\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அச்சமில்லை! அமுங்குதலில்லை!

பாரதி நினைவு நூற்றாண்டு தொடங்கியிருக்கும் இந்த வேளையில், என் மனக்கண்ணில் தெரியும் பாரதிக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இது. இன்று நம் அனைவரின் நினைவுகளிலும் பாரதி இருக்கிறான். என்              நெஞ்சுக்குள்ளும் இருக்கிறான். கனல் பறக்கும் கண்களோடு, கட்டு மீசையோடு. காட்சிப் பிழையல்ல. நிஜம். 

 

முதலில் அவனுக்கு ஒரு பகீரங்க மன்னிப்புக் கடிதம்: 

பாரதி, பாரதத்தின் தீ நீ!

தேசபக்தி வளர்த்த தென்னவன்!

ஜாதி இருள் அகற்றிய ஜோதி!

மடமை கொளுத்திய மகாத்மா!

பெண்மை போற்றிய பேராண்மை!

காளியின் கடும் பக்தன்!

கண்ணம்மாவின்  காதலன்!

குருவிக்குத் தந்தவன் – குடும்பத்தை விட்டவன்!

கன்னித் தமிழின் கனிவான தோழன்!

மாநிலம் போற்றும் மகாகவி – இப்படிக்

கொட்டிக்கிடக்கும் உன் பெருமைகளை 

கொஞ்சமாவது அறிந்திருந்தால் 

கொள்ளிப்போடக் கூடியிருப்போம்!

குறை கொண்டோம்! மன்னிப்பாயா?

பாரதி: மன்னிப்புக் கேட்டதெல்லாம் போதும். நாட்டு நிலைமையைச் சொல்!

நான்: நாடு விடுதலை அடைந்துவிட்டது பாரதி! நாடு விடுதலை அடைந்துவிட்டது!

பாரதி:“காசி நகர்ப் புலவர் பேசும் உரை தான்,  காஞ்சியிலே கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்றேனே!

நான்: இதோ நான் அமெரிக்காவில் இருந்து பேசுகிறேன். இந்தியாவில் அனைவரும் கேட்கிறார்கள். என்ன, இந்தக் கருவிகளையெல்லாம் முந்திக் கொண்டு சீனா தயாரித்து விடுகிறது. நாங்கள் பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறோம்.

பாரதி: “சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்றேனே!

நான்: சந்திர மண்டலம் என்ன, செவ்வாய் கிரகத்திற்கே சென்றுவிட்டோம் பாரதி! என்ன, இந்தச் செவ்வாய் தோஷம் தான் இன்னும் எங்கள் பெண்களை விட்டபாடில்லை. 

‘நானோ’ தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஏனோ இன்னும் மனிதக் கழிவுகளை மனிதரே அள்ளுகின்றனர்.  கழிவு அள்ளும் இயந்திரங்கள் மட்டும் வரவேயில்லை. 

பாரதி: “மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை” இன்னமும் உண்டோ? “ஆலைகள் வைப்போம். கல்விச் சாலைகள் வைப்போம்” என்றேனே!

நான்: உன் அவதாரமாய் வந்த காமராஜர் கூலி வாங்கிக் குலத்தொழில் செய்த பிள்ளைகளைப் படிக்க வைத்து அவர் வாழ்வை உயர்த்தினார்.  இன்று புதிதாய் ஒரு கல்விக் கொள்கை வரப்போகிறதாம். கர்மவீரர் கட்டிய பள்ளிகளை மூடப் போகிறதாம். குலக்கல்வியை மீட்டெடுக்கப்                    போகிறதாம். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி என்கிறார். ஒரே ஜாதி என்று மட்டும் சொல்லேவேயில்லை. 

பாரதி: “பாதகஞ் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!”  என்றேனே!

நான்: பாவம்! எங்கள் பிஞ்சுப் பாப்பாக்கள்! காமக் கொடூரர்களிடம் சிக்கிச் சாகின்றனர்.

பாரதி: “நெஞ்சு பொறுக்குதில்லையே! நெஞ்சு பொறுக்குதில்லையே! பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்றேனே!

நான்: ஆம் பாரதி! புதுமைப் பெண்கள் இன்று கிளம்பியிருக்கிறோம். எங்களை ‘மீ– டூ’ என்னும் அந்தரங்கக்  கொடுமையால் அடக்கப் பார்க்கிறார்.

இன்னொரு புறம், ஆணுக்கு நிகரென அவர் போலக் குடித்துக் கொண்டு புதுமைப் பெண்டிரென மடப் பதுமையாய்த் திரிகிறது ஒரு கூட்டம். கல்வி தந்து குடி காக்க வேண்டிய அரசோ, கள் தந்து குடிக்கலாச்சாரம் வளர்க்கிறது. 

பாரதி:”தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம். கருகத் திருவுளமோ?”

அச்சமில்லை! அமுங்குதலில்லை!

நடுங்குதலில்லை! நாணுதலில்லை!

பாவமில்லை! பதுங்குதலில்லை!

ஏது நேரினும் இடர்ப்படமாட்டோம்!

அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்!

கடல் வாங்கி எழுந்தால் கலங்கமாட்டோம்!

யார்க்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!

எங்கும் அஞ்சோம்! எப்போதும் அஞ்சோம்!”

நான்: கேட்கிறது பாரதி! கனல் பறக்கும் கண்களோடு, கட்டு மீசையோடு என் நெஞ்சில் நின்று நீ போராடச் சொல்வது புரிகிறது பாரதி!!

 

ஜெயா மாறன்

அட்லாண்டா, ஜார்ஜியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad