\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

விடுமுறைக் காலம் – 2020

Filed in தலையங்கம் by on December 7, 2020 0 Comments

நன்றி நவிலல் நாளில் கடும் துக்கத்தினூடே பலருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம். இந்தப் போரில் எண்ணற்ற இராணுவ, விமான, கப்பற்படை வீரர்களை இழந்துள்ளோம்.  அவர்களுக்கு நாம் தெரிவிக்கும் தாழ்மையான நன்றி ஆழ்ந்த துக்கத்தைக் கொண்டது. இந்த நவம்பர் 22, 1945 வியாழக் கிழமையை, தேசிய நன்றி தெரிவிக்கும் தினமாக அறிவிக்கிறேன். அந்த நாளில், நம் வீடுகளிலும், நம் வழிபாட்டுத் தலங்களிலும், தனித்தனியாகவும், குழுக்களாகவும், நம்மை ஆசிர்வதிக்கும் சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கு நம் தாழ்மையான நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம், அந்தச் சமயத்தில் குடியுரிமையின் உயர்ந்த கொள்கைகளுக்கு நம்மை அர்ப்பணிப்போம்.இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற 1945 ஆம் ஆண்டு, அதிகாரப் பூர்வமாக நன்றி நவிலல் தினத்தை அறிவித்த ஹாரி ட்ருமன் எழுதிய வார்த்தைகள் இவை.

கடந்த எழுபத்தியைந்து ஆண்டுகளாக, குடும்பத்துடன் ஒன்று கூடிவிசேஷ உடைகள் அணிந்து, வறுபட்ட வான்கோழியும், சுவையான உயர் ரக திராட்சை ரசங்களும் அடுக்கப்பட்டிருக்கும் மேஜையைச் சுற்றி அமர்ந்து  வாழ்க்கையை, அதில் கடந்து வந்த அனுபவங்களை ஞாபகங்களை மகிழ்வுறப் பேசித் திளைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் அமெரிக்கர்கள். 

ஆனால் 2020 ஆம் ஆண்டு  நன்றி நவிலல் விருந்து முற்றிலும் வித்தியாசமாக அமைந்தது. உணவருந்தும் மேஜை முன் அமர்ந்து தங்கள் குடும்பத்தை ஒன்றிணைத்து வளத்துடன் வைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்கள், இந்த முறை தங்களை உயிருடன் வைத்திருந்ததற்கு நன்றி செலுத்தினர். சென்ற ஆண்டு மேஜை முன் அமர்ந்திருந்த சிலரை இந்தாண்டு காணவில்லை. சிலரால் குடும்பத்துடன் இணைய, பயணிக்க முடியவில்லை. சிலர் இந்த உலகைவிட்டே பயணித்து விட்டிருந்தனர். 

வழக்கமாக  ‘பிளாக் ஃப்ரைடேயன்று தள்ளுபடியில் பொருட்களை வாங்க கடைகள் முன் குழுமி நிற்கும் சில குடும்பங்கள், இந்தாண்டு இலவச  உணவு வேண்டி அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் முன் நின்றனர். பாட்டி, தாத்தாக்களை நன்றி நவிலல் தினத்தன்று மட்டுமே பார்க்கும் பிள்ளைகள் கணினியிலும், கை பேசிகளிலும் தோன்றி வாழ்த்துகளைப் பெற்று, வெறுமையாகச்  சிரித்தனர். 

மொத்தத்தில் நன்றி நவிலல் 2020,  ஒற்றுமை, மகிழ்ச்சியின் கொண்டாட்டமாக இல்லாமல் துன்பங்களும், நிச்சயமற்ற தன்மையும் நிறைந்ததாய் இருந்தது. இதற்குக் காரணம் கொரோனா.

கொரோனாத் தொற்றுநோய் இந்த ஆண்டின் பெரும்பகுதியைப் புகை படியச் செய்து. ஒளியற்றதாக்கிவிட்டது. ஒன்பது மாதங்களில் ஏறத்தாழ 280,௦௦௦ உயிர்களைக் கொள்ளையடித்துக் கொண்டது.  குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை; விளையாடச் செல்லவில்லை; உறவுகள் சந்தித்துக் கொள்ளவில்லை: பலருக்கு வேலை போனது; சிலரது வீடுகள் பள்ளியாக, அலுவலகமாக, மருத்துவமனையாக, திரையரங்காக  மாறிப் போயின.

இரண்டாம் உலகப் போர், ரிசஷன் எனப்படும் பெரு மந்தம் ஏற்பட்ட காலங்கள் உட்பட அமெரிக்கர்கள் இன்று நாம் காணும் அளவுக்குக் கொடுமைகளைக் கையாண்டதில்லை. தனது கடைசி நிமிடங்களை வலியுடன் சுவாசித்துக் கொண்டிருக்கும் உறவினரின் பக்கமிருந்து தேற்றக் கூடிய சூழல் இன்றில்லை. சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் அல்லது மருத்துவம் பலனளிக்காமல் இறந்தவர்களை உரிய முறையில், மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்ய முடியாமல் தவித்தவர்கள் ஏராளம்.  இதயமற்ற ஆண்டின் கொடூரமான கோலங்கள் இவை. 

கண்ணுக்குத் தெரியாத தொற்றுநோய் சின்ன விக்கல்களை பெரிய சிக்கல்களாகவும், பெரிய சிக்கல்களை பூதாகாரகமாகவும் மாற்றிவிட்டது. உடல் நலத்தைப் பற்றிக் கவலைப்பட மனநலம் பாதிக்கப்படுகிறது; மனநலம் பாதிக்க உடல்நலம் சிதையும் மாய  நச்சுச் சூழல் உருவாகியுள்ளது. ஒவ்வொருவரும், பல பந்துகளை உயரே எறிந்து இரண்டு கைகளாலும் மாற்றி மாற்றிப் பிடித்து விளையாடும் குறளி வித்தைகள் செய்ய வேண்டியுள்ளது. 

இத்தனை ஆண்டுகள் லேண்ட் ஆஃப் லிபர்ட்டி‘ – ‘சுதந்திர நிலம்என்ற அடையாளம் கொண்டிருந்த அமெரிக்காவின் முன்னர் இன்றிருக்கும் பரஸ்பரமற்ற இரண்டு தனித்தனி வாய்ப்புகள் பாதுகாப்புஅல்லது சுதந்திரம்‘.

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்பதும், சமூக இடைவெளி குறித்து கவலைப்படாமல் இருப்பதும் தனிப்பட்ட சுதந்திரம் என நினைப்பவர்கள் மற்றவரின் பாதுகாப்பையும் குலைக்கிறார்கள். பாதுகாப்புக் கருதி வட்டத்துக்குள் இருப்பவர்கள் நோய்த் தொற்றலுக்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தினாலும் சமூகத் தனிமை மற்றும் பதற்றக் கோளாறு போன்ற மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்‘ (CDC) நடத்திய ஆய்வில், பருவமெய்திய அல்லது முதிர்ந்த நபர்களில்  நான்கில் ஒருவர் மனவுளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நோயைப் பற்றிய பயமும், கவலையும் அடுத்து என்ன நடக்கக்கூடும் என்ற தெளிவின்மையும் அனைவர் மனதிலும் வலுவான, தாக்கமிகு  உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன. சொந்த உடல்நலம், அன்புக்குரியவர்களின் ஆரோக்கியம், வேலை, நிதி நிலை, வேலையிழப்பின் தொடர் இன்னல்கள், வீட்டு வாடகை, கடன் போன்ற பொறுப்புகள் – இவை  குறித்த எதிர்கால அச்சங்கள் உளைச்சலை, உளச்சோர்வை உண்டாக்குகின்றன.

இவை ஒருபுறமிருக்க, தடுப்பூசி குறித்த எதிர்பார்ப்புகளும், தெளிவற்ற ஹேஷ்யங்களும், ஊகங்களும் புதுவித பதற்றத்தை பரவச் செய்கின்றன. ஃபைசர், மொடேர்ணா போன்ற நிறுவனங்கள் சற்றே நம்பிக்கையளித்து வருகின்றன. உணவு மருந்து நிர்வாகத் துறையின் அனுமதிக்காக காத்திருக்கும்  ஃபைசர் நிறுவனம் டிசம்பர் மாத இறுதிக்குள் நாற்பது மில்லியன் தடுப்பூசிகளைத் தயாரித்துவிட முடியும் எனக் கருதுகிறது. மூன்று அல்லது நான்கு வார இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகள் போட்டால் நோய்த் தொற்றின் தாக்கமிருக்காது. அப்படியென்றால் 20 மில்லியன் மக்களுக்கு இந்த வருட இறுதிக்குள் மருந்து கிடைக்க வழியுண்டு. ஆனால் மருத்துவர்கள், செவிலிகள், முன்களப் பணியாளர்களுக்கே முன்னுரிமை தரப்படுமெனத் தெரிகிறது.

இவற்றின் உற்பத்தி துரிதப்படுத்தப்பட்டு  மருத்துவ மனைகளை வந்தடைய மேலும் சில மாதங்களாகலாம். மேலும் இம்மருந்துகளைப் பதப்படுத்தி பாதுகாக்கும் முறைகள் பெரிய கேள்விக் குறிகளாகவேயுள்ளன. இவற்றில் சில மருந்துகள் –70 டிகிரி நிலைகளில் வைக்கப்பட வேண்டும். இதற்கான சேமிப்புக் கிடங்குகள் பெருமளவில் கட்டப்பட வேண்டும். கூடவே இந்நிறுவனங்கள் IPR (Intellectual Property Right) எனப்படும் அறிவுசார் சொத்துரிமைகளை விட்டுத் தருமா என்ற பெரும் குழப்பம் எழத் துவங்கியுள்ளது. இவை எல்லாவற்றையும் கடந்து, இம்மருந்துகள் சாமான்யனின் தேவைக்கு கிடைக்க அவர்களின் மருத்துவக் காப்பீடு இடங்கொடுக்குமா என்பது போன்ற பல கேள்விகள் உள்ளன. 

பொதுவாக எந்தவொரு புதிய மருந்தும் இரண்டாண்டு சோதனையின் பிறகே பொது மக்கள் பயனுக்குத் தரப்படும். அப்படியான முழு சோதனைக்கு உட்படுத்தப்படாமல் வெளிவரும் இந்தத் தடுப்பூசிகளை ஏற்றுக் கொள்வதிலும் மக்களிடம் தயக்கமும், சுணக்கமும் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க அரசு ஏற்கனவே பேசி வரும் இரண்டாவது பொருளாதார ஊக்கத் தொகையினை (Second Stimulus) தடுப்பூசியுடன் இணைப்பது பற்றி ஆலோசித்து வருகின்றனர். அதாவது தடுப்பூசி பெறுபவர்களுக்கே பொருளாதார ஊக்கத் தொகை ($12௦௦) எனும் திட்டமும் வரக்கூடும்.  

அமெரிக்க மாநிலங்கள் பலவற்றிலும் பொதுவாகவே அக்டோபர் / நவம்பர் மாதங்களில் குளிர்கால உபாதைகள் வருவதுண்டு. கொரோனா தொற்றும் இந்தக் காலகட்டத்தில் வீரியமெடுத்து வருகிறது. மத்திய நோய்த் தடுப்பு நிர்வாகம், இதே நிலை தொடர்ந்தால் டிசம்பர் இறுதிக்குள், அமெரிக்காவில்  கொரோனாவால் இறந்தவர் எண்ணிக்கை 321,௦௦௦  என்று உயருமென மிகவும் அபாயகரமான கணிப்பை வெளியிட்டுள்ளது.  கூடுதல் கவனமும் பாதுகாப்பும் இந்த நேரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளி காப்பது; முகக்கவசம் அணிவது, விடுமுறைக் காலப்  பயணங்களைத் தவிர்ப்பது போன்றவற்றை ஒவ்வொரு தனி மனிதரும் அலட்சியமின்றிக் கடைபிடிப்பது மிக மிக  அத்தியாவசியமாகிறது.

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad