மூக்குத்தி அம்மன்
தீபாவளி கொண்டாடுவதற்குப் பல காரணங்களைச் சொல்லுவார்கள். நமக்குக் காரணங்கள் தேவையில்லை. கொண்டாட்டம் தான் முக்கியம். எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, சாமி கும்பிட்டுவிட்டு, புத்தாடை அணிந்து, தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் சாப்பிட்டுவிட்டு, பட்டாசு வெடித்து, அவரவருக்கு ஸ்பெஷலான உணவை உண்டு, டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்தோமா, பண்டங்களை நண்பர்களுடன் பகிர்ந்தோமா, தியேட்டருக்குச் சென்று புதுப்படம் பார்த்தோமா என்றவாறு நமது தீபாவளிகள் நடந்து முடியும். இது கொரோனா காலம். பண்டங்களைப் பகிர முடியாது, தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாது. இதற்கு மேல், வெடி போட வேறு, டைம் ஸ்லாட் கொடுக்கிறார்கள்.
நல்லவேளையாக, புதுப்படங்களை ‘ஓடிடி’யில் வெளியிடும் கலாச்சாரம் வந்துவிட்டது. இனி தீபாவளிக்குப் புதுப்படத்தை ‘ஓடிடி’யில் பார்த்துக்கொள்வது என்று கலாச்சாரத்தை மாற்றிக்கொள்ளலாம். இது கொரோனாவிற்குத் தலை தீபாவளி என்பதால், பெரிய தலைகளின் படங்கள் ‘ஓடிடி’யில் வரவில்லை. அடுத்தடுத்த தீபாவளிக்கு வரும் என்று நம்பலாம். இந்தத் தீபாவளிக்கு ஜெண்ட்ஸ் சூப்பர்ஸ்டார்களின் படம் வரவில்லை என்றாலும் லேடி சூப்பர்ஸ்டாரின் படம் வெளிவந்து தீபாவளியின் பெருமையைக் கட்டிக் காப்பாற்றியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி – என்.ஜே. சரவணன் இருவரின் இயக்கத்தில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி நடிப்பில் இந்தத் தீபாவளிக்கு ‘டிஸ்னி ஹாட்ஸ்டாரி’ல் வெளிவந்துள்ள படம் – மூக்குத்தி அம்மன். எல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு, ஆர்.ஜே. பாலாஜி கதாநாயகனாக நடித்திருக்கும் படம். அவருடைய நண்பர் சரவணனுடன் இணைந்து இதில் முதல் முதலாக இயக்கியும் இருக்கிறார். முதல்படத்தில் தற்கால அரசியலை நையாண்டி செய்திருந்தவர், இதில் தற்கால ஆன்மிக வியாபாரத்தை, மத அரசியலை வைத்துச் செய்திருக்கிறார்.
அம்மா ஊர்வசி மற்றும் மூன்று சகோதரிகளுடன் நாகர்கோவிலில் வசித்து வரும் பாலாஜி, உள்ளூர் சேனலில் செய்தி ரிப்போர்ட்டராகப் பணிபுரிகிறார். அப்பகுதியில் பெரும் ஆன்மீகச் சக்தியாகத் திகழும் பகவதி பாபா என்கிற ப்ராடு சாமியார், அங்கிருக்கும் பதினோராயிரம் ஏக்கர் நிலப்பரப்பைத் தனது ஆசிரமத்திற்காக அபகரிக்கத் திட்டமிடுவதை அறிந்து, அதைக் குறித்துச் செய்திகள் வெளியிடுகிறார். கூடவே, குடும்பப் பிரச்சினையும் சேர, அவருடைய குலத்தெய்வமான மூக்குத்தி அம்மனிடம் முறையிடுகிறார். மூக்குத்தி அம்மனாக அவருக்குக் காட்சியளிக்கும் நயன்தாரா எப்படி அவருடைய குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து, முடிவில் ப்ராடு சாமியாரான அஜய் கோஷின் திட்டங்களை முறியடிக்கிறார் என்பதே மிச்சக் கதை.
தீபாவளிக்குக் குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படம். ஒரு குடும்பக் கதையில் எப்படித் தற்போது மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கும் நயன்தாராவை அம்மனாக நடிக்க வைத்து, அதில் ட்ரண்டில் இருக்கும் ஆன்மீக, அரசியல் விஷயங்களை உள்ளே நுழைத்து கதை செய்திருக்கிறார் என்று பார்க்கும் போது ஆர்.ஜே.பாலாஜியின் புத்திசாலித்தனம் தெரிகிறது. அவருக்கு ஏற்ற கதாபாத்திரத்தை உருவாக்கி நடித்திருக்கிறார். ஒல்லியான தேகம், கண்ணாடி என அந்தக் காலப் பாக்யராஜ் கண்முன் வந்து போகிறார். அதிலும் அந்த ‘அட உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்’ பாடல் செமப் பொருத்தம். அந்தப் பாடலை வைத்து இறுதியில் அனிருத்தை வாரியிருப்பது எல்லாம் சரவெடி ரகம். கொரோனா வராமல் இருந்திருந்தால் தியேட்டர் குலுங்கியிருக்கும்.
டைட்டில் கதாபாத்திரம் என்றாலும் நயன்தாரா கெஸ்ட் ரோல் போலத் தான் வந்து போகிறார். அவரது நடிப்பிற்கான ‘ஸ்கோப்’ பெரிதாக இல்லையெனும்படியாக அவரது காட்சிகள் வந்து செல்கின்றன. பட்டுப்புடவையில் அம்மனாகப் பாந்தமாகக் காட்சியளிக்கிறார். மூக்குத்தி அம்மன் புடவைகள் எனக் கூடிய விரைவில் அவருடைய படத்துடன் கூடிய புடவைகள் விற்பனையாகும்.
உண்மையான நாயகி என்று ஊர்வசியைச் சொல்லலாம். கணவனைப் பிரிந்து தவிப்பது, தனியாளாகப் பிள்ளைகளை வளர்ப்பது, பிள்ளைகளிடம் திட்டு வாங்கிக்கொண்டு அழுவது, வில்லன் கூட்டத்தில் ஒளிந்து சதி திட்டம் தீட்டுவது என நகைச்சுவை, செண்டிமெண்ட் என நவரச நடிப்பைக் காட்டியிருக்கிறார் ஊர்வசி. இந்தத் தீபாவளிக்கு வெளியான இரண்டு படங்களில் தரமான நடிப்பை வழங்கி டபுள் தீபாவளி கொண்டாடியிருக்கிறார் இந்த நடிப்பு ராட்சசி.
ஜக்கி, நித்தி, ராம்தேவ் என நிகழ்கால நபர்களுடன் இணைத்துப் பார்த்துக் கொள்ளும்படியான கதாபாத்திரத்தில், பகவதி பாபாவாக நடித்திருக்கும் அஜய் கோஷ் தனது தனித்தன்மையான உடல்மொழியால் வில்லத்தனம், கோமாளித்தனம் இரண்டையும் சரியான விகிதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். இரண்டு கைகளையும் அபிநயம் பிடித்தபடி, இடுப்பை ஆட்டியபடி அவர் நடக்கும் நடையைப் பார்க்கும்போது, விசாரணை படத்தில் மிரட்டிய போலீஸ்காரரா இவர் என்று ஆச்சரியம் மேலிடுகிறது. இவரது நடிப்பின் அட்டகாசம் தெரிகிறது.
படத்தின் இறுதியில் பகவதி பாபாவை நோக்கி பாலாஜி எழுப்பும் கேள்விகளும், நயன்தாரா எழுப்பும் கேள்விகளும் முக்கியமானவை. போலி சாமியார்கள் பின்னால் திரிந்து வாழ்க்கையைத் தொலைக்கும் அப்பாவி மக்கள் சிலருக்கேனும். இப்படம் பார்த்துத் தங்கள் முட்டாள்தனம் புரிந்து, உண்மை தெளிந்தால் அது நன்மையே. முழுக்கக் கடவுளே இல்லை என்ற பிரச்சாரத்திற்குள் நுழையாமல், கடவுளே வந்து கடவுள் பெயரைச் சொல்லி தொழில் நடத்தும் கெட்ட சாமியாரை மட்டும் அடித்திருப்பதால் பாலாஜி தப்பிவிட்டார். குலத்தெய்வத்தை மறந்து புதுப் புதுச் சாமிகளை, சாமியார்களைத் தேடி செல்லும் மக்களின் தற்போதைய நடத்தையை நுணுக்கமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். டீசரில் கிறிஸ்தவ ஆன்மிக மோசடியைக் காட்டும்படியாக மனோபாலா நடித்த ஒரு காட்சியை வெளியிட்டு இருந்தார்கள். படத்தில் அது இல்லை. ஏனென்ற காரணம் தெரியவில்லை. இந்து சாமியார்களின் மோசடியை மட்டும் காட்டியிருக்கிறார்கள் என்று சிலர் சண்டைக்கு வரலாம். அவர்கள் மோசடியை ஆதரித்துப் பேசாத வரை நல்லது.
இதுவரை பல அம்மன் திரைப்படங்கள் வந்துள்ளன. அந்தந்தக் கால நடைமுறைகள், நம்பிக்கைகளை முன்வைத்து அப்படங்களின் கதைகள் அமைந்திருந்தன. அத்தகையப் பழைய அம்மன் படங்களின் டெம்ப்ளேடில் இன்றைய நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாகியுள்ள திரைப்படம் இது. தனது இன்ஸ்பிரேஷனுக்குக் காரணமான ஷங்கர், ராஜ்குமார் ஹிரானி மற்றும் பல படங்களுக்கு டைட்டில் கார்ட்டில் நன்றி தெரிவித்திருக்கும் பாலாஜி, பாரபட்சம் பார்க்காமல் இப்படத்தில் தைரியமாக வைத்திருக்கும் வசனங்களுக்காகவும், சொல்லியிருக்கும் கருத்திற்காகவும் நமது நன்றிகளுக்கு உரித்தாகிறார். அந்த லொட லொட பேச்சையும், வாய்ஸ் டெசிபல்லையும் கொஞ்சம் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மூக்குத்தி அம்மன் – சீர்திருத்த அம்மன்.
- சரவணகுமரன்.