கோவிட் சம்மர்
ஒவ்வொரு வருடமும் சம்மர் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த வருடம் ‘ஒரு மாதிரி’யாகப் போய்விட்டது. அமெரிக்காவில் சம்மர் வருவதற்கு முன்பு, கோவிட்-19 வந்துவிட்டது. ஜனவரி, பிப்ரவரியில் கோவிட்-19 என்றால் அது எங்கோ சீனா பக்கம், கொரியா பக்கம் நடக்கும் விஷயம் என்பது போல் அமெரிக்காவில் இருந்தார்கள். பின்பு நோய்த்தொற்றின் வீரியம் புரிந்து மெதுவாக மார்ச்சில் லாக்டவுன் என்பது போல் ஒன்றை அறிவிக்கும் போது, அமெரிக்கா கொரோனா புள்ளியியல் வரைபடத்தில் வீறுநடை போட்டு முன்னணிக்குச் சென்றுவிட்டிருந்தது.
பள்ளிகளுக்கு வசந்தகால விடுமுறை சற்று முன்பே அறிவிக்கப்பட்டது. அலுவலகவாசிகள் வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதன் பின், பள்ளி, கல்லூரிகள் அந்தக் கல்வியாண்டு இறுதிவரை திறக்கப்படவே இல்லை. அத்தியாவசிய சேவை என்பதற்குள் வராத பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால், மதுக்கடைகள், தோட்டப் பொருட்கள் விற்பனைக்கூடங்கள் எனப் பெரும்பாலான கடைகள் அத்தியாவசிய சேவைக்குள் வந்தன என்பது வேறு விஷயம். அச்சமயம் திரையரங்குகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடம் போன்றவற்றுக்கு நீண்ட காலத்தடை நீடித்தது.
உடற்பயிற்சிக்கூடங்கள் மூடினாலும் பின்பு வெளிப்புறத் தட்பவெப்பம் கூடியதால், வெளிப்புறத்தில் நடைபயிற்சி, சைக்கிள், ஓட்டம் என மக்கள் முகமூடி போட்டுக்கொண்டு வெளியே வந்தார்கள். ஏரி கரைகளில் வந்து விளையாடினார்கள். அடைப்பட்டு உள்ளே மூச்சுவிட முடியாமல் கிடப்பதை விட வெளியே வந்து கோவிட் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று பல அமெரிக்கர்களும், சில இந்தியர்களும் கருத்துத் தெரிவித்தனர்.
பொதுவாக, கோடைக்காலம் என்றால் இந்தியா செல்வது, பிற மாநிலங்களுக்குச் செல்வது, பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்வது என்று மக்கள் பிஸியாக இருப்பார்கள். பொது விமானச் சேவை கட்டுப்படுத்தப்பட்டதாலும், நோய் குறித்த பயத்தினாலும், வெளியூர் சென்று மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என்ற குழப்பத்தினாலும் மக்கள் உள்ளூரிலேயே அடைபட்டுக்கொண்டனர். திட்டமிடப்பட்ட அனைத்து வெளிப்புற நிகழ்ச்சிகளும் ரத்துச் செய்யப்பட்டன. அல்லது, ஆன்லைனில் ஒரு பெயருக்கு நடத்தப்பட்டன. சம்பிராதயத் தொடர்ச்சி அறுப்பட்டுவிடக்கூடாதே என்பதற்காகத் தான் இவ்வகை நிகழ்ச்சிகள் இணையம் மூலம் நடந்ததாக எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி, இவற்றில் பொதுமக்களின் பங்கேற்பும், ஈடுபாடும் மிகக் குறைவே.
நிறைய ஜூம் மீட்டிங்குகள், யூட்யூப் சானல்கள் என இந்தக் காலத்தில் தொடங்கப்பட்டன. மக்கள் தங்களுக்கு ஆர்வமான விஷயங்களில் ஈடுபட்டனர். தோட்டம் வைத்துத் தண்ணீர் ஊற்றுவது, வீட்டுக்கு வெள்ளையடிப்பது, வீட்டுப் பராமரிப்பு வேலைகளைச் செய்வது, வீட்டை அழகு படுத்துவது எனக் குடும்ப ஆண்களும், பெண்களும் தங்களைப் பிஸியாக்கிக்கொண்டனர். நின்று போயிருந்த குழந்தைகளுக்கான பயிற்சிகள் இணையம் மூலம் தொடங்கப்பட்டன. லாக்டவுண் காரணமாக இந்தியாவில் இணையம் மூலம் தொடங்கப்பட்ட ஓவிய வகுப்பு, இசை வகுப்பு போன்றவை கடல் கடந்து அமெரிக்காவில் இருக்கும் மாணவர்களுக்கும் வந்து சேர்ந்தன. முன்பெல்லாம் இவ்வகை வகுப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும். இச்சமயம் அவை பரவலாக்கப்பட்டன.
திரையரங்கு சென்று படம் பார்ப்பவர்கள், வேறு வழியின்றி வீட்டில் இருந்து ஓடிடி (OTT) மூலம் படம் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படி வெளிவந்த படங்களைப் பார்த்துவிட்டு, ’ஏண்டா பார்த்தோம்’ என்று நொந்துக்கொண்டனர். திரையரங்கு அனுபவம் தேவை என்று ஹோம் தியேட்டர், ப்ரொஜக்டர் என்று பெரிய திரை அம்சங்களை வீட்டில் அமைத்துக்கொண்டனர். இனி நல்ல படம் வருவது தான் மிச்சம். திரையரங்குகள் ஆங்காங்கே திறக்கப்பட்டாலும், வரவேற்பு மிகக் குறைவே.
உணவகங்களில் விரும்பி சாப்பிடுபவர்கள் வீட்டில் விதவிதமாகச் சமைத்தார்கள். சமைத்ததைச் சாப்பிட்டார்களோ இல்லையோ, புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்துக்கொண்டனர். பின்பு உணவகங்களில் வெளிப்புற மேஜைகளில் உட்கார்ந்து சாப்பிடும் வசதி திறக்கப்பட்டன. அதன் பின், உட்புறமும் திறக்கப்பட்டன. ஆனாலும் அவசியம் ஏற்பட்டாலொழிய மக்கள் உணவகம் செல்வது குறைவாகவே உள்ளது. ‘ட்ரைவ் த்ரூ’வில் மக்கள் அதிகம் வாங்கிச் செல்வதைக் காணமுடிகிறது. சில கடைகளில் ‘ட்ரைவ் த்ரூ’வில் வாகனங்களின் அணிவகுப்பு, பிஸியான ஹைவே டோல் கேட் போல் நீண்டு இருந்தது.
ஆரம்பத்தில் ஊர் சுற்றும் தேசாந்திரிகள் வீட்டில் அடைப்பட்டுக் கிடந்தாலும், பின்பு அக்கம்பக்கம் ஊர்களுக்கு வண்டிக்கட்டிச் சென்றனர். எங்குச் சென்றாலும் மறக்காமல், மாஸ்க், சானிடைசர் கொண்டு சென்றனர். தண்ணீர், உணவு போன்றவற்றுக்கு அடுத்ததாக இவையும் அத்தியாவசிய பொருட்களாக உருவெடுத்தன. காட்டுக்குள் நடந்துக்கொண்டிருந்தாலும், எதிரில் யார் வருவார்களோ என்று மாஸ்க் போட்டு நடந்தனர். காட்டில் இருக்கும் பறவைகள் நம்மைக் கண்டு என்ன நினைக்குமோ? நண்பர்கள் வீட்டுக்கு முதலில் தயக்கமாகச் சென்றாலும், சிலருக்கு இது பிறகு சகஜமானது. கோவிட் எண்ணிக்கை உயர்வு செய்திகள் வேறு ஏதோ கிரகத்தில் இருந்து வருவதாக எண்ணிக்கொண்டனர்.
லைசன்ஸ் ஆபிஸ், பாஸ்போர்ட் ஆபிஸ் என அனைத்தும் அப்பாயின்மெண்ட் எடுத்துப் பொதுமக்களை அனுமதித்தனர். மறக்காமல் ஐடி ப்ரூஃப் கேட்டாலும், நமது ஐடெண்டியை மறைக்கும் மாஸ்க் இல்லாமல் உள்ளே அனுமதிக்கவில்லை. பணி ஒருபக்கம், துடைக்கத் துணி இன்னொரு பக்கம் என அவர்களுக்கு வேலை ‘ஃபிப்டி-ஃபிப்டி’ வேலையானது.
கிரிக்கெட் ஆர்வலர்கள் தைரியமாக வெளிவந்து மினசோட்டா மைதானங்களில் கிரிக்கெட் விளையாடினார்கள். சானிடைசர் போடப்பட்ட பந்தும், பேட்டும் எப்போதும் போல இருந்ததைக் காணமுடிந்தது. விக்கெட் விழுந்தால் ஒருவருக்கொருவர் கைகளைத் தட்டிக்கொள்ளாமல், முட்டிகளை இடித்துக்கொண்டனர்.
ஒருவழியாக, ஒரு மாதிரியாக இந்தக் கோடைகாலம் முடிந்து போனது. அடுத்துக் குளிர்காலம் தொடங்குகிறது. கோவிட், இந்தக் குளிர்காலத்தை எப்படி வதம் செய்யப்போகிறதோ? போன குளிர்காலத்தில் உருவான கோவிட்-19, இந்தக் குளிர்காலத்தோடு உலகை விட்டு கிளம்பிச் சென்றால் நன்றாக இருக்கும். பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என்று!!
- சரவணகுமரன்