இந்திய சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அரசியலில் உள்ளிடல்
பல கால வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமுகமாகப் பெரும் தென்னிந்தியத் தமிழ் நடிகர் ரஜனிகாந்த் அரசியலில் இறுதியாக உள்ளிடவிருக்கிறார்.
இவர் சனவரி மாதம் புதியதொரு கட்சியை ஆரம்பிக்கவுள்ளார், என்று டிசம்பர் 2020 ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். இந்தியத் தென்மாநிலமான தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்காக இன்னும் சில மாதங்களில் வாக்களிக்கவிருக்கும் நிலையில், இப்போது நடக்காவிட்டால் எப்போதும் நடக்காது என்று அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு தற்பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் கட்சியால் ஆளப்பட்டு வருகிறது. இந்தக் கட்சி இந்திய தேசியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவுள்ளது. தமிழகச் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறலாம். ஆனால் இது வரை எதுவித உத்தியோக பூர்வ அறிவிப்புக்களும் வரவில்லை.
நடிகர் ரஜனிகாந்த் தாம் மக்கள் ஆதரவோடு வெளிப்படையான, ஊழலற்ற, அரசியல் ஐதீகத்திற்கு ஏற்ப தேர்தலில் பங்கு பெறுவதாகக் கூறியுள்ளார். தமிழ் நாட்டின் தலையெழுத்தை மாற்றும் காலம் வந்து விட்டது என்கிறாராம் இந்த நடிகர். திரைப் படங்களில் சராசரி மனிதரைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் இயல்பு வாழ்க்கையை கடந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் என்பது இவ்விடம் குறிப்பிடத்தகுந்தது.
ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்.1950 ஆம் ஆண்டு 12ம் தேதி டிசம்பர் பெங்களூர், தற்போதைய கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். தாய் மொழி மராத்தி. இவர் தந்தையார் ராமோஜி ராவ் கெய்க்வாட் ஒரு போலீஸ்காரர். ரஜனிகாந்தின் குடும்பம் பூர்விகமாக பூனே, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
பெங்களூர் பேரூந்து சேவையில் கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த், நாடகங்கள் நடித்து, திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்ற பின்னர் திரைப்படங்களில் காலூன்றிக் கொண்டார். இவரது நடிப்பைக் கண்டு தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சிகரம் கே. பாலச் சந்தர் அவர்கள். அவர் தான் ரஜனியை தமிழ் கற்றுக் கொள்ளுமாறு அறிவுரை தந்தவர்.
1975இல் தொடங்கி 45 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்திய நாட்டின் பெரும் விருதுகளான பத்ம பூஷன் விருதை 2000 ஆண்டிலும், பத்ம விபூஷன் விருதை 2016 லும் வழங்கி இந்திய அரசாங்கம் கெளரவித்துள்ளது. இவர் பாரியார் லதா சிறுவர்களுக்கான பள்ளி ஒன்றை நடத்தி வருவதுடன் அவர்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் செயல் இயக்குனராக நிர்வகித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உண்டு.
மூன்று வருடங்களுக்கு முன்பு தனது அரசியல் வருகை குறித்து பேசத் துவங்கிய ரஜினிகாந்த் அண்மையில், கட்சியைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருவதாகக் கருதப்படுகிறது.
தமிழ்த் திரைப்படவுலகில் உச்ச சம்பளம் வாங்கிய ரஜனிகாந்திற்கு திரைப்பட ஆதராவாளர் விசிறிகள் உலகத்தில் பல இடங்களிலும் உண்டு. அரசியலில் இந்திய பிரதமர் மோடியை ஆதரித்து வருகிறார். குறிப்பாக அண்மையில் இந்திய அரசு கொண்டு வந்த ஜம்மு காஷ்மீர், மற்றும் சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திட்ட மாற்றத்திற்கு இவர் ஆதரவளித்தது தமிழ்நாட்டு மக்கள் அறிந்த விடயம்.
அதே சமயம் தமிழ் நாட்டு அரசியலில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைமுறையைப் பற்றி கண்டித்தும் உள்ளார். தொற்று நோய்காலத்தில் மதுகடைகளைத் திறந்தது சார்ந்தது ஆகும்.
ரஜினி பாரதிய ஜனதா கட்சிக்குப் பாரபட்சம் தருகினும், தமிழ் நாட்டில் அந்த தேசியக் கட்சிக்குப் பெரிதாக ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டு உள்ளூர் அரசியலை ஏற்கனவே இரண்டு பாரிய மாநிலக் கட்சிகளான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் மாறிமாறி ஆண்டு வருகின்றன.
மேலும் ரஜனிகாந்திற்கு ஒரு காலத்தில் ஏட்டிக்குப் போட்டியாக நடித்த இன்னும் ஒரு பிரபல நடிகர் கமல் ஹாசன். அவரும் 2018ம் ஆண்டில் புதிய கட்சி ஒன்றை உருவாக்கி இரண்டாண்டுகளுக்கு முன்னர் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிடத் தகுந்த வாக்குகளை பெற்றார். ஆயினும் எந்தத் தேர்தலிலும் நேரடியாக வென்றுள்ளதாகத் தெரியவில்லை. கமல் ஹாசனும் தனது நடிப்புத் திறனைப் பாவித்து அரசியலில் உள்ளிட்டார் என்பதையும் இவ்விடம் குறிப்பிடலாம்.
நடிகராக திரைப்படங்களில் ஜொலித்து, தமிழ் நாட்டு அரசியலில் புகுந்து பல காலம் வெற்றிகரமாக ஆட்சி புரிந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன். அதன் பின்னர் செல்வி ஜெயலலிதா அவரது ஆட்சியைத் தொடர்ந்தார். இவர்களைத் தவிர விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்களும் தமிழ் நாட்டு அரசியலில் இயங்கி வருகின்றனர். ஆயினும் பெரும்பாலான தமிழ் நாட்டு வாக்காளர்களின் மனதைக் கைப்பற்றிய பெருமை இன்றும் ஒரு சிலருக்குத் தான் உண்டு.
எனவே சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் ஏற்கனவே நெருக்கடியான தமிழ் நாட்டு அரசியலில், அடுத்த கட்சியாக, தமது விசிறிகளை வைத்து எவ்வளவு தூரம் முன்னேறுவார் என்பதைக் காலம் தான் கணிக்கும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர் வாக்குகளையும் சேர்த்து இவர் வெல்ல முடியுமா என்பதும் தற்போதைய நிலையில் கேள்விக்குறிகளே.
– வேலிக்குருவி