எரிபொருள் குழாயும் எஞ்சிய துரோகமும்
மினியாபொலிஸ் நகரிலிருந்து இரண்டு மணித்தியாலம் வடக்கு நோக்கிப் பயணம் செய்தால் வரும் ஒரு சிறிய ஊர் பலிசேட் (pallisade). இதன் அருகில் உக்கிரமாக ஓடுகிறது இளம் மிஸிஸிப்பி ஆறு. இந்த ஊரில் தான் என்ப்ரிட்ஜ் லைன்3 (‘Enbridge line 3 pipeline’) எரிகுழாய் திட்டத்துக்கு எதிராகப் பூர்வீக வாசிகளும், சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க எதிர்ப்பாளர்களும் போராடுகிறார்கள்.
இந்த பலிசேட் ஊரில் ‘சாபொண்டவான்’ (Zhaabondawan எனும் பூர்வீக வாசிகளின் புனிதச்சாவடி மிஸிஸிப்பி ஆற்றோரமாக அமைந்திருக்கிறது. முதியோர்கள் அடக்கம் செய்யப்பட்ட புனித நிலத்தைத் துளைத்து, அவர்களின் நம்பிக்கையை உடைத்து, நிலத்தடியில், மிஸிஸிப்பி ஆற்றின் கீழ் கிண்டி – குறுக்கு கிடைமட்டமாக எரிபொருள் குழாயைப் போடும் திட்டத்துக்கு வந்துள்ளது கல்கரி, கனடாவைச் சேர்ந்த ‘என்ப்ரிட்ஜ்’ (Enbridge) தாபனம். இதன் அமெரிக்கத் தலைமையகம் டெக்ஸஸ் மாநிலத்தில் உண்டு என்பதும் இவ்விடம் குறிப்பிடத்தக்கது.
குறுகிய காலத்தில் பணம் ஈட்டுவதைப் பிரதான குறிக்கோளாகக் கொண்டுள்ள
இந்தத் தாபனம், பூர்வீக வாசிகளை, அவர்களின் நம்பிக்கைகளை உதாசீனப்படுத்துவதைப் பற்றியோ அல்லது எமது மின்சோட்டா மாநில பிரதேசம் மாசுறுவது பற்றியோ பெரிதளவு அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
தார் மணலில் (Tar Sands) இருந்து எரிபொருள்
தார் மணலில் இருந்து எரிபொருள் பிரித்து எடுப்பது செலவிலும், சூழல் மாசுபடுத்துவதிலும் நடைப்பெறத் தகாத விடயமே. இதனை, சூழலை மாசுபடுத்தும் எரி குண்டு என்றே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
முதலில் இதன் மூலம் வெளிவரும் கரியமில வாயு (CO2) அதிதீவிர அடர்த்தி கொண்டது. இந்த எரிபொருள் குழாய் தொடருமானால் மினசோட்டா பல வருடங்களாக முயன்று வரும் மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைக் குப்பையில் தான் தூக்கிப் போடவேண்டியிருக்கும்.
குறிப்பாக, எரிபொருள் குழாய் அமைப்பு ஆண்டுதோறும் 190 மில்லியன் கேலன் கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். இது 50 மில்லியன் நிலக்கரி எரிசக்தி மின் உற்பத்தியின் பக்கவிளைவு மாசுபாடு அல்லது மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோலியத்தில் இயங்கும் 38 மில்லியன் வாகனங்கள் வெலியிடும் கரியமிலத்துக்குச் சமம்.
MN350 யூனியனின் ஆய்வுக்கு பங்களித்த மேக்கலெஸ்டர் கல்லூரி (McLaster College) இயற்பியலாளரும் ஆராய்ச்சியாளருமான ஜிம் டாய்லின் கூற்றுப்படி, மினசோட்டாவின் மொத்த மாதாந்திர உமிழ்வுகளின் நிலை – என்ப்ரிட்ஜ் நிறுவலுக்குப் பின்னர் மிகத் தீவிரமாக வளர்ந்து புதிய மாசுபடுத்திகளின் வெளியீட்டிற்கு வழிவகுக்கும். இந்த லைன்3 பைப்லைன், தற்போது மினசோட்டாவிலிருந்து வெளியேறும் மாசுவாயுக்களின் வெளியேற்றத்தை விட 5 மடங்கு பெரியது, இது 2050 ஆம் ஆண்டில் மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மினசோட்டாவின் சமூக-பொருளாதார செலவு 30 ஆண்டுகளில் சுமார் $287 மில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
லைன்3 குழாய் பதிப்பு பற்றிய சில புள்ளிவிபரங்கள்
- ஏற்கனவேயுள்ள என்ப்ரிட்ஜ் லைன்3 குழாய் 80.5 மில்லியன் டன் பாரமுடைய கரியமில வாயுவை வருடா வருடம் வெளியேற்றுகிறது.
- புதிய என்ப்ரிட்ஜ் லைன்3 குழாய், வருடாந்தம் 273.5 மில்லியன் டன் கரியமில வாயுவை வெளியேற்றிச் சுற்றுச் சூழல் மேலும் மாசுற வழிவகுக்கும்
கரி தாதுப்பொருள், கார்பன், செயற்கையாக சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுவதை விட்டுவிட்டு, மீதமுள்ள இயற்கைக்கு மாறான விஷயங்களைப் பார்ப்போம்.
நிலத்தடியில் இருந்து நேரடியாக எண்ணெயை அகழ்வதை விட தார் மணலில் இருந்து எரிபொருளைப் பிரிப்பது பல வழிகளில் செலவு அதிகம்.
உலகுக்கு கணிசமான அளவு உயிர்வாயுவைத் தரும், கனேடிய மாகாண ஆல்பர்ட்டாவின் அழகான போரியல் காட்டை இத்திட்டம் தரிசு சந்திரப் பிரதேச நிலமாக மாற்றிவிடும்.
இத்திட்டத்தின் லாபங்களுக்காக அங்கு குடிபெயரவுள்ள ஜனத்தொகையால் இங்குள்ள பூர்விகவாசிகள் வாழ்வுமுறை பாதிக்கப்பட்டு வெளியேற நேரிடும்.
போரியல் காடு (Boreal forest)
இது உலகின் வட பாகங்களில் காணப்படும் ஊசியிலை மரங்கள் மூடிய பரந்த பாரிய சதுப்பு நிலப்பகுதிகளேயாகும். இவை வட பகுதியில் நாம் சுவாசிக்கும் உயிர்வாயுவை உருவாக்கும் பிரதேசங்கள் ஆகும்.
கனேடிய அல்பேர்ட்டா மாகாணம் இந்த போரியல் காடுகளைக் கொண்ட பிரதேசம். எரிபொருள் தார் மணலானது, அல்பேர்ட்டாவில் இலகுவாகப் பெறும் விடயம் அல்ல. போரியல் காட்டைக் குடைந்து, அங்கு வளரும் உயிர் வாயு உருவாக்கும் தாவரங்களை அழித்து தான் தார் மணல் பெறப்படுகிறது.
இந்த இலாப நோக்கு அகழ்வுகள், அதன் பின் நிலத்தை இயற்கை நீண்ட காலம் மீள் கொள்ள முடியாத சந்திர மண்டலம் போன்ற வெறிச்சோடிய நிலையில் விட்டுச் செல்கின்றன. மேலும் தார்மணல் பெறுவதற்காக அயல் நன்னீர் சுனைகள் உறிஞ்சப்பட்டு, பின்னர் அகழ்வுக்கருகில் நஞ்சு நீர்த்தேக்கங்களாக விட்டுச் செல்லப்படுகின்றன. இப்பேர்பட்ட நஞ்சு நீர் தேக்கங்கள் 500,000+ ஒலிம்பிக் நீச்சல் தடாகங்கள் போன்ற அளவில் உருவாக்கப்பட்டுள்ளன என்று ‘National Geography’ சஞ்சிகைக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.
எரிபொருள் குழாய் கசிவுகள்
தொழில் நுட்பங்கள் தொடர்ந்து மேம்பட்டாலும் நீண்ட எரிபொருள் தாதுக்களைச் சுமந்துச் செல்லும் குழாய்கள் சூழலிற்குச் சாதகமாக அமைவதில்லை.
இந்த மசகு எண்ணெய்க் குழாய்களில் ஏற்படும் கசிவு விபத்துக்கள், புத்தம் புதிய மண்பரப்புக்களை, நீர் நிலைகளை உருவாக்கி சூழலை நஞ்சாக்கிவிடும். மீண்டும் அவற்றை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது சாத்தியமற்ற விடயமே.
1996 இல் இருந்து 2014 வரை Enbridge நிறுவனம் 1,000 இற்கு மேற்பட்ட மசகு எண்ணெய்க் குழாய்கள் உடைந்து கசிவு ஏற்பட்டது. 350Kishwaukee எனும் சூழல் மாசுபடுத்துவோருக்கு எதிராகப் போராடும் ஒன்றியம், தனது ஆய்வில் இந்தத் தகவலைக் குறிப்பிடுகிறது. இதற்கு Enbridge கம்பனியின் மின் வலய அறிக்கைத் தகவல் பயன்பட்டன.
இதற்கு ஒரு உதாரணம் மிச்சிக்கன் மாநில கலாமாசூ (Kalamazoo) ஆற்று 2013 ஆம் ஆண்டு என்பிரிட்ஜ் குழாய் விபத்து. இந்த விபத்தின் விளைவாக மசகு எண்ணெய் கசிவு நேரடியாக ஆற்றில் விடப்பட்டது. இந்தக் கசிவு 160,000 கலன் மசகு எண்ணெய்யை நிரந்தரமாக கலாமாசூ ஆற்றில் விட்டுள்ளது என்று அமெரிக்க சூழல் பாதுகாப்பு இலாக்கா EPA கூறியுள்ளது. இதனால் வரும் பாதகம் நீண்ட காலமாக ஆற்றில் வாழும் உயிரினங்கள் மற்றும் ஆற்றை நம்பி வாழும் மக்களையும் நேரடியாகப் பாதிக்கும்.
மினசோட்டா மாநிலத்தைப் பொறுத்தளவில் என்ப்ரிட்ஜ் எரிகுழாய் வழியாக செலுத்தவுள்ள தார்மணல் தேவையற்றது. மேலும் இது இரண்டு வட மாநில நன்நீர்ச்சுனைகள் ஊடாக செல்லவுள்ளது. இந்த இரண்டு சுனைகளும் இறுதி வடிகால் ‘பெரும் சுப்பிரியர்’ ஏரியையே அடையும். சில தனியார் கம்பனிகளின் இலாபத்திற்காக 84% சதவீத நன்னீர் தரும் வட அமெரிக்க மாபெரும் ஏரிகளை, எமது குடிநீர் தரும் தலங்களை, பூர்வீக வாசிகளுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறுவது எமது எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
- ஊர்க்குருவி
உச்சாந்துணை
- Enbridge Line 3 Pipeline Replacement Project https://mn.gov/puc/line3/summary
- Explaining Minnesota’s 1837, 1854 and 1855 Ojibwe treaties
https://www.mprnews.org/story/2016/02/01/explaining-minnesota-ojibwe-treaties - What is the Line 3 tar sands pipeline? https://mn350.org/campaigns/stop-line-3/
- EPA Response to Enbridge Spill in Michigan
https://www.epa.gov/enbridge-spill-michigan