\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா – கொண்டாட்டமா? குழப்பமா?

ஜனவரி 20ஆம் நாள், ஜோ பைடன் என அழைக்கப்படும் ஜோசப் ராபினெட் பைடன் அவர்கள், ஐக்கிய அமெரிக்காவின்46ஆவது அதிபராகப் பதவியேற்கவுள்ளார். கூடவே கமலா ஹாரிஸ் எனப்படும் கமலா தேவி ஹாரிஸ் அவர்கள், ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகப் பொறுப்பேற்றுக் கொள்வார்.

அமெரிக்க அரசியல் பாரம்பரியப்படி நடைபெறும் இந்த பதவியேற்கும் நிகழ்ச்சி புதிய அதிபரின் செயல்பாடுகளின் தொடக்கமாக அமையும். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக,அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் வெள்ளை மாளிகைக்குச் சென்று தற்போதைய அதிபரைச் சந்தித்து, இருவருமாக அமெரிக்காவின் கேப்பிடல் எனப்படும் நாடாளுமன்றத்துக்கு வருவது வழக்கம். கேப்பிடல் கட்டடத்தின் மேற்குப் பகுதி வளாகத்தில், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும் பதவியேற்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள்  புதிய அதிபருக்கும் துணை அதிபருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்கள்.  புதிய அதிபர் நாட்டு மக்களுக்கான முதல் உரையை வழங்கிய பின்னர், பதவிக்காலம் முடிந்து விடைபெறும் அதிபரையும், துணை அதிபரையும் புதிய அதிபரும், துணை அதிபரும் வழியனுப்பி வைப்பார்கள். சம்பிரதாயமாகப் புதிய அதிபர் அரசு ஆவணங்களில் தனது முதல் கையெழுத்தைப் பதிவு செய்வதும் வழக்கம். இதன் பின்னர் இராணுவ அணிவகுப்பு, விருந்து, இசை, நடனம் என நாள் முழுதும் கொண்டாட்டங்கள் இடம்பெறும். பெருமைமிகு இச்சம்பிரதாய நிகழ்வு இந்தாண்டு அதே மாண்புடன், அமைதியாக நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

பொதுவாகத் தேர்தல் நடைபெறும் நாளன்றே அடுத்து அதிபராக வரப்போவது யாரெனத் தெரிந்துவிடும்; புதிய அதிபரின் பதவியேற்புக்கான ஆயத்தங்களும், பொறுப்பு ஒப்படைப்புகளுக்கான ஏற்பாடுகளும் நவம்பர் மத்தியிலே துவங்கிவிடும். இந்த முறை, இந்த அரசியல் நாகரிகங்களுக்கு முற்றிலும் மாறாக , ஜோ பைடன் அவர்களின் வெற்றியைத் திடகாத்திரத்துடன் மறுத்து வந்தார் தற்போதைய அதிபர் டானல்ட் டிரம்ப். தேர்தல் முடிவுகளை எதிர்த்து திரு. டிரம்ப்  சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு அல்லது தோற்கடிக்கப்பட்டுவிட்ட நிலையில் புதிய அதிபரின் தேர்வை அங்கிகரித்து செனட்டர்கள் வாக்களிப்பதை நிராகரிக்குமாறு தனது துணையான மைக் பென்ஸை நிர்பந்தித்து வந்தார் டிரம்ப். கட்சிக் கொள்கைக்கு அப்பாற்பட்டு இந்த முடிவை எடுப்பதில் தயக்கம் காட்டிவந்தார் பென்ஸ்.

அவரை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த டிரம்ப்,  கடைசி அஸ்திரமாகத் தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு, புதிய அதிபரின் அங்கீகரிப்பைத் தடுக்கும் முயற்சியில் இறங்கினார். டிரம்பின் இந்த முயற்சி, ஜனவரி ஆறாம் நாள் நாடாளுமன்றத்தில் (கேப்பிட்டல்) நடைபெறவிருந்த அங்கீகரிப்பில், மிக அருவருப்பான, அநாகரிகமான, ஆபத்தான திருப்பங்களை ஏற்படுத்திவிட்டது.

டிரம்பின் அதி தீவர வலதுசாரிக் கட்சி அமைப்புகள் சில கேப்பிட்டல் கட்டடத்துக்குள் நுழைந்து, அதிபரின் அங்கீகரிப்பு வாக்கெடுப்பில் பங்கெடுத்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்க முற்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்த தடுப்புகளை மீறி, போலீசாரைத் தாக்கி, சபாநாயகர், உறுப்பினர்கள் அறைகளுக்குள் நுழைந்து, ஜன்னல்களை அடித்து நொறுக்கி, அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான வன்முறையில் ஈடுபட்டனர். இந்தக் கொடூரமான வன்முறையில் 2 போலீசார் உட்பட ஆறு பேர் மரணமடைந்தனர்.

தங்களை ‘தேசப் பற்றாளர்கள்’ என அழைத்துக் கொள்ளும் பத்துக்கும் மேற்பட்ட வலதுசாரி தீவிரவாத அமைப்புகள் இதில் ஈடுபட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. ‘ப்ரவுட் பாய்ஸ்’, ‘திரி பெர்செண்டர்ஸ்’, ‘ஓத் கீப்பர்ஸ்’ , ‘பூகாலு பாய்ஸ்’ போன்றவை இவற்றில் சில. பாசிசவாத ‘ க்யூ-ஏ நான்’ சதி தத்துவத்தின். ஆதரவாளர்களும் இந்த வன்முறையில் இடம்பெற்றனர். ‘கூ கிளக்ஸ் கிளான்’ எனப்படும் வெள்ளையின மேலாதிக்க அமைப்புகளும், ‘நியோ நாசி’ எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் ‘அமெரிக்கன் நாசி பார்ட்டி’ போன்ற குழுக்களிலிருந்தும், டிரம்ப் அவர்களின் ‘மேக் அமெரிக்கா க்ரேட் அகெய்ன்’ ஆதரவாளர்களும் இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். சொற்ப அளவில் அங்கிருந்த காவலதிகாரிகளைச் சூழ்ந்து, தள்ளிவிட்டு சட்ட அமலாக்க அதிகாரிகளின் அறைகளுக்குள் நுழைந்த வன்முறையாளர்கள் செனட் அவைக்குள்ளும் நுழைந்து செனட்டர்களைத் தாக்க முனைந்துள்ளனர். கலவரக்காரர்களில் ஒருவன் அங்கிருந்த மேடையிலேறி ‘இந்தத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்’ எனக் கூச்சலிட்டான். ‘இது எங்கள் தேசம்; அதை விட்டுக் கொடுக்க முடியாது’, ‘தேர்தலைத் திருடாதே; ஆட்சியைப் பறிக்காதே’ போன்ற கோஷங்களும் எதிரொலித்தன.

இந்தச் சம்பவங்கள் கூடுதலான இரத்தக் களரியை ஏற்படுத்தியிருக்கக் கூடும்; ஊடுருவியவர்களில் சிலர் ஆயுதமேந்தி இருந்ததுடன், செனட்டர்கள் மற்றும் காங்கிரஸ் சபை உறுப்பினர்களைப் பிணைக் கைதிகளாக, கைகளைக் கட்டிக் கடத்திச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்கள் சிலரிடம் பிளாஸ்டிக் பிணைப்பான்கள் இருந்தது இதை ஊர்ஜிதப்படுத்தியது. கட்டடத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வேனில் துப்பாக்கிகளும், வெடிப் பொருட்களும், பெட்ரோலிய எறி குண்டுகளும் எடுக்கப்பட்டன. குடியரசுக் கட்சி அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்னொரு காரில் சமையலறையில் பயன்படுத்தும் டைமர்கள் பொருத்திய பைப் வெடிகுண்டுகள் காணப்பட்டன. நல்லவேளையாக, அமைப்புக் கோளாறுகளால் இது வெடிக்கவில்லை.

இந்த வன்முறை தனித்த அல்லது தற்செயலான சம்பவம் அல்ல. ஜார்ஜ் பிளாயிட் மற்றும் சில கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ‘பிளாக் லைஃப் மேட்டர்ஸ்’ என்ற அமைப்பு அரசாங்க கட்டடங்களை முற்றுகையிடப் போவது குறித்த தகவல் உளவுத்துறை மூலம் வெளியானதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் நூற்றில் ஒரு பங்கு கூட, இந்தச் சம்பவம் குறித்த எச்சரிக்கைகளில் காட்டப்படவில்லையென்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. உயர்மட்டத்திலிருந்து வழிநடத்தப்பட்ட சதியாகவே இந்தத் தாக்குதல் கருதப்படுகிறது. கேப்பிடல் காவல்துறை, அரசு அதிகாரிகள், காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரால் பல வாரங்களுக்கு முன்பே இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கலவரக்காரர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டது, கேப்பிடல் கட்டடத்தின் பாதுகாப்பு அடுக்குகளையும், கட்டட அமைப்பையும் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தது போன்றவை இந்தத் திட்டமிடலை ஊர்ஜிதப்படுத்துகிறதாக அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ. குறிப்பிடுகிறது. கேப்பிடல் கட்டடத்தின் பாதுகாப்பு குழுவிலிருக்கும் தீவிர வலதுசாரிக் கறுப்பு ஆடுகள் இந்தத் திட்டமிடலுக்கு ஒத்துழைத்திருக்கக் கூடும். கட்டடத்துக்கு வெளியே நின்று, ஒலிப் பெருக்கி மூலம் பேசிய பெண்ணொருத்தி, வன்முறையாளர்கள் கட்டடத்துக்குள் எப்படி நுழைய வேண்டும், எந்த வகையான பொருட்கள் கொண்டு கண்ணாடி ஜன்னல்களை உடைக்க வேண்டும், செனட்டர் சபைக்குச் செல்லும் வழி என எல்லாவற்றையும் மெய்நிகர் வரைபடமிட்டு சொல்லியது  போன்றவை மிகப் பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டதைக் காட்டுகிறது.

இச்சம்பவங்கள் நடைபெற்ற ஜனவரி 6ஆம் நாள், வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களைப் பேரணியாக ஒன்று கூட்டி கேப்பிடல் கட்டடத்தை நோக்கி அணிவகுக்க அவர்களை அறிவுறுத்தி, கொம்பு சீவி, அந்த வன்முறை தாக்குதலைத் தூண்டிவிட்ட பிதாமகனாக இயங்கியவர் தற்போதைய அதிபர் ட்ரம்ப் அதிபரென்பதை மறுக்க முடியாது. “அமெரிக்காவை மீட்போம்” எனும் குறிக்கோளோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில் பேசிய டிரம்பும், அவரது தலையாய சிஷ்யர்களும் ஜோ பைடனின் வெற்றியை அறிவித்து சான்றளிக்கும் செனட்டர்கள் கூட்டம் நடைபெறக் கூடாதென அங்கு கூடியிருந்த வன்முறையாளர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லி கலவரத்துக்கு அடித்தளமிட்டனர். நாடு முழுதிலுமிருந்து அங்கு திரண்டிருந்த இந்தத் தீவிரவாதக் குழுவினரிடம் டிரம்ப் 70 நிமிட ஆவேச உரையாற்றினார். ‘நாம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறோம்’, ’அவர்கள் தேர்தலைத் திருட விடக்கூடாது’, ’நாம் இதை அனுமதிக்க முடியாது’, ‘கேப்பிடலுக்குள் செல்லுங்கள் தேசப்பற்றாளர்களே’, ‘உங்கள் குரலை அவர்கள் கேட்கட்டும்’, ‘ஜோ பைடன் 80 மில்லியன் வாக்குகளைப் பெற்றார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?’, ‘நாம் போராடுவோம்! மூர்க்கமாகப் போராடுவோம்! நீங்கள் மூர்க்கத்தனத்துடன் போராடவில்லையென்றால் நாட்டை இழந்துவிடுவோம்’ , ‘நம் பலம் அவர்களுக்குத் தெரியட்டும்’ – இவை அவர் பேசிய பேச்சின் உணர்ச்சி மிகு சில துளிகள். அன்று இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருந்த போது தொலைகாட்சியில் வந்து, இந்தக் கலவரங்களை நிறுத்தச் சொல்லிப் பேசுமாறு பலரும் வற்புறுத்திய பின்னர், சாவகாசமாகத் தொலைகாட்சியில் தோன்றிய டிரம்ப் இதற்கு, அவரது இந்தப் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக இவ்வன்முறையாளர்களைச் ‘சிறப்பானவர்கள்’ என்ற தொனியில் குறிப்பிட்டார். இச்சம்பவத்துக்கு முன்னர், ஒருவேளை மைக் பென்ஸ் இந்த அங்கீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்றால் விளைவுகள் பயங்கரமாகயிருக்கும் என்றும் ட்வீட் செய்திருந்தார் டிரம்ப்.

கலவரத்துக்கான இத்திட்டங்கள் ஆறாம் தேதிக்கு முன்னரே வலதுசாரி சமூக ஊடக தளங்களில் பரவலாக பரப்பப்பட்டிருந்தன. செனட்டர்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கான ‘சபை கூட்டு அமர்வின்’ முதல் சில நிமிடங்களில் பாசிசவாத குண்டர்கள் வந்தடையும் விதத்தில், வெள்ளை மாளிகை பேரணியும் ‘பென்சில்வேனியா வீதி அணி வகுப்பும்’ மிகக் கவனமாக நேரம் கணக்கிட்டு திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் உளவுத்துறையும் இதை ஆதரித்ததா அல்லது இதைப் பற்றி அறியவில்லையா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. வன்முறையாளர்களில் சிலர் இராணுவப் பயிற்சியில் தேர்ந்தவர்கள் போல சமிக்ஞைகள் மேற்கொண்டது, பணியாளர்களுக்கே குழப்பம் தரும் கட்டட உள்புற வடிவமைப்பைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்ததெல்லாம் இவர்களது தெளிவானத் தாக்குதல் திட்டத்தை வெளிக்காட்டின. 

எந்தத் தடையும் இல்லாமல் பாதுகாப்பு அடுக்குகளை மீறி செனட் சபைக்குள் நுழைந்த  தாக்குதல்காரர்கள் அவையை அடித்து நொறுக்கியதுடன், பைடனின் வெற்றிக்கான சான்றளிப்பு நடைமுறைகளை நிறுத்த நிர்பந்தித்தனர். இன்னொரு கும்பல் துணை அதிபர் மைக் பென்ஸை தூக்கில் தொங்கவிடவேண்டும் என கோஷமிட்டது.

சுமார் மூன்று மணி நேரம் நீடித்த தீவிரவாதிகளின் ஆக்கிரமிப்பு, ராணுவப் பிரிவான தேசப் பாதுகாவலர்கள் வந்த பிறகு, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. டெட் க்ரூஸ், ஜோஷு ஹவோலி உள்ளிட்ட சில வலதுசாரி செனட்டர்கள் இந்தத் தீவிரவாதத்தை ஆதரித்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டிரம்பின் அடுக்கடுக்கான பொய்களையே இவர்களும் எதிரொலித்தனர்.

இந்த பாசிச வாதிகளின் அச்சுறுத்தல்கள் இதோடு முடிந்துவிடவில்லை. ஜனவரி 20 வரையில் ட்ரம்ப் அதிபராக இருக்கப்போகிறார். அதுவரையில் இந்த அபாயம் தொடரலாம்!  இந்த வன்முறையாளர்களில் பலர் கைது செய்யப்பட்டிருந்தாலும், பல சதிகாரர்கள் இப்போதும் சுதந்திரமாக உலவிக் கொண்டு, அடுத்த தாக்குதல்களுக்குத் திட்டமிட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலத் தலைமையகங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இக்கட்டிடங்களைச் சுற்றிலும் உயரமான பாதுகாப்பு வேலிகள் எழுப்பப்பட்டு, சுற்றியிருக்கும் சாலைகள் பொதுமக்கள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுவிட்டன. வாஷிங்டன் டி.சிக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து இங்கு செல்லும் தரைவழிப் போக்குவரத்து முடக்கப்பட்டு, அனுமதியின்றி எவரும் செல்லாதவாறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இராணுவப் பயிற்சி பெற்ற சுமார் 25,000 தேசப் பாதுகாப்பு வீரர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். 

புதிய அதிபரின் பதவியேற்பு விழாவுக்கு மிகச் சிறிய அளவிலான முக்கியஸ்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பொதுமக்களுக்கு அனுமதியில்லை. வழக்கமாக பதவியேற்புக்கு இரண்டு தினங்களுக்கு முன் நடைபெறும் ஒத்திகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல காலங்களாகக் கட்டடத்தின் மேற்கு வளாகத்தில், திறந்தவெளியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியை வேறுஇடத்துக்கு மாற்றவும் பரிசீலிக்கப்படுகிறது. அல்லது குறைந்தபட்சம் உட்புற அரங்குக்கு மாற்றவும் முயல்கிறார்கள். பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என டானல்ட் டிரம்ப் அறிவித்திருப்பது அரசியல் மாண்புக்குக் கேடு விளைவிக்கும் முடிவாகும். ஜனவரி 19ஆம் தேதியே அவர் பதவி விலகக் கூடும் என்ற வதந்திகளும் பரப்பப்ட்டு வருகின்றன. இவை கூடுதல் கலவரங்களுக்கு வழி வகுக்கலாம்.

அமெரிக்க அதிபர் பொறுப்பேற்கும் பெருமைமிகு பாரம்பரியம், உள்நாட்டுப் போர்த்திடலாகி விடுமோ என்ற அச்சம் அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய ஜனநாயக நாட்டின் அரசியல் நாகரீகம் இந்தப்  பயங்கரவாதிகளால் அவமானப்பட்டு நிற்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருந்த நாடுகள் அனைத்தும் இச்சம்பவங்களால் கொக்கரித்துக் கொண்டுள்ளன.  வழக்கமாக இவ்விதச் சம்பவங்கள் மற்ற நாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்றால் மூக்கை நுழைத்து சமரசம் செய்யும் அமெரிக்கா இந்த உள்நாட்டுச் சதிகாரர்களால் மூக்கறுபட்டு நிற்கிறது. ஏற்கனவே கொரோனா பெருநோய்த் தொற்றை ஒழித்து, நாட்டு மக்களையும் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கும் பெரும் பொறுப்பு ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்குக் காத்திருந்தது. அதனுடன் உள்நாட்டுச் சீரமைப்பும், சதிகாரர்களை ஒடுக்கும் கூடுதல் பொறுப்பும் சேர்ந்துள்ளது. ‘தேசப் பற்றாளர்கள்’ என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் தீவிரவாத, இனவாத அமைப்புகள் மீது தொடர் கண்காணிப்பை இந்த அரசாங்கம் முடுக்கிவிடவேண்டும். 

பொதுவாக பதவியேற்பு நாளன்று ஒவ்வொரு அதிபரும் தங்களது முக்கியக் கொள்கைகளை ஒரிரு வரிகளில் எடுத்துரைப்பார்கள். ‘உங்கள் கனவுகள், உங்கள் நம்பிக்கைகள், உங்கள் இலக்குகளே எனது அரசாங்கத்தின் கனவு,  நம்பிக்கை, இலக்காகயிருக்கும்’ -ரோனால்ட் ரீகன்; ‘ஒன்றிணைந்த நாடு’ – ஜார்ஜ் புஷ்; ‘மாற்றத்துக்கான நம்பிக்கை’ – பராக் ஒபாமா ஆகியவை இங்கே குறிப்பிடத்தக்கவை.

இந்தச் சமயத்தில், சமூக உரிமைக்காகப் போராடிய, மறைந்த மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் பிறந்த தினத்தை நினைவுறும் இந்நாளில், அவரது ‘எனக்கொரு கனவு இருக்கிறது’ என்ற சொற்பொழிவு நினைவுக்கு வருகிறது. ‘உங்களில் சிலர் கத்தி வைத்திருக்கலாம்; உங்களில் சிலர் கொடிய ஆயுதங்களை வைத்திருக்கலாம்; அவற்றை அதற்குரிய இடங்களில் வைத்து விடுங்கள். அகிம்சை எனும் ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; தர்மத்தின் மார்புக் கவசங்களை அணிந்து கொள்ளுங்கள்; உண்மையெனும் கேடயத்தை எடுத்துக் கொண்டு நிற்காமல் போய்க்கொண்டிருங்கள்’. 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எம்.எல்.கே. அவர்கள் சொன்னது 46ஆவது அதிபராகப் போகும் ஜோ பைடனின் மனதில் ஆழப் பதிந்திருக்கும் என நினைக்கிறேன்.

 

– ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad