\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சந்தித்த போராட்டம்

Filed in கதை, வார வெளியீடு by on December 24, 2020 0 Comments

சூரியன் வழக்கம்போலத்தான் விடிந்தது, அவளை பொறுத்தவரை எல்லாமே வழக்கமாகத்தான் நடந்தது. காலையில் மகன் அருணுடன் சத்தமிட்டது, 

“பொறுப்பில்லாமல் தூங்கி கொண்டிருக்கிறான், கல்லூரியில் படிக்கும் இளைஞன் இப்படி எட்டு மணி வரைக்கும் தூங்கினால் எப்படி?”

அவனைத் தட்டி எழுப்பியதற்குத் தான் அப்படி சண்டையிட்டான். 

“உனக்கு நேரமாச்சுன்னா கிளம்ப வேண்டியதுதானே, என்னை ஏன் எழுப்பி சிரமப்படுத்தறே?”

எகிறினான். அவனுடன் கிளம்பும் அவசரத்தில் மல்லு கட்ட முடியவில்லை, மெல்ல பின் வாங்கினாள். 

“வேண்டாம், இவனோடு எதற்கு வம்பு” 

ஆனால் அவனோடு மட்டுமே முடிந்து விடவில்லை வம்பு. 

“ஏழு மணிக்கெல்லாம் நான் எழுந்து என்ன பிரயோசனம், இது வரைக்கும் காப்பி என் பெட்டுக்கு வரலை” 

மகள் தன் அறையில் இருந்து சத்தமிட்டாள். இவளுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை. வயது பதினைந்து ஆகிறது, பத்தாவது மெட்ரிக் படிக்கிறாள். சமையலறைக்கு எழுந்து வந்து காப்பியை எடுத்துக்கொள்ள முடியவில்லை அம்மாவை வேலைக்காரியாக நினைக்கிறார்கள்.

கணவனை நினைத்து பார்த்தாள். 

“அவருக்கு வேலை சென்னைக்கு மாறிய பின்னால், தான் ஒருத்தியே இவர்களைக் கவனித்து கவனித்துப் பணி விடை புரிவதால் சீக்கிரம் களைத்து போகிறோம். இவர்களாவது அம்மாவின் களைப்பைப் புரிந்து கொஞ்சம் ஒத்துழைக்கலாம். ம்..ம்… அதெல்லாம் சொல்லி தெரிய வேண்டுமாக்கும்”

“அதற்காக அவரை இங்கேயே வரச் சொல்ல முடியுமா? இல்லை நாம்தான் சென்னைக்கு மாற்றிக்கொள்ள முடியுமா? இருவருமே வேலை செய்வது தனியார் துறையில். அவரவர்கள் பதினைந்து வருடங்களுக்கு மேல் சர்வீஸ் போட்டு விட்டோம். இனி வேறு வேலை தேடி சென்னைக்கு நானோ, இல்லை கோயமுத்தூருக்கு அவரோ வருவதென்றால் எவ்வளவு சிரமம்”

எப்படியோ காலை டிபனை அவசரம் அவசரமாக வாயில் போட்டுக்கொண்டு, அங்கிருந்து பஸ் ஸ்டாப்பிங் வரை ஒரு அவசர நடை, 

“அப்பாடி 41A  வந்துடுச்சா?” 

சந்தேகம் வந்தாலும், அதே பஸ்ஸில் தன்னுடன் வரும் கல்பனா நின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன் 

“அப்பாடி வரவில்லை…” 

என்று மனசுக்குள் நிம்மதியும் வந்தது.  

வரும்போதே கல்பனா புன்னகைத்தாள். 

“நாந்தான் லேட்டுன்னு நினைச்சேன், எனக்கு மேல நீங்க லேட்டா வர்றீங்க?” 

அவளின் ஆச்சர்யமான கேள்வியை கேட்டவுடன் மனசுக்குள் ஒரு பக்கம் ‘பக்’ என்றது.

“ஐயோ இவள் லேட்டா? அப்ப 41A போயிடுச்சா?” 

“தெரியலை?” 

“உங்களை காணாதால அந்த பஸ் போயிடுச்சுன்னு நினைச்சேன்”

பத்து நிமிடங்கள் கழிந்தும் பஸ் வரவில்லை. 

“இனி வராது…” 

“…..”

“ஒண்ணு செய்வோம் அடுத்து எந்த பஸ் வந்தாலும் ஏறிடுவோம், சூலூர் பிரிவுல இறங்கிக்கலாம், அங்கிருந்து ஏதோ ஒரு ஆட்டோவை பிடிச்சு போயிடலாம்” 

திட்டமிட்டுக் காத்திருந்தார்கள். 

“எப்பிடியும் ஒரு மணி நேரம் பர்மிஷன் போட வேண்டியதிருக்கும்”

மனதில் கவலை வந்து உட்கார்ந்தது. 

“இந்த மாதத்தில் இது நாலாவது பர்மிஷன், அநேகமாக அரை நாள் சம்பளம் கட்டாகும். வாங்கும் சம்பளம் பத்தும் பத்தாமல் இருக்கும், இதில் இப்படி துண்டு விழுந்தால் என்ன செய்வது? அது போக இதோ ஆட்டோ செலவு வேறு”

கம்பெனி அலுவலகத்தின் காம்பவுண்ட் கேட்டருகே ஆட்டோவை நிறுத்தி இறங்கியவள் கல்பனாவிடம் கையில் இருந்த பர்ஸை திறந்து ரூபாய் ஐம்பதை எடுத்து கொடுத்தாள். கல்பனா இருபது ரூபாயை திருப்பி கொடுத்தாள். 

“நான் மிச்சம் போட்டு கொடுத்துடறேன்” 

இவளுக்கு மனசுக்குள் மிச்சம் வந்த இருபது ரூபாயை பார்த்தவுடன் ஒரு சந்தோஷம் வந்தது. 

“அப்பாடி போவதற்கு இந்த பணம் உதவும்”

அலுவலக வாசலில் ஒருவரும் தென்படவில்லை. உள்ளேயும் ஆட்கள் ஒருவரும் இருப்பதாக தெரியவில்லை. 

“என்ன ஆச்சு? இந் நேரம் அலுவலகம் பரபரப்பாய் இருக்குமே?”

புரியாமல் உள்ளே நுழையப் போகும்போது உள்ளிருந்து அலுவலக உதவியாளன் பாலன் வெளியே வந்தான்.

“வசந்தியம்மா உங்களுக்கு லீவு சொல்லலையா?”

“லீவா?” 

வியப்பாய் கேட்டாள். 

“ஆமா எல்லாருக்கும் லீவு சொல்லிடறேன்னு மும்தாஜ் மேடம் சொன்னாங்களே”

“லீவா? எதுக்கு லீவு? என்னத்துக்கு லீவு?”

“கொரோனா வைரஸ் பரவறதுனால எல்லாத்தையும் அடைக்க சொல்லிட்டாங்க. நேத்து இராத்திரியே ஹெட் ஆபிசில இருந்து போன் வந்திருச்சு, மேனேஜர் முதல்ல மும்தாஜ் மேடத்துக்கு போன் போட்டு சொல்லும்போது அவங்க நான் எல்லார் கிட்டேயும் சொல்லிடறேன்னு சொன்னாங்க. அதனால மானேஜர் எனக்கு போன் பண்ணி ஆபிசை நல்லபடியா பூட்டி கொண்டு வந்துடுன்னு சொன்னாரு. இதோ முடிஞ்சுது. வெளியில வாட்ச்மேன் கிட்ட சொல்லிட்டு சாவிய கொண்டு போயிட்டிருக்கேன்”

“மறுபடி எப்ப ஆபிஸ் திறக்கும்?” 

“…”

இவளின் கேள்வி அவனை அடையும்போது அவன் கேட்டில் செக்யூரிட்டியின் அருகில் இருந்தான். அங்கிருந்தே சத்தமிட்டான். 

“தெரியலை மேடம், மறுபடி ஹெட் ஆபிசில இருந்து போன் வந்த பின்னாடி வேலைக்கு வந்தா போதும்”

இவள் திகைப்புடன் நின்று கொண்டிருந்தாள். 

