பூர்விக வாசிகள் சுங்கான் தயாரிப்பு
பைப் ஸ்டோன் மினசோட்டா மாநிலத்தில் இருவகையான கருப்பு களிமண் பாறைகள் உள்ளன. மினசோட்டா மற்றும் தென் டக்கோடா மாநிலங்களில் வாழும் சூ (Sioux) இனமக்கள் விஷேட சடங்குகளில் புகையிலை புகைத்துக் கொள்ளும் சுங்கான் தயாரிப்பினைப் பார்ப்போம்.
பாறையில் இருந்து சுங்கான் செய்துகொள்ளும் முறை:
சுங்கான்கள் உருவாக்குவதற்கு பல முறைகள் இருப்பினும் 1800களில் இது சற்று தெளிவாக்கபட்டது. இந்த பாறைக்கல்லை உடைத்து ஒரு திடமான பலகை போன்று செதுக்கி எடுக்கப்படும். இந்தப் பலகை போன்ற செதுக்கல்கள் சுமார் 3 அங்குலப் பருமன் உள்ள பாறைகளாகப் பிளந்து எடுத்துக் கொள்ளப்படும்.
இந்தப் பாறைகள் கிழக்கை நோக்கிப் பூமியினுள் அழுத்தியவாறு காணப்படுவதால், இவற்றை அறுத்து எடுப்பது அவதானமாகச் செய்யவேண்டிய விடயம். இதைப் பிளக்கும் பூர்வீக சிற்பிகள் பாறைப் பிளவின் கீழ் உள்ள பறைப் படிமங்களுக்கு சேதம் விளைவிக்காது தேவையான பாறைகளை அகற்ற முனைவர்.
ஆங்கில எழுத்து தலை கீழ் T போன்று பாறை நடுவில் கீறி மெது மெதுவாத உளி மூலம் செதுக்குவர். அடுத்து சிற்பி இந்தக்கல்லின் எல்லைகளைத் தேய்த்து உருளைகளாக மாற்றுவார்.
அதையடுத்து கல்லின் உட்பாகத்தில் குடைந்து நுழைவாயில்களை உருவாக்குவார். இந்தப் பாறையை மிருதுவாக குடைந்தெடுக்க மரக்கொப்பினால் ஆன திரியுள்ள குடுவைப் பொறி பாவிக்கப்படும்.
இதன் போது மணலும் நீரும் விட்டு-விட்டுப் பாறை உடைந்து நொருங்காது பார்த்துக் கொள்ளவர்.
இந்த சுங்கான் துழையினூடு மணலும், நீரும் விட்டு மேலும் துப்புரவு செய்வர். இறுதியில் சுங்கான் ஆனது பளிங்குறுமாறு தொடர்ந்து பக்குவாகத் தேய்த்து எடுத்துக் கொள்ளப்படும்.
அடுத்து Ash ஆஷ் மரம் அல்லது மற்றய வலிமையான மரங்களின் திடமான கிளைகளில் இருந்து சூங்கான் பிடி செதுக்கி உள்ளே குழாய் போன்ற குழியுள்ள இருண்டு பிளவுகள் சேர்த்து, கல் சுக்கானையும், மரத்தையும் மரப் பிசின் மூலம் ஒட்டி, மேல் கயிற்றினால் கட்டி உருவாக்கிக் கொள்ளப்படும்.
சுங்கான் கல்லு (Pipestone)
பைப் ஸ்டோண் மினசோட்டா
மினசோட்டா மாநிலத்தில் இந்தப்பாறைகளின் புவியியற் தோற்றம் pipestone Minnesota எனும் ஊர் தேன் மேற்குப் பகுதியில் தென் டக்கோடா மாநில, எல்லைக்கு அருகாமையில் காணப்படும். இது மினியைப்பொலிஸ், செயின் பால் நகர எல்லைகளில் இருந்து சுமார் 3 மணித்தியாலம் 30 நிமிடங்களில் செல்லக்கூடிய இடம்.
இந்த இடம் மில்லியன் வருடங்களின் முன்னர் பாண்டய ஆறு நிரப்பிய மணலில் இருந்து உருவாகியது. இது வெள்ளங்களினால் அல்லது மண்சேறு படிவுறு பாறையாக மாறியிருக்கலாம். புகோள மணல் அழுத்தங்கள், அதனால் உருவாகிய வெப்பம் போன்றவை எறத்தாழ 1.6 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் சுங்கான் கற்பாறைகளை உருவாகின. பின்னர் நீடிய பனி யுகத்தின் பொழுது உருவாக்கப்பட்ட பனிப்பாறைகள் மற்றும் ஒன்று சேர் படிமங்கள் அதன் மேல் பரவின. இந்தச் சேற்றுப்பாறைகள் கருப்பு, சிவப்பாக இயற்கையாக காணப்படும்.
-கருப்புச் சுங்கான் கல்-
-சிவப்புச் சுங்கான் கல்-
மினசோட்டா விஷேட சுங்கான் கல்லுப் பாறையானது டக்கோடா சூ (Dakota Sioux) பூர்வீக மக்களால் 1,700 ஆண்டுகளாக பேணப்பட்டு வந்தது. டக்கோடா சூ மக்கள் இந்த கற்களை மற்றய பூர்வீக வாசிகளுக்கு பண்டமாற்று வர்த்தகம் மூலம் விநியோகித்து வந்தார்கள். இங்கு பாறை உடைப்பாவர்கள் தலைமுறை தலைமுறையாக இதைச் செய்து வருகின்றனர். பாறை உடைத்துப் பெற்ற பின்னர் பூர்வீக மக்கள் இயற்கை மதாவை மதிக்கும் வகையில் உணவு, மற்றும் புகையிலையை மரியாதையாக வைத்து விடுவது அவர்கள் பழக்கம் ஆகும். பூர்வீக வாசிகள் வழக்கமாக இயற்கையில் இருந்து எதைப்ப பெற்றாலும் (இது வேட்டையாடல் ஆகவும் இருக்கலாம்) அதற்கடுத்தாக நன்றி நவில் செய்து இயற்கையை, தமது உணவுக்காக உயிரிழந்த விலங்கிற்கு நன்றி செலுத்துவது வழக்கமாகும்.
பைப் ஸ்ரோண் புல்வெளிப் பூங்கா
மினசோட்டா மாநிலத்தில் பைப் ஸ்ரோன் பூங்கா புல் வெளித்தரைகளுக்குச் சிறந்த உதாரணமாகும். இங்கு வருகை தருவோர் அமெரிக்க புல் வெளியை தாவரவியல் ரீதியிலும், இவ்விடத்தில் ஆயிரக்கணக்கான காலமாக வாழ்ந்து வந்த மக்கள் ரீதியிலும் என இவையில் பார்க்கின்றனர். இது ஒரு இயற்கை வழித் தொழிற்படும் நூகனசாலை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.. இவ்விடத்தை விபரம் தெரியாது முதல் பார்க்கும் பொழுது, என்னதான் இங்கு பெரிதாக இருக்கப் போகுது என்று எண்ணிக் கொள்ளலாம். ஆயினும் இந்த வனப்பூங்கா கொஞ்சம், கொஞ்சமாக தன்னைக் காட்டிக்கொள்ளும். வருகை தருபவரை வரவேற்க வன இலாக்கா சாவடி ஒன்று உண்டு. இந்தக் கட்டடத்தை ஒற்றி ஒரு படிக்கல் வருபவர்களை இடத்தின் மகிமையை எதிர் பார்க்க அழைத்துச் செல்லும். குறிப்பாக இந்த செங்கல் படிகளில் நடக்கும் போது அவை சற்று வழுக்கலாமோ என்றிறுருக்கும்.
ஆயினும் அதைத் தாண்டிப்போனால் எவ்வாறு மில்லியன் ஆண்டுகளில் இந்தப் பாறைகள் உருவாகின என்பதற்கான ஆதாரங்களைக் கூர்ந்து பார்க்கலாம்.
படிப்படியாக சிறு நடைபாதைகளினூடு செல்ல சிவப்புப் பாறைகள் நிலத்தில் இருந்து வெளிவரும். இதன் போது தட்டையாக இருந்த புற்றரை இந்த சிவப்புப் பாறைச் சுவர்களைக் கொண்டிருப்பதையும் அவதானிக்கலாம்.
சற்று உட்புறம் நடந்து போய், பாறைகளின் மேல் ஏறிக்கொள்ள ஒரு வினோதமான பூர்வீக வாசிகள் கூறும் (Oracle) அசரீரியுடன் பாறை எனும் முதியோர் தலை போன்ற தொரு படிமம் தெரியவரும்.
இந்தக் களிமண் படிமச் செம்பாறையானது, நாம் வேறு எங்கு பார்க்காத அளவு வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கும் என்றே கூறிக்கொள்ளலாம்.அதில் நீர் வடிந்து பல்லாயிரம் ஆண்டுகள் காய்ந்த இடங்கள் அருமையான நிற வேற்றுமையுடன் (Contrast) காணப்படுகின்றது.
இந்த அழகிய பாறைகள் ஊடு நடந்து வரும் போது வினவஸ்ஸா நீர்விழ்ச்சி (Winnewissa Falls) வந்தது. இது சூ பூர்வீகவாசிகளின் மொழியில் பொறாமையான இளம் பெண் என்று பொருள் தரும். இது பாரிய வீழ்ச்சி ஆயினும் அதன் இயற்கையான துருப்பு பிடித்த செங்கல்லில் பாசிகள் அழகாக இருக்கிறது.
மேலும் நடந்தால் சிறிய, பெரும்பாலும் ஓக் மரக் காடு வரும். அவ்விடமும் இன்னொரு பாறை பண்டைய பூர்வீக மக்கள் முகம் போல் காணப்படும்.
சுங்கான் கல்லு பாறை எவ்வாறு உருவாகிறது?
மண் சேறு அதிக பாரத்துடன் அமர்த்தப்பட்டு இது கல்லாகி. படிவுப்பாறை (Sedimentary Rock) ஆக உருவாகியதே சுங்கான் கல்லு (pipestone) ஆகும். இது ஆங்கிலத்தில் (Catlinite) என்றும் அழைக்கப்படும். சுங்கான் கல்லானது ஒரு மிருதுவான அதே சமயம் இலகுவாக முடியக்கூடிய கல்லு வகை.
இதைப் பூர்வீக வாசிகள் தமது விசேட சடங்குகளில் புகையிலை, மற்றும் மூலிகைகள் சேர்த்துப் புகைப்பதற்குப் பாவித்தனர். இந்தப் பாறையைத் தெரிவு செய்து அதில் சுங்கான் செய்யப்பட்டமையால் தான் இந்தப் பாறையும் அதே பெயரைக் கொண்டது. சடங்குகளில் சுங்கான் ஊதுவது புற்றரை ஆதிவாசிகள் தனித்துவமான செய்கை என்று கருதப்படுகிறது. இதை பௌனி (pawnee) மற்றும் சூ (Sioux) மக்கள் இரண்டாயிரம் ஆண்டகளாகப் பின்பற்றி வருகின்றனர். இந்தச் சுங்கான்கள் அதனைப் பாவிப்பவர் இறக்கும் போது, அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் சேர்ந்து அடக்கம் செய்யப்படும். இது கிழக்கில் நவீன ஒஹாயோ மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பூர்வீக வாசிகள் மலைகளிலும் அவர்கள் முதியோர் ஈமைக்கிரியை அடக்கங்களிலும் காணப்பட்டன. எனவே இந்த சுங்கான் பாறை உபயோகம் தலைமுறை தலைமுறையாக பேணப்பட்ட சம்பிரதாயமாகும்.
சுங்கான் கற்பாறையான அமெரிக்க பெரும் புற்றரை இடமாகிய மேற்கில் மொண்டானா வில் இருந்து கிழக்கில் மினசோட்டா வரை வடக்கில் மனிட்டோபாவில் இருந்து தெற்கில் ஒமகா வரை உள்ள பிரதேசம் வெவ்வேறு வகையில் காணப்படுகிறது. எனவே இதை பூர்வீக மக்கள் பிரதேசங்களாகப் பார்க்கும் போது மேற்கில் குறோ Crow மக்களில் இருந்து கிழக்கில் சூ (Sioux) பூர்வீக மக்கள் வடக்கில் பிளைக் ஃபுட் (Black Foot) குழு தெற்கில் பௌனி (Pawnee) மக்கள் வரை சூழ்ந்த பிரதேசத்தில் சுங்கான் கற்பாறைகள் காணப்படுகின்றன.
சுக்கான் பாறை குடைதல் சூழல் வெட்பதட்பத்திற்கு ஏற்ப பூர்வீக வாசிகள் செய்வார்கள். பனி உருகி நீராகும் காலத்தில் பாறை வெட்டுவது, பாரம்பரிய உபகரணங்கள் செய்து கொள்வது கடினம், எனவே வெப்பம் ஏறுதலை எதிர்பார்ப்பர்.வழக்கமாக கோடை கடைசியிலும், இலையுதிர் காலத்திலும் நடக்கும்.
மினசோட்டா மாநிலத்தில் இருக்கும் மூன்று பிரதான காட்டுப் பிரிவுகளையும் நாம் 3-4 மணித்தியால வான் ஓட்டத்திலேயே பார்த்துக் கொள்ள முடிவது எமது பாக்கியம். புல் வெளித்தரை உதாரணங்களைச் சிறப்பாக அவதானித்துக் கொள்ள பைப் ஸ்ரோன் பூங்கா ஒரு நல்ல இடம். மேலும் அயல் (Sioux City) தென் டக்கோடாவையும் விரும்பினால் போய் பார்த்துவிட்டுத் திரும்பலாம்.
-யோகி