பீஃப் வெலிங்டன் அகலடுப்புச் சமையல்
குளிர்காலத்தில் அகலடுப்பு (Oven) மூலம் பார்க்கப் பொலிவாகவும், சற்று ஏளிதாகவும் செய்யக்கூடியது உரொட்டி தயாரிப்பது போன்ற, வெலிங்டன் வகை வாட்டி வேகவைக்கும் சமையல்.
பிரித்தானியர் பீஃப் எனும் மாட்டு இறைச்சியைப் பாவிப்பதை விரும்பினும், இதனைக் கோழி, ஏன் உருளைக்கிழங்கு மசாலாவுடனும் இலகுவாகத் தயாரிக்க முடியும்.
உரொட்டியில் மூடப்பட்ட மாமிசம் (filet de bœuf en croûte – fillet of beef in pastry) என்ற பிரெஞ்சு சமையலை பிரித்தானியர் பின்பற்றி சமைக்க, காலப்போக்கில் அது பீஃப் வெலிங்டன் என்ற பெயருடன் பிரித்தானிய உணவாகிவிட்டது.
தேவையான பொருட்கள் (நான்கு பேருக்குப் பரிமாற)
- 2 துண்டு (சுமார் 1 lbs /400g எடை) மாட்டிறைச்சி, கோழி அல்லது கோழியின் நெஞ்சுப்பகுதி
அல்லது அவித்த உருளைக்கிழங்குப் பிரட்டல் - நறுக்கி எடுத்த ஒரு பிடி ஓமம் (Thyme) இலைகள்
- தாளிக்க ஆலிவ் எண்ணெய்
- சுமார் 1 lbs /400g எடையுள்ள சுத்தம் செய்த காளான்
- 4 நீண்ட துண்டு பார்மா அல்லது புரோசூத்தோ (Parma or prosciutto ham)
- 2 முட்டை மஞ்சள் பாகம் (1 மேசைக் கரண்டி தண்ணீர், சிறிது உப்பு கலந்துக்கொள்ளவும்)
- தேவையான அளவு கடலுப்பு
- தேவையான அளவு தட்டி எடுத்த மிளகு
- ஏற்கனவே தயாரிக்கப் பட்ட பேஸ்டரி தாள்கள் (Pastry Sheet)
செய்யும் முறை
இறைச்சியை முதல் நாளே உருளை போன்று உருட்டி சாரான் பிளாஸ்டிக் ராப்பில் (Saran plastic Wrap) சுற்றிக்கட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளவும்.
மாமிசத்துக்குப் பதிலாக உருளைக் கிழங்கு மசாலா செய்தாலும் அதை உருளை போன்று தட்டி எடுத்து சுற்றிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து கடலுப்பு, தட்டியெடுத்த மிளகு இரண்டையும் கலந்து இந்த உருண்டையின் மேல் தடவி வைத்துக் கொள்ளவும். தட்டையான சட்டியில் சிறிது ஆலிவ் எண்ணெய் விட்டு மாமிசத்தின் சகல பகுசிகளையும் ஒரு 30-60 விநாடிகள் வெப்பப்படுத்தி எடுத்து ஒரு தட்டில் ஆற விடவும்.
அடுத்து காளான்களை பொடியாக நறுக்கி சட்டியில் எண்ணெயுடன் தாளித்து, காளானில் இருந்து வரும் நீர் ஆவியாகும் வரை காத்திருந்து அதன் பின் ஓம இலைகளைச் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
உறைந்து, ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும் பேஸ்ட்ரி தாள்களை மெதுவாகப் பிரித்து, குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைக்கவும். இது மாமிசத்தை குழைத்து வைத்து மூடிட உதவும்.
அடுத்து மேசை மேல் பிளாஸ்டிக் ராப்பை பாய் போன்று விரித்து வைத்து பார்மா அல்லது புரோசூத்தோ துண்டுகளை அடுத்தடுத்து அடுக்கி, பரப்பி வைக்கவும்.
அதன் மேல் வாட்டி எடுத்த காளானைத் தூவி, அதன் மேல் இறைச்சியை அல்லது உருளைக்கிளக்குப் பிரட்டலை வைத்து, யாவற்றையும் சேர்த்து மெது மெதுவாக பிளாஸ்டிக் ராப் உதவியுடன் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கமாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
இந்தக் கூட்டு உருளையை மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் ஒரு 30 நிமிடம் வைக்கவும். பின்னர் பேஸ்ட்ரி தாள்களை பிளாஸ்டிக் ராப் மேல் விரித்து நன்கு பாய் போன்று தட்டவும். இதன் உள்ள குளிர் சாதனப்பெட்டியில் இருந்து எடுத்த மாமிசத்தை நடுவில் வைத்து, பேஸ்ட்ரி தாள் கொண்டு மூடிநல்ல உருளையாக செய்து எடுக்கவும். அடுத்து முட்டை கலவையை மாவின் மேல் தூரிகை கொண்டு நன்கு தடவிக் கொள்ளவும்.
இதன் பின்னர் அகல் அடுப்பில் வெப்பத்தை 400 F/200 C அளவில் வைத்து, சூடானதும், தட்டில் வெலிங்டனை வைத்து சுமார் 20 நிமிடங்கள் வாட்டி எடுக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி சுமார் 10-15 நிமிடங்கள் ஆறவைத்து, அழகாக அரிந்து பரிமாறிக் கொள்ளலாம்.
– யோகி