“காலையில் இருந்து எத்தனை அலைச்சல், மும்தாஜ் ஒரு வார்த்தை போன் செய்து சொல்லி இருந்தால் இவ்வளவு செலவு செய்து வந்திருக்க வேண்டியதில்லையே?” 

மனதுக்குள் ஒரு பயம் கலந்த வெறுமை வந்து உட்கார்ந்து கொண்டது. 

“இந்த விடுமுறை சம்பளத்துடனா? இல்லையா?”

இவள் வீடு வந்த சேர்ந்த பொழுதே மணி மூன்றாகி விட்டது. திரும்பி வர பஸ் உடனே கிடைக்கவில்லை. பனிரெண்டு மணிக்குள் எல்லா பஸ்ஸுகளும் அந்தந்த இடங்களில் போய் பதுங்கி விட்டன. காத்திருந்து காத்திருந்து கல்பனாவிற்கு போன் செய்தாள். அவள், 

“மதியம் வரை வேலையை முடித்து போக சொல்லி விட்டார்கள். எனக்காக இரண்டு மணி நேரம் காத்திரு நான் வந்து விடுகிறேன்” என்றாள்.

தனியாக ஆட்டோவுக்கு அறுபது ரூபாய் செலவு செய்ய மனசில்லாமல் அலுவலகத்தின் முன்புறம் இருந்த ஒரு திண்டில் உட்கார்ந்து கொண்டாள். வாழ்க்கையை பற்றிய பயமும், ஒரு வெறுப்பும் அவள் மனதிற்குள் வந்து உட்கார்ந்து கொண்டன. 

“இப்படி இழுத்து பிடித்து செலவு செய்து ஒரு வேலை செய்தாலும் அது இப்படி ஏமாற்றமாக போய் விடுகிறது, இல்லை பிரயோசனமில்லாமல் போய் விடுகிறது”

கல்பனா கொடுத்த இருபது ரூபாயுடன் பத்தை சேர்த்து ஆட்டோவில் மெயின் ரோட்டுக்கு வந்தனர். இனி அங்கிருந்து வீட்டுக்கு வர டவுன் பஸ்ஸுக்காக காத்திருக்க வேண்டும். காத்திருந்தார்கள் இவர்களுடன் இன்னும் பல பேர் அடுத்து என்ன செய்வது என்ற கவலையில்.

மதியம் சாப்பாட்டை நேரம் கழித்துச் சாப்பிட்டதால் தலை வலித்தது. அப்படியே கட்டிலில் படுத்து கொண்டாள். மகள் ஸ்கூலுக்கே போகவில்லையாம், அவளுக்கு நேற்றே சொல்லி விட்டார்களாம். 

“ஏண்டி அதை என்கிட்டே சொல்லலை” 

இவள் கேட்டதற்கு, 

“அவங்க கன்பார்மா சொல்லலை, அதான் நான் உங்ககிட்ட சொல்லலை” 

ஒரே வார்த்தையில் முடித்து விட்டாள். 

“நேற்றே இவள் சொல்லியிருந்தால் தான் காலையில் இவளுக்கு தேவையானதை தயாரிப்பதற்கு அவ்வளவு நேரம் ஒதுக்கி இருக்க வேண்டியதில்லை, அதனால் நாம் போற பஸ் கிடைச்சிருக்கும், வெட்டியாய் அறுபது ரூபாய் தண்டம் அழுதிருக்க வேண்டியதிருக்காது” 

இப்படி நினைத்தாலும் அவளிடம் சொல்ல முடியாது. வீண் சண்டைதான் வரும். அயர்ச்சியாய் கண்ணை மூடினாள்.

அருண் வீடு வந்த பொழுது பொழுதாகி இருந்தது. 

“உனக்குக் காலேஜ் இருந்துச்சா?” 

“இல்லை மதியத்தோட விட்டுட்டாங்க” 

“அப்புறம் ஏன் இவ்வளவு நேரம் கழிச்சு வந்திருக்கே?” 

இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் அவனுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது. 

“என்னம்மா புரிஞ்சுக்காம பேசறே? பிரண்ட்சுக எல்லாம் கொஞ்ச நேரம் பேசிகிட்டிருந்தோம்”

கொஞ்ச நேரம் என்பது எவ்வளவு என்று இவனிடம் கேட்டால் வீன் சண்டைதான் வரும். 

“சரி காப்பி போடலாம்” 

சமையலறைக்குள் நுழைந்தாள். மேசையின் மேல் இருந்த அவளது செல்போனில் அழைப்பு. எடுத்தவள் மாதவன் பெயர் பார்த்ததும் 

“சே… இவர்கிட்டே அங்க என்ன நிலைமை அப்படீன்னு கேட்காம விட்டுட்டோமே” 

மனசுக்குள் குற்ற உணர்ச்சி பெருக எடுத்து காதில் வைத்து 

“சொல்லுங்க…” என்றாள்.

“இங்க எனக்கு இன்னையில இருந்து லீவு சொல்லிட்டாங்க, ஆனா அங்க வர்றதுக்கு பஸ் எதுவும் ஓடலை, என்ன பண்ணறதுன்னு தெரியலை. வருத்தமாய் சொன்னார். எனக்கும் இங்க லீவு சொல்லிட்டாங்க. ஆனா இதுக்கு சம்பளம் கொடுப்பாங்கலான்னு தெரியலை” 

மெதுவாக சொன்னாள்.

“எனக்கும் இங்க அதே நிலைமைதான். எதுக்கும் இந்த மாசம் கொஞ்சம் இறுக்கி பிடிச்சு செலவு பண்ணு” 

அவர் சொன்னதை கேட்டதும் இவளுக்கு சிரிப்பு வந்தது. ‘ஏற்கனவே இவள் இறுக்கி இறுக்கி செலவு செய்தாலும் அது இழுத்து இழுத்துத்தான் போய்க்கொண்டிருக்கிறது.’ நினைத்தாலும் சொல்லவில்லை. 

“சரி பாத்து பத்திரமா இருங்க. பஸ்ஸுங்க எப்ப ஓடுதோ அது வரைக்கும் தேவையில்லாம வெளியே எங்கயும் போயி மாட்டிக்காதீங்க” 

“சரீம்மா…” 

“யாரும்மா…? அப்பாவா…? இப்படி கொடு” 

அருண் போனை வாங்கி, 

“அப்பா அருண் பேசறேன், வெளியே எங்கேயும் போகாதே, எல்லா இடத்துலயும் கொரானோ பரவுதாம், சமைக்க முடிஞ்சா சமைச்சுக்கோ, வெளியில சாப்பிடறதா இருந்தா ஒரே இடத்துல நம்பிக்கையான இடத்துல சாப்பிடு. நான் உனக்கு சென்னையில இருந்து இங்க வர்றதுக்கு பிரண்ட்சுக வீட்டுல இருந்து யாராவது வர்றதா இருந்தா கேட்டு ஏற்பாடு பண்ணறேன். சரி வச்சிடட்டுமா?”

போனை வைத்தான். இவள் ஆச்சர்யமாக பார்த்தாள். 

“அருணா இது? வீட்டில் எது நடந்தாலும் தனக்கென்ன என்று போவான், இன்று அப்பாவுடன் அவன் பேசுவதை பார்த்தவளுக்கு ஆச்சர்யம். அவனை வியப்புடன் பார்த்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.  இரவு என்ன சமைப்பது என்ற போராட்டம் மனதுக்குள் நுழைந்தது.

காலை வழக்கம் போல் வீட்டு கதவு தட்டும் பால்காரர் வரவில்லை. பத்திரிக்கையும் வரவில்லை. காலை நிதானமாகத்தான் எழுந்தாள். 

“நேரத்தில் எழுந்து என்ன செய்ய போகிறோம். இருவருக்கும் விடுமுறைதான்” 

நினைத்து கொண்டிருக்கும் போது சமையலறையில் சத்தம். படுத்தவாறே சமையலறையை தலையை தூக்கி பார்த்தாள். மகள் கோகிலா ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

கோகிலா என்ன செய்யறே? படுத்தவாறு கேட்டாள். எந்திருச்சிட்டியா? இரு இரு காப்பி போட்டு எடுத்துட்டு வாறேன். ஐந்து நிமிடத்தில் ஆவி பறக்க கருப்பு காப்பியை மூன்று டம்ளர்களாக தட்டில் வைத்து கொண்டு வந்தாள். வரும் போதே 

“அருண் காப்பி கொண்டு வந்திருக்கேன், அம்மாகிட்ட வந்துடு”

சப்தமிட்டு கொண்டே கட்டில் அருகில் இருந்த டீப்பாயின் மேல் தட்டை வைத்தாள்.

கண் விழித்த இவளுக்கு ஆச்சர்யம், ‘நம் மகளா? கத்து கத்து என்று கத்தினாலும் இருந்த இடத்துக்கே காப்பி பலகாரம் வேண்டும் என்று அடம் பிடிப்பவள் இன்று அக்கறையாய் கொண்டு வருகிறாள்’. 

அருண் காப்பியை எடுக்க வரவும், 

“நான் போய் வாயை கழுவிட்டு வந்துடறேன்” 

எழுந்து குளியலறையை நோக்கி சென்றாள்.

அன்றைய பொழுது மட்டுமல்ல அடுத்து வந்த பத்து நாட்களும் தொலைக்காட்சிகளிலும், வானொலி நிகழ்ச்சிகளிலும் இந்த கொரானோவை பற்றிய தகவல்களாகவே போயின.    

வளர்ந்து விட்ட மூன்று பேர் எண்ணூறு சதுர அடி வீட்டுக்குள் எத்தனை தடவை வளைய வளைய வருவது. சலித்துத்தான் போய் விட்டது. அவ்வப்பொழுது கணவன் அவர்களை கூப்பிட்டு பேசுவான். இவர்கள் மூவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பேசி உற்சாகப்படுத்தினார்கள். 

“கவலைப்படாதே அப்பா, கொஞ்சம் பொறுத்துக்கோ” 

மகள் ஆறுதல் சொல்லுவாள்.

“என்னம்மா பண்ண சொல்றே? முடிஞ்ச வரைக்கும் சமைச்சுக்கறேன். பத்து நாளா எந்த வேலையும் செய்யாம ரூமுக்குள்ள உட்கார்ந்திருக்கிறது எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? நீங்களாவது மூணு பேரு இருக்கறீங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி கலந்துக்க முடியும். இங்க அப்படி இல்லை.”

“ஏம்ப்பா, பக்கத்துல உங்களை மாதிரி ரூம் எடுத்து தங்கறவங்க இருப்பாங்களே? இருக்கறாங்கம்மா, ஆனா அவங்க எல்லாமே ஒரு மாதிரி டிப்ரசன்ல இருக்காங்க, என்னைய மாதிரி குடும்பம் ஒரு பக்கம், இவங்க ஒரு பக்கம், இதுல மறுபடி எப்ப வேலைக்கு கூப்பிடுவாங்கன்னு கவலை, இல்லை நம்மளை வேலைக்கு வெச்சுக்குவானாங்கறதும் ஒரு கவலை. இப்ப பாரு எனக்கு ஐம்பது வயசை தொட்டுடுச்சு, இனி ஒவ்வொரு வருசமும் சம்பளமும் நமக்கு முக்கியம். ஏன்னா நமக்கு சேமிப்புன்னா அது ஒண்ணுதான். நாளைக்கு நான் ரிட்டையர்டு ஆகும்போது எவ்வளவு கொடுப்பான்? தனியார் கம்பெனிதானே. இப்படி நிறைய கவலைகளோட இருக்காங்க. கொஞ்சம் நேரம் சந்தோசமா பேசிகிட்டிருந்தாலும் அடுத்த நிமிசம் அவங்க கவலைகளை கொட்ட ஆரம்பிச்சிடுறாங்க. அதுவெல்லாம் அவங்க போன பின்னாடி மனசுக்குள்ள வந்து நம்மளை தூங்க விடாம பண்ணுதே”

அப்பாவின் புலம்பல்கள் அந்த பதினைந்து வயது பெண்ணுக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தது. இருந்தாலும் அப்பா மனசு சங்கடப்படக்கூடாதே, 

“எல்லாம் நல்லபடியா முடியுமப்பா கவலைப்படாதே” 

ஆறுதலாய் சொன்னாள். இந்த வார்த்தைகள் அப்பாவை மன அமைதி படுத்தலாம் என்ற எண்ணத்தில்.

மும்தாஜ் போன் செய்தாள். 

“சாரி வசந்தி உனக்கு ஆபிஸ் லீவுன்னு சொல்ல முடியலை.” 

இவளுக்கு அவள் மேல் கொண்ட கோபம் மறைந்து போயிருந்தது. 

“பரவாயில்லை மும்தாஜ், எல்லாருக்கும் சங்கடம்தான். ஆமா தேதி அஞ்சு ஆச்சே, போன மாசம் சம்பளம் போடுவாங்களா?”

“தெரியலை வசந்தி, அன்னைக்கு மானேஜர் போன் செஞ்சு சொன்ன பின்னால இவருக்கு மூச்சு திணறலா போயிடுச்சு, ஆஸ்பிடல் கூட்டிட்டு போனோம், ஆனா ஒரு ஹாஸ்பிடல்ல கூட இவரை சேர்த்துக்க மாட்டேனுட்டாங்க, கவர்ண்மெண்ட் ஹாஸ்பிடல்ல போய் கரோனா டெஸ்ட் பண்ணிட்டு வந்துடுங்கன்னு அனுப்பிச்சிட்டாங்க. அப்புறம் அவரை அங்க கூட்டிட்டு போனோம். இரண்டு நாள் அங்க தங்க வச்சு கரோனான்னு சொல்லிட்டாங்க, அதுக்கப்புறம் என்னையையும் குழந்தைகளையும் அங்கேயே தங்க வச்சு கரோனா டெஸ்ட் எடுத்து எங்க மூணு பேருக்கும் ஒன்ணுமில்லைன்னு கன்பார்ம் ஆன பின்னால வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாங்க. அவரை மட்டும் பத்து நாளா தங்க வச்சுட்டாங்க. அவரை அங்க தனியா விட்டுட்டு குழந்தைகளோட இங்க நான் தனியா…” 

சொல்லும்போதே அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்பதை இவளால் உணர முடிந்தது.

“சாரி மும்தாஜ், உன் கஷ்டமான நேரத்துல நாங்க உனக்கு ஆற்தலா நாலு வார்த்தை பேச முடியாம போயிட்டமே…”

“அதை ஏன் கேக்கறே? இங்க நானும் குழந்தைகளும் வீட்டுக்கு வந்தா அக்கம் பக்கத்து காரங்க எங்களை விரோதியா பாக்க ஆரம்பிச்சுட்டாங்க, யாருமே முகம் கொடுத்து பேச மாட்டேனுட்டாங்க. வீட்டுக்காரங்க கிட்டே போயி அவங்களை காலி பண்ண சொல்லுன்னு நச்சரிக்க ஆரம்பிச்சுட்டாங்க”

“ஐயையோ அப்புறம் வசந்தி ஆத்திரமாய் கேட்டாள்” 

“வீட்டுக்காரர் நல்ல மனுஷன், ‘இங்க பாருங்க, மனுசன்னா ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும். ஒவ்வொரு வியாதிக்கும் ஒருத்தரை ஒருத்தரை காலி பண்ன சொன்ன முதல்ல என்னைத்தான் வீட்டை காலி பண்ண சொல்லனும், அத்தனை பிரச்சினை என் உடம்புல இருக்கு’ அப்படீன்னு கிண்டலா சொல்லி அனுப்பிச்சிட்டாரு”

மும்தாஜ் பேசி முடித்து நேரம் ஓடியிருந்தாலும், அவள் சொல்லியிருந்த விஷயங்கள் மனதை கனக்கச் செய்தன. 

“இந்த சமூகம் ஏன் பாதிக்கப்பட்டவர்களை இப்படி ஒதுக்குகிறது. நன்றாய் இருப்பவனுக்கு திடீரென்று ஏதாவது வந்து விட்டால் அது அவன் குற்றமா? அதே நேரத்தில் அந்த சமூகத்தில் வீட்டுக்காரர் போன்ற நல்ல மனிதர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்”

வசந்தியின் கணவர் வந்து விட்டார், ஆனால் வீட்டுக்குள் வர முடியவில்லை. மாநகராட்சி அவரை பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று கூட்டிப் போய் விட்டார்கள். இது இவர்கள் குடும்பத்திற்கு மேலும் வருத்தத்தை கொடுத்தது. நல்ல வேளை கணவனுக்கு இந்த மாத சம்பளம் முழுவதும் வங்கி கணக்கில் போட்டு விட்டார்கள். இவளுக்கும் இந்த மாத ஊதியம் வந்து விட்டது. ஆனால் அடுத்த மாத ஊதியம் முழுவதும் வராது என்று சொல்லி விட்டார்கள். இந்த மாத ஊதியமே வர தேதி பத்தாகி விட்டது.

கணக்குப் போட்டுப் பார்த்தாள் சொந்த வீடென்றாலும் பாங்கில் கடான் வாங்கி கட்டியது. மாதம் பத்தாயிரம் அதற்கே கட்ட வேண்டியதிருந்தது. அரசு வங்கி கடன் கட்ட கால அவகாசம் கொடுப்பதாக பிரச்சாரம் செய்தாலும் இவள் மனசு ஒத்துக்கொள்ளவில்லை. கடன் கடன் தானே, அடுத்த மாசம் என்றாலும் இவர்கள் தானே கட்ட வேண்டும். அதனால் அருணிடம் சொல்லி ஆன் லைனில் கட்டி விடச் சொன்னாள்.

முதலில் அப்பாவின் ரூம் வாடகையை அவர்கள் அக்கவுண்டில் கட்டி விடச் சொன்னாள். அவர்களை போனில் அழைத்து அப்பாவின் வாடகையை அக்கவுண்டில் போட்டு விட்டதாக அருண் சொன்னான். அதற்கு அவர் 

“ரொம்ப நன்றி தம்பி, அரசாங்கம் வாடகை வாங்க கூடாது அப்படீன்னு சொல்லிடுச்சு, நாங்களும் அதைய நம்பித்தானே இருக்கறோம், வாடகை வருமா இல்லையான்னு நினைச்சுகிட்டு இருக்கறப்போ நீங்க கட்டிட்டீங்க”

அவளுக்கு மனசு அடித்துக்கொண்டது. 

“இந்த மாசம் முழுசாக ஊதியம் வந்து விட்டதால் கட்ட முடிந்தது. அடுத்த மாதம் பாதி சம்பளம் தான் வரும் என்கிறார்கள், அப்பொழுது என்ன செய்ய போகிறோம்?”

மளிகைச் செலவு மற்ற செலவுகள் பாதியாக குறைக்கப்பட்டது. இவளது ஊதியத்தின் பாதித் தொகையை அப்படியே மிச்சம் வைக்க பார்த்தாள். ஆனால் காய்கறி செலவு, பால் செலவு, மின் கட்டணம், இப்படி வரிசையாக அவளிடமிருந்த சேமிப்பை கரைத்து கொண்டுதான் இருந்தது.

அடுத்த மாதமும் பிறந்து நாட்கள் ஐந்துக்கு மேல் ஆகியிருந்தது. கணவனின் ஊதியம் நாற்பது சதவிகிதமே வந்திருந்தது. இவளுக்கு அதை விட குறைவாகவே வந்தது. சோதனையாக அருணுக்கும் கோகிலாவுக்கும் பள்ளி, கல்லூரி கட்டணம் கட்ட சொல்லி தகவல் வந்து விட்டது. சேமிப்பு என்று ஒன்றும் கையில் இல்லை. என்ன செய்வது?

வங்கியில் இவளது நகையை அடகு வைக்க கணவனுடன் நின்று கொண்டிருந்தாள். 

“ஏம்மா பி.எப்.பணந்தான் எடுத்துக்கலாமுன்னு சொல்லியிருக்காங்களே, உன்னுதோ என்னுதோ எடுத்துக்கலாமா?”

கேட்ட கணவனிடம், 

“அது ஒண்ணுதான் சேமிப்புன்னு. அதுக்கு கிடைக்கிற வட்டி டெபாசிட் பண்ணுனா கூட வராது, அப்படி இருக்கறப்போ அதை எடுத்துட்டா அப்புறம் நாளைக்கு கோகிலாவுக்கு என்ன செய்ய முடியும். நகையாவது கொஞ்சம் கொஞ்சமா மீட்டுக்க முடியும். அருணுக்கு அடுத்த வருசம் படிப்பு முடிஞ்சிட்டா அவன் சம்பாரிச்சு இதை மீட்டுக்க மாட்டானா?”

வசந்தியின் பேச்சுக்கு அவள் கணவன் எதுவும் சொல்லவில்லை, நகையை வைத்து பணத்தை வாங்கி முதலில் கோகிலாவுக்காக பள்ளியில் சென்று பணத்தை கட்டினார்கள். அடுத்து அருணின் கல்லூரிக்கு சென்று அந்த பருவத்துக்கான பணத்தை கட்டி விட்டு வீடு வந்தார்கள்.

ஆன்லைன் வகுப்புக்கள் இருவருக்கும் நடக்கும் என்ற அறிவிப்பு வந்து விட்டது. அது வேறு செலவுகளை இழுத்து விட்டது. அருணுக்கு நல்ல செல்போன் ஒன்று வாங்க பத்தாயிரத்துக்கு மேல் செலவானது. அடுத்து இருவருக்கும் ரீ சார்ஜ் செய்ய இருவருக்கும் சேர்த்து ஆயிரம் ரூபாய் ஆனது.

மாதங்கள் ஓடி கொண்டே இருந்தது. மாநகராட்சி தினமும் ஆட்டோவிலும் வேனிலும் வந்து ‘ஜாக்கிரதை ஜாக்கிரதை’ என்று அலறி விட்டு சென்றது. இவர்கள் தெருவிலேயே இரண்டு வீட்டில் கொரானோ நோயாளிகள் இருந்ததால் அந்த தெருவையே ஐந்து நாட்கள் அடைத்து வைத்தார்கள். இப்பொழுது நான்கு வளர்ந்த ஜீவன்கள் அந்த எண்ணூறு சதுர அடி வீட்டுக்குள் புழங்க வேண்டி இருந்தது. 

ஒவ்வொரு மாதமும் செலவுகளும் இழுத்துக் கொண்டே போய் கொண்டிருந்தது. மீண்டும் வேலைக்கு கூப்பிடுவார்களா? 

நோய் வந்து விடுமோ என்பதை பற்றிய கவலையும், பணி என்னவாகுமோ என்ற கவலையுடன் வருமானத்தை பற்றிய கவலையும் தொற்றிக்கொண்டது.

எப்படியோ அரசு கொஞ்சம் தளர்வுகளை அறிவித்தது. பேருந்துகளையும் இயங்க அனுமதி அளித்தது. இருவரின் அலுவலகத்திலிருந்தும் இவர்களை பணிக்கு வர சொல்லி செய்தி வந்து விட்டது. அப்பாடி… பெருமூச்சு இவர்களிடம் எழுந்தது.

வேலை என்று ஒன்று இருந்தால்தானே வருமானம் கிடைக்கும். வருமானம் என்று ஒன்று வந்தால்தானே குடும்ப செலவுகளை சரி கட்டமுடியும்.

கோகிலா, அருண், இவள் மூவரும் ஏகப்பட்ட அறிவுரைகளை சொல்லி தகப்பனை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இவளும் மறு நாள் காலையில் சீக்கிரமாகவே கிளம்பி விட்டாள்.

கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்து வேலைக்காக இதோ சென்று கொண்டிருக்கிறாள்… ஐந்து மாதங்களுக்கு முன்னால் இவளுக்கு கண் முன் தெரிந்த சிரமங்கள் அவள் கண்களுக்கு இப்பொழுது தெரியவில்லை. வாழ்க்கையை சந்திக்கவேண்டும் என்கிற ஆர்வமே அதில் தெரிந்தது.

-தாமோதரன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad