அயலகம் ஆராதித்த தமிழ்க்கவிஞர்
ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம், அமெரிக்கா, அமெரிக்கத் தமிழ் வானொலி, ஒருதுளிக்கவிதை,
புதுச்சேரி, உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா மற்றும் வல்லினச் சிறகுகள் இணைந்து,
மகாகவி ஈரோடு தமிழன்பன் 87ஆம் பிறந்த நாள் விழா இணையவழியில் மிகச் சிறப்பாகக்
கொண்டாடப்பட்டது. இதில் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பல
அறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, எப்பொழுதும் மகாகவிக்காகத் தங்களுடைய
பங்களிப்பைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கத் தமிழ் வானொலி ஊடகம் நேரலையில்
ஒளிபரப்பியது.
நோக்கவுரையளித்த ஒருதுளிக்கவிதை அமைப்பின் முனைவர் அமிர்தகணேசன் (அகன்) அவர்கள்,
“தமிழ்க்கவிதை மரபுச்சாரத்தில் திளைத்து உலகக் கவிதை மையங்களின் ஒளியில் தழைத்து வளர்ந்த
ஈரோடு தமிழன்பனின் சுயம் அவரைத் தன் ஒப்பற்ற படைப்புகள் மூலம் ஓர் அசல் கவிஞராக உலக
மன்றத்துக்குக் கொண்டு செல்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மகாகவியின் பிறந்தநாளை உலகின்
பல்வேறு பகுதிகளில் இருக்கக் கூடிய மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இன்று கொண்டாடுவதென்பது
மிகமிகப் பொருத்தமானது” என்றார்.
பெங்களூரு நகரைச் சார்ந்த திரு. ஜெபர்ட் வில்சன் ஜோ, மகாகவிக்கான இணையதளத்தைத் தொடக்கி
வைத்துப் பேசினார். இவர் உருவாக்கிய www.erodetamilanban.com தளத்தில் மகாகவியின்
படைப்புகள், வலைப்பதிவுகள், காணொளிகள்,அவர் வாழ்வும் பணியும் , அவர் பெற்ற விருதுகள் பற்றிய
விபரங்கள் போன்றவற்றைக் காணலாம்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் திரு. கால்டுவெல் வேள்நம்பி, கலாநிதி நா.
சுப்ரமணியம், பேரா எஸ். ஏ. சங்கரநாராயணன், முனைவர்கள் இராம குருநாதன், பா. இரவிக்குமார்,
குறிஞ்சிவேந்தன், கவிஞர்கள் புதுவை சீனு தமிழ்மணி, கவிமுகில், வாசுதேவன் பநம்பிள்ளி, விழிகள் தி.
நடராஜன், இராதே, கரந்தை ஜெயக்குமார், திரு. சண்முகம் பெரியசாமி ஆகியோரின் வாழ்த்துரைத்
துளிகள் ஒளிபரப்பப்பட்டன.
மரபு மாமணி சியாமளா ராஜசேகர் மற்றும் கனடாவின் உமை பற்குணரஞ்சன், வெர்ஜீனியாவின் ம. வீ.
கனிமொழி, இந்தியாவின் மு. கீதா, வித்யா மனோகர், இல. சகிலா ,டெக்சாஸின் சித்ரா மகேஷ்,
நியுஜெர்சியின் சுவர்ணா முத்துகிருட்டிணன், அட்லாண்டாவின் த. ச. பிரதீபா பிரேம், கிரேஸ் பிரதிபா,
ஜெகா சீதாராமன், சிங்கப்பூரின் இன்பா ஆகியோர் வளர்கவி பொழிந்து மகாகவியை வாழ்த்தினர்.
இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மகாகவி அண்மையில் எழுதிய நூல்கள் மற்றும் மகாகவி
மீதான பிறர் நூல்கள் பற்றிய அறிமுகம் இடம் பெற்றது. மகாகவி, தமது “வணக்கம் வள்ளுவ” என்ற
கவிதை நூலுக்காக 2004இல் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். அவர் இதுவரை 71 கவிதை
நூல்கள், 29 உரைநடை நூல்கள் என 100 நூல்களைப் படைத்து இலக்கிய உலகில் சாதனை
புரிந்துள்ளார். அவரது 100ஆவது நூலான “போகிறபோக்கில்” என்ற கவிதை நூல் அவரது 87ஆவது
பிறந்தநாளில் வெளியிடப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது.
கூடுதலாக, 1,700 A4 அளவு பக்கங்களில் ஓராண்டாக முனைவர் அகன் அவர்களின் உழைப்பில்
உருவான மகாகவியின் 71 கவிதை நூல்களின் பெருந்தொகுப்பும் அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நூலின் பெயர் “எரிதழலும் இளங்காற்றும்”. எந்த ஒரு கவிஞனின் கவிதைகளும் இத்துணைப் பெரிய தொகுப்பாக இதுவரை இந்தியாவில் வெளியிடப்படவில்லை. அதிக உழைப்பிலும் பொருட்செலவிலும்
உருவாக்கப்பட்டுள்ள இந்நூலின் எடை 5 கிலோ 250 கிராம்! இது எல்லாத் தமிழர் இல்லத்திலும் இருக்க
வேண்டிய ஒரு நூல். முன்பதிவு செய்பவர்களுக்கே நூல் அனுப்பி வைக்கப்படும்.
மகாகவியின் கவிதை வரிகளைத் தங்களது இன்குரலால் ஒலிப்பதிவு செய்து காணொளிக்குழல்
அளித்துள்ளார்கள் கவிஞர்கள் காரைக்குடி கிருஷ்ணா மற்றும் சேலம் கலையரசி மணிமாறன். இச்செய்தி
பகிரப்பட்டு, அவர்களின் சில வாசிப்புப் பதிப்புகளும் ஒளிபரப்பப்பட்டன. மகாகவியின் கவிதைகளின்
ஒலிவடிவப் பதிவாக்கக் கருத்திற்கு வித்திட்டவர் நியூஜெர்சி முனைவர் தங்கமாதேசுவரன்.
மேலும் இந்நிகழ்ச்சியில் இவ்வருடம் அயலகத்தில் ஊடகம், கலை, எழுத்து, தமிழ்ப்பணி
ஆகியவற்றிற்கான “தமிழன்பன் 80” விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்கத் தமிழ் வானொலியைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் பேச்சிமுத்து நன்றியுரை வழங்க விழா இனிதே
நிறைவடைந்தது.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர், திருமதி. டெய்சி ஜெயபிரகாஷ், அமெரிக்கத் தமிழ் வானொலி.
-ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா