\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சாலப் பெருங்களி யிஃதே – பாகம் 1

எல்லோரா குடைவரைக் குகைகள்

சிறு வயதில் வரலாற்றுப் பாடத்தில் குடைவரைக் கோயில்கள் பற்றிப் படித்ததுண்டு. அவற்றில் முக்கியமானவைகளாக, உலகப் பிரசித்தி பெற்ற அஜந்தா மற்றும் எல்லோராக் குகைகளைப் படித்ததுண்டு. அவற்றை நேரில் பார்த்து மகிழும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அந்த அனுபவம் பனிப்பூக்கள் வாசகர்களுக்காக!

மஹாராஷ்ட்டிர மாநிலத்தில், ஔரங்காபாத் நகரம் ஓரளவுக்குப் பிரபலமானது. பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நகரம், இந்தியாவில் அதிவேகமாக வளரும் இரண்டாம் / மூன்றாம் ரக நகரங்களில் ஒன்றாகும். 1610 ஆம் ஆண்டு, முகலாய அமைச்சர்களில் ஒருவரான மாலிக் அம்பார் என்பவரால் நிறுவப்பட்டு, பதேஃக் நகர் என்றழைக்கப்பட்ட இந்த நகரை, 1653 ஆம் ஆண்டு இளவரசராக இருந்த ஔரங்கசீப் தக்காணப் பிரதேசத்திற்குத் தலைநகராக நிர்மாணித்து, ஔரங்காபாத் என்று பெயரிட்டார். இன்றும் முகலாய, இஸ்லாமிய சமயத்தினர் பெரும்பான்மையாக இருப்பதைக் காண முடிகிறது. மஹாராஷ்ட்டிர மாநிலத்தின் பெரிய நகரங்களான மும்பையிலிருந்து 360 கி.மீ. தொலைவிலும், பூனாவிலிருந்து 240 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஔரங்கபாத் நகரமே அஜந்தா மற்றும் எல்லோராக் குகைகளுக்கு நெருங்கிய, சுற்றுலாப் பயணிகள் தங்கும் வகையில் அமைந்த நகரமாகும்.

எல்லோராக் குகைகள்

ஔரங்காபாத் நகரிலிருந்து சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தக் குகை. கிட்டத்தட்ட நாற்பத்தி ஐந்து நிமிட கார்ப் பயணத்தில் சென்றடையக்கூடிய இந்தப் பகுதியில், நுழைந்ததும் கண்ணில் படுவது நூற்றுக் கணக்கில் அங்குமிங்கும் திரியும் குரங்குக் கூட்டங்கள். இந்தியாவில், வேறெந்தப் பகுதியிலும் காணக் கிடைக்காத சாம்பல் நிற லாங்கூர் எனும் வகைக் குரங்குகள் இவை. நீண்ட வரிசையில் நுழைவுச் சீட்டுப் பெற நிற்கும் மனிதர்களுக்கிடையே, சற்றும் தயக்கமில்லாமல் கொத்துக் கொத்தாய் நடமாடும் இவைகளின் கண்கள் மனிதர்களின் கைப்பைக்களுக்குள் தான். நம் கண்ணெதிரில், நமக்கு முன் நடந்து சென்ற பெண்மணி ஒருவரின் பையில் நீட்டிக் கொண்டிருந்த பிஸ்கட் பாக்கெட்டை, முழுப் பாக்கெட்டோடும் கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்திக் கொண்டு, மலைப்பகுதிகளில் சர சரவென ஏறிச் சென்றுவிட்டது ஒரு அப்பா லாங்கூர். அந்தப் பாக்கெட், தன் குடும்பத்திற்கு அது கொண்டு செல்லும் தினக்கூலியாக இருக்க வேண்டும்.

நுழைவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டு ஒரு ஐம்பது மீட்டர் நடந்ததும், உடனடியாகக் கண்ணில் காணும் காட்சி, அந்த கம்பீரமான குகை எண்: 17. ஆம், ஒவ்வொரு குகைக்கும் எண்கள் கொடுத்து, வரிசைப் படுத்தி ஓரளவாவது பராமரிக்க முயற்சிக்கிறது மஹாராஷ்ட்டிர அரசு. மொத்தம் 34 குகை, அவற்றில் 17 குகைகள் ஹிந்து மதக் கோயில்களைப் போன்றும், 12 குகைகள் பௌத்த மதத்தைக் காட்டுவதாகவும், 5 குகைகள் ஜைன மதத்தைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளன. இந்தக் குகைகளில், 17 ஆம் எண் குகையே மிகவும் பெரியது. அதுவே அனைவரையும் வரவேற்கும். 


இராஷ்ட்டிரக்கூட மரபினரின் ஆட்சிக் காலத்தில், மலையைக் குடையும் பணி கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியுள்ளது. இவை முழுவதையும் குடைந்து முடிப்பதற்கு எத்தனை காலமாகியது என்பதில் பல்வேறு கருத்துக்களிருப்பினும், எல்லோரா கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனதாகப் பரவலாகக் கணிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர், பதலைமுறைகளாக, வெறும் உளி மற்றும் சுத்தியல் மட்டுமே வைத்து, மிகப்பெரிய மலை ஒன்றைக் குடைந்து நூற்றுக் கணக்கான குகைக் கோயில்கள் செய்துள்ளனர். அவற்றில், முப்பத்தி நான்கு ஆலயங்கள் மற்றும் சந்நிதிகள் மட்டுமே இன்று சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்கும் விதமாக அமைந்துள்ளன. 

இந்த முப்பத்தி நான்கு குகைகளும் கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் நீளமும், 80 மீட்டர் உயரமும் கொண்ட ஒரே ஒரு பெரிய மலையில் குடையப்பட்டவை. ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு வரலாற்றையும், பக்தி நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. குகை எண் 17 மிகப் பெரிய ஹிந்துக் கோயில். மலையை முழுவதுமாகக் குடைந்து, பிரகாரம் நடந்து வருவதற்கான வழி செய்து, பிரகாரத்தின் வெளிப்புறச் சுவரில் கிட்டத்தட்ட நூறு பெரிய சிற்பங்களை வடிவமைத்து, பிரகாரத்தின் உட்புறம் ரதம் போன்ற வடிவில் கோயிலை அமைத்து, கோயிற் சுவர்களின் வெளிப்புறம் சுற்றிலும் பல விதமான கலை நயமிக்க வடிவங்களை அமைத்து, அந்த ரத வடிவக் கோயிலின் முன் பிரம்மாண்டமான இரண்டு யானை உருவங்களை வடித்து, அந்த யானைகள் ரதத்தை இழுத்துவருவது போலத் தத்ரூபமாய் வடிவமைத்து …..

இந்த ஒரு வடிவத்தைப் பார்ப்பதற்கு மட்டும் கண்கள் கோடி வேண்டும். அவை குறித்து எழுதி, படிப்பவர்களை அந்த இடத்திற்குக் கொண்டு செல்ல, நம்மெழுத்துத் திறமை போதியது அல்லவென்றுதான் சொல்ல வேண்டும்.


பிரகாரத்தைச் சுற்றி அமைந்துள்ள, வெளிப்புறச் சுவரின் உட்புறத்தில் பிரம்மாண்டமாகப் பல சிற்பங்கள். திருமாலின் பத்து அவதாரங்களையும் தத்ரூபமாக வடிவமைத்து, அதற்குப் பக்கத்திலேயே பல வகையான வடிவில், சிவ பெருமானையும், பார்வதியையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் வடித்து வைத்துள்ளனர். வைணவ, சைவ சமயங்களுக்கிடையேயான சண்டைகள் இல்லாதிருந்த காலமாக இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு சிற்பமும் அன்றைய வாழ்க்கை முறையை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. அந்தச் சிற்பங்கள் காட்டும் கதைகளைப் புரிந்து கொள்ள, பல நாட்களைச் செலவிடலாம்.

பிரகார உட்பக்கச் சுவர்களிலும் பலப்பல சிற்பங்கள். பெரும்பாலும் யானைச் சிற்பங்கள். வாழ்க்கை முறையைச் சித்தரிக்கும் சிற்பங்கள். கோயிலின் ஒரு பக்கம் இராமாயணக் காப்பியக் கதையை முழுவதுமாகச் சிற்பத்திலேயே வடித்து வைத்துள்ளனர். கோயிலின் மறுபக்கம் மஹாபாரதக் கதையைச் சிற்பமாக வடித்துள்ளனர். இந்திரப் பிரஸ்த்தத்தில், மயனமைத்த சபையில் நீர்நிலையென்று கருதி சாதாரணத் தரையில் தடுமாறிய துரியோதனின் உருவத்தை மலைக்குகைக் கல்லில் படைத்து, தாங்களும் மயனுக்குச் சமமானவர்கள் என்று நிரூபித்துள்ளனர் என்றுதான் கூற வேண்டும்.

ஹிந்து மதக் கோயில்களுக்கு, கலைநயத்தில் சற்றும் சளைத்திராத வகையில் அமைந்துள்ளவை பௌத்த விஹார்கள். பனிரெண்டு விஹார்கள் அமைந்துள்ள இங்கே, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவற்றுள் பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கும் புத்தபிரான், ஒரு சிலவற்றில் சாதாரணமாக அமர்ந்திருப்பது போலவும், சின் முத்திரையைக் காட்டிக் கொண்டிருப்பது போலவும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளார். புத்த விஹாரங்களின் உத்தரங்கள் மரத்தைப் போன்று கற்களையே வளைவுகளாகச் செதுக்கியுள்ளது அற்புதமான கலையழகு. வெறும் கலையழகு மட்டுமின்றி, இந்த விஹாரங்கள் ஒலிகளைப் பெருக்கி, நாதமாகச் செய்யும் அமைப்பைக் கொண்டவையாகவும் அமைந்துள்ளது வியக்கத்தக்க மற்றொன்று. 

சிற்பக் கலைகள் மட்டுமின்றி, ஓவியக்கலைகளிலும் சிறந்து விளங்கியுள்ளனர் இவற்றை வடிவமைத்தோர். பெரும்பாலான பௌத்தக் குகைகளின் கூரைகளிலும், ஹிந்துக் குகைகளின் வெளிப்புற வராந்தா போன்ற அமைப்புக்களிலும், கண்களைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் பல ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மழைநீர் மற்றும் இயற்கையின் சீற்றங்களாலும், வௌவால்கள் கொத்துக் கொத்தாய்ப் பல காலங்கள் தங்கியிருந்ததாலும், விஷக் கிருமிகளான சிலரின் அட்டூழியங்களாலும் பெரும்பாலான ஓவியங்கள் அழிந்து பட்டிருந்தாலும், கண்களுக்குக் கிடைக்கும் சொற்பமானவையே அன்றைய வாழ்வியலைச் சொல்லும் விதத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆயிரக்கணக்கான சிற்பங்களையும், நூற்றுக் கணக்கான ஓவியங்களையும் ஆராய்ச்சி செய்தவர்கள், இவையிரண்டையும் ஒரே குழுக்கள் செய்திருப்பதாகவும் பல்கலை வல்லுநர்களை மட்டுமே இந்தப் பணியில் அமர்த்தியிருப்பதாகவும் கருதுகின்றனராம். 

ஓவியங்களில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது, சராசரி மனித உயரத்தில் வரையப்பட்ட புத்தரது ஓவியமொன்று. இந்த ஓவியத்தின் கண்களைப் பார்த்துக் கொண்டே பக்கவாட்டில் நடந்தோமானால், புத்தரின் கருணைக் கண்கள் நம் கண்களைப் பார்த்துக் கொண்டே நம்மோடு தொடர்ந்து வரும். அவரது சின் முத்திரையிலமைந்த கை விரல்களும், நம்மைத் தொடர்ந்து திசைமாறிக் கொண்டே உடன்வரும். அவரது பாதங்களும் அதே போல் நம்மைத் தொடர்ந்து வரும். ஓவியம் வரைவதில் ஒரு அதிசயமான இந்த யுக்தியை, தமிழகத்தில், மதுரை மீனாக்‌ஷியம்மன் கோயிலில் உள்ள விநாயகர் சித்திரமொன்றிலும் காணலாமென்பது குறிப்பிடத்தக்கது. 

தொழில் நுட்ப வளர்ச்சி என்று எதுவுமில்லாத காலத்தில், மிகவும் அடர்த்தியான, வன விலங்குகள் ஆயிரணக்கணக்கில் ஆட்சி செய்து கொண்டிருந்த மலை மற்றும் காட்டுப் பகுதிகளில், நூற்றுக் கணக்கான ஆண்டுகளாகும் என்று நன்கறிந்தும் முடியில் இவை எப்படி அமையும் என்பதைக் குறிக்கோளாக வைத்து, இந்த இமாலயப் பணியைத் தொடங்கிய நம் முன்னோர்களின் தீர்க்க தரிசனத்தை என்னவென்று புகழ்வது?

இதே போன்று அஜந்தாக் குகைகள், ஔராங்காத் குகைகள், ஓவியக் கலை, சிற்பக் கலை குறித்த குறிப்புக்கள், இந்தக் கலை இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் எவ்வாறு பரவியது, பின்னாளைய படையெடுப்புக்களும் மதத் துவேஷங்களும் இவற்றை எவ்வாறெல்லாம் அழித்தன, இவற்றிற்கும் மஹாபலிபுரம், சித்தன்னவாசல், ஹம்பி, ஹளபீடு போன்ற தென்னகச் சிற்பக்கலைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?

தொடர்ந்து எழுதுவோம் ..

வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad