விடைபெறும் 2020 ஆம் ஆண்டு
2020 ஆம் ஆண்டு முடிவடையப் போகிறது. முட்டி மோதி, தட்டுத் தடுமாறிக் கிட்டத்தட்ட அதனைக் கடந்து விட்டோம் நாம். ஆனால் நிறைய வடுக்கள், வலி, விரக்தி மற்றும் மனச்சோர்வு நம்மை ஆட்கொண்டுவிட்டன. இடையிடையே சின்னச் சின்னச் சந்தோஷங்கள். முந்தைய ஆண்டுகளை விட இந்தாண்டு குடும்பத்தினருடன் கூடுதல் நேரத்தைப் பகிர்ந்துகொண்டு, அவர்களை அதிகமாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது.
ஒவ்வொரு ஆண்டு முடியும் தறுவாயில் நடப்பாண்டின் நன்மைகள் – தீமைகள், ஆச்சரியங்கள் – ஏமாற்றங்கள் , ஆக்கங்கள் – இழப்புகள் மனதில் நிழலாடிப் போகும் . வரப்போகும் ஆண்டு நல்ல பலன்களை , அதிர்ஷ்டங்களை, சௌபாக்கியங்களைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை சேர்ந்த எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ளும். இந்தப் புத்தாண்டை ஒரு வித அச்சம், பதற்றம் கலந்த எச்சரிக்கையோடு அணுகவேண்டியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குத் தடுப்பூசி வந்துவிட்டது என்று உலகமே பெருமூச்சு விட்ட நிலையில் அது நிம்மதி பெருமூச்சல்ல ஆற்றாமை பெருமூச்சு எனும் வகையில் கொரோனா உருமாற்றமடைந்து வருகிறது. இந்தப் புதிய தொற்று, கோவிட்19 நுண்ணுயிரியை விட அதிவேகமாகப் பரவக்கூடியது எனும் தகவல், வரப்போகும் ஆண்டைப் பற்றி கூடுதல் பதட்டத்தை உண்டாக்கிவிட்டது.
2020 ஆம் ஆண்டைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் விளக்குமாறு பிரபல பத்திரிக்கையொன்று கேட்டுக் கொண்டதின்படி பலர் தங்களது கருத்தை எழுதியிருந்தனர். ‘சோர்வானது’ (Exhausting), ‘விசித்திரமானது’ (Surreal), ‘குழப்பம் நிறைந்தது’ (Chaotic), ‘இரக்கமற்றது’ (Relentless), ‘இழப்புகள்’ (Lost) எனும் ஒற்றைச் சொற்கள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்திருந்தன. இளவயதினர் பலரும் ‘துன்பங்களின் முடிவு’ (End of the tunnel) என்று நம்பிக்கையுடன் சொல்லியிருந்தார்கள். அந்த நம்பிக்கை வெல்லட்டும். ஒருவர் ‘என்னால் சுவாசிக்க முடியவில்லை’ (I can’t breathe) என்று சொல்லியிருந்தார். மிக நுட்பமான, ஆழமாகச் சிந்திக்கவேண்டிய சொற்றொடர் இது. இன / நிற பாகுபாடுகளுக்குப் பலியான ஜார்ஜ் ப்ளாய்ட் உயிருக்குத் தவித்த தறுவாயில், ஓலமிட்டுக் கதறிய சொற்கள் இவை. அவரின் அந்தத் தவிப்பை, அன்று செய்தியாக மட்டுமே படித்ததை, தற்போது முகக் கவசம் அணிந்துகொண்டு இயல்பாகச் சுவாசிக்க முடியாத ஒவ்வொருவரும் உணர்கிறோம்.
தொற்றுநோயின் நேரிடையான பாதிப்பைக் கடந்து இன்று பெரும்பான்மையானோர் அனுபவிக்கும் சோகங்கள் ஆழமானது. அன்றாட இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனதால் வேலையை, தொழிலை இழந்து அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ என்று தெரியாமல், நோயால் சாவதா அல்லது பசியால் சாவதா என்ற கேள்வியுடன் குழம்பி நிற்கும் குடும்பங்கள் ஏராளம்.
சமூகங்களில் சின்னச் சின்னச் சலனம் ஏற்பட்டால் கூட முதலில் பாதிக்கப்படுவது தொழிலாளர் வர்க்கம் தான். 2020 இல் இவர்கள் அடைந்திருக்கும் துன்பங்கள் விலகப் பல வருடங்கள் ஆகும். தினசரி வேலைக்குப் போனால் மட்டுமே ஊதியம்; அந்த ஊதியத்தை எதிர்பார்த்திருக்கும் குடும்பம் நிலைகுலைந்து விட்டது. அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டது இவர்களது வாழ்க்கை. உலகெங்கும் பலர் இப்படிப் பாதிக்கப்பட்டார்கள்.
வறுமைக் கோட்டுக்கு கீழிருக்கும் மக்கட்தொகை
உலகமயமாக்கல் என்ற பொருளாதாரச் சித்தாந்தம் முளைக்கத் துவங்கியபோது உலகம் முழுதிலும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்போர் எண்ணிக்கை மிக வேகமாகக் குறையத் துவங்கியது. காலப்போக்கில் இந்தச் சித்தாந்ததில் எழுந்த சிக்கல்கள் காரணமாக இது சற்றே மந்தமடைந்தாலும் கணிசமானோர் இந்தக் கோட்டுக்கு மறுபக்கம் செல்ல முடிந்தது. ஆனால் கொரொனா பெருந்தொற்று ஆறு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட அதிகமானோரை வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளி விட்டது. இந்தப் பெருந்தொற்று ஏறத்தாழ 115 மில்லியன் மக்களை ‘புதிய ஏழைகளாக’ உருவாக்கியிருப்பதாக உலக வங்கியின் ஆய்வுகள் சொல்கின்றன. இவர்களில் பெரும்பாலோனோர் போக்குவரத்து, கட்டுமானம், உற்பத்தி போன்ற துறைகளில் ஏற்பட்ட முடக்கம் காரணமாக வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபால், பூட்டான் போன்ற தெற்காசிய நாட்டு மக்கள் இதில் அடங்குவர். குறிப்பாக இந்தியாவில் இப்படி பாதிக்கப்பட்ட தொழிலாளர் பலர் குடும்பத்தோடு, பிள்ளைகளைச் சுமந்துகொண்டு நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடையாக பயணித்ததை மறந்துவிட முடியாது. வழியில் உடல் நலம் குன்றி, பசியால் வாடி, விபத்துகளில் சிக்கி உயிரழந்தோர் எண்ணற்றவர்கள்.
அதிவேகமடையும் பொருளாதாரச் சரிவு
கொரொனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட ‘சமூக விலகல்’, ‘தனிமைப்படுத்துதல்’, ‘முடக்கம்’ போன்ற விதிகள் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உலகளாவிய இந்தச் சுகாதார நெருக்கடி, பெரு மந்தநிலைக்கு வழிவகுத்துள்ளது. தனிநபர் வருமானம் சுருங்கி விட்ட நிலையில் அதிகரித்துவரும் உடல் நலக் காப்பீடு மற்றும் சுகாதாரச் செலவுகள் கோடிக்கணக்கானவர்களின் வாங்குத்திறனை (Purchase power) பறித்துவிடுவதன் பிரதிபலனாகப் பொருளாதாரச் சரிவு ஏற்படும் அபாயமுள்ளது.
மேலும் தொற்றின் அச்சம் காரணமாக இணையவழிக் கொள்முதல் (online purchase) அதிகரித்து வருவதால் சிறு தொழில் நிறுவனங்களும், சுயதொழில் முனைவோரும் அதிகளவில் தத்தளிக்கும் நிலை உண்டாகும். இதன் காரணமாக நாம் உணராமலே பெருநிறுவனங்களுக்கானப் போட்டி நலிவடைந்துவருகிறது. காலப்போக்கில் இப்பெரு நிறுவனங்கள் வர்த்தகத்துறையில் தனி வல்லாண்மை (Monopoly) பெறும் பட்சத்தில் பொருளாதாரம் மேலும் சரிவடையும்.
பங்குச் சந்தை வர்த்தக நிலையைக் காட்டி, நாட்டின் பொருளாதாரத்தை அளவிட முடியாது. காரணம், பங்குச் சந்தையில் ஈடுபடுவோர் ஒரளவு வசதி படைத்த, சிறிய சதவிகிதத்தினர் மட்டுமே. மேற்சொன்ன வர்த்தக மாற்றங்கள் இவர்களில் பலரையும் புதிய ஏழைகளாக மாற்றவும் கூடும்.
அன்னியச் செலாவணி பற்றாக்குறை
கொரொனா தொடர்ந்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருப்பதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் துறை சுற்றுலாத்துறை. சுற்றுலா சம்பந்தப்பட்ட வர்த்தகங்களை நம்பியிருக்கும் நாடுகள் கடந்த சில மாதங்களில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துவிட்டன. மெக்சிகோ, தாய்வான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மாலத்தீவுகள், இத்தாலி போன்ற நாடுகள் பாதிப்புள்ளாகலாம். இரண்டு அமெரிக்க விமான நிறுவனங்கள் மற்றும் சில சொகுசுக் கப்பல் நிறுவனங்கள் ஏற்கனவே திவாலாகிவிட்டன. மேலும் அன்னிய நாட்டு ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரங்களும் மந்தமடையும்.
இவை எல்லாவற்றையும் விட அரசாங்கத்தின் எந்த வித செலவும் முயற்சியும் இல்லாமல் வளர்ந்த நாடுகளில் பணியாற்றி வரும் தனிநபர்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு உதவிடவும், முதலீடுகளுக்காகவும் அனுப்பி வந்த அந்நிய நாட்டுப் பணம் பெருமளவில் குறைந்துவிட்டது. பெருந்தொற்று காரணமாக வெளிநாடுகளில் வாழ்ந்து பொருளீட்டி தங்கள் உறவுகளுக்கு அனுப்பிவந்த பலர் வேலையிழந்து சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிட்டனர். இதனால் அவர்களது சொந்த நாடுகளுக்கு அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்படுவதுடன் மாற்று புலம்பெயர் (reverse migration) தொழிலாளர்களின் புனரமைப்புக்கும் செலவிடவேண்டியுள்ளது.
கல்வி
வளரும் நாடுகள் பெரிதும் நம்பியிருந்தது வருங்காலத் தலைமுறையினரை. இதற்காகப் பல நாடுகள் குழந்தைகளின் கல்விக்கு முதன்மையளித்து வந்தன. எதோ ஒரு வகையில் உலகெங்கும் கோடிக்கணக்கான மாணவர்களின் படிப்பு மந்தமடைந்துள்ளது அல்லது தடைபட்டுள்ளது. இதன் பாதிப்பை சமூகம் உணர பல ஆண்டுகள் ஆகலாம். எனினும் பாதிப்புகளை உணர்ந்து மாற்றுக் கல்வி முறைகளை இந்நாடுகள் அவசரகதியில் ஊக்குவிக்க வேண்டும். பல நாடுகளில் இன்னமும் பரவலான இணையத்தொடர்பு இல்லாத நிலையில் இது மிகப் பெரும் சவாலாக உருவெடுக்கக் கூடும்.
மருத்துவம் / சுகாதாரம்
வழக்கமாக, புத்தாண்டு துவங்கும் சமயத்தில் அமெரிக்கர்களை பெரிதும் அச்சுறுத்துவது, மருத்துவக் காப்பீட்டு செலவு அதிகரிப்பு விகிதம். இந்தாண்டும் அதற்கு விலக்கல்ல. கொரொனா தொடர்பாகப் பெரும்பாலான மருத்துவமனைகள் அளிக்கும் சிகிச்சை செலவுகளை அரசாங்கமே ஏற்றுக்கொள்வதாகச் சொல்லப்பட்டாலும், காப்பீட்டுச் செலவு அதிகரித்துள்ளது. இது ஒரு புறமிருக்க, காப்பீடு வசதியில்லாத நாடுகளில் பலர் சிகிச்சைக்கான மருத்துவச் செலவுகளைத் தாங்களே சுமக்கவேண்டியிருக்கிறது.
கூடவே வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்ற வித்தியாசமின்றி, தேவைக்கேற்ற மருத்துவ வசதிகளை உருவாக்க முடியாமல் அனைத்தும் திண்டாடிவருகின்றன. சரியான நேரத்தில் போதிய மருத்துவ வசதி கிட்டாமல் பலர் உயிரிழந்துள்ளனர். சாமான்யரும் தாங்கிக் கொள்ளக் கூடிய மருத்துவச் செலவு சாத்தியப்படும் வரையில் இது பெரும் சுமையே.
உணவு / ஊட்டமின்மை
கல்வி, பொருளாதாரம், வளர்ச்சி போன்ற உணர்வுக்குப் புலப்படாத விஷயங்களுக்கு அப்பால் குழந்தைகள், சிறுவர், பெரியோர் என்ற வயது வித்தியாசமின்றி, ஆண், பெண் பாலின வேறுபாடுகளை கடந்து, மத, இன பேதங்களைக் கடந்து அனைவரையும் அச்சுறுத்தி வரும் விஷயம் உணவுப் பற்றாக்குறை. நம்மில் பலர் நேரிடையாக உணவு பற்றாக்குறையை அறியாதிருக்கலாம். ஆனால் அவற்றைச் செய்தியாகப் படித்துவிட்டு கடந்து செல்லாமல் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மைச் சுற்றிலும், மிக அருகாமையில் பல்லாயிரக்கணக்கானோர் உணவு இல்லாது இருக்கக்கூடும்.
வருமாண்டுகளில் இவ்வகையான இன்னும் நிறைய சவால்கள் மனிதகுலத்தை எதிர்நோக்கியுள்ளன. பல குடும்பங்கள், தனிநபர்கள் எரிந்து, களைத்து, தளர்ந்து போயுள்ளனர். இந்நேரத்தில் மனிதாபிமானம் மட்டுமே உங்களுக்கும், அவர்களுக்கும் இதமளிக்கக்கூடும். சிரமங்கள் அனுபவிக்கும் எவரும் தனித்துவிடப்படக் கூடாது.
நாம் அனைவரும், நமது பின்னணி, நம்பிக்கைகள் அல்லது நிலைகள் எதுவாக இருந்தாலும் – இந்த ஆண்டு கடினமாக இருந்தது என்பதை குறைந்தபட்சம் ஒப்புக் கொள்ளலாம்! கொரொனா மற்றும் பொது முடக்கத்தால் ஒரு சில நல்ல விஷயங்கள் நடந்திருப்பதாகத் துவக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அவற்றில் மிக முக்கியமானது பலரும் ‘நான்’ என்பதைக் ‘கட’ந்து அல்லது களைந்து, ‘உள்’ளே பிரயாணிக்க முயன்றுள்ளனர். அந்தப் பிரயாணம் நிச்சயம் நல்லதாகவே இருக்கும்! எதையும் கையாளும் மனவலிமையைத் தரும். வாழ்த்துகள்!
- ஆசிரியர்.