\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உடல் மாறிய உறவுகள்

Filed in கதை, வார வெளியீடு by on January 3, 2021 0 Comments

நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வாசுகியை, ஒலிப் பெட்டியில் இருந்து வந்த  பைலட்டின் குரல்  தட்டியெழுப்பியது.  இன்னும் ஒரு மணி நேரத்தில் சியாட்டில் டோகோமோ ஏர்போர்ட்டை அடையப் போவதாக அவர் அறிவித்தார். வாசுகி தன் பக்கத்தில் இருந்த கணவன் மனோகரைத் தட்டியெழுப்பி. 

“மாமா,  இன்னும்  ஒரு மணி நேரத்துல  லேண்ட் ஆகும் போல இருக்கு.  நீங்க டாய்லெட் போகணும்னா போயிட்டு வாங்க”

“ஐ அம் ஃபைன், நீ போகணுமா?” 

“இல்ல மாமா,  இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்”  என்று அவள் சொல்லும் பொழுதே , மனோகர் மீண்டும் தூங்கச் சென்றதைப் பார்த்தாள் . மனோகர் அவளுடைய தாய்மாமனும் கூட. அறுபது வயதைக் கடந்த இந்த இணையர்களுக்கு  மூன்று  பிள்ளைகள்

முதல் பையன், பிரபு மைக்ரோசாஃப்ட்டில்  ஆர்க்கிடெக்ட். அவனது வீட்டிற்குத்தான் இவர்கள் போகிறார்கள்.  இரண்டாவது பெண்  அனிதா. அவளது கணவன் மற்றும் குழந்தையுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் செட்டிலாகி விட்டாள். மூன்றாவது பையன் கிரிஸ் என்கிற கிருஷ்ணமூர்த்தி .   நியூயார்கில்  வேலைப்  பார்க்கிறான். இன்னும் சில மணி நேரங்களில், பசங்களைப் பார்க்கப்போகும் சந்தோசம், அவள் கண்களில்  நன்றாகத் தெரிந்தது. 

அவள் மனதில் “ஏர்போர்ட்டில  அனிதாவும், பிரபுவும் பசங்களோட வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க . அனிதா அவங்க ஊர்லேயிருந்து டிரைவ் பண்ணிக்கிட்டு வரேன்னு சொன்னாள். இவங்களை  நேராகப்  பார்த்து கிட்டத்தட்ட ஆறு வருஷம் ஆகிவிட்டது.  கிரிஸ் வந்து இருக்கமாட்டான்.” அவனைப்  பற்றி நினைத்ததும், அவளது கண்களில் மளமளவெனக் கண்ணீர் கொட்டியது.

கண்ணீரைத் துடைத்துவிட்டு “மாமா, டாய்லெட்டுக்குப் போகணும்,  எழுந்துக்கிறீங்களா?” 

 திடீரென்று மீண்டும் எழுப்பியதால், மனோகருக்கு  ஒன்றும் புரியவில்லை.

“இப்பதான் போக வேண்டாம்னு சொன்னே?”

“இப்ப போகணும் போல இருக்கு, மாமா.”

மனோகர் எழுந்து நின்று, அவளுக்கு வழி விட்டார். அவள் நடந்து செல்லும் பொழுது, சகப் பயணிகளை நோட்டமிடடாள். 

வீடியோ கேம்ஸில்  மூழ்கியிருந்த சிறுவர்கள்,  பல நாள் விட்ட தூக்கத்தை விமானத்தில் பிடிக்க நினைக்கும் அம்மாக்கள், ஏன் குழந்தை அழுகிறது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் அப்பாக்கள், ஆங்காங்கே கருப்பு முடிக்கு நடுவில் சில வெள்ளை முடியிருப்பது போல சில வெள்ளைக் காரர்கள், ஏசியன் வெஜிடேரியன் ஆர்டர் சொதப்பியதால், வீட்டிலிருந்து கொண்டு வந்த வறட்டு சப்பாத்தியை சாப்பிடும்  பெரிசுகள், கணவனின் தோளில் தலை சாய்த்து தூங்கும் இளம் பெண்கள், இதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் வரிசையாக ஒரு படம் கூட விடாமல் பார்க்கும் நடுத்தர வயதினர் என பல ரக மக்களை சுமந்துக் கொண்டு சற்று தள்ளாடியபடியே விமானம் போய் கொண்டிருந்ததைக்  கவனித்தாள்.

 அவள் முகத்தைக் கழுவி விட்டு, சூடாக ஒரு காபியும் எடுத்துக் கொண்டு  தன் இருக்கைக்குத் திரும்பினாள். மனோகர் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்ற வேதியியல் ஆசிரியர். இது அவர்களின்  முதல் அமெரிக்கப் பயணம்.

தூங்கிக்கொண்டிருந்த மனோகரை  ஆசையாக பார்த்தப்படியே அவளது மனதிற்குள்  ” கிட்டத்தட்ட மனுஷன்  35 வருஷ வாழ்க்கையை  டீச்சிங்,  டியூஷன்னு  எங்களுக்காகவே அர்ப்பணித்தார்.   இந்தப் பசங்களப் பார்க்கணும்னு மாமாவுக்கு ரொம்ப ஆசை! இந்த கிரிஸ் கிறுக்குப் பயலாலே  அமெரிக்கா   வருவதற்கே எங்களுக்கு  பிடிக்கல.  அனிதா மேல மாமாவுக்கு பாசம் அதிகம்.  அவளது முதல் குழந்தையோட ஒரு வருட  பிறந்தநாள் அடுத்த மாசம் வருது.  அப்பாவை எப்படியோ பேசி வர  வச்சுட்டா.” என்று நினைத்து பெருமூச்சு விட்டாள். 

மேலும் தன் எண்ணங்களைத் தொடர்ந்தாள்.

 “சில பேர் இத சொல்லி நான் கேட்டிருக்கேன்.  அம்மாவுக்குத் தாய்மை என்கின்ற பட்டத்தை முதலில் கொடுத்த முதல் குழந்தை மேல் எப்போழுதுமே ஒரு  தனி பாசம் இருக்கும்.  அப்பாக்களுக்குத் தான் இன்னும் ஒரு  ஆண்மகன்தான் எனச்  சொல்ல வைத்த  கடைசி குழந்தை மேல ஒரு தனி அட்டாச்மென்ட் இருக்குமுன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.   கிரிஸ் மேல மாமாவுக்கு ஒரு தனி அக்கறை இருந்துச்சு. இந்தப் பாவிப்பய எல்லாத்தையும் போட்டு உடைச்சுட்டானே! ”  என்று மிக வருத்தமாக அவள் நினைக்கும் பொழுது, திடீரென்று மனோகர் கண்களைத்திறந்து 

“நீ என்ன  கூப்பிட்டியா?”  எனக்  கேட்டார்.

“இல்ல மாமா”

“நான்  எழுந்ததும்  ஒரு விதத்தில நல்லதுக்குதான்.  இம்மிகிரேஷன்  அண்ட்  கஸ்டம்ஸ்  பார்ம்ஸ் இன்னும் முடிக்கல”  என்று சொல்லிவிட்டு  கட்டங்களை நிரப்ப ஆரம்பித்தார்.   கிட்டத்தட்ட அரைமணி நேரத்தில்,  விமானம் தரையிறங்கியது.   செல்போனில் “டிங்” என்று ஒரு சிறிய சப்தம்.  போனை அன்லாக் செய்து பார்த்தால் ” வெல்கம் டு யூ.ஸ்.ஏ.. நாங்கள் பேக்கேஜ் ஏரியாவில் காத்திருக்கிறோம்”  என்று பிரபுவிடம் இருந்து ‘ஃபேமிலி ‘வாட்ஸ்அப்’   குரூப்பு’க்கு ஒரு மெசேஜ்.  உடனே அவர் ஒரு ‘ஸ்மைலி’யை போட்டு  ” சீ யூ சூன்”   என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார்.  

‘வாட்ஸ்அப்’   இன்றைய இயந்திரக் காலக்கட்டத்தில் குடும்ப உறவுகளை இணைக்கும் ஒரு அதிசய செயலி என்றால் மிகையாகாது!!. முன்பெல்லாம் வெளி ஊர்களில்  வசிக்கும்  பசங்களுக்கு மாதத்தில் இரண்டு முறைக்  கூட சொந்தங்களுடன்  பேச நேரமிருப்பதில்லை. ‘வாட்ஸ்அப்’   வந்தபிறகு “பேமிலி குரூப்” அம்மாக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.  பல அம்மாக்கள் பசங்க  பேசறாங்களான்னு  கவலைப்படுவதில்லை. பத்து தடவை  அம்மா மெசேஜ் போட்டா, பசங்களும் ரெண்டு தடவையாவது கால் பண்ணி பேச வேண்டியிருக்கு. பசங்க படிச்சாங்களான்னு பார்க்கவும் முடியுது. அதனால ‘வாட்ஸ்அப்’  அம்மாக்களுக்கு கிடைச்ச “அஸ்திரம்” என்றே சொல்லலாம்!

கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்தில் எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து,  பிரபுவின் வீட்டை அடைந்தனர். ஒரு மாதம் வேகமாக ஓடி விட்டது.  அனிதா வீட்டிற்குச் செல்ல மனோகரனும்,  வாசுகியும் ரெடியாக இருந்தனர்.

“டேய் பிரபு,  கிரிஸ் அவங்க வீட்டுக்கு வரமாட்டான் தானே? ” 

“அப்பா,  எத்தனை தடவை சொல்றது.  நான் அவனோட காண்டக்ட்ல இல்லை.  அனிதாகிட்ட  பத்து தடவையாவது ஃபோன் பண்ணிக் கேட்டிருப்பேன். அவள் பாப்பா ‘பார்ட்டி’க்கு கிரிஸ்  வர மாட்டான்னுதான் சொன்னாள்.”

அதைக் கேட்ட வாசுகி ” நீ காண்டக்ட்ல இல்லைன்னு தெரியும்.  சின்ன வயசுலிருந்தே, அவனுக்கு எல்லாமே அக்கா தான்.  எனக்கு என்னமோ அவங்க  ஏதோ ஒரு குளறுபடி பண்ணுவாங்கன்னு தோணுது”

“அம்மா,  இதுக்கு மேல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.   மூணு மணி நேரத்துல உங்க ஃபிளைட். வாங்க கிளம்பலாம். என் பொண்ணு ஸ்கூல்ல பெரிய ஈவென்ட். அதனால நாங்க வர முடியாது.  அடுத்த மாசம் வந்து நாங்கள் அவர்களைப்  பார்க்கறோம்னு சொல்லு”  எனச் சொல்லி முடித்து அவர்களுடன்  ஏர்போர்ட்டிற்குச் செல்லத் தயாரானான்.

***

ன்று புதன்கிழமை.  அனிதாவின் குழந்தையின் முதல் வருடப் பிறந்த நாள் விழா முடிந்து மூன்று நாட்கள் ஓடி விட்டது.  அனிதா அம்மா அப்பாவின் பெட்ரூம் கதவை மெதுவாகத்  தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள். 

“அம்மா தூங்கறீங்களா?

“இல்லம்மா, சும்மாதான் படுத்துகிட்டு  இருக்கோம்”

“உங்களைப்  பார்க்க  ஒரு ஃபேமிலி வந்திருக்காங்க, ஹாலுக்கு  வரீங்களா?”

சிறிது நேரத்தில் மனோகரும், வாசுகியும் ஹாலுக்கு வந்தனர்.

அங்கே ஹாலில் கிரீஸும் இன்னொரு  வாலிபனும் உட்கார்ந்து இருந்தனர்.   அந்த வாலிபன் நீலக் கலர் போலோ டி-ஷர்ட்டும்,  வெள்ளை நிற கதர் வேட்டியும் அணிந்திருந்தான்.  நெற்றியில்  பளிச்சென்று திருநீறு.  சற்று தூக்கியவாறு ஹேர் ஸ்டைல். மாநிறம், ஒல்லியான உடலமைப்பு.

“எனக்குத்  தெரியும்,  நீ இப்படி பண்ணுவேன்னு.  எங்களுக்குத்தான் அவங்களைப்   பார்க்கவே  பிடிக்கலைன்னு சொன்னேன்ல. ”  என்று கண்களில் கண்ணீரோடு வாசுகி கேட்டாள்.

“அனிதா,  எம்மா எங்களைக்  கஷ்டப்படுத்துற? நான் யாரை எங்க வாழ்க்கையில திரும்பவும் பார்க்கவே கூடாதுன்னு நினைத்தோமோ, அவங்களை கூட்டிட்டு வந்திருக்கே” என்று மனோகரன் சொல்லிவிட்டு,  சட்டென்று திரும்பி வாசுகியின் கையை பிடித்துக்கொண்டு அவரது ரூமிற்கு சென்று கதவை மூடிக்கொண்டார். 

 அனிதாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.    அப்பா, அம்மா ரூமிற்குச் சென்று அவர்களைச் சமாதானப்படுத்துவதா, இல்லை அவர்கள்  அவமானப்படுத்திய தம்பியின் ஃபேமிலியிடம் மன்னிப்புக்  கேட்பதா என்று ஒன்றும் புரியவில்லை.

அனிதா முதலில் வீட்டுக்கு வந்த விருந்தினரைச் சமாளிப்போம் என்று நினைத்து ” எக்ஸ்ட்ரீம்லி சாரி, கார்த்திகேயன்.  சாரிடா கிரிஸ். இவ்வளவு  வயலண்ட்டா   ரியாக்ட்  பண்ணுவாங்கன்னு நான் எதிர்பார்க்கல! ரியலி சாரி” என்று சொல்லி மிகவும் வேதனைப்பட்டாள்.

 அதற்கு கார்த்திகேயன் ” டேக் இட் ஈசி அக்கா.  இதை நாங்கள் எதிர்பார்த்தோம்.  அட்லீஸ்ட் கிரிஸ் நீண்ட காலத்திற்குப் பிறகு அவங்க அப்பா அம்மாவை  நேரில பார்த்ததுல ஒரு சின்ன  சந்தோஷம் ”  

அதைக் கேட்டதும், கிரிஸ்  கண்களில் கண்ணீர். அவனுக்குப்  பேச்சு வரவில்லை.  சிறிது

தண்ணீர் கேட்டு குடித்துவிட்டு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

“அனிதா,  நான் தான்  உன்கிட்ட சாரி கேக்கணும்.  என்னால நீ அப்பா அம்மாவோட ரிலேஷன்ஷிப்பை  இழந்து விடாதே.  பாப்பாவைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம்.  நாங்க கிளம்பறோம்” என்று சொல்லிவிட்டு இருவரும் மிகுந்த வருத்தத்துடன் அந்த இடத்தை விட்டு கிளம்பினர்.  அன்று இரவு கிட்டத்தட்ட எட்டு மணி வரை, வாசுகியும்  மனோகரனும்  அந்த ரூமை விட்டு வெளியே வரவே இல்லை.  

இரண்டு நாள் கழித்து,  கவிதா மீண்டும் கதவைத் தட்டிவிட்டு அவர்கள் ரூமிற்குள் சென்றாள். மனோகர் அவளைப்  பார்த்தவுடன்,  வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.  அவள் வருவது தெரியாதது போல  வாசுகி கைகளில் ஏதோ ஒரு புத்தகம்.

“உங்களுக்கு  என்னோட பேச  பிடிக்கலைன்னு தெரியுது.  உங்க மனசுல நான் என்னமோ நம்ப வைத்து கழுத்தறுத்துட்டேன்னு  நினைக்கிறீங்க.  அவ்வளவு பெரிய பாவம் நான் ஒன்னும் செய்யல.  எனக்கு ஒரு அஞ்சு நிமிஷம் பேச டைம் கொடுங்க. நீங்க என்கிட்ட திரும்பி பேச வேண்டாம்.”

 அறையில் ஒரே நிசப்தம். அனிதா தான் சொல்ல நினைப்பதைச் சொல்ல ஆரம்பித்தாள்.

“அவனோட  அந்த வாழ்க்கை அவன் ஒன்றும்  ஆசைப்பட்டு ஏற்றுக் கொண்டதில்லை. இது மரபியல், அதாவது   ஜெனிடிக்ஸ்  சம்பந்தப்பட்ட ஒரு ப்ராப்ளம். நீயும் அப்பாவும் இதற்கு காரணம் இல்லை.   நீ அவனுக்கு  ஒரு பெண்ணைக்  கல்யாணம் பண்ணிக் கொடுத்து இருந்தேனா,  அந்தப்  பெண்ணோட  வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? அவள்  வாழ்க்கையே பாழாய்ப் போயிருக்கும்.  கண், கையில்லாம சிலபேர் பிறப்பதுபோல, இவனுக்கு ஜீன் சம்பந்தமான பிரச்சனை.  அதுக்கு அவனை எப்படித் தண்டிக்க முடியும்?  இதுக்குமேலே என்கிட்ட பேச வேறு விஷயம் இல்லை.  ”  என்று சொல்லி  முடிப்பதற்குள்,

 “அனிதா, பிரபுகிட்ட பேசிட்டோம். நாளைக்கு ஈவினிங் வந்து, அவங்க வீட்டுக்கு எங்களைக்  கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டான் ” என்று  மனோகர் சொல்லும் பொழுது, அவள் கண்களில் வந்த கண்ணீரைக் காட்டிக் கொள்ளாமல், அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

அந்த நிகழ்வுக்குப் பின்னர் அனிதாவுடன் பட்டும் படாமலே அவர்கள் பேசிக் கொண்டனர். கிட்டத்தட்ட மூன்று மாதங்களில்  இந்தியாவிற்கும் கிளம்பிச் சென்றனர். 

 கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.   ஒரு நாள் காலைப் பொழுதில்,  பிரபுவிற்கு  வாசுகியிடமிருந்து ஒரு இன்கம்மிங் கால் வந்தது.

“பிரபு,  அப்பா டெஸ்ட் ரிசல்ட்ஸ் வந்துடுச்சு. அப்பாவோட இரண்டு கிட்னியும்  ரொம்ப பழுதடைந்து விட்டதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு  இதுக்கு மேல டயாலிசிஸ்  எல்லாம் பண்ண முடியாது. கிட்னி ட்ரான்ஸ்பிளாண்ட்தான் பண்ணனும்னு சொல்லிட்டார்.  இன்னும் இரண்டு மாசம் தான் கெடு குடுத்திருக்காரு  “

“ஓ மை காட்,  செலவு பத்தி நீ கவலைப்படாதே.எப்ப ட்ரான்ஸ்பிளாண்ட் செய்யலாமுன்னு சொல்லறாரு? “

“ட்ரான்ஸ்பிளாண்ட்டுக்கு பெரிய வெயிட்லிஸ்ட் இருக்குப்பா.  என்னோட பிளட் குரூப்பும்  அப்பா குரூப்பும்  வேற வேற. அதனால நான் கொடுக்க முடியாது. என்ன பண்றதுன்னு தெரியலபா.  அப்பாக்கு வேறு எந்த பிராபளமும் இல்லை.  ட்ரான்ஸ்பிளாண்ட் கிடைச்சா, அப்பா  இன்னும் பத்து வருஷமாவது உயிரோடு இருப்பாருன்னு  டாக்டர் சொல்றாரு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல” அதற்கு மேல் பேச முடியாமல் வாசுகி அழுதவாறு ஃபோனை கட் பண்ணினாள்.

சில வாரங்களுக்குப் பிறகு, அம்மாவிடமிருந்து பிரபுவிற்கு மீண்டும் ஒரு  போன்  கால்.

 “டேய் பிரபு,  அந்த மாங்காடு அம்மன் கருணைதான்பா!!!.  யாரோ ஒருத்தர் அப்பாவுக்கு ஒரு கிட்னி தரேன்னு  சொல்லிட்டாரு. பர்ஃபெக்ட் மேட்ச்சுன்னு  டாக்டர் சொல்றாரு! அதனால  நாளைக்கே  ஆப்பரேஷன்.  அனிதா கிட்ட போன் பண்ணிச் சொல்லிடு”  என்று சொல்லிவிட்டு லைனை கட் பண்ணி விட்டாள்.

அன்று ஆபரேஷன் நாள்.  வாசுகி ஆபரேஷன் தியேட்டர் காத்திருப்பு அறையில் உட்கார்ந்துக் கொண்டு  கந்த ஷஷ்டி கவசம் படித்துக் கொண்டிருந்தாள். 

“அம்மா” என்று ஒரு பரிச்சயமானக்   குரல். கையில் குழந்தையுடன் கிறிஸ்!

” நீ எங்கடா இங்க?  எனக்கு இருக்கிற கஷ்டம் போறாதா? நீ வேற வந்து, ஏன்  கஷ்டப்படுத்துற. உன்னை யாரு இங்கே வரச் சொன்னது” என்று கோபமாகக் கேட்டாள்.

“அம்மா நான் உனக்காக வரல.  அப்பாக்கு  கார்த்திகேயன் தான் கிட்னி தானம் செய்யறான் .  நான் அவனைக் கவனிச்சுக்க வந்திருக்கிறேன்”

வாசுகிக்கு  தூக்கி வாரிப் போட்டது. ” என்னடா சொல்ற?”

“அப்பா நிலைமையை  ஒரு மாதத்திற்கு முன்னாடி அனிதா  எங்களுக்கு ஃபோன் பண்ணிச் சொன்னாள்.  கார்த்திகேயனுக்கு எல்லோருக்கும் உதவுற  குணம்!  எந்த ஒரு வீக்கெண்டும்  வீட்ல இருக்க மாட்டான்.  வீட்டு வசதி, சாப்பாடு வசதி  இல்லாத மக்களுக்கு    உதவி செய்ய போயிடுவான்.  ஒரு வருடத்திற்கு ஒரு முறை,  ஏழை மக்களுக்கு உதவ ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு வருவான். அவன்தான் பிடிவாதமாக பேசி, இந்தியாவுக்கு வந்து இந்தத் தானத்தைச் செய்கிறான்.” என்று சொல்லியபடியே குழந்தையை அடுத்த  தோளிற்கு மாற்றினான்.

“உன்கிட்ட முன்னாடியே சொன்னா, நீ ஒத்துக்க மாட்டேன்னு  எனக்குத் தெரியும்.  உனக்கு உன்  மாமாண்ணா  ரொம்ப உசுருன்னு  எனக்குத் தெரியும்.”

வாசுகி கண்களில் தாரை தாரையாய்க்  கண்ணீர்.  அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.  சிறுவயதிலேயே அப்பாவை இழந்து, அவளது குடும்பம் பணக் கஷ்டத்தில் திண்டாடிக் கொண்டிருந்தது.  அந்தச் சமயத்தில்,  தாய்மாமன் மனோகர்தான் அவளைத் திருமணம் செய்து கொண்டு ,அவளது தாய்வழி குடும்பத்தையும் காப்பாற்றினான்.   வாசுகியின் உலகமே மாமா மனோகர் தான். தன் கை  இரண்டையும் கூப்பி அவனைக் கும்பிட்டாள். 

“அம்மா, ஏன் ஒரு குழந்தையைப் போல நடந்துக்கிறீங்க?  உள்ள இருக்கறது என்  அப்பாவும் தான்!”

 வாசுகி அவனைக்  கூப்பிட்டு, தன் பக்கத்தில் உட்கார வைத்து அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“இந்தக் குழந்தை யார் என்று” சற்று ஆச்சரியமாக கேட்டாள் .

“எங்க குழந்தைதான்” வாசுகிக்கு ஒன்றும் புரியவில்லை.

“எனது ஆண் உயிர் அணு  கொண்டு, ஒரு வாடகைத்  தாய் மூலமாக இந்த குழந்தைப்  பிறந்தது” எனச்  சொன்னான்.

 “பாப்பாவுக்கு லஞ்ச் ரெடி பண்ண வேண்டும். நீ கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ள முடியுமா?”

“கட்டாயம் பாத்துக்கிறேன்.  பாப்பா பெயர் என்ன?”

“பத்மாவதி, பத்மா என்று கூப்பிடுவோம்”

வாசுகியின்  அம்மாவின் பெயர் பத்மாவதி. அவள் குழந்தையை அவனிடம் இருந்து வாங்கிக்  கொண்டு அவனைப் போய் விட்டு வரும்படி கூறினாள்.

அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்த  பின்,  அந்தக்  குழந்தையை ஆசையாகப்  பார்த்தாள்.  மனதில் பல எண்ணங்கள்

“கிரிஸோட  முகத்தோற்றம்  குழந்தைகிட்ட  இருக்கு. அனிதா சொன்னமாதிரி   அவன் பிறப்பில் குறைபாடிருந்தால்,  இவன்  என்ன பண்ணுவான் . நாங்க அவமானப்படுத்தினாலும், அந்தப் பையன் எவ்வளவு பெரிய உதவி செய்து இருக்கான். பெரிய மனசுதான். ஒரு காலத்துல ஆணும் இல்லாம பெண்ணும் இல்லாம இருக்கிற மக்களை,     சினிமால  காமெடி டிராக்லதான் யூஸ் பண்ணாங்க. ஆனா இன்னிக்கு அவங்கள புரிஞ்சுகிட்டு அழகா “திருநங்கையர்” என்று  ஒரு பெயர் கொடுத்து மரியாதை கொடுக்கிறார்கள்.  அது போலத்தான் கார்த்திகேயன், கிறிஸ் போன்ற மனிதர்கள்.  கார்த்திகேயன் என் மருமகள்(ன்)!  உடல் மாறிய உறவுகள்!!!”  என்று அவள் நினைத்து அவர்களை ஏற்றுக் கொள்ளும் பொழுது  வழிந்தக்  கண்ணீரை, குழந்தையின் பிஞ்சு விரல்கள் தடவிக் கொடுத்தது.

— மருங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad