மாறா – திரைப்பார்வை
மார்ட்டின் பிரகத் இயக்கிய மலையாளப் படமான ‘சார்லி ‘ யின் ரீமேக் தான் “மாறா’. ஒரு கதைசொல்லியாய், தன்னைத் திறந்து கொள்ளுகிற ஓவியம் , காட்சிக்குக்காட்சி புதுமைகொள்கிறது. பார்வதி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரதா ஸ்ரீநாத் மறுசீரமைப்புப் பணிக்காக ஒரு ஊருக்குச் செல்லும்போது , சிறு வயதில் அவளைப் பாதித்த ஒரு கதை, உருவம் பெற்று ஓவியமாய் அவள் முன் நிற்கிறது. அந்த ஓவியத்தை நெருங்கும் போது அது பல ஓவியமாய் விரித்துக்கொண்டு பல கதைகளைக் காட்சிப்படுத்துகிறது. ஓவியத்திற்குச் சொந்தக்காரன் யார் என்பதை தேடி கதை முழுவதும் அலைகிறாள் ஸ்ரதா.
மாதவன் நடிப்பு மிளிர்கிறது, ஓவியத்தில் தன்னைத் தேடிக்கொள்பவனாக வலம் வரும் கதாநாயகன் , பலருடைய வாழ்க்கையின் திறவுகோலை அடையாளங்கண்டு கொடுக்கிறார்; உறவுகளை வலுப்படுத்தும் காட்சிகளில் நடிப்பின் உச்சம் தொட்டிருக்கிறார்.
அலெக்சாண்டர் பாபுவின் நடிப்பு கொஞ்சம் வைகைப் புயலின் சாயல் இல்லாமல் இருந்திருந்தால் தனியாக ஜொலித்திருப்பார். சி.ஜே பாஸ்கர் ஒரு சில காட்சிக்கு வந்துபோனாலும் ஒரு இஸ்லாமிய மலையாளியைப் போலவே வாழ்ந்திருக்கிறார்.
வேசியாக சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தாலும், கவர்ச்சியைத் தன் உடலில் காட்டாமல் வசனத்தில் காட்டியிருக்கிறார், அபிராமி. இரவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவருந்தும் போது மௌலி கதை சொல்லுவதைக் காட்சிப்படுத்தியிருப்பது அபாரம் . மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளைக் காட்டும்போது நமக்குள் இருக்கும் மென்மை மனம் முழுதும் படர்கிறது. ஜிப்ரானின் இசை, காட்சிகளை மேலும் மெருகேற்றுகிறது.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சங்கு ஒரு குறியீடாக காண்பிக்கப்படுகிறது. பல மொழிகளில் தன் நடிப்புத்திறனால் வலம் வந்த பத்மாவதி ராவ் எதார்த்தமான முகபாவனைகளால் மனதில் தங்கிவிடுகிறார். முதுமையில் காதல் இன்னும் அழகாகத் தெரிகிறது. படத்தின் இறுதியில் மௌலி , கன்னியாஸ்திரியான மீனாட்சி என்கின்ற பத்மாவதி ராவிடம் காதலைச் சொல்ல மௌனமாய் நிற்பது , நம் இதயத்தை கனக்கச் செய்கிரது. இறுதியில் கதாநாயகனை ஸ்ரதா சந்திக்கும் போது ஓவியம் உயிர்ப்பெறுகிறது.
முடிவாக உறுதியான காதல் மாறா ………..என்பதில் விழுகிறது திரை.
–சன்மது