கேத்தியோ ஸ்டேட் பார்க் (Kathio State Park)
மினசோட்டாவில் பத்தாயிரம் ஏரிகள் இருப்பது தெரியும். ஆனால், அதில் ஒரு ஏரி ஆயிரம் ஏரிகளுக்குச் சமமாக இருப்பது தெரியுமா? மில் லாக்ஸ் (Mille Lacs) ஏரிதான் அது. ஆயிரம் ஏரிகள் என்பதைத் தான் மில் லாக்ஸ் என்கிறார்கள். ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, மினியாபொலிஸ் – செயிண்ட் பால் நகர்பகுதியில் இருந்து சுமார் 100மைல் தொலைவில் உள்ளது. மினசோட்டாவில் நிலப்பரப்பிற்குள் அமைந்திருக்கும் ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரியாகும் இது. கரையில் இருந்து பார்க்கும் போது, அமைதியாக ஓய்வில் இருக்கும் கடல் போல் இந்த ஏரி காட்சியளிக்கிறது.
மூன்று கவுண்டிகளுக்குப் பரந்து விரிந்திருக்கும் இந்த ஏரியைச் சுற்றி இரு ஸ்டேட் பார்க்குகள் உள்ளன. கோடை காலத்தில் மீன் பிடிக்க ஆர்வமாகப் பலரும் இந்த ஏரியைச் சுற்றி வருவார்கள். பல வகை மீன்கள் இந்த ஏரியில் கிடைக்கும் என்பதால், மீன் பிடிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பிடித்தமான ஏரியாக இருக்கிறது. கோடைக் காலம் மட்டுமின்றி, குளிர்காலத்திலும் பனியில் துளையிட்டு மீன் பிடிப்பார்கள்.
அருகில் இருக்கும் கேத்தியோ ஸ்டேட் பார்க் குடும்பத்துடன் சென்று வருவதற்கு ஏற்ற இடம். பழமையான வரலாற்றுப் பெருமைகள் கொண்ட இடம் இது. ஆங்காங்கே இருக்கும் கல்வெட்டுகள் மூலம் இதன் பழமை குறித்துத் தெரிந்து கொள்ளலாம். நூறு அடி உயரம் கொண்ட பார்வையாளர் மாடத்தில் (Observation tower) ஏறினால், முழுப் பூங்காவையும், ஏரியையும் ஒருசேரப் பார்க்கலாம். கோவிட் காரணமாக, சமீப காலத்தில் இதில் ஏறிச் செல்வதற்கு அனுமதியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
பச்சைப் பசேலென இந்த வனாந்திரத்தில் சுற்றி உலவ நிறைய நடைபாதைகள் (Trail) உள்ளன. ஒருநாள் முழுக்கச் சுற்றிச் சுற்றி வரலாம். கூடாரம் அமைத்துத் தங்குவதற்கு நிறைய இடங்கள் உள்ளன. குதிரை சவாரியும் இங்குச் செல்லலாம். குழந்தைகள் விளையாடுவதற்குச் சிறு விளையாட்டுத் திடலும், சிறு பீச்சும் உள்ளன. அதனால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவரும் அம்சங்கள் இங்கு இருக்கிறது என்று கூற முடியும். இரவானால் கொசுக்கடி இருக்கும் என்பதால் அதற்கேற்ப தயார் செய்து கொண்டால், ஒரு வாரயிறுதியைச் சிறப்பாக இயற்கையுடன் கொண்டாட்டமாகக் களிக்கலாம்.
- சரவணகுமரன்