\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நேர்ஸ்ராண்ட பெருமரக்காடு

எமது மாநிலத்தில் வாழும் அனைவரும் அனுபவித்து மகிழக்கூடிய பெரும் விடயம் இந்நிலத்தின் எழில்மிகு இயற்கை வளமே. பன்னிரண்டு மாதங்களும், பருவகாலங்கள் நான்கு பவனி வந்து இவ்வியற்கை எழிலுக்கு வர்ணம் பூசி மெருகூட்டுகின்றன. 

இதில் இலையுதிர் காலம் நம்மில் பலர் பார்த்து பழகிப் போன பச்சை பசேல் ஒவியம் போல் அல்லாமல் கோலாகலமாக, பல வண்ணக் கோலமாக நிறம் மாறுகிறது மினசோட்டா மாநிலம். இதில் இன்று நாம் பார்க்கப் போவது ஒரு பண்டைய காட்டு நிலம். நேர்ஸ்ராண்ட பெருங்காட்டு மரங்கள் மினசோட்டாவில் உள்ள மூன்று வகைக் காட்டு நிலங்களில் இலையுதிர் காட்டு வகையைச் சார்ந்தது.

மினசோட்டா பூமி அதிர்ஷடவசமாக பல்வேறு தாவர பிரதேசங்களை ஓரிரு மணித்தியாலக் காரோட்டம் மூலம் அவதானிக்க கூடியதாகவுள்ளது மினசோட்டாக் காடுகளை ஊசியிலை மரக்காடுகள் (Conifer forest), இலையுதிர் காடு (Deciduous forest), புல்வெளிக்காடு (Prairie) எனப் வெவ்வேறு வகையாகப் பிரித்தறிகின்றனர் . மாநிலத்தின் தென்பகுதியில் இலையுதிர் காடுகளும்  மத்தியில் பெருமரக் காடுகளும் காணப்படுகின்றன. இது தாவரவியலில் சற்று வித்தியாசமான  அமைப்பாகும்.

நேர்ஸ்ராண்ட பெருங்காடு, மேற்கில் நோர்த்ஃபீல்ட் (Northfield), ஃபேர்போ (Faribault), கிழக்கில் டெனிசன் (Dennison), மற்றும் கென்யன் (Kenyon) ஊர்களிற்கு நடுவில் அமைந்துள்ளது. இதற்கான முகவரி கட்டுரையின் முடிவில் தரப்பட்டுள்ளது.

நேர்ஸ்ராண்டில் ஒரு நெடு நடை

நேர்ஸ்ராண்ட பெருங்காட்டு மரப்பூங்கா மினசோட்டா வனவிலங்கு இலாகா பராமரிக்குமிடம். இலையதிர் காலங்களில் இங்கு வருகை தரும் இயற்கைப் பிரியரை வரவேற்க, பன்னிற இலைச் சருகுகள் புல் தரையெங்கும் கம்பளமாகப் படர்ந்து காணப்படும். 

சிறு பிரேயரி அருவி, நீர்வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் வழியில், புதிதாக மரக்குற்றியிலான ரயில் போன்ற விளையாட்டிடம் வருவோரை வரவேற்கிறது. இது இவ்வருடம் உருவாக்கப்பட்டுள்ள  சிறுவர்க்கான விளையாட்டுத் திடல்.

அதை அடுத்து நீர் வீழ்ச்சிக்குப் போக இரண்டு பாதைகள் தெரிய வரும். இடப்பக்கம் உள்ள பாதை  விசேட பள்ளத்தாக்குதனைப் பார்வையிட்ட வாறே கீழே இறங்க வழி விடும். வலப் பக்கம் உள்ள பாதை சற்று நீண்டது. சுமார் இரண்டு மைல்கள் வரை நடக்க வேண்டும். இது வனத் தங்கு சாவடிகள், கூடாரத் தளங்கள் தாண்டி இந்தப் பெருங்காட்டு மரவகை மாற்றங்களை அவதானித்தவாறு நீர்வீழ்ச்சி வரை போய் வர வழிவகை செய்யும்.

இயற்கைப் பிரியர் இவ்விடம் அனுபவிக்க பலவிடயங்கள் உண்டு. இவ்விடம் வருவதன்  நோக்கம் அவசரப்பட்டு பொடி நடை போட்டு விட்டு விரைவாக வந்து வாகனத்தில் ஏறி வீடு திரும்புவது  அல்ல. இன்பமாக ஐம்புலங்களாலும் ரசித்து இயற்கையின் வனப்பை அனுபவிப்பதே குறிக்கோளாக வேண்டும். முதலில் இதமான காட்டின் தென்காற்று உடலை வருட, மெது மெதுவாக நடக்க ஆரம்பிக்கலாம். இலையுதிர்காலமானால் மேலாடை, ஜாக்கெட் அணிந்து கொள்வது நலம். குளிர் சற்று ஆரம்பித்த பின் நுளம்புத் தொல்லை இருக்காது.

 இலை, குழை காற்றில் ஆட, சத்தமிடாமல் காதை வைத்துக் கேட்டால் விதம் விதமான குருவிகள் சத்தம் கேட்கும். இவ்விடம் பலரக பட்சிகளையும் பருவ நேர காலத்தைப் பொறுத்து சிறப்பாக அவதானிக்கலாம். இதை விட காலடியில் சிறிய அணில்களும் ஓடலாம். மேலும் இவ்விடம் ஏறத்தாழ 200 வகை வகையான காட்டுப் பூக்களும், எண்ண முடியாதளவு பன்னம் (Ferns) வகைகளும், காளான்களும் பாதையோரமும், அருவிகள் ஓரமும் முளைத்திருப்பதைக் காணலாம்.

அண்மைக்கால பாரிய மழை காரணமாக ஆங்காங்கே மண்சிதைவுகள், பாழைடந்து பாசியுடன் உக்கும் அழகிய பாரிய மரங்கள், அவற்றின் மேல் வளரும் பன்னம் போன்றவற்றைப் பார்த்து ரசிக்கலாம். உக்கிய மரத்தில் மரகதம் போன்ற  பன்னம், பாசி வளருதல் காட்டின் பழமையையும், அதன் நிகழ் கால ஈரத்தன்மையையும் குறிக்கும். அது மட்டுமல்ல நடுக்காட்டில் மனித நடமாட்டம் பல நூறு ஆண்டுகளாக இருக்கவில்லை என்பதையும் இது காட்டும்.

இதையடுத்து  மலைக்க வைக்கும் பாரிய வெண் ஓக் (White Oak) மரங்களையும் பார்வையிட்டு அடுத்து மேப்பிள் (Maple) மரச் சோலைக்குள் நுழையலாம். கோடை காலத்தில் பச்சைப் பசேல் என்று இருந்த மேப்பிள்கள், எல்ம் (Elm) பிரதேசத்துனூடு நடக்கலம். இலையுதிர் காலத்தில் இம்மரத்து இலைகள் சூரிய ஒளியில் ஜொலிக்கும் தங்கம் போன்ற மஞ்சள், செம்மஞ்சள் நிறத்தைக் கொண்டமைந்திருக்கும். 

 

பெருங்காடு ஆதலால் வெப்ப ஓக்கு மரங்களில் இருந்து குளிர் மரங்களாகிய மேப்பிள் மர எல்லைகளை மெதுவாகத் தாண்ட, மறைந்திருக்கம் நீர்விழ்ச்சி வரும் இங்கு தனித்துவமான தாவர வர்க்கங்களையும் அவதானிக்கலாம். இலையுதிர் காலத்தில் மஞ்சள் மேம்பிள் இலைகளின் முன்னணியில் சிவப்பு ஓக்கு இலைகள் அருமையான நிற மாறமைவைத் தந்து இயற்கை அன்னையின் எழிலுக்கு கட்டியங்கூறும். மேலும் முதல் நாள் மழை பெய்திருந்தால் மரப்பட்டை கருப்பு நிறமாக அதன் பின்னணியில் இலைகளின் வர்ண ஜாலம் மனதையே ஈர்க்கும்.

 

இந்தக்காட்டின் பழமையைப் பேணுமுகமாக வாழ்ந்து முடித்த, மரங்கள் தாமாக நிலத்தில் விழுந்து உக்க விடப்படும். தேவையின்றி வன இலாகா இவ்விடம் மரங்களை இயற்கைக்கு மாறாக வெட்டி, தறித்து பராமரிப்பதில்லை.

இந்தப் பழையக் காட்டில் சுனைகள், அருவிகள் அருகே பல அரிய உயிரினங்கள், தாவரங்கள் வாழ்வதால் அவற்றைப் பாதுகாக்கும் வகையில் கயிற்றால் தடுப்பு எல்லைகளை அமைத்து அனுமதியின்றி தாண்டிச் செல்வதோ, தங்குவதோ கூடாது என வன இலாகா அறிவுறுத்துகிறது.

இவ்விடம் ஒடும் பெரும் அருவியாகிய பிரேயரி கிரீக் (Prairie Creek) காரணமாக, நடுக்காட்டில் சுண்ணாம்புப் பாறைகள் மத்தியிலே சிறு நீர் வீழ்ச்சியைக் காணலாம்.. பனியுருகும் காலத்திலிருந்து கோடை வரை  நீர் பெருக்கெடுத்து ஓடும், இலையுதிர் காலத்தில் சற்று அடங்கி ஒடும். பனியில் முழுவதுமாக உறைந்து விடும். ஆயினும் இயற்கையில் பழமை வாய்ந்த பிரதேசமான இவ்விடம் இந்தக் காட்டு அருவி, நீர்வீழ்ச்சியின் மகிமை எனலாம்.

இந்தப் பிரதேசம் முழுவதுமே மினசோட்டாவின் பெருங்காட்டுப் பிரதேசங்களாகும். கடல் போன்ற சோள, சோயா வயல்கள் மத்தியில் இந்தக் காட்டைப் பாதுகாக்க நினைத்துச் செயற்பட்ட மினசோட்டா மக்களை நாம் போற்ற வேண்டும். இந்தக் காட்டுப் பூங்கா ஏறத்தாழ 1,600 ஏக்கர் பரப்பைக் கொண்டது.

இந்தக் காட்டில் காணப்படும் விசேட மிகச் சிறிய தாவரம் ஒன்றைப் பார்போம்.

அரிய குட்டை ரவுட் லிலி (Minnesota Dward Trout Lily)

நேர்ஸ்ராண்ட பெருங்காடு பலவித தாவரங்களுக்கும், உயிரினங்களுக்கும் வாழ்வுதரும் இடம். இவ்விடம் இலைச் சருகுகள் மத்தில் தலை நிமிர்த்திக் காட்டும் அரியதொரு மினசோட்டா குட்டை ரவுட் லிலி (Minnesota dwarf trout lily) எனும் தாவரம் காணப்படும். இதன் தாவரவியல் பெயர்  (Erythronium propullans) . இது கனண் (Cannon) ஆற்று மடையில் வளரும் மிகச்சிறிய தாவரம். இது 3-4 அங்குல உயரம் உடையது. ஏப்ரல் – மே மாதங்களில் மிருதுவான இளம் நாவல் நிறப் பூவைக் கொண்டிருக்கும்.

இன்று நாம் மினசோட்டா மாநிலத்தில் அனுபவிக்கும் காலநிலை, மினசோட்டாவின் பெருங்காட்டு மரங்கள் உருவானபோது இருக்கவில்லை. 1.5 மில்லியன் வருடங்கள் முன்னர் உருகும் பனிப்பாறைகள் இந்தப் பிரதேசத்தை உருவாக்கியது. இந்தக்காலத்தில் ஊசியிலைக்காடுகள் இவ்விடத்தைக் கவர்ந்தன. பின்னர் பூகோளம் வெப்பமுற, இவ்விடத் தாவரங்களும் மாற்ற மடைந்து ஊசியிலைகள் வடக்கு நோக்கிப் பெயர, மத்திம வெப்ப நிலை மரங்கள் ஆகிய ஓக்குமரக்காடுகளும் புற்றரைக் காடுகளும் ஆரம்பித்தன. சுமார் 400-500 ஆண்டுகள் முன் காலநிலை மீண்டும் மாறியது. அதன் போது இப்பிரதேசம் குளிர்ந்து பெரும் காட்டுமரச் சூழலை உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்தது. இதன் பிரதேச வெப்ப தட்பம் மாறி அதிக ஈரப்பதமுள்ள நிலமாகியது. இதன் போது 500 வருட மகரந்த ஆய்வுகளின் படி வெப்பம் குறைய ஒக்குமரக்காட்டை குளிர் கால மேப்பிள், மற்றும் எல்ம் மரங்கள் அதிகரித்தன.

 

பழமை வாய்ந்த மரங்கள் பெயர்வு இயல்பாக ஏற்பட அடர்த்தியான மிகப்பெரிய மரங்களுடன், அகலமான இலைகளுடன் பச்சை மரகத நிறப் பன்னம்,பாசிகள் இடையிடையே அமைந்து, இயற்கைப் பிரியரை வரவேற்கும் தனித்துவமான இடம் நேர்ஸ்ராண்ட பெருமரக் காட்டுப் பூங்கா. 

போக விரும்புவர்க்கு பூங்கா பற்றிய விடயங்கள்.

இவ்விடம் சாதரணமாக வருகை தர விரும்புவோர் காலை 8 மணியிலிருந்து மாலை 10 மணி வரை போய் வரலாம். 2020இல் கோவிட் தொற்று நோய் காரணமாக தற்காலிக கழிவறை, மற்றும் குடிநீர் வசதிகள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே இயங்குகின்றன.

இந்தக்காட்டைப் போய்ப் பார்க்க விரும்பினால் – Nerstrand Big Woods State Park: Take I-35 to State Highway 19 east into Northfield. Go South on State Highway 3, east on State Highway 246, and then turn right onto County Road 29.

  • யோகி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad