பெருந்தொற்றுக்கால இந்தியப் பயணம்
2020 எல்லோருக்குமே மறக்க முடியாத வருடமாகி போனது. அதில் நானும் விதிவிலக்கு இல்லை. 2020 டிசம்பர் மத்தியில் எனது தந்தை இறந்த செய்தி ஒரு இரவில் என்னை வந்தடைய, பயணம் என்பது கேள்விக்குரியதாக இருக்கும் அந்த நேரத்தில், பயணத்தைச் சாத்தியத்திற்குரியதாக்குவதற்கான கேள்விகளை எழுப்பினேன். கோவிட் காரணமாகப் பயணங்களைத் திட்டமிடுவது முற்றிலும் வேறாக மாறியிருந்தது. எந்தெந்த விமானச் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன, எவ்வித கோவிட் பரிசோதனை எடுக்க வேண்டும், இந்தியாவில் அமெரிக்கத் தூதரகங்கள் மூடிக்கிடப்பதால், இந்தியா சென்று திரும்பும் போது எப்படி விசா ஸ்டம்பிங் பெறுவது என நிறையக் கேள்விகள் இருந்தன. அலுவலகம், நண்பர்கள், இணையம் என எல்லாப் பக்கமும் கேட்டதில், பதில்கள் கிடைக்க ஆரம்பித்தன. பயணம் தொடங்கியது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், உலகமெங்கும் கோவிட் பயணக் கட்டுப்பாடுகள் துவங்கிய பிறகு, இந்தியாவிற்கு வரும் அனைத்து வெளிநாட்டு விமானங்களும் தடை செய்யப்பட்டிருந்தன. அதன் பிறகு, இந்தியா ‘வந்தே பாரத் மிஷன்’ என்ற பெயரில் வெளிநாட்டில் தவிக்கும் தனது நாட்டு மக்களை, இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கு, மே மாதம் முதல் ‘ஏர் இந்தியா’ மூலம் விமானச் சேவையைத் தொடங்கியது. மற்ற தனியார் விமானச் சேவைகளை நிறுத்திவிட்டு, இந்திய அரசின் விமானச் சேவையை மட்டும் நடத்தியதால், சர்ச்சை கிளம்பியது. பிறகு, Air Bubble என்கிற ஏற்பாட்டின்படி, இரு நாட்டிற்கும் இடையே ஏர் இந்தியா மற்றும் யூனைடட் ஆகியவற்றின் விமானச்சேவைகள் தொடங்கின. அதன்படி செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் எடுத்தேன்.
இந்தியாவிற்குப் பயணம் செய்வதற்கு முன், கோவிட் டெஸ்ட் எடுப்பதும், அந்த டெஸ்டில் நெகடிவ் ரிசல்ட் இருப்பதும் அவசியமாக இருக்கிறது. முக்கியமாக, எந்த வகை டெஸ்ட் என்பதும் கூட. PCR – RT எனும் வகை பரிசோதனை எடுக்க வேண்டுமாம். அமெரிக்காவில் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதாலும், வெளியே எங்குச் சென்றாலும் மாஸ்க் அணிந்து செல்வதாலும், அடிக்கடி சானிடைசர் போட்டுக் கை கழுவுவதாலும், முக்கியமாக ஏற்கனவே ஒருமுறை கோவிட் டெஸ்ட் எடுத்து இருந்ததாலும், ரிசல்ட் நெகடிவ் தான் வரும் என்ற நம்பிக்கை இருந்தது. ட்வின் சிட்டீஸ் சுற்றி பல இடங்களில் டெஸ்ட் எடுக்கும் வசதி இருந்தாலும், எங்கு உடனே எடுக்க முடியும் என்பதும், எங்கு உடனே முடிவு சொல்வார்கள் என்பதும் முக்கியமானதாக இருந்தது. அரசு பல இடங்களில் இலவச பரிசோதனை செய்கிறார்கள். ஆனால், முடிவு தெரிய 3-4 நாட்கள் ஆகும் என்றார்கள். சில இடங்களில் இன்ஸ்சூரன்ஸ் கவரேஜ் இருக்கும். ஆனால், உடனே அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதில்லை. இதை எல்லாம் பார்த்து, பக்கத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் பரிசோதனை செய்தேன். கிட்டத்தட்ட நூறு டாலர்கள் கட்டணம். இரவு பரிசோதனை முடிவு மின்னஞ்சலில் வந்தது. ரிசல்ட் – நெகட்டிவ்.
டிக்கெட் எடுத்த பிறகு, இந்த ரிசல்ட்டுடன் சுவிதா (Suvidha) என்றொரு சுய ஒப்புதல் படிவத்தைப் பூர்த்திச் செய்து, அனுமதி கோரி அனுப்பி வைக்க வேண்டும். அதாவது, எனக்கு கோவிட் இல்லை, நான் அரசாங்க தனிமைப்படுத்தல் (Institutional quarