\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஆங்கிள் மினசோட்டா மக்கள் நாட்டிலிருந்து துண்டிப்பு

மினசோட்டா மாநிலத்தின் வடக்கு உச்சியில் ‘நார்த்வெஸ்ட் ஆங்கி’ (Northwest Angle) எனப்படும் சிற்றூர் உள்ளது. அமெரிக்காவின் எல்லைக்குட்பட்டதாக இருந்தாலும் கனேடிய  எல்லைக்குள் புகுந்து மட்டுமே இந்த அமெரிக்கப் பிரதேசத்திற்குள் போக முடியும்.

ஆங்கிள் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ஊரில் 120 பேர் வசிக்கின்றனர். இது அமெரிக்காவின் மிகத் தொலைவான பகுதிகளில் ஒன்றாகும். கொரொனா தொற்று நோயின் பரவல் காரணமாக கனேடிய, அமெரிக்க எல்லைகள் பூட்டப்பட்டு இந்த ஊர் தற்போது தனித்து விடப்பட்டு, சுயமாக இயங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

1783 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் (Treaty of Paris) எனும் ஒப்பந்த சாசனம் மூலம் இந்த நிலப்பரப்பு உருவாக்கப்பட்டது. அமெரிக்க சுதந்திரத்தை ஒப்புக்கொண்ட பிரித்தானியா இதன் மூலம் தமது எல்லைகளை அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து மிஸிஸிப்பி பெரும் ஆறு வரை ஒத்துக்கொண்டு நிலப்பரப்பைப் பகுத்துக் கொண்டது. எனினும் இவர்கள் ஒப்புக் கொண்ட இடத்தில் உள்ள பூகோள நிலப்பரப்பு அமைப்பு தவறென்பது  1798 இல் தான் பிரித்தானிய நில அளவையாளர் டேவிட் தாம்ஸன் என்பவரின் ஆய்வு முலம் தெரிய வந்தது. 

இதன் பிறகு 1807இல் அமெரிக்கா அதன் லூசியானா நிலப்பரப்பை வாங்கும் பொழுது  மீதி மேற்கு, தெற்கு மினசோட்டாப் பகுதிகளையும் கொள்வனவு செய்தது. இதன் பின்னர் அமெரிக்க, பிரித்தானியப் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தைகள் செய்த போதும் ஆங்கிள் பகுதி பிரித்தானியருக்கு  மறுக்கப்பட்டது. இதனால் இறுதியில் இந்தப் பகுதிக்கு அமெரிக்காவிலிருந்து சென்று வர விசேட பாதை ஒழுங்குகள் செய்யப்பட்டு அது இன்று வரை பேணப்படுகிறது. அங்கு போவதற்கான வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.

இந்த ஊர் 200 ஆண்டுகளின் முன்னர் நிலப்பட வரைவாளரின் பிழையால் உருவாகியதொரு அபூர்வ அமெரிக்க நிலப்பரப்பு. இது அதிகாரப்பூர்வமாக மினசோட்டா மாநில நிலப்பரப்பு எனினும் இந்த ஊரின் முப்புறமும் கனேடிய நிலப்பரப்பு சூழ்ந்துள்ளது. எஞ்சிய நான்காம் எல்லை நீர்பரப்பாகும். எனவே மினசோட்டாவிலிருந்து இவ்விடம் போக, முதலில் மக்கள் கனேடிய மனிடோபா (Manitoba) மாகாணத்தில் காலெடுத்து வைக்க வேண்டும்.

ஆங்கிள்  மினசோட்டாவின் வடக்குப் பகுதியிலுள்ள ‘லேக் ஆஃப் த வுட்ஸ்’ ( Lake of the Woods) எனப்படும் மாவட்டத்தைச் சார்ந்தது. இந்த ஊர்தான் அமெரிக்கத் தொடர் 48 மாநிலங்களின் வடக்கு உச்சியில் உள்ளது. இந்த ஊரின் 70% சதவீத பரப்புக்கள் ஒஜிப்வே (Ojibwa) பூர்வீக வாசிகளுடையது. ( Red Lake Nation Indian Reservation). இந்தப்பரப்பு பெருமளவில் நீரும்,காடுகளுமே.

மினசோட்டாவிலிருந்து இந்த ஊருக்குச் செல்ல இரண்டு வழிகள் மாத்திரமேயுள்ளன. பனியில்லாக் காலத்தில் Lake of the woods பகுதியிலிருந்து படகு மூலம் செல்லலாம். பனிக்காலத்தில், பனிச்சரிவுகளில் உருவாக்கப்பட்ட தடங்கள் மூலமாகவோ, அல்லது பனிச்சறுக்கு விமானம் மூலமாகவோ போகலாம். தரைப்பாதையில் போக விரும்பினால் மினசோட்டா மாநில எல்லையைக் கடந்து, கனேடிய மனிடோபா மாகாணம் வழியே சென்று, மற்றொரு முறை அமெரிக்க எல்லைக்குள் நுழைந்து ஆங்கிளுக்குச் சென்றடையலாம்.

தற்போது கொடிய கொரோனா காரணமாக அங்கு போகும் பாதை வெறிச்சோடிப்போய் உள்ளது. இவ்விட சராசரி வருமானம் $28,500. வெப்ப காலம் மே மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரையுமே. அக்டோபரில் இருந்து ஏப்ரல் மாதம் வரை குளிர் மற்றும் பனிக்காலம்.  

ஆங்கிள் சிற்றூரின் தலையாய வர்த்தகம் ஏரிகளில் மீன் பிடித்தல், மற்றும் மீன் பிடிப்புக் குடில்கள் வாடகைக்குக் கொடுப்பது மாத்திரமே. கொரோனா தடை காரணமாக 90% சதவித வழக்கமான உல்லாச மீன் பிடி பயணிகள் அவ்விடம் திரும்பவில்லை.

அக்டோபர் 19, 2020 கனேடிய எல்லைப்பகுதிகாப்பு அலுவலகம் The Canadian Border Services Agency (CBSA) கனேடிய அமெரிக்க சாதாரண மக்கள் போக்குவரத்துத் தடையை மேலும் நவெம்பர் 21, 2020  வரை நீடித்துள்ளது. கொரோனா தொற்று பனிக்காலச் சூழலில் அதிகரிக்கக் கூடும் எனும் அச்சமே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

 இங்கு, இந்தக் கோடைகாலத்தில் எட்டே எட்டு உல்லாச ஒன்று கூடல்கள் நடை பெற்றதாம். பிரதானமாக வந்தவர்கள் படகு மூலம் Lake of the woods வழியே சென்றுள்ளனராம். ஆயினும் படகில் அவ்வளவு தூரம் வருவதைப் பொதுவாக மக்கள் விரும்புவது இல்லை என்பதே மினசோட்டா மாநிலத்தில் இருந்து உல்லாசப்பிரயாணிகள் அதிகம் வராததற்குக் காரணமாகும்.

இந்த ஊரைப் பற்றி வில்லியம் கென்ட் குரூகர் என்ற கதாசிரியர் 2011இல் ‘Northwest Angle ‘ (ISBN-10 : 1439153957) என்றதொரு திகில் மர்மப் புத்தகம் வெளியிட்டிருந்தார்.

 

உச்சாந்துணை

  •         Bermis, Samuel Flagg. “Jay’s Treaty and Northwest Boundary Gap.” American Historical Review 27, no. 3 (April 22)
  •         Lass, William E. Minnesota’s Boundary with Canada: Its Evolution since 1783. St. Paul Minnesota Historical Society, 1980

 

-யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad