\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கூகுளுக்கு எதிரான நம்பிக்கையின்மை சட்டத்தாக்குதல்

அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் கடந்த அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை கூகுள் தாபனமானது பாரிய பல நம்பிக்கையற்ற குயுக்திகளை உபயோகித்து மின்வலய தேடுதல்,விளம்பரம் போன்றவற்றில் மற்றைய போட்டி வர்த்தகங்களை மடக்கி கட்டுப்படுத்தி அதே சமயம் நுகர்வோருக்கும் பாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டி, இது தொடர்பான சட்ட நடவடிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

அமெரிக்காவின் உதவி அட்டர்னி ஜெனரல் திரு. ஜெஃப் ரோசன் கூறுகையில், கூகிள் ஈ-காமர்ஸின் மிகப்பெரிய நுகர்வோர் தேடல் அடிப்படையிலான விளம்பரம் மற்றும் ஈ-காமர்ஸின் நுழைவாயிலாக மாறி வருகிறது. இந்தக் குறிப்பிட்ட நிறுவனம் அதன் ஏகபோக சக்தியால், இத்துறையில் செயல்படும் மற்ற போட்டி நிறுவனங்களை அழிக்கும் நோக்கத்துடன்  , அவர்களுக்குப் பெரும் தீமைகளை உருவாக்கியுள்ளது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொழிநுட்ப வர்த்தகங்களில் நம்பிக்கையில்லாக் குற்றச்சாட்டுகள் வெகு விரைவில் ஆராயப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படாவிடில் அடுத்தடுத்த கண்டுபிடிப்புக்கள் முன்வர வழிவகையில்லாது போய்விடும் என்கிறார் சட்டத்தரணி திரு ரோசன் அவர்கள்.  

இதற்கு முன்னரே அமெரிக்க சட்ட வல்லுனர்கள் மற்றும் நுகர்வோர் சங்க வழக்கறிஞர்கள் இது தொடர்பாக கூகிளுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளனர், கூகிள் இ-காமர்ஸ் நெட்வொர்க் தேடல் மூலமாக வரும் விளம்பர வணிக வாய்ப்புகளுக்காக போட்டியிடும் பிற நிறுவனங்களை முறியடித்து அதன் வருவாயை உயர்த்தியுள்ளது.

கூகிளின் தலைமை நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனம் ஒரு டிரில்லியன் டாலர் நிறுவனம். கூகிள் ஆண்டுக்கு 160 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டுகிறது; அமெரிக்க விளம்பரதாரர்களிடமிருந்து ஆண்டுதோறும் 40 பில்லியன் டாலர் வசூலிக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. கூகிள் தனது ட்விட்டர் சமூக வலைப்பின்னலில், அமெரிக்க நீதித்துறை நடவடிக்கைகள் ஒருதலை பட்சமாகவுள்ளதாகவும், கூகிள் சேவை நுகர்வோர் எங்களின் தரமான சேவைக் காரணமாக தாமாக வருகிறார்கள் என்றும் தாங்கள் இதற்காக குயுக்தியான வழியெதனையும் கடைபிடிப்பதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக பதில் அறிக்கையை சமர்ப்பிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசியில் மனுவிடப்பட்ட இதுபற்றிய குற்றச்சாட்டில் பதினொரு அமெரிக்க குடியரசுக் கட்சியினரும் வழக்கறிஞர்களும் மத்திய அரசுடன் சேர்ந்து செயற்படுவதாகத் தெரிகிறது. எனினும் எதிர்க்கட்சியினர் இதில் சேராதமையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

இதுவரை அமெரிக்க நீதித் துறையுடன் ஆர்க்கென்ஸா, ஃபுளோரிடா, ஜார்ஜியா,இண்டியானா,கெண்டக்கி, லூசியானா, மிசிசிப்பி, மிசெளரி, மொண்டானா, தென் கரோலைனா மற்றும் டெக்ஸாஸ் ஆகிய மாநிலங்கள் ஒத்துழைத்து சட்ட முறைப்பாட்டைக் கொண்டு வந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டில் விளம்பரதாராரிடம் இருந்து தனது பல பில்லியன் டாலர் வசூலையும் தொலைபேசி உற்பத்தியாளர்களுக்குக் கொடுத்து தானே அனைத்து கைத்தொலைபேசிகளின் முதல் மின்வலைய தேடல் சேவையாக அமைய வழிவகுத்துள்ளது. இது அமெரிக்க வர்த்தகச் சூழலில் சட்டத்துக்குப் புறம்பானதாகும். 

கீழே படத்தில் எவ்வாறு கூகுள் பிரத்தியேகமாக கைத்தொலைபேசியில் தனது மினவலையத்தேடல் சேவையில் ஆக்கிரமிக்கிறது என்பதற்கான  எடுத்துக் காட்டு தரப்பட்டுள்ளது, 

பதவியேற்றதிலிருந்து அமெரிக்கத் அதிபர் டிரம்ப் கூகுள் மேல் குறிவைத்தவாறு இருப்பதும் இவ்விடம் குறிப்பிடத்தக்கது. இவரது முறைப்பாடு, கூகிள், தமது கட்சி தகவல்களை கட்டுப்படுத்தி வருகிறது, மேலும் அவற்றைச் சரி சமமாகப் பகிர்வதில்லை என்பதே. அதனால் கூகிளின் மின்தளத் தேடலில் கூட அரச கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரவேண்டுமென இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிபர் டிரம்பின் ஆலோசகர்கள் கூறியுள்ளனர். எனினும் இவை போன்ற காரணிகள் தமக்கு சாதகமாக இருக்கவில்லை என்கிறார் சட்டத்தரணி ரோசன். 

அமெரிக்க நீதித்துறை கூகிள் தாபனத்தின் பலபிரிவுகள் தகர்க்கப்பட்டு தனித்தனி வர்த்தகமாக இயங்கினால் இப்படிப் பாரிய போட்டியாளர்களை மடக்கி திணற வைக்கும் ஆற்றல் வராது என்று எதிர்பார்க்கிறது. உதாரணத்திற்கு கூகிலின் மின் தள உலாவி (Web browser) குரோம் (Chrome ) ஒரு தனி நிறுவனமாதல் நலம் என்று நம்பப்படுகிறது.  

வழக்கமாக வர்த்தகத்தை வரவேற்கும் குடியரசுக் கட்சி உறுப்பினர், வர்த்தகங்களைப் பிளவு படுத்துதலில் அவ்வளவு நாட்டம் காட்டுவதில்லை. எனினும் அவர்கள் முழுமூச்சுடன் கூகிளின் பழக்க வழக்கத்தை மாற்ற முயல்கின்றனர். ஆயினும் கூகுள் தாபனம் இன்று மின்வலயத்தின் 90% சதவீதத் தேடல்களையும் கையாள்கிறது. எனவே நுகர்வோர் தனது வசீகரப் பிடியில் உள்ளனர் என்பதை கூகிள் நன்கறியும். எனவே இந்நிறுவனம் எதுவித மிரட்டலுக்கும் இறங்கி வராது என்றும், நீதிமன்றத்தில் போராடத் தயார் என்றும் சமிஞ்சை காட்டியுள்ளது. 

கூகுள் கம்பனி, மவுண்டன் வியு, கலிபோர்னியா மாநிலத்தை தரிப்பிடமாக கொண்ட நூறாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனம். கூகுள் மின்வலய உலாவியான குரோம், உலகின் பிரபலமான கைத்தொலைபேசி இயங்கு மென்பொருள் அந்திரொயிட், முன்னணி ஓடுபட சேவை யூட்யூப், மற்றும் இலத்திரனியல் வழிகாட்டி வரைபடங்கள் மென்பொருள் போன்றவற்றையும் கொண்டுள்ள ஸ்தாபனம். இவையாவும் நுகர்வோரிற்கு இலவசம், அவர்கள் தெரிவுகளை அறிந்து அவற்றை விளம்பரதாரர்க்கு விற்று அதனால் பாரிய ஆதாயங்களை பெற்று வருகிறது. 

கூகிள் நிறுவனம் தான் நியாயமற்ற வர்த்தகப் போட்டிகளில் இடம் பெறுவது இல்லை என்று நீண்டகாலமாக மறுத்து வந்துள்ளது. மேலும் கூகுள் தனது தரமான சேவை நுகர்வோரை ஈர்க்கிறது அதனால் தான் அவர்கள் தம்மிடம் வந்தவாறுள்ளனர் என்று வாதாடுகிறது. மேலும் தமது சேவைகளுக்குப் போதியளவு போட்டி உள்ளது என்கிறது கூகுள். எனினும் பொதுவாக விவரம் தெரிந்த மக்கள் யாவரும் கூகிளின் ஏகபோக தனியுரிமையால் இலாபம் பார்க்கும் தன்மையைப் பற்றிப் பேசியுள்ளனர். கூகிளைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியமும் சட்ட நடவடிக்கைகள் அண்மை வருடங்களில் கொண்டு வந்தாலும் அது கூகிளின் வர்த்தக முறைகளை மாற்றியதாகத் தெரியவில்லை.

  • ஊர்க்குருவி

உச்சாந்துணை

 

  1. https://www.documentcloud.org/documents/7273483-DOJ-Google-antitrust-lawsuit.html
  2. https://twitter.com/googlepubpolicy/status/1318557763467882501
  3. https://www.cnn.com/2019/03/20/tech/google-eu-antitrust/index.html
  4. https://ec.europa.eu/commission/presscorner/detail/en/IP_19_1770

 

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad