்டீர்களா அந்த நடிகர்  தான் அண்மையில் நடித்த பட ஹிரோயின் தன்னைக் காதலிக்கவில்லை என்று அறிந்து  உயிர் நீத்துக் கொள்ள கடலில் குதித்து விட்டாராமே” எனக் கேட்க, 

நண்பர் பதிலுக்கு  “அது சரி இதை எங்கு பார்த்தாய்?” என்று கேட்டார். 

அதற்கு முதலாமவர்  “ஒண்ணுமில்லை பேஸ் புக்கில் யாரோ செய்தியாகப் போட்டிருந்தாங்க, வாசித்தேன்” . 

நண்பர் “ அப்பிடியா இதை நம்பவே முடியவில்லை மேலதிக விபரம் இருக்கா” என்று கேட்டார். 

அதற்கு முதலாவது நபர் சொன்னார் “எனக்கு விபரம் தெரியாது, ஏதோ தலையங்கத்தை மட்டும் வாசிச்சேன்”.  இந்த உரையாடலில் இருந்து நாம் ஊகிக்கக் கூடியது. திகில் நாடும் ஒருவர் சுவாரஸ்ய தலையங்கத்தை மட்டும் வாசித்து, தகவலின் உள்ளடக்கம் முன் பின் பாராது தனக்குப் புதிதாக ஏதோ தெரியும் என்று வெளிப்படுத்த முயல்கிறார். இது நடந்தும் இருக்கலாம், நடக்காமலும்  இருக்கலாம். 

இது போன்ற உரையாடல்கள் பல நம் அன்றாட வாழ்வில் காணக்கூடியாவை; ஏன் நம்மில் சிலர் இதைப் போன்ற யூகங்களை / அரைகுறை தகவல்களைப் பகிர்வதும் உண்டு. .

2018இல் நடைபெற்ற மீடியா இன்சைட் (Media Insight) ஆய்வு, அமெரிக்கரில் 10 இல் நான்கு பேர் மாத்திரமே தலைப்பு வாசகத்துக்கு  அப்பால் வந்த தகவலை வாசித்ததாகத் தெரிவித்தனர். இதற்கு முந்தைய  ஆய்வு ஒன்று 59% சதவீதமானோர் ஒருவர் இன்னொருவர்க்கு சமூக ஊடகம்  மூலம் அனுப்புவற்றைத்  தாங்கள்  வாசிக்க நேரமில்லாமல்  வெறும் தலையங்கத்தைப் பார்த்து விட்டு அனுப்பியுள்ளார்கள் என்று தெரிய வந்தது. இதன் காரணம் பெரும்பாலானோர் தமது சிந்தனையுடன் ஒத்துப் போகிற ,  பிடித்த தலைப்பு என்றால் அதை முற்றிலும்  வாசித்து அறிந்து கொள்ளாமல், அதற்கு தமது உடன் பாட்டைத் தர முன்வருகின்றனர். மேலும் தம்மைப் போன்று சிந்திப்பவர்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

வழக்கமாகச் செய்தித் தலைப்புப் பகுதிகள்  உள்ளடக்கத்தைச் சார்ந்து தான் அமையும். ஆயினும் ஒரு வதந்தி, போலிச்செய்தி இப்பேர்பட்ட நிலைப்பாட்டுக்கு ஏற்பதான் அமையும்  என்றில்லை. எனவே தகவலை வாசித்தால் அதன் உள்ளடக்கம் தகுதியான நிரூபிக்கக் கூடிய உண்மைகளைக்  கொண்டுள்ளனவா, மேலும் நிரூபிக்கக் கூடிய உச்சாந்துணைகள் உண்டா போன்றவற்றினாலும் பொதுவாக சுதாகரித்துக் கொள்ள முடியும்.

வழக்கமாக, போலி தகவல் உள்ளடக்கம் பற்றி அவ்வளவு கவனம் செலுத்தாமல், கவர்ச்சியான தலையங்கங்கள் மூலம் வாசகர்களைத் தமது வழிப்பிரச்சாரக் கூட்டுக்குள் கொண்டு வருவதையே நோக்காகக் கொண்டு செய்வர். மேலும் அதிக சூசகம் தெரிந்தவர் பிரச்சாரப் போலித் தகவல்களிலும், வெவ்வேறு தகுதியற்ற, பிரச்சாரத் தகவலுடன் சேராத போலி உச்சாந்துணைகளையும் தந்து வாசிப்பவரைப்  குழப்பலாம். மேலும் வசீகரத் தலையங்கம் மூலம், தமது பிரச்சாரப் பொறியில் விழுந்தவரை வெறும் தலையங்கம் மூலம் தமது தகவலை மற்றவருடன் பரிமாறிக் கொள்ள வழிவகையும் செய்யலாம்.

போலித் தகவல் பிரச்சாரிகளின் நோக்கு, பரிமாறும் தகவல் மாத்திரம் அல்ல மின்வலயத்தில், சமூகவலயங்களில் எத்தனை வாசகர் பார்வைகளைப் பெற்றுக் கொள்ளலாம், அதன் மூலம் வரும் விளம்பர ஆதாயங்களும், பணமும் உருவாக்கிக் கொள்ளலாம்; அரசியல், சுயநல ஆதாயங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பதே.

எனவே தகவல்களில் எது உண்மை, எது அப்பிப்பிராம், எது செய்தி, எது வதந்தி என்று தெரிந்து தகவலைக் கிரகிப்பது தற்போது அவசியமான விடயம். மின்னியல் தகவலே வாழ்வு என்று அமையும் இந்தத் தருணத்தில் வாழ்வில் ஏமாற்றப்படாமல் இருந்து கொள்ளவும், பொது நலத்தைப் பேணவும் மேலே குறிப்பிட்டவற்றைத் தெரிந்து பயனுறுவோம்.

ஊர்க்குருவி

உச்சாந்துணை:

 

  1. True or False: A CIA Analyst’s Guide to Spotting Fake News By: Cindy L. Otis, May 19, 2020
  2. How Americans describe their news consumption behavior BY THE MEDIA INSIGHT PROJECT June 11, 2018
  3. The Future of Free Speech, Trolls, Anonymity and Fake News Online, BY LEE RAINIE, JANNA ANDERSON AND JONATHAN ALBRIGHT, MARCH 29, 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad