\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்கத் தபால் சேவையின் அண்மைக்கால குறைபாடுகள்

அன்றாட தகவல் பரிமாற்றங்கள், வர்த்தகப் பற்றுச் சீட்டுகள்,  மருந்துகள், வயோதிகர் இளைப்பாறு காசோலைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களைச் சாதாரண மக்களுக்கு எதிர்பார்த்த நாட்களில் தரும் தாபனம் அமெரிக்கத் தபால் சேவை. தனி நிறுவனமாக இயங்கினாலும் இது ஒரு மக்கள் நலனிற்கான அரச சேவை.

ஆயினும் அமெரிக்கத் தபால் சேவை நலன் கண்காணிப்புக் குழுமியம் (USPS Office of Inspector General), புதிய தபால் சேவை தலைமை அதிகாரி திரு. லூவிஸ் டிஜோய் அவர்களின்  நியமனத்துக்குப் பின்னர் அமெரிக்கத் தபால் சேவை பின்னடைவைக் காணத் துவங்கியுள்ளதாக அறிவித்திருக்கிறது. மேலும் தபால் சேவை கண்காணிப்பு அறிக்கை 20-292-R21, தலைமை அதிகாரி திரு. டிஜோய் கடந்த ஜூன் 2020இல் சேர்ந்தவுடன் அமுல் படுத்திய நடவடிக்கைகளால் இந்தப் பின்னடைவு உண்டானது என்று திடகாத்திரமாக கூறுகிறது.

இந்த அறிக்கை அக்டோபர் 19, 2020இல் வெளி வந்தது. இது அமெரிக்க காங்கிரஸின் கோரிக்கைக் காரணமாக சமர்ப்பிக்கப்பட்டது. அமெரிக்க காங்கிரஸ் கொடிய கொரோனா தொற்றுநோய் பரவலுக்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான தபால் விநியோகத்தை நம்பியிருக்கும் குடிமக்கள் சார்பில், சேவை கண்காணிப்பு தலைமையை (Postal Service’s Office of the Inspector general (OIG)) அணுகினர். கொரோனா தொற்றினால் தபால் வாக்களிப்பு எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

புதிய தபால் துறை அதிகாரி டிஜோய் அவர்கள் இதற்கு முன்னர்  தளவாட போக்குவரத்து நிர்வாகியாக இருந்தவர் (Logistics executive).  அவர் பழமைவாதக் குடியரசுக்  கட்சியின் கொடையாளி. தபால் சேவையில் முன் பின் அனுபவம் இல்லாதிருப்பினும் ஜூன் 15, ஆரம்பித்தவுடனேயே, அமெரிக்கத் தபால் துறையின் பிரத்தியேகச் சேவையான ‘அதே நாள் விநியோகத்தினை’ (Same day delivery) துண்டித்தார். அதனைத்  தபால் பெருநிறுவன மறுசீரமைப்பு என்றார்.

 அத்துடன் இவ்வாறு பல நூறாயிரம் அமெரிக்க பின்கோடு  முகவரிகளுக்கு தினமும் தபால் பிரிப்பதையும் மாற்றியமைக்க முனைந்தார். இந்த மாற்றங்களைப் பற்றிய எச்சரிக்கை அறிக்கை எதுவும் தபால் சேவை பெறுவோர்க்கு கொடுக்கப்படவில்லை. இந்த திடீர் தபால் சேவை தொழிற்பாட்டு மாற்றங்கள், விநியோகச் சிக்கல்களை அதிகரித்ததுடன்,  மலைபோல் குவியும் தபால்களை கையாள எந்த நிவாரணமும் செய்யப்படவில்லை என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

மேலும் இந்த அதிகாரியின் வருகைக்குப் பின்னர் ஊழியர் பற்றாக்குறை, நாடு முழுவதும் பல இடங்களிலிருந்து தபால் பெட்டிகள் அகற்றப்பட்டது போன்ற செயல்கள் தபால் சேவையைத் தாமதமாக்கி, பெரிதும் பாதித்துள்ளது.

 

இதற்கு அவரது தரப்பு இக்குறைபாடுகளைத் தாங்கள் கொண்டு வரவில்லை என்றும், ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களை மட்டுமே  தாங்கள் நடைமுறைக்குக் கொண்டுவந்ததாகவும் வாதாடியது.

எனினும் தபால் சேவை கண்காணிப்பு மேற்பார்வைத் தலைவரின் அக்டோபர் 2020 அறிக்கை, முதல்தர தபால் (First class mail) சேவை  , தேர்தல் தொடர்பான தபால், வாக்குச் சீட்டுகள்  உட்பட, கடந்த ஜூலை மாதம், ‘நேரப்படியான தபால் விநியோக விகிதம்’  80% சதவீதத்திற்கும் கீழே விழுந்துள்ளதாகச் சொல்கிறது. இதற்கு முன்னர் இச்சேவையின்  விகிதம் 90% சதவிதமாக  இருந்தது குறிப்பிடத்தக்கது.  செப்டெம்பர் மாதம் இந்த ‘நேரப்படி விநியோக விகிதம்’ 86.8% சதவீதமாக உயர்ந்தாலும் தபால் சேவையின் இலக்கான 96% சதவிகிதத்துக்கு வெகு கீழே  உள்ளதாகும்.

மற்ற மத்திய அரசு தாபனங்கள் போலில்லாமல் அமெரிக்கத் தாபல் சேவை,  ஒரு மேலாதிக்க பரிபால சபையினால் (USPS Board Of Governors )கவனிக்கப்படுகிறது. இந்த குழு உறுப்பினர்களின் நியமனத்தில்  அரசியல் தலையீடு உள்ளதால், இக்குழுவின் பரிசீலனை முன்பு போன்று அமைவது இல்லை.

இதனிடையில் திரு. டிஜோய், தபால் சேவையின் வருடாந்தப் பற்றாக்குறைக்கு $7.6 பில்லியன் எதிர்பார்ப்பதாகவும், தபால் சேவையை அபிவிருத்தி செய்ய முயல்வதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா முதல் தபால் சேவையின் பொருளாதாரப் பிரச்சனை

இந்த ஆண்டு 64 மில்லியன் மணிநேர அஞ்சல் ஊழியர்களின் பணி நேரத்தை அகற்றுவதே தபால்துறை முன்னேற்ற இலக்காகக் கொண்டுள்ளது . கொரோனா தொற்றுநோயினால் ஏற்பட்ட இதர வர்த்தகப் பாதிப்புகள்  ஓரளவுக்கு சீரடைந்தாலும், தபால் துறையின் தொழில் குறைப்பு இலக்கு அகற்றப்படவில்லை. கொரோனா தொற்றுநோய்களின் போது ஊழியர்களின் பற்றாக்குறை தீர்க்கப்படவில்லை, இதனால் சேவை தெளிவாக பாதிக்கப்படுகிறது.

 

தபால் சேவையின் தரம் மென்மேலும் குன்றியதன் இன்னொரு காரணம் பல சீர்திருத்தங்கள் அவசர அவசரமாக அமுல் படுத்தப்பட்டது. இம்மாற்றங்கள் தொடர்பான விளக்கங்கள் ஒலி வடிவில்  மாத்திரம் கொடுக்கப்பட்டது. இது அமெரிக்க தபால் சேவையில் நாடு முழுவதும் பெரும் செயல்பாட்டுக்  குழப்பங்களுக்கு வழி செய்தது.

இது தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் விளக்கம் கேட்ட போது பெரும்பாலும், தபால் துறை பூசி மெழுகிய மேலோட்ட விவரங்களை மட்டுமே தந்தது; நுணுக்கமான விவரங்கள் முழுமையாக  பகிரப்படவில்லை என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

தபால் சேவையின் இந்த  நிறுத்தங்கள், மாற்றங்கள், விநியோகத் தடங்கல்கள் அமெரிக்கத் அதிபர் தேர்தல் தபால் வாக்குகள் உரிய நேரத்தில்  மாநில தேர்தல் தலங்களுக்கு வந்து சேர்வதைப் பாதிக்கும்.  தேர்தல் முடிவுகள் குறித்து பல குழப்பங்கள், தடங்கல்கள்  போன்றவற்றை உண்டாக்கலாம் என அஞ்சப்படுகிறது.

திரு. டிஜோய் பதவியேற்றதிலிருந்து, நாடு முழுதுமிருந்த   712  அஞ்சல் பிரிப்பு இயந்திரங்களில் 437 இயந்திரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. அதாவது 61% வேகமான அஞ்சல் பிரித்தல் மற்றும் அனுப்பும் இயந்திரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பொதுஜன எதிர்ப்புகள் இருந்தாலும், இந்த நடவடிக்கை தவிர்க்க இயலாதது என்று திரு. டிஜோய் கூறி வருகிறார்.

அதனுடன்  நாடு முழுதும் 1,730 தபால் பெட்டிகள்  அகற்றப்பட்டுள்ளன. இது அமெரிக்க தபால் பெட்டி எண்ணிக்கைகளில் 45% சதவீதம் குறைப்பாகும். சென்ற 5 வருடங்களில் அகற்றப்பட்டதைவிட இது  குறைவுதான்  என திரு, டிஜோய் வாதாடுகிறார்.

இதுக்கு எதிரான சட்டத் தாக்கலில், மத்திய அரச நீதிபதி ஜெரால்ட் ஆஸ்டின் (US District Court Judge Gerald Austin) செம்டெம்பர் 28, 2020 தனது தீர்ப்பில், தபால் துறை அதிகாரி திரு. டிஜோய்  தந்த சீர்த்திருத்த காரணிகள் ஏற்கும்படியாக இல்லை; எனவே உடனடியாக சகல தபால் சீர்திருத்தங்களையும் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். பென்சில்வேனியா, கலிபோர்னியா மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இந்தச் சட்டத் தாக்கலை செய்திருந்தனர் .

இது குறித்து பேசிய திரு. டிஜோய், தனது அனுபவம் போக்குவரத்துச் சார்ந்த விடயங்களில் மட்டுமே இருந்ததாகவும்,  தபால் பரிமாற்ற அட்டவணைகள் குறித்த விவரங்கள் தெரியாததால், புரிதலின்றி தான் கொண்டு வந்த சீர்த்திருத்தங்கள் தபால் துறை சேவைகளுக்கு  தடைகளை உண்டு பண்ணியிருக்கலாம் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

-யோகி

 

உச்சாத்துணை

 

  1. Report Number 20-292-R21, October 19, 2020, Office of Inspector General – United States Postal Service
  2. Government watchdog Knocks Postal Service for Operational changes, Quint Forgey, 10/21/2020 Politico 
  3. Postal Service agrees to reverse service changes, Associated Press, 10/14/2020

Tags: , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad