காவல்துறை உங்கள் நண்பன் – திரைப்பார்வை
நடுத்தர வர்க்கத்தின் ஒட்டு மொத்தச் சாயலும் படத்தின் கதாநாயகனான சுரேஷ் ரவியின் முகத்தில் திரையில் மிகைப்பு இல்லாமல் வலம் வருகிறது.
ஒவ்வொருவருக்குள்ளும் மின்னலெனப் பளிச்சிடும் அச்சம் அவ்வப்போது நம் வாழ்ந்துவிடும் வாழ்க்கைக்கான தேடலின் குறுக்கே வந்து மறைவது தெரிந்து போகிறது.
இருவர் கொண்ட அழகான குடும்பம், ரவீனா ரவி உதிர்க்கும் காதலில் மேலும் அழகுடன் காட்டப்பட்டுள்ளது. எப்போதும் போல காதலை ஏற்றுக்கொள்ளாத ஒரு சமூகம் . காதலியின் தோள்களில் துயில் கொள்வதற்காகவே களைப்பின் சுமையை இரவில் களைந்துவிட்டு வரும் சுரேஷ் ரவி தினமும் காதலை வெவ்வேறு கோணத்தில் ஏற்றுக்கொள்கிறார். கடன் வாங்கினால் ,அரேபிய நாடுகளில் வேலைக்கென தஞ்சம் புகுந்து குறைந்தது ஐந்து வருடங்களில் இலட்சியத்தை அடைத்து விடலாம் என்னும் பிற்போக்கான சிந்தனையில் சிக்கிய கூட்டம் சமூகத்தில் புரையோடிப் போயிருப்பதை இயக்குனர் அதிகமாக விமர்சிக்காமல் இந்தக் கதைக்கேற்ப கையாண்டிருப்பது பொருந்திப் போகிறது .
இரவில் மனைவியை வக்கிரம் கொண்டு நெருங்கியவனைத் தேடும் பயணத்தில், சோதனைக்காக நிறுத்தப்படும் காவல்துறையிடம் செய்யப்படும் நியாயமான தர்க்கம் சுக்குநூறாக உடைந்து போவது இன்னும் எங்கோ ஒரு மூலையில் நடந்து கொண்டிருக்கத்தான் செய்கிறது. அப்படி தர்க்கம் செய்தவன் எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்படுகிறான் என்பதுதான் திரைப்படத்தின் மீதிக் கதை.
மைம் கோபிக்கு நிகர் மைம் கோபிதான் , எப்போதும் போல கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். திரைப்படத்தைத் தாண்டி அவர் மேல் கொள்ளும் வெறுப்பு நீங்காத நினைவாக நமக்குள் தங்கிப்போய்விடும் அளவுக்கான நடிப்பு. முருகேசன் கதாபாத்திரத்தில் காவலராக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணி காவல்துறையின் தத்துவார்த்தத்தைத் கோடிட்டுக் காட்டுவது, ஒரு சிலரின் தவறுகளால் ஒட்டு மொத்த காவல்துறையையும் களங்கத்திற்குள்ளாக்குவது சரியல்ல என்னும் கருத்தை திரைப்படத்தின் முதல் பகுதியில் முளைவிட செய்வது இயக்குனரின் நுணுக்கமான திரைக்கதை ஓட்டம்.
சுயமரியாதை பொங்கும் நேரத்தில் முதலில் கொதித்து பின் அடங்கிப் போகும் யதார்த்த நெருப்பில் குளிர்காயும் அதிகார ஆணவத்தை தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் படம். குருவிக்கூட்டை கலைப்பது போல அந்த குடும்பத்தில் இன்னொன்றாக இணைய வளர்ந்து வரும் கரு, அடக்கமுடியாத அழுகையில் கரைந்து போவது திரையில் மேலும் மென்சோகத்தை சேர்த்துக்கொள்கிறது. பொறியியல் துறை பயின்றவர்கள் பலர் இன்று அதைச் சார்ந்த பணியில்லாமல் உணவு விநியோகம் செய்யும் துறையில் விழுந்து கிடப்பது கல்வியின் கட்டமைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கதாநாயகன் அடிவாங்குவதை அவர்களே படம்பிடித்து அரசியல் செய்வது, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தாதது திரைப்படத்தின் பலவீனம். பின்னணி இசை காட்சிக்கேற்ப அழகாகக் கதை சொல்கிறது .
சில இடங்களில் சிறு நெருடல் இருந்தாலும் சொல்லவந்த கருத்தை ஆழமாக ஊன்றியிருக்கிறார் இயக்குனர்.
கதையோட்டத்தின் இடையில் வரும் பாடல்கள் கச்சிதமாகப் பொருந்திக்கொள்கிறது. ஒரு ஆவணப்படமாகவே பார்க்கப்படுகிறது இந்தப் படம்.
“இங்க மேல இருக்கிறவன் கை ஓங்கித்தான் இருக்கணும், கிழ இருக்கிறவன் கை ஏந்திதான் இருக்கணும் “ என்ற வசனமும் “இங்க போலீஸ் பப்ளிக் சர்வண்ட் இல்ல பப்ளிக் தான் போலீசுக்கு சர்வன்ட்” என்ற வசனமும் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்நோக்கியே வைக்கப்பட்ட வசனம் .
ஆகமொத்தம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பது வஞ்சப்புகழ்ச்சியென முடிகிறது…..
-சன்மது