சூரரைப் போற்று
சாமானியனும் உயரத்தில் பறக்க வேண்டும், பறக்க முடியும் என்ற நியாயத்தைப் பேசும் படமாகச் சூர்யாவின் “சூரரைப் போற்று” திரைப்படம் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் இவ்வாரம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை ‘ஓடிடி’யில் வெளிவந்த திரைப்படங்கள் எல்லாம் சோபிக்காத நிலையில், இந்தப் படம் திரையரங்கில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
‘ஏர் டெக்கான்’ நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அதனுடன் பிற விமான நிறுவனங்களின் கதையையும் சேர்த்து, அத்துடன் சினிமாவுக்குத் தேவையான மசாலாவைத் தூவி உருவாக்கப்பட்டிருக்கும் படமே இது. கோபிநாத்தின் ஏர் டெக்கான் நிறுவனம் தனது சேவையைத் தொடங்கிய சமயத்தில், நான் பெங்களூரில் இருந்தேன். அதுவரை விமானத்தில் சென்றிருக்காத நான், ஏர் டெக்கான் குறித்த செய்திகளை நாளிதழ்களில் ஆர்வத்துடன் வாசித்துக்கொண்டிருந்தேன். பேருந்து பயணம் போல், ரயில் பயணம் போல் விமானப் பயணமும் வெகுஜனத்தைச் சென்றடையுமா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எல்லோரையும் மாதிரி எனக்கும் இருந்தது.
‘ஏர் டெக்கான்’, ‘கிங் ஃபிஷர்’ எனத் தொடங்கிப் பிறகு ‘ஸ்பைஸ் ஜெட்’, ‘இன்டிகோ’, ‘பாராமவுண்ட்’ எனப் பல விமானச் சேவை நிறுவனங்கள் இந்தியாவில் வரிசையாகத் தொடங்கப்பட்டன. தொடங்கிய வேகத்தில் பல நிறுவனங்கள் வியாபார தோல்வியால் களத்தை விட்டு வெளியேறின. ‘ஏர் டெக்கான்’, அதை விழுங்கிய ‘கிங் ஃபிஷர்’ என இந்த நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. தொழிலில் தோல்வி என்றாலும் ‘ஏர் டெக்கான்’ நிறுவனத்தைக் கஷ்டப்பட்டுத் தொடங்கிய கேப்டன் கோபிநாத்தின் கனவான எளியவர்களுக்கு விமானப் பயணம் என்ற கனவு ஓரளவுக்கு நிறைவேறி இருக்கிறது. அவருடைய கனவு, கடந்து வந்த பாதை ஆகியவற்றை இப்படம் மூலம் மிகையுணர்வுடன், உணர்ச்சிபூர்வமாகப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளலாம். உண்மையான கதை தெரிய வேண்டும் என்றால் “சிம்ப்ளி ஃப்ளை” (Simply Fly) புத்தகத்தைத் தான் வாசிக்க வேண்டும்.
கற்பனை சுதந்திரம் என்பதை முழுமையாக இயக்குனர் சுதா கோங்கரா கையில் எடுத்திருக்கிறார். பிராமணச் சமூகத்தில் பிறந்த கோபிநாத்தின் கதாபாத்திரத்தை, பெரியார் வழி நடக்கும் கருப்புச்சட்டை கோபக்கார மாறாவாக (நெடுமாறன் ராஜாங்கம்) எழுதியிருக்கிறார். விமானப் பயணத்திற்கு ‘cost barrier’ மட்டுமல்ல, ‘caste barrier’ உம் இருக்கக் கூடாது என்பது தான் கோபிநாத்தைப் போல், மாறாவின் குரலாக இப்படத்தில் ஒலித்துள்ளது.
மாறா கதாபாத்திரத்தில் சூர்யா வாழ்ந்திருக்கிறார் என்றால் அது நிஜம். அந்தக் கோபத்தை, ஏமாற்றத்தை, விரக்தியை வெளிப்படுத்தும் நேரங்களில் மனிதர் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். முக்கியமாக, விமான நிலையத்தில் டிக்கெட் காசுக்காக இறைஞ்சும் போதும், தந்தை இறப்பின் பின் அம்மாவிடம் அழுது கெஞ்சும் போதும் சூர்யா வெளிப்படுத்தும் நடிப்பிற்கு விருதுகள் காத்திருக்கின்றன. கடந்த பத்து வருடங்களாக, தொடர்ந்து சூர்யா நடித்து வந்த திரைப்படங்கள் சரியாகப் போகாத நிலையில், இப்படம் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் திருப்தி அளித்துள்ளது. ஆனால், ‘ஓடிடி’யில் வெளி வந்து இருப்பதால் இதன் வெற்றியை எப்படிக் கணக்கிடுவார்கள் என்று தெரியவில்லை.
படத்தில் சூர்யா கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் என்றில்லாமல் அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி எனப் பலருடைய கதாபாத்திரங்களும் கவனம் ஈர்ப்பதாக உள்ளன. இந்த நடிகர்களும் மிகச் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்கள். பொம்மியாக நடித்துள்ள அபர்ணாவை முதலில் பார்க்கும்போது, ஹீரோயின் மாதிரியே இல்லையே என்ற எண்ணம் வருகிறது. போகப் போகத் தெரிந்துவிடுகிறது, இது வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை என்று. வழக்கத்திற்கு மாறான பலமிக்க கருத்தியல் கொண்ட பெண் கதாபாத்திரம். அதற்குத் தனது பலமான நடிப்பை அள்ளி வழங்கியிருக்கிறார் அபர்ணா. அது போல, ஊர்வசியும் சூர்யாவிடம் வெடித்துத் தள்ளும் காட்சியில் தனது அனுபவத்தைக் காட்டியிருக்கிறார்.
இவர்களைத் தவிர, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, பூ ராம், காளி வெங்கட், கருணாஸ் எனப் பல நடிகர்கள் சிறு சிறு கதாபாத்திரங்களில் செவ்வன நடித்துள்ளனர். கால ஓட்டத்தை மாற்றி மாற்றிக் குழப்பமில்லாமல் காட்டியிருக்கும் சதீஷ் சூர்யாவின் எடிட்டிங் சிறப்பு. பாடல்களிலும், பின்னணி இசையிலும் அதிரடி காட்டி மிளிர்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். படத்தின் ட்ரைய்லர் வெளியான போதே, அதில் இசையின் முன்னோட்டத்தைக் காட்டியிருந்தார் ஜி.வி.பி.
நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவும், ஜாக்கியின் கலை இயக்கமும் கதை நடக்கும் காலக்கட்டத்திற்கு நம்மைக் கொண்டு செல்கிறது. சுதா கோங்கராவுடன் இணைந்து இந்தத் தொழில்நுட்பக் கலைஞர்களின் குழு, இந்தக் கதையை ‘டாகுமெண்டரி’ போல் இல்லாமல், கமர்ஷியல் தன்மையுடன் பல இடங்களில் மெய்சிலிர்க்கும் வண்ணம் வழங்கியுள்ளார்கள். அதிலும் கனல் தகிக்கும் வசனம் எழுதியுள்ள இயக்குனர் விஜயகுமாரின் பணியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கோபிநாத்தின் வாழ்க்கைப் போல் இப்படத்திலும் சோர்வடையும் இடங்கள் உள்ளன. அதைத் தாண்டி, படத்தைத் தூக்கி நிறுத்தும் காட்சிகளும் உள்ளன.
பெரும்பாலோருக்கு விஜய் மல்லையாதான் வில்லன் போல் தெரிவார். ஆனால், அந்தக் கதாபாத்திரம் காமெடியாக வந்து செல்லும். இந்தக் கதையில் ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயலின் சாயலான பரேஷ் கோஸ்வமி கதாபாத்திரம் தான் வில்லத்தனமான வேலைகளைச் செய்கிறது. இந்தப் பாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகர் பரேஷ் ராவல் நடித்துள்ளார். மேல்தட்டு வர்க்கம் மட்டுமே பறக்கத் தகுதி கொண்டது என்ற கருத்தில் இருக்கும் மேல்தட்டு தொழிலதிபரை நன்றாகப் பிரதிபலித்துள்ளார். வெறும் செய்தித்தாள்களில் மட்டும் பார்க்கும் போது, இவரும் தனது விமான நிறுவனத்தை நிலைநிறுத்த போராடி தோற்ற மற்றொரு தொழிலதிபர். கோபிநாத் பார்வையில் அவரது கனவைத் தொடர்ந்து கொத்தி தின்ற தந்திரக் கழுகு. ஏர் டெக்கான் பறக்கத் தொடங்கிய காலத்தில் அதன் தரத்தின் மீது எழுப்பப்பட்ட சந்தேகக் கேள்விகள் நன்றாக நினைவிருக்கின்றன. அதே சமயம் ஜெட் ஏர்வேஸின் தரத்தைப் பாராட்டும் குரல்களும் எப்போதும் கேட்டிருக்கின்றன. ஒருவேளை நரேஷ் கோயலை நாயகனாகக் கொண்டு படம் எடுத்தால், கோபிநாத் கதாபாத்திரம் காமெடி கதாபாத்திரமாகச் சித்தரிக்கப்பட்டாலும் படலாம். உண்மையான சித்திரம் புரிபட, இவர்களைப் பற்றிய புத்தகங்களையும், உள்நோக்கமில்லாத செய்திப்படங்களுமே உதவும். கமர்ஷியல் திரைப்படங்கள் ஒரு சிறு திறப்பையும், பெரும் கொண்டாட்டத்தை உணர்ச்சிவயப்படுத்தி அளிப்பவை. அந்த வகையில் சூரரைப் போற்று அதன் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறது.
- சரவணகுமரன்