\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வாபி-சாபி அழகியல் மூலம் சூழலை உணருதல்

நவீன உலகின் பொருள், பண்டங்கள் யாதும் பூரணத் திருத்தம் அடைந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் பேராவல் காணப்படும் தருணத்தில் பாலைவனச் சோலை போன்று வரும் சிந்தனையே யப்பானிய வாபி-சாபி () . இது இயல்பாக காணப்பெறும் குறியீடுகளை அவதானித்து அவற்றிலும் உட்பொருள் அறிந்து, அனுசரித்து அவற்றின் தனித்துவமான அழகினை அனுபவித்தல் எனலாம். வாசகர்க்கு ஒரு சிறிய வேண்டுகோள். சமூகத்தில் சிலர், குறிப்பாக யப்பான் நாடு போய் வந்த மேல் நாட்டவர் தவறாக வாபி-சாபி என்றால் அழகற்றதில் அழகு காணுதல் என்பர். இது வாபி-சாபி தத்தவத்தை முழுதாக விவரிக்காது. 

 

இந்த அழகியல் தத்துவத்தை எனது அனுபவ ரீதியில் எடுத்துச் சொல்லப் போகிறேன் வாருங்கள் சிறு சவாரிக்கு. சில காலம் நான் பிரபல மேலத்தேயக் கம்பனி-யப்பானியக் கூட்டமைப்பு ஒன்றியத்தில் பணிப்புரிந்த போது யப்பானில் வாழச் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் பொழுது சுயேட்சமாக இந்நாட்டுக் கலாச்சாரத்தையும், இவர்கள் கலாச்சாரத்திற்கும் தமிழுக்கும் உள்ள பாலத்தையும் சிறிது ஆராய்ந்தேன்.

நான் நகோயா யப்பானில் (Nagoys Japan) வேலை செய்தபோது அருகில் உள்ள மிகப் பழமை வாய்ந்த இடங்கள் தாம் கியோட்டோ (kyoto) (யப்பானிய பழய தலைநகர்), நரா (Nara) எனப்படும் ஊர்கள் போய் வருவேன்.

கியோட்டோ யப்பானில் 2006 ம் ஆண்டில் உள்ளூர் சிறியதொரு மட்பாண்ட கலைச்சாலையில் சுழலும் களிமண் சட்டியைக் கண்டு, அதன் வெளிப்பகுதி சரியாக வரவில்லை, இன்னும் கொஞ்சம் சுழற்றி சட்டியின் அமைப்பைத் திருத்தலாம் என்ற நினைத்த எனக்கு பின்னால் இருந்து மெதுவான குரலில் அது பரவாயில்லை அப்படியே விட்டு விடுங்கள் என்றார் குயவ ஆசான். இதன் உட்பொருளை அறியாவிடினும் கேள்விக் குறியுடன் ஒத்துக் கொண்டேன் நான்.

அவர் புன்சிரிப்புடன் என்னிடம் கூறியது “அந்தச் சட்டி அதன் வாபி-சபியை அடைந்து விட்டது.” அடுத்து அவர் நான் செய்த சற்றுக் கோணலான சட்டியை விட்டெடுத்து பானைகள் சுட்டேடுக்கும் அனல்அடுப்பு சூளைக்கு  எடுத்துச் சென்றார். இவர் இப்படிச் செய்தது எனது மனதில் கேள்விக்கணைகளைத் தொடுத்தது அன்றிலிருந்து அது பற்றி ஆராய முனைந்தேன்.

இதன் போது நான் எதிர் கண்ட வினோத  பிரச்சனை என்னவென்றால் உடன் இருந்த, சக ஊழிய யப்பானிய நண்பர்களை வினவிய போதும், அவர்கள் உட்பொருளை உடன் தெரிந்து கொண்டனர் ஆனால் ஆங்கிலத்தில் அதை விவரிக்க சிரமப்பட்டனர். இதன் காரணம் இந்தச் சொல்லிற்கு நேரடி மொழி பெயர்ப்பு எதுவும் கிடையாது. இதன் உட்பொருளை உணர்ந்தாலும் விவரிக்க முடியாதது என்று திண்டாடினர் எனதருமை நண்பர்கள். இது என்னடா இவ்வளவு பெரிய சூசகமாக இருக்கே என்று எனக்குள் நான் பல தடவை முணுமுணத்தும் கொண்டேன்.

ஆயினும் இதை அறிந்து கொள்ள முடியாததன் காரணத்தைப் பற்றித் தொடரந்து சிந்தித்துப் பார்க்க ஆரம்பித்தேன். எமது தமிழ் கலாச்சாரத்திலும், எனது நீண்டகால அமெரிக்க வாழ்வு ஊடுருவல்களிலும் நான் எதிர்பார்த்து கிட்டாதது இந்த யப்பானிய அழகியல் அனுபவிப்பு எனலாம். இதை அங்கு வாழ்ந்து, யப்பானிய கலாச்சாரத்தை முடிந்தளவு பின்பற்றி. அம்மொழியில் தொடர்ந்து பேசிப் பழகும் போது தான் படிப்படியாக உணரந்து கொண்டேன். ஆயினும் ஓவியனாகிய எனக்கு, வாபி-சாபி அழகியல் ஒரு புதிய பரிமாணத்தில், நம்மைச் சூழ்ந்திருக்கும்  பெரும்பாலான இயற்கை எழிலை அனுபவிக்க உதவியது எனலாம். பொதுவாக இயற்கை அழிவுகளால் சிதிலமடைந்த பகுதிகளிலும் அவற்றின் அழகை அனுபவிக்கும் குறிப்பாக உதவியது என்பேன் நான்.

சில சரித்திரக் குறிப்புக்கள்.

வாபி-சாபி சீனாவின் ‘சொங் சக்கரவர்த்தி வம்சம்’ (Song Dynasty) தலைவழியாக (கிபி 960-1279) ‘தாவ்வோ நெறி’ (Taoism) உடன் வந்தது என்று கருதப்படுகிறது. பின்னர் இது இந்தியாவிலிருந்து பௌத்தம் படர்ந்து, சென் பௌத்த (Zen Buddism) நெறியுடன் கலந்தது. அந்தக் காலத்தில் வாபி-சாபி  ஆனது மிக எளிமையாக, அமைதியான முறையில் உண்மைத் தன்மையைக் கிரகித்தல், அனுபவித்தல் என்று எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இன்றோ அது இயற்கையின் இயல்பு மாற்றங்களை ஒத்துக் கொண்டு, இயற்கையை, அதனுடன் வரும் துக்கம், மனச்சோர்வு, மற்றும் முடிவுறாத, பாழடைந்த பண்டங்கள் என அனைத்தையும் விரும்பி அனுபவித்தல் எனலாம். இது பாரிய பழமை வாய்ந்த கட்டடங்களிலிருந்து நாம் அன்றாடம் பாவிக்கும் பூச்சாடி வரை எதுவுமாக இருக்கலாம்.

வாபி எனபதன் உட்பொருள் எளிமையை நாடும் அழகியல் நளினம் என்று தமிழில் எடுத்துக் கொள்ளலாம். இதே போன்று சாபி என்பது காலத்தின் மாற்றமும், அதனால் வரும் உருமாற்றம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். எனவே இவை இரண்டும் இணைந்த யப்பானிய அழகியல் அனுபவிப்பே வாபி சாபி எனலாம். இது போன்ற உணர்வுகளை சொல்லினால் விவரிப்பதே இவற்றின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளத் தடையாய் உள்ளது என்பனர் தியானிக்கும் பௌத்த துறவிகள்.

தற்போது மேற்கத்தியர் அறிந்த ஒரு யப்பானிய கலாச்சார வைபவம் யப்பானிய தேனீர் ஆசான்கள் உருவாக்கி வளர்த்த பண்டைக்கால வபச்சா எனப்படும் தேனீர்ச் சடங்கு (Tea Ceremony) ஆகும். ‘ரிக்கியூ பௌத்த நெறி’ அனுசரிப்பில் 15ம் நூற்றாண்டுக் கடைசி மற்றும் 16ம் நூற்றாண்டில் ‘முராட்டா ஜூகோ’ மற்றும் ‘சென் நோ றிக்கியூ’ என்ற தேனீர் ஆசான்களால் உருவாக்கப்பட்டு இன்று வரை பேணப்படுகிறது. இதற்கு அவர்கள் பாவித்த பொருட்கள் களிமண்ணினால் ஆன தேநீர் ஏதனங்கள் பாத்திரங்கள், மற்றும் மூங்கில் மரக்கலவை, கரண்டி போன்ற உபகரணங்கள். 

இந்தச் சடங்கின் நோக்கம் தேனீர் குடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பது அல்ல. மாறாக இயல்பான அழகியலை அனுபவித்தல் பற்றிய தத்துவமே ஆகும்.  இதன் போது பயன்படுத்தப்படும் பச்சை நிறப் பொடித் தேயிலை, உபகரண நிறங்கள் யாவும் மாறும் இயற்கை அழகினை எடுத்துக் காட்டுகின்றன என்பர்.

இவ்விடத்தில் வாபி-சாபி ஆனது தேயிலைகளின் முழுமையடையாத, குறைபாடு கொண்ட தன்மையினால் உருவாகும் மனக் களிப்புகளைத் தழுவியது எனலாம்.

இப்பேர்ப்பட்ட சிந்தனைகள் இயற்கை எழிலை அனுபவிப்போர் அவர்களது உணர்வுகளை கலாச்சாரம், சமூக சிந்தனைகளைக் கடந்து எடுத்துச் சென்று காலவரையறை மாற்றங்களை முழுமையாக அனுவிக்க உதவும். வாபி-சாபி அன்றாட வாழ்க்கையைக்கூட புத்துயிர்த்த அனுசரணையுடன் பார்த்து அனுபவிக்க உதவும். அதாவது ஒரு மரத்தில் காணப்படும் கோணலான மரக்கிளையை அது நேராக இல்லையே என்று எண்ணாமல் அதை ரசனை / அக்கறையுடன் பார்த்தல், அல்லது நடைபாதைக் கல்லில் காணப்படும் பாசியை அது எவ்வாறு வளர்கின்றதென்ற அழகியல் சிந்தனைகளுடன் அனுவிக்க உதவலாம்.

இயற்கையானது எமது குறுகிய, அற்ப நோக்குடை மனித அவாவைப் பூரணத்துவத்தை நோக்கி என்றுமே அமைவதில்லை. வாழ்வில் குழப்பமும் வாழ்வின் அம்சமே இதுவும் இயற்கையின் இயல்பு வழி என்று கூறிக்கொள்ளலாம். எனவே வாழ்வில் எதிர் நோக்கும் விடயங்களை, முரணாகப் பார்த்து எமது முயற்சிகளில் விரக்தி அடையாது, இயல்பாக அணுகி இன்பமாக அனுவிக்க உதவக் கூடிய யப்பானிய அழகியல் நெறியே வாபி-சாபி ஆகும். 

    யோகி

 

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad