\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

‘அந்த’ வைரஸ்

Filed in கதை, வார வெளியீடு by on January 18, 2021 0 Comments

காரில் ஏறி உட்கார்ந்ததும் எதோ ‘காக்பிட்டுக்குள்’ நுழைந்த மாதிரி இருந்தது ரகுவுக்கு.  ஏழெட்டு மாதங்களாகிவிட்டது சொந்தக் காரில் உட்கார்ந்து. லிவிங் ரூம் விட்டால், ஆஃபிஸ் ரூம்; அரை மணிக்கொருமுறை பாத்ரூம்; அசந்த வேளையில் பெட்ரூம் என்று மாறிப் போயிருந்தது வாழ்க்கை. 

 சில சமயங்களில்,’ஊபர் ஈட்ஸ்’ காரன் கொண்டு வந்து வைத்துவிட்டுச் செல்லும் உணவையும்,  சுலோவின் அமேசான் ஷாப்பிங் பெட்டிகளையும் அள்ளிக் கொண்டு வர ஒரு நாப்பது நாப்பத்தியைந்து நொடிகள் வாசல் ‘போர்ச்’க்குப் போவதுண்டு. அந்த நாப்பது நாப்பத்தியைந்து வெளி பூலோக சுவாசத்துக்குப் பிறகு, நான்கு நிமிடம், விரல்களை முன்னும் பின்னும் கோர்த்து, விரித்து, அழுக்கு சேர்ந்துவிடக் கூடாதென நகத்தை ஒட்ட ஒட்ட வெட்டியதால் தெரியும் நகக்கண்ணிலிருந்து ரத்தம் வரை சோப்பு போட்டு தேய்த்துக் கழுவி விடுவான் ரகு. சுலோச்சனா கூடுதல் முன் ஜாக்கிரதை.

 “கையை நல்லாக் கழுவினீங்களா?” என்று கணவனிடம் உறுதிப்படுத்திக் கொள்ள கேட்பாள்.

 “கழுவிட்டேம்மா..”

 “சோப்புப் போட்டீங்களா?”

 “போட்டேன்.. போட்டேன்.”

 “கையைத் தொடச்சப்புறம் ஹேண்ட் சானிடைசர் போட்டீங்களா?”

 “ஆச்சு..”

 “கையைக் கழுவறதுக்கு முன்னால முகத்துல, மூக்குல கை வெக்கலையே?”

 “இல்லடி சனியனே” என்று சொல்ல நினைத்து, சுதாரித்து “ம்ஹூம்..” என்று தலையாட்டிவிட்டு, அடுத்த கேள்வி வருமுன் அங்கிருந்து நகர்ந்து விடுவான் ரகு. அப்படிப்பட்ட ரகு பல மாதங்களுக்குப் பிறகு காரை எடுக்கிறான். இதுதான் தலைவிதி என்றால் யார் தான் என்ன செய்ய முடியும்?

 ******************

 ன்று காலை.. வழக்கம் போல் ஐந்தரை மணிக்கு செல்ஃபோன் அலாரம் அடித்தது.. தலை வரை போர்த்தியிருந்த கம்ஃபர்ட்டரை மெதுவாக விலக்கிய ரகு தலைமாட்டில் வைத்திருந்த செல்ஃபோனை எடுத்து ‘ஸ்னூஸ்’ சின்னத்தை வருடிவிட்டான். 23 ‘வாட்ஸ் அப்’ தகவல் வந்திருப்பதை ஃபோன் காட்டுவதாகத் தோராயமாக உணர்ந்து, தலையணை ஓரத்தில் வைத்திருந்த கண்ணாடியை எடுத்துப் போட்டு பார்த்தான். ‘விழித்து கொள்ளுங்கள்.. தமிழ் நாட்டில் இந்து விரோதிகள்  அனைத்துத் துறையிலும் ஊடுருவி விட்டது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்…’ என்று இரண்டு முழத்துக்கு ஒரு செய்’தீ’யை கொளுத்தியிருந்தான் சபாபதி… தூத்தேறி .. காலையில எழுந்திருக்கும் போதே நல்ல சகுனம் என்று நினைத்தவாறே எழுந்து பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

 பிரஷ்ஷில் பேஸ்ட்டை வைத்து வாயால் கெளவிக்கொண்டு பேஸ்ட்டை மூடிய போதே லேசாகத்  தொண்டை எரிச்சல் இருப்பது போலிருந்தது.. ஒரு வேளை ‘ஹுமிடிஃபையரில்’ தண்ணீர் மாற்றாமல் விட்டுவிட்டோமோ என்று நினைத்தவாறே பல் தேய்த்து முடித்தான். பாத்ரூமை விட்டு வெளியே வந்தபோதும் சுலோவின் சன்னமான குறட்டை கேட்டது. “மணி ஆறாகப் போகுது… இன்னும் எழுந்திருக்கலையா..” குரல் பாதி தான் வெளியே வந்தது. அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்துக்கொண்டான் ரகு. தானாக எழுந்தாலே ‘காலங்காத்தாலே ஒத்தத் தலைவலி ஆரம்பிச்சுடுச்சு’ என்று பாட்டுப் பாடுவாள். நாம் எழுப்பி விட்டால்’முதுகுக்குப் பின்னால நடக்கிறதெல்லாம் தெள்ளத் தெளிவா தெரியற மாதிரி தலை சுத்துதுங்க..’ என்று எதாவது கதை கட்டுவாள். அவளாக எழுந்திருக்கட்டும்.

 அமேசானில் இரண்டு டைப் ஃபீபரிக் கொட்டைகளையும் சம அளவு மிக்ஸ் பண்ணி கொஞ்சம் சிக்ரி கலந்து அரைத்து வாங்கிய பொடியை எவர்சில்வர் ஃபில்டரில் போட்டு தள தள வென கொதிக்கும் வெந்நீரை ஊற்றி டிகாக்‌ஷன் இறங்குவதற்காகக் காத்திருந்தான். டிகாக்‌ஷன் இறங்குவதற்குள், சி.என்.என். தலைப்புச் செய்திகளைப் பார்த்து விடுவதும், காபி தயாரானதும் சோஃபாவில் உட்கார்ந்து இடது கையில் செல்ஃபோனுடனும் வலது கையில் காஃபிக் கோப்பையுடனும் செய்திகளை முழுதுமாகப் படிப்பது அவனது வழக்கம். இன்று ஏனோ தலைப்புச் செய்திகளைப் படித்து முடித்தும் டிகாக்‌ஷன் வாசனை வரவில்லையே .. ஒரு வேளை வெந்நீர் சூடு போதவில்லையோ.. காபி கூட இன்று எதோ வித்தியாசமாக இருந்ததாகப் பட்டது. தொண்டையில் இறங்கும் பொழுது எதோ திப்பித் திப்பியாகச் சிக்குவது போலிருந்தது.. ‘கேப்பிடல் ஹவுஸ்’ செய்தி சுவாரசியத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை அவன். 

குளித்து முடித்தபின் கண்ணாடி முன் நின்று, வழக்கம் போல் முன் மண்டையில் முடி வளரும் அறிகுறி எதாவது தெரிகிறதா என்று பார்த்தான். சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல ‘ரொகெய்ன்’ பாட்டிலைத் திறந்து சற்று தாராளமாகவே திரவத்தை உள்ளங்கையில் ஊற்றி முன் மண்டையில் அழுந்தத் தேய்த்துவிட்டான். மூடியைத் திறந்ததும் மூக்கிலடிக்கும் அந்த எண்ணெயின் ‘பசிபிக் மஸ்க்’ ஸ்மெல் அன்று என்னமோ மணக்கவேயில்லை. குளித்து விட்டு வெளியே வந்த பின்னரும் சுலோச்சனா எழுந்த பாட்டைக் காணோம்.

“எழுந்துக்கலையாம்மா இன்னும்.. மணி ஏழாகப் போகுது” – வாய் திறந்து பேசுவது புரிந்தாலும், சத்தம் எதுவும் கேட்டதுபோல் தெரியவில்லை. தொண்டையில் லேசாக எரிச்சல் மற்றும் வலி.. “ம்ஹூம்.. ம்ஹ்ஹூம்” என்று செருமிவிட்டு கூடுதல் பிரயத்தனத்துடன் “சுலோம்மா.. எழுந்துக்கலையா?” – விடிவி கணேஷின் தொணியில், பத்தில் ஒரு பங்கு சத்தம் மட்டுமே கேட்டது.

லேசாகத் தலையை மட்டும் திருப்பியவள், “மணி என்ன ஆகுதுங்க..?”என்றாள்.

“அதான் சொன்னனே .. ஏழாகுது. இன்னிக்கு வேற உங்க சித்திக்கு ஃபோன் பண்ணணும் சொல்லிக்கிட்டுருந்தியே..”

கண்ணைக் கசக்கி அவனைப் பார்த்தவள் .. “உங்கள தானே கேக்கறேன் .. மணி என்ன ஆகுது” எனக் கேட்டவாறே கொட்டாவி விட்டாள்.

“ஏழாகுது .. தூங்கினது போதும், எழுந்திரு.. அப்புறம் ராத்திரி தூக்கமே வரலைன்னு ஒரு போராட்டம் பண்ணுவ ..”

“காலங்காத்தாலே என்ன விளையாட்டு.. சத்தமாத்தான் பேசுங்களேன்..”

மீண்டும் அவன் வாயசைத்தாலும், காதில் எதுவும் விழவில்லை. வாசலில் வண்டி போகும் சத்தம் கேட்டதால் தன் காதில் ஏதும் பிரச்சனையில்லை என உறுதிப்படுத்திக் கொண்டாள்.

“விளையாடல.. நிஜமாவே மணி ஏழுக்கு மேல ஆகுது..” சரியாக ஓடு நீக்காத தேங்காய்த் துண்டு மிக்ஸியில் அரைபடுவதைப் போல நாராசாமாய் ஒலித்தது அவன் குரல்.

“என்ன ஆச்சு.. தொண்டை வலிக்குதா.. எரிச்சலா இருக்கா?”கட்டிலை விட்டிறங்கி சில அடி தூரம் பின்னுக்குத் தள்ளி நின்றுகொண்டாள் சுலோ.

“ம்ஹ்ஹ்ஹ்ஹ்ம் .. க்ர்ர்ர்ம்..” தொண்டையைச் செருமிக் கொண்டு பேச முயன்றவனிடம்,

“வேணாம்… பேச வேணாம்.. அந்த டிரஸ்ஸர்ல ‘ஜாஸ்மின் ஆயில்’ இருக்கு பாருங்க.. அதை எடுத்து ஸ்மெல் பண்ணுங்க”

அவளை வினோதமாகப் பார்த்தவனிடம் 

“ஸ்மெல் பண்ணுங்கன்னு சொல்றேன்ல..” என்று அதட்டினாள்.

எண்ணெய் பாட்டில் மூடியைத் திறந்து மூக்கருகே கொண்டு சென்றான். அவனுக்கு ஜாஸ்மின் என்றாலே பிடிக்காது .. ‘என்ன வாசனையோ இது.. மயக்கம் வர்றாப்பல’ என்பான். அன்று எந்த ரியாக்ஷனும் இல்லை அவனிடம்.. பத்து நொடிகளுக்கு மேல் மூடி நாசிக்குள் போய்விடுமளவுக்கு நுகர்ந்து கொண்டிருந்தான்.

“எதாவது ஸ்மெல் தெரியுதா? இல்லையா?” தோளில் வழிந்த நைட்டியை இழுத்து மூக்கையும், வாயையும் பொத்திக்கொண்டாள். அவளது பதட்டத்தைப் பார்த்து அரண்டவனாய் இடம் வலமாய் தலையசைத்தான் ரகு.

“போச்சு.. எது நடக்கக் கூடாதுன்னு பொத்திப் பொத்தி வெச்சேனோ அது நடந்துடுச்சு.. ஆண்டவா என்ன பண்ணுவேன் நான் இப்போ.. போங்க .. வேற எதையும் தொடாதீங்க இந்த ரூம்ல.. ராத்திரி ஃபுல்லா பக்கத்திலேயே வேற படுத்துக்கிட்டிருந்தீங்க.. எனக்கு என்ன நடக்கப் போகுதோ ..உங்க ஆஃபிஸ் ரூமுக்குப் போங்க.. வெளிய வராதீங்க.. ஒரு நிமிஷம் நில்லுங்க.. இந்த பெட்ஷீட், தலகாணி எல்லாத்தையும் எடுத்துட்டுப் போய் டிராஷ்ல போடுங்க.. ம்ம்ம்… இல்ல இல்ல வேண்டாம்.. மட் ரூம் கதவு, கராஜ் கதவுன்னு எல்லாத்தையும் தொட்டு வெப்பீங்க… இந்த நேரத்தில எதையும் தொடக்கூடாது.. இந்தாங்க, இந்த சானிடைசரை எடுத்துட்டுப் போங்க .. உங்க ரூம் கதவைத் திறக்கறதுக்கு முன்னாடி கைல சானிடைசர் போட்டுட்டு திறங்க.. கொஞ்சம் தாராளமாப் போடுங்க.. இன்னொரு சானிடைசர் வாங்க கஷ்டப்பட்டுட்டு வீடு ஃபுல்லா ஈஷி வைக்காதீங்க.. முருகா.. எனக்கு ஏன் இந்த சோதனை? இன்னும் ஏன் நிக்கறீங்க போங்க.. அந்த ரூமை விட்டு வெளிய வராதீங்க …. ஆங் .. இந்த பாத்ரூமுக்கு இனிமே வராதீங்க.. கெஸ்ட் பாத்ரூமை யூஸ் பண்ணிக்குங்க..முருகா..” 

அவள் தொடர்பின்றி பேசினாலும் அவள் என்ன சொல்கிறாள் என்று புரிந்தது ரகுவுக்கு.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல,..சாதாரணத் தொண்டைக் கமற..” முடிக்கவில்லை அவன்.

“பேசாதீங்க .. மொதல்ல உங்க ரூமுக்குப் போங்க..”

“சொல்றதக் கேளு..”

கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு கதவைக் காட்டினாள் சுலோச்சனா.

*********

சினிமாக்களில் அகதிகளைப் பிடித்து வைத்திருக்கும் கடத்தல்காரனுடன் பேசக் கொடுப்பது போல செல்ஃபோன், சார்ஜர் இத்யாதிசமாச்சாரங்களை ரூமுக்கு முன் வைத்துவிட்டு.. 

“தேவையானதை இங்க வெச்சிருக்கேன்.. 30 செகண்டு கழிச்சு கதவைத் தெறந்து எடுத்துக்கிட்டு, ஒடனே உள்ளே போயி கதவை மூடிக்கங்க… எதுனாலும் ஃபோன்ல கூப்பிடுங்க .. வேணாம் வேணாம்.. தொண்டை எரிச்சல் இன்னும் அக்ரவேட் ஆகும்.. மெசேஜ் அனுப்புங்க..” அறைக்கு வெளியே சுலோச்சனா கத்தியது கேட்டது.

சில நிமிடங்களில் ‘தடால் புடாலென’ சத்தம். பின்னர் கராஜ் கதவு திறக்கும் சத்தம். ஜன்னல் வழியே பார்த்தபோது, சுலோ தரை துடைக்கும் ‘மாப்’ கம்புகளால், அவர்கள் முந்தின இரவு படுத்திருந்த பெட்ஷீட், கம்ஃபர்ட்டர், டவல், இரண்டு நாட்களாக லாண்டரி பாஸ்கட்டில் போட்டு வைத்திருந்த துணிமணிகள் அனைத்தையும் சுருட்டி உருட்டிக்கொண்டு போய் டிராஷ் கேனில் போடுவது தெரிந்தது. அவற்றில் முக்கால்வாசி ஒரு மாதத்துக்கு முன்னர் ‘சேலில்’ வாங்கியவை. 700 – 800 டாலர் இருக்கும்… ரகுவுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. 

ஒபனரால் பியர் பாட்டிலின் மூடியைத் திறக்கும் சத்தம்…டெக்ஸ்ட் மெசேஜ் அலர்ட்.. ‘ஜன்னல் வழியா பாக்கறேன்னுட்டு அதிலேயும் வைரஸை பரப்பி வெக்காதீங்க.. அப்புறம் ஜன்னலையும் மாத்த வேண்டி வரும்’.. பண்ணாலும் பண்ணுவடி கிராதகி.

சிறிது நேரத்தில் பலநூறு பேர் பங்குபெறும் பார்ட்டியில் பியர் பாட்டில்களைத் திறப்பது போல தொடர்ந்து மெசேஜ்கள்.

‘தலவலி, ஒடம்பு வலி எதாவது இருக்கா?’

‘லேசா வலிக்கிற மாதிரி இருக்கு’ என இவன் பதில் அனுப்பி முடிப்பதற்குள்

‘மேலும் கீழுமா மூச்சு வாங்கற மாதிரி தோணுதா?’ எனக் கேட்டிருந்தாள்.

நிதானமாக மூச்சை இழுத்து விட்டுப் பார்த்தான். அவள் ஏற்படுத்திய பதட்டத்தில் நிஜமாகவே சுவாசிப்பதில் சிரமம் இருப்பது போலத் தோன்றியது. ‘ஆமாம்’ என பதிலனுப்பினான்.

‘இதைச் சொல்ல ஏன் இவ்வளவு நேரம்? இருமல்?’

‘இப்ப இல்லை.. காலைலே லைட்டா இருமல் இருந்தது?’

‘பேதி?’

‘போகலை’

‘சுத்தம் .. இருந்தாலும் ஏழு சிம்டம்ஸ்ல அஞ்சாறு செக்-அவுட் ஆகுது.. அப்ப கன்ஃபர்ம்ட் அதே தான். செயிண்ட் ஃப்ரான்சிஸ் ஃபோன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் வாங்குங்க ..கர்ப் சைட் செக் அப் தான் இருக்கும்னு நினைக்கிறேன்.. அதுவும் நல்லது தான். கார்ல இருந்து இறங்க வேண்டாம் .. இல்லைன்னா ஆஸ்பத்திரி உள்ள போயி இதுவரைக்கும் இல்லாததையும் வாங்கிட்டு வந்தாலும் வந்துடுவீங்க.. இப்பவே பேசுங்க,.. நான் ரசம் வெச்சுத் தரேன், சாப்டுட்டு போயிட்டு வந்துடுங்க’

‘காலங்கார்த்தாலே ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு ரசமா?’ செக் அப் குறித்து அவள் சொன்னதையெல்லாம் பொருட்படுத்தாது அப்பாவியாய்க் கேட்டு வைத்தான் ரகு.

‘ஏன்? இட்டிலி, வெங்காயச் சட்டினி, சாம்பார்னு கேக்குதா? இதுக்கு ரசம் நல்லதாம்.. ஒடனே கேக்கும்னு ராஜேந்திர பாலாஜி சொல்லியிருக்காரு.’

நல்லவேளை இவள் பிரக்யா, சுப்ரியான்னு வட மாநில அமைச்சர்கள் பேசுவதைக் கேட்கவில்லை என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முனைந்த போது..

‘இன்னொரு திரவம் கூட நல்லதுன்னு சொன்னாங்க.. அமேசான்ல கிடைக்குதான்னு பாக்கறேன்’ என்று அனுப்பியிருந்தாள்.

‘கண்ட எழவையெல்லாம் வாங்காதே’

‘கபசுரக் குடிநீர் ஒண்ணும் எழவெடுக்காது, திடகாத்திரமா இருக்கவங்களும் குடிக்கலாம்’ என்று அவள் அனுப்பிய பதிலைப் பார்த்தபோது கொஞ்சம் நிம்மதியாக மூச்சு வந்தது. அட இப்ப நல்லா சுவாசிக்க முடியுதே என்று நினைத்தான்.

கீழே பாத்திரங்களை உருட்டும் சத்தம், அவள் ரசம் வைக்கத் துவங்கிவிட்டாள் என்று கட்டியங்கூறியது. நடு நடுவே பியர் பாட்டில் திறக்கப்பட்டு கட்டளைகள் ஊற்றப்பட்டு வழிந்தன.

‘ரூமுக்கு வெளியே மாத்துத் துணி வெச்சிருக்கேன்’

‘வாலட்ல இன்ஷூரன்ஸ் கார்டு இருக்கான்னு பாத்துக்கோங்க.. வெளிய சர்ட்டுக்கு அடியில இருக்கு’

‘டிஸ்னி லேண்ட்ல வாங்கின ரெயின் கோட் வெச்சிருக்கேன்.. கணுக்கால் வரைக்கும் தான் வரும்.. பரவாயில்ல.. சாக்ஸ், விண்டர் ஜாக்கெட் எல்லாம் எடுத்து வெக்கிறேன் எல்லாத்தையும்போட்டுட்டுப் போங்க. இது ஸ்டைலு பாக்கிற நேரமில்ல’

‘செக் அப் ஃப்ரீ தானாம்.. வெப்சைட்ல போட்டிருக்கு’

‘வயசுப் பொண்ணு செக் பண்ணுவான்னு மவுத் வாஷெல்லாம் போட்டுட்டு போவாதீங்க.. வைரஸ் செத்துபோச்சுன்னா நெகட்டிவ்னு காட்டுமாம்.’

‘எதுக்கும் நேசல் ஸ்வாப்பும் எடுத்துக்கச் சொல்லுங்க.. ஒண்ணுல இல்லைனாலும் இன்னொண்ணு காட்டிக் கொடுக்கும்’

ஒன்றரை மணி நேர ‘சமூக ஊடக’சித்திரவதைக்குப் பிறகு, கதவுக்கு வெளியே பொருட்கள் வைக்கப்பட்டு “சாப்பாடு வெச்சிருக்கேன்.. 30 செகண்டு கழிச்சு வந்து எடுத்துக்குங்க” என்று சுலோ சொன்னதும் கேட்டது. அவள் அங்கிருந்து விலகிச் செல்லும் முன் கதவைத் திறக்காதே என்பதை எவ்வளவு உறுதியாக ஆனால் நாசுக்காகச் சொல்கிறாள் என்று வெகுளித்தனமாகப் பெருமைப்பட்டான் ரகு.

அவள் சொன்னதை விட முப்பது வினாடிகள் கூடுதலாகச் சேர்த்து காத்திருந்த பின் கதவைத் திறந்தான். வெளியே ஒரு சின்ன ஸ்டூல் மீது பேப்பர் கப், பேப்பர் டம்ளர்கள் சிலதும் ஒரு சுமாரான அளவு பேப்பர் கோப்பையில் சாதமும் இருந்தது. இரண்டு பழைய சோடா பாட்டில்களில் ப்ரவுன் கலரில் திரவங்கள். பிளாஸ்டிக் ஸ்பூன் இரண்டு, பேப்பர் நாப்கின், கூடவே குப்பை போட பிளாஸ்டிக் பேக் ஒன்று என விமானங்களில் உணவுத் தரும் ‘ஸ்கை செஃப்’ ஆக சுலோ மாறியிருந்தது விளங்கியது.

அலுங்காமல் ஸ்டூலை நகர்த்த முயன்ற போது, “ஸ்டூலைத் தொடாதீங்க.. எல்லாத்தையும் தனித் தனியா எடுத்துட்டுப் போங்க.. என்னால ஸ்டூலுக்கெல்லாம் சானிடைசர் போட்டுத் தொடைக்க முடியாது. சீக்கிரமா எடுத்துகிட்டுப் போய் கதவை மூடுங்க” என்று கீழிருந்து குரல் வந்தது. 

‘ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது’ எனும் பிக்பாஸுக்குள் வந்து விட்டோமோ என்று நினைத்து, சுற்றுமுற்றும் பார்த்தான்.

கதவை மூடிவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களில் ஒன்றைத் திறந்தான். குப்பென்ற காரமான, கனமான வாடை முகத்திலடித்தது. இன்னொன்றில் மிதமான வாடை.

‘என்னால சாப்பாட்டைக் கொஞ்சம் ஸ்மெல் பண்ண முடியுது சுலோ..’மெசேஜ் அனுப்பினான்

‘அதெல்லாம் வெறும் பிரமை.. எனக்கென்னவோ கன்ஃபர்ம்டா தெரியுது’ உறுதியாயிருந்தாள் சுலோச்சனா.

‘பாட்டில்ல என்ன கொடுத்திருக்க? சாதத்துக்கு எதைப் போட்டுக்கணும்?’ சந்தேகமாகக் கேட்டான்.

‘சொல்ல மறந்துட்டேன் .. நல்லவேளை கேட்டீங்க .. பெப்சி பாட்டில்ல இருக்கிறது ரசம். ஆரஞ்சு மூடி போட்ட ஃபாண்டா பாட்டில்ல இருக்கறது இந்த வைரஸுக்கான வீட்டு மருந்து. எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சீரகம், மிளகு, தேன், உப்பு, கொஞ்சமா க்ரீன் டீ எல்லாம் சேர்த்து செஞ்சது.’

‘இதை யாரு செல்லூர் ராஜூ சொன்னாரா?’

‘யாரு சொன்னா என்ன? ஒடம்புக்கு முடியாம படுக்கைல படுத்தாத் தெரியும். எத்தத் தின்னா பித்தம் தெளியும்னு உலகமே அல்லாடுது. இதுல கிண்டலுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை.. ரசத்தைச் சாதத்துக்குப் போட்டு சாப்டுட்டு அந்தக் கஷாயத்தை மிச்சம் வெக்காம குடிங்க. சாப்பிட்டப்புறம் எல்லாத்தையும் அந்த பிளாஸ்டிக் பையில போட்டு டைட்டா முடி போட்டு வைங்க.. மத்தியானம் அப்பாயிண்ட்மெண்டுக்குப் போகும்போது அதை டிராஷ்கேன்ல போட்டுட்டுப் போங்க’.

இந்தச் சம்பவங்கள் நடந்து நான்கு மணி நேரத்துக்குப் பிறகுதான் காரில் ஏறி அமர்ந்திருந்தான் ரகு.

************

தட்டுத் தடுமாறி, காரை ஓட்டிக்கொண்டு செயிண்ட் ஃபிரான்ஸிஸ் தெருவுக்குள் நுழையும்போதே ‘கர்ப் சைட் செக்-அப்’, ‘டிரைவ் த்ரூ டெஸ்டிங்’, ‘டெஸ்டிங் ஏரியா’ என திருவிழாவுக்கு வரவேற்பதைப் போல கலர் கலராக பதாகைகள் வைத்திருந்தார்கள். ஆஸ்பிட்டல் பார்க்கிங்கில் வரிசையாக ஆரஞ்சு நிறக்  கூம்புகளை அடுக்கி பல வரிசைகளாகப் பிரித்திருந்தார்கள். அந்த வரிசைகள் அகலமாகப் பிரியுமிடத்தில் பெரிய பனிரெண்டுக்கு பனிரெண்டு அளவில், வாகனங்கள் நுழைந்து வெளியே வரும் வகையில் கூடாரங்கள் அமைத்து ஆங்காங்கே மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.  கூடாரத்துக்கு வெளியே சினிமாக்களில் பாம்-ஸ்குவாட் நிபுணர்கள் வருவார்களே அதைப் போன்ற கவச உடையணிந்த சிலர் நின்று கொண்டு கார்களை நிறுத்தி விசாரித்து, எந்தக் கூடாரத்துக்குள் நுழைய வேண்டுமென வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள். பத்துப் பனிரெண்டு கார்களுக்குப் பிறகு ஒருவனா, ஒருத்தியா எனக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு உருவம் வந்து நின்றது.

“ஹாய்.. இன்னைக்கு நீ இங்க வரதுக்கு என்ன காரணம்” என்ற தொனியில் ஆங்கிலத்தில் கேட்டதிலிருந்து, அது ஒரு பெண் குரல் எனத் தெரிந்து கொண்டான்.

‘பூர்வீகச் சொத்து சிக்கலில்லாம எனக்கே வந்து சேரணும்னு ஒரு சின்ன வேண்டுதல்.. குலதெய்வக் கோயிலுக்குப் போகமுடியல.. அதான் சேவிச்சிட்டுப் போலாம்னு இங்க வந்தேன்’ என்று சொன்னால் திருப்பியனுப்பி விடுவியா என்ன என்று மனதுள் நினைத்துக்கொண்ட ரகு, “எனக்குச் சில சிம்டம்ஸ் இருக்கிறதா என் ஒய்ஃப் நினைக்கிறா.. அவதான் செக்-அப் பண்ணிக்கச் சொல்லி அனுப்பினா” என்று ஆங்கிலத்தில் சொன்னான்.

“ஓ .. உன் மனைவி எவ்வளவு நல்லவ! நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி” என்று பாராட்டியவள்  “டூ யூ பிரிஃபர் ஓரல்?” என்று கேட்டபோது சின்னதாய் நெளிந்து முகஞ்சிவந்தான். விளையாட்டுத் துப்பாக்கியைப் போல் ஒன்றை வைத்து நெற்றியில் சுட்டு டெம்பரேச்சர் குறித்துக் கொண்டாள்; விரலில் கிளிப் பொறுத்தி பிளட் பிரஷர் எடுத்துவிட்டு ஒரு கூடாரத்தைக் காட்டி அங்கு செல்லுமாறு பணித்தாள்.

கூடாரத்துக்குள் நுழையும்போது நெஞ்சு தடக் தடக்கென்று அடித்துக் கொண்டது ரகுவுக்கு. இவனின் பதட்டம் எதைப் பற்றியும் கவலைப்படாத இன்னொரு பெண் ‘எப்படியிருக்கே?’ என்ற தொனியில் சிரித்துக் கொண்டே கேட்டாள். 

“ஓரல், நேசல் ரெண்டும் கேட்டியாமே. மொதல்ல ஓரல் ஸ்வாப் பண்றேன்..அது சரி வரலைன்னா நேசல் பண்ணலாம்” என்று சொல்லியபடி, நுனியில் பஞ்சு சுத்தப்பட்ட சுமார் ஓரடி நீளமுள்ள பிளாஸ்டிக் குச்சியை எடுத்தாள். 

“சீக்கிரம் முடிச்சிடலாம்.. பத்து செகண்ட் கூட ஆகாது.. வாயை அகலமா திற. ‘ஆ’ ன்னு சத்தம் போடறதா நெனைச்சிகிட்டு திற..” என்றவள் தொண்டைக்குள் குச்சியைச் சொருகி அடைபட்டிருக்கும் ‘கிச்சன் சிங்க்’கை சுத்தம் செய்வதைப் போலச் சுழற்றினாள்.  ‘ஒ.. ஒள்வ்..’ என வினோதமான ஒலிகளை எழுப்பினான் ரகு. “அல்மோஸ்ட் டன்” என்று மேலும் சில நொடிகள் அகழ்வாராய்ச்சி செய்தவள் “ஆல் டன்” என்று ஸ்வாப்பை வெளியிலெடுத்தாள். இந்த உலகுக்கு மீண்டு வருவதற்குச் சில நொடிகளானது ரகுவுக்கு.

ஸ்வாப்பைப் பாதுகாப்பாய் பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொண்டே “ரிசல்ட் வரதுக்கு 3 நாளாவது ஆகும்… பாசிடிவா இருந்தா ஃபோன் பண்ணுவாங்க… நெகடிவா இருந்தா ஆன்லைன்ல அப்டேட் பண்ணுவாங்க… ஆன்லைன் ஆக்ஸஸ் இருக்குல்ல..”

கண்களிலிருந்து நீர் கொட்ட ‘இருக்கிறது’ எனத் தலையசைத்தான் ரகு.

“பாதுகாப்பா இரு” என்று சொல்லி ஒரு கத்தைக் காகிதக் கட்டைக் கொடுத்து வழியனுப்பி வைத்தாள் அவள்.

*******

வீட்டுக்கு வருவதற்குள் ஃபோன் பிதுங்கி வழியுமளவுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தாள் சுலோ. ‘கார்ல வரும்போது மாஸ்க், கிளவுஸைக் கழட்டிடாதீங்க..’, ‘வர்ற வழியிலே கார் வாஷ் இருந்தா காரை வாஷ் பண்ணிட்டு வந்துடுங்க.. ஒவ்வொரு டெஸ்டரும் நூத்துக் கணக்கிலே டெஸ்ட் பண்ணியிருப்பாங்க.. அதிலே எத்தனை பேருக்கு இருந்துதோ.. அதோட நம்ம கார் மேல சாஞ்சி, கீஞ்சி இருப்பாங்க.. வாஷ் பண்ணிடுங்க..’, ‘அங்கிருந்து கெளம்பறதுக்கு முன்னாடி மெஸேஜ் அனுப்புங்க.. அடுப்புல தண்ணி கொதிக்க வெச்சு வெக்கிறேன்.. ஆவி பிடிங்க..’ என மனதில் தோன்றியதையெல்லாம் அனுப்பியிருந்தாள்..

வீட்டுக்குள் நுழைந்தபோது புராணப் பட செட்டில் எங்காவது நுழைந்து விட்டோமோ எனுமளவுக்கு சாம்பிராணிப் புகை.. நல்ல வேளை மினசோட்டாவில் வேப்பமரம் கிடையாது. இல்லையென்றால் வீடு முழுதும் வேப்பிலைத் தோரணங்கள் தொங்கியிருக்கும். 

“அடுப்புல தண்ணி கொதிக்கும் பாருங்க.. பக்கத்திலேயே பழைய போர்வை ஒண்ணும் வெச்சிருக்கேன்.. அப்படியே அந்தப் பாத்திரத்தோட எடுத்துட்டுப் போய்ப் போர்வையைப் போத்தி நல்லா மூச்சை இழுத்துப் பிடிங்க.. மஞ்சள், மிளகு, எலுமிச்சை, இஞ்சி, துளசி, யூகலிப்டஸ் எல்லாம் போட்டு கொதிக்க வெச்சேன்..” மேலே பெட்ரூமிலிருந்து குரல் வந்தது.

“இதெல்லாம் எதுக்கு?” சற்றுச் சிரமமாயிருந்தாலும் குரல் வெளியே கேட்குமளவுக்கு பேச முடிந்தது ரகுவால்.

“மெனக்கெட்டு இண்டர்நெட்ல தேடி வைத்தியத்துக்கு வழி செஞ்சு வெச்சா .. என்ன கேள்வி இது.. கஞ்சாவா பிடிக்கச் சொன்னேன்.. அத்தனையும் ஒடம்புக்கு நல்ல மூலிகை ..”

“அதில்ல.. தல வலி போய் திருகுவலி வந்துடப்போகு…” என முடிப்பதற்குள்

“ஒண்ணும் பேச வேணாம்..சொன்னதைச் செய்ங்க.. நம்ம முன்னோர்கள் ஒண்ணும் முட்டாளில்ல” என்று முற்றுப் புள்ளி வைத்தாள்.

இந்த நேரத்தில் முன்னோர்களை முறைத்துக் கொள்ளவேண்டாமென நினைத்தவன் சூடான பாத்திரத்தை எடுத்துச் செல்ல ‘அவன் மிட்டனை’த் தேடினான்.

“மிட்டன் தேடறேன்னு கேபினெட் எல்லாம் தொடாதீங்க..அடுப்புக்குப் பக்கத்திலே கொஞ்சம் பேப்பர் டவல் வெச்சிருக்கேன்..” சத்தியமாக வீடு முழுதும் கேமரா செட் பண்ணிவைத்திருக்காள் கிராதகி..

பழைய போர்வையைத் தோளில் போட்டுக்கொண்டு பேப்பர் டவல் சுற்றி இரண்டு கைகளிலும் வெந்நீர் பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு படியேறினான்..

“ஆவி பிடிச்சா நல்லா வேர்வை வரும்.. போர்வையிலேயே தொடச்சிக்குங்க.. அந்தப் போர்வையைத் தூக்கிப் போட்டுடலாம்… ஆஸ்பத்திரிக்குப் போட்டுட்டுப் போன டிரஸ்ஸையும் தூக்கிப் போடணும்.. கதவோரத்துல வைத்தீஸ்வரன் கோயில் விபூதி வெச்சிருக்கேன்.. ஆவி பிடிச்சப்புறம், குளிச்சிட்டு வந்து மறக்காம அந்த விபூதியை பூசுங்க .. எல்லாத்தையும் முத்துக்குமரசாமி பாத்துப்பான்”   

சூடான ஆவி முகத்தில் படும் போது கண், மூக்கு எரிந்து, வேர்வை வழிந்து வேதனையாக இருந்தாலும் ஐந்து நிமிடங்கள் கழித்துப் போர்வையை அகற்றிய போது சொர்க்கமாயிருந்தது. கன்னத்தைத் தொட்டபோது மிருதுவாகயிருப்பது போல் தோன்றியது. ‘ஆவி பிடிப்பது சருமத்தைப் பொலிவாக்கும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?’ என்று காலேஜ் வாட்ஸ் அப் குரூப்பில் மெசேஜ் அனுப்பவேண்டும். 

குளித்து விட்டுவந்த பின் உடைமாற்றிக் கொண்டு அமர்ந்தான்.

‘விபூதி வெச்சீங்களா?’ என கேட்டிருந்தாள். 

‘வெச்சிட்டேன்.’

அடுத்த நொடி வீடியோ கால் வந்தது.. ஆஸ்பத்திரியில் பார்த்த நர்ஸ், டெஸ்டர்களைப் போல வீட்டிலிருந்த ரெயின் கோட், பிளாஸ்டிக் பேக் துணையுடன் எதோ பாதுகாப்பு உடை போட்டிருந்தாள் சுலோ.. கர்ணனின் கவச குண்டலம் மாதிரி, முகக் கவசத்தைக் கழட்டவேயில்லை.. “விபூதி வெச்சிருக்கீங்களான்னு பாக்கக் கூப்பிட்டேன். டெஸ்ட் எடுத்தாங்களா? எப்போ ரிசல்ட் வருமாம்?”

பத்தாவது தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் “டெஸ்ட் எப்படியிருந்தது? ரிசல்ட் என்னிக்கு வரும்? பாஸாயிடுவியா?” என்று சந்தேகமாய்க் கேட்ட அப்பாவின் முகம் கண் முன் வந்து போனது. 

“அந்த விபூதியைக் கொஞ்சம் பெருசா வெக்கறதுதானே.. இத்தனூண்டு வெச்சா என்ன அர்த்தம்… சரி சரி சும்மா உக்காராம ஆன்லைன்ல பாருங்க .. என்னென்ன பாதுகாப்பு எடுத்துக்கணும்னு.. அடிக்கடி ‘மை சார்ட்ல’ பாருங்க.. ஆஸ்பிட்டல்ல இருந்து ரிசல்ட் அனுப்பியிருக்காங்களான்னு .. ஃபோனையும் சார்ஜர்ல போட்டு வைங்க .. பாசிட்டிவா இருந்து கால் பண்ணப் போறாங்க..”

பாசிடிவா இருந்தா நல்லா இருக்கும்னு நெனச்ச மைண்ட் வாய்ஸ் ஓவர் சத்தத்தோட வெளியே வந்துடுச்சோ என்று அவள் பதட்டமடைவது வீடியோவில் தெரிந்தது. “அப்படி எதுவுமிருக்காது.. இருக்கக் கூடாதுன்னு வேண்டிப்போம்..” என்று சமாளித்தாள். “சரி சரி, ‘வெப்-எம்டி’ சைட்டுக்குப் போய்ப் படிங்க .. இதுக்கு எப்பத்தான் வேக்‌ஸினேஷன் கிடைக்குமோ.. ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்”    

அறைக்குள்ளேயே அடைந்திருப்பது கொடுமையாகயிருந்தது.. அவ்வப்போது ஃபோனை எடுத்து எதாவது காலைத் தவற விட்டுவிட்டோமோ என்று செக் செய்தான். ஆஸ்பத்திரியிலிருந்தும் எந்த அப்டேட்டும் வரவில்லை. 

சுலோ சொன்னபடி இண்டர்னெட்டில் இதைப்பற்றித் தேடினான்.. நீண்ட வருடங்களாகப் போராடி, பல ஆய்வுகள் செய்து சீனாக்காரர்கள் இந்த வைரஸை உருவாக்கிப் பரப்பி விட்டதற்காகப் பலர் ‘ஹுவான் சுவாங்’ தொடங்கி அனைத்து சீனப் பரம்பரையையும் திட்டித் தீர்த்திருந்தார்கள். இது முற்றிலும் கட்டுக்கதை; ‘இலுமினாட்டிகள்’ பரப்பிவிட்டது என்று சிலர் எழுதியிருந்தார்கள். இந்த வைரஸை ஒரே நாளில் துடைத்தெறியும் சக்தி என்னிடமுள்ளது என்று அறைகூவல் விட்டிருந்தார் சித்தமருத்துவர் ஒருவர். இந்த நேரத்தில் மாஸ்க் அணிந்து செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டிருந்தது ஒரு மூதேவி. இருந்தாலும், அதற்கு டாக்டர் என்ன பதில் சொல்லியிருக்கிறார் என்பதைப் பொது அறிவுக்காகப் படித்துத் தெரிந்து வைத்துக் கொண்டான்.

********

டுத்த இரண்டு நாட்களும் மிக மெதுவாக நகர்ந்தன.. ‘நான் எப்ப வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது’ என்று கண்ணாம்பூச்சிக் காட்டியது ரிசல்ட். பத்துக்குப் பனிரெண்டு சதுர அடியிருந்த அறையே அவனது உலகமாகிப் போனது. ஆஃபீஸ் ரூம் என்பதால் டிவி கூடக் கிடையாது.. லேப்டாப்பில் சி.என்.என். பார்த்தால் 24 மணி நேரமும், கருணையோடு கேப்பிடல் பில்டிங்கில் காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்து, கோரிக்கை மனு தரவந்த சிகப்புத் தொப்பி மனிதர்களைக் காட்டி போரடித்ததால் அதுவும் ‘கட்’. அறைக்குள்ளே குறுக்கும் நெடுக்கும் நடப்பதும், நாற்காலியில் அமர்ந்து ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்ப்பதும் பழகிப்போனது.

ஜன்னல் கண்ணாடி வழியே தெரிந்த மரக்கிளையில் விளையாடிக் கொண்டிருந்த அணில் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்ததை விட குண்டாகியிருப்பதாகத் தோன்றியது. இரவெல்லாம் விழுந்த ஸ்னோவை அலைக்கழித்து, அள்ளித் தூவி, மேடு பள்ளங்களுடன் அழகழகான முப்பரிமாண ஓவியங்களாக மாற்றியிருந்தது காற்று. அப்படிப்பட்ட ஸ்னோவையும் பொருட்படுத்தாது புசுபுசுவென வழிந்திருக்கும் முடியுடன், எட்டு இன்ச் உயரம் மட்டுமேயிருக்கும் ‘பூடுல்’ நாய்க்குட்டியைக் காலையும் மாலையும் வாக்கிங் கூட்டிப் போய்க்கொண்டிருந்தாள் ஒரு வியட்னாமிய மூதாட்டி. குட்டிக் குட்டி கால்களால் குடுகுடுவென சில அடிகள் முன்னால் ஓடினாலும், ஸ்னோவில் வழுக்கி விழுந்துவிடக் கூடாது என கவனமாக நடந்து வரும் பாட்டிக்காக, அவள் அருகே வரும்வரை காத்து நிற்பதை தலையாய பொறுப்பாகக் கொண்டிருந்தது அந்த நாய்க்குட்டி. தபால் போட வரும் கில்பர்ட், மதிய உணவுக்காக ‘ப்ரேக்’ எடுக்க வேண்டாமென வேனுக்குள் மெக்டானல்ட் சாண்ட்விச் வாங்கி வைத்திருந்தது, தன் வேலை மீது அவர் கொண்டிருக்கும் காதலைக் காட்டியது; ஆன் லைன் வகுப்புகளுக்கிடையே வேகவேகமாக வந்து ஐந்து நிமிடங்களாவது கூடைப்பந்து பயிற்சிசெய்து விட்டு போகிறான் எதிர் வீட்டு பதினொரு வயது க்ரிஸ்டஃபர். இந்த வீட்டுக்குக் குடி வந்த புதிதில் குழந்தைகளுக்கான ஸ்கூட்டரை காலால் உந்தித் தள்ளி ஓடி விளையாடிய ஜேக்கப், சிறிய டொயோடா கரோலாவுக்குள் குறுகி வளைந்து உட்கார்ந்து ஓட்டிச் செல்லும் அளவுக்குப் பெரிய பையனாக வளர்ந்து விட்டிருந்தான்.  

தன்னைச் சுற்றி இத்தனை விஷயங்கள் இயல்பாக நடந்து கொண்டிருந்தாலும் எதையுமே உணராமல், அனுபவிக்காமல் இருந்தது சற்று வெட்கமாகயிருந்தது ரகுவுக்கு. இத்தனை ஆண்டுகள் சுதந்திரமாகச் சுற்றி வர வாய்ப்பிருந்தபோது கிடைக்காத அனுபவங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே கிடைத்தன.  உலக நாட்டு அரசியல்வாதி, விளையாட்டு வீரர், நடிகர், நடிகையர் வீட்டு ஜன்னல்களை எட்டிப்பார்த்த போது கிடைக்காத அமைதி, சொந்த வீட்டு ஜன்னல் வழியே பார்த்த போது  கிடைத்தது.  நினைவுப் பாதையில் தன் பழைய, சிறு வயது வாழ்க்கைக்குப் பின்னோக்கிச் சென்று வர அவகாசம் கிடைத்தது. இறந்துபோன பெற்றோர்களின், அக்காலத்தில் விளங்காத அன்பும், அரவணைப்பும் இப்போது புரிந்தது. தான் யார், எதற்குப் பிறந்தோம், ஏன் இந்த நாடகங்கள் நடக்கின்றன எனப் பல கேள்விகள் தோன்றின. பெரிய தலைவர்கள் எழுதிய புத்தகங்கள் சிறைச்சாலைகளில் உருவானது ஏன் என்ற கேள்விக்கு விடை கிடைத்தது போலிருந்தது ரகுவுக்கு.

பியர் பாட்டிலின் மூடி சத்தம் அவனது எண்ணவோட்டத்தைக் கலைத்தது.

‘ஆஸ்பத்திரியிலிருந்து தகவல் எதுவும் வந்துச்சா?’ சுலோ கேட்டிருந்தாள்.

அவசர அவசரமாக ‘மை சார்ட்’ பக்கத்தில் தேடினான் ரகு. புதிய டெஸ்ட் ரிசல்ட்ஸ் வந்திருப்பதாக சிவப்பு எழுத்துகளில் காட்டியது. பதட்டத்துடன் அந்த லிங்க்கை க்ளிக் செய்தான். இணையத்தில் அந்தத் தகவல் லோடு ஆவதற்குள் வீடியோக் காலில் அழைத்தாள் சுலோ. 

“ரிசல்ட் பாத்தீங்களா இல்ல ஜன்னல் வழியா பராக்கு பாத்துட்டிருக்கீங்களா?”

“இல்லல்ல, ரிசல்ட் வந்திருக்கு.. பாக்கிறேன்… லோடு ஆகுது..”

ஒரு வேளை ரிசல்ட் நெகடிவென வந்து விட்டிருந்தால், இந்தப் பத்துக்கு பனிரெண்டு சதுர அடியின் சுகமான, இயல்பான, லேசான வாழ்க்கை முடிந்து விடுமே என்றிருந்தது ரகுவுக்கு.

“இன்னுமா லோடு ஆகல? சீக்கிரமாப் படிச்சு சொல்லுங்க..”

“ஆச்சு.. நெகடிவ்னு தான் நினைக்கிறேன் – ‘SARS COV-19 NAA – Not detected’ அப்படின்னு போட்டிருக்கு.. “

“அப்பாடா.. அந்த முத்துக்குமரசாமி நம்மளக் கைவிடல.. மஞ்சள் முடிஞ்சு வெச்சிருக்கேன்.. அடுத்த தடவ இந்தியாக்கு போகும்போது, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ஒரு நடை போயிட்டு வந்துடலாம்… நல்லா சோப்புப் போட்டு குளிச்சிட்டு கீழ இறங்கி வந்து சாமிக்கு கற்பூரம் ஏத்துங்க..”

“இல்ல சுலோ.. நெகடிவா இருந்தாலும் முன்னெச்சரிக்கையா இருங்க.. உங்களச் சுத்தி இருக்கவங்க பாதுகாப்புக்காக 14 நாட்கள் தனிமைப் படுத்திக்குங்கன்னு போட்டிருக்காங்க..”

டெஸ்ட் ரிசல்டில் இல்லாததையெல்லாம் சேர்த்து வாசித்து, தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள, உண்மையான வாழ்க்கை வாழ, மனதிலிருந்த வைரஸ்களை ஒழித்துக் கட்ட முடிவெடுத்திருந்தான் ரகு.

  • மர்மயோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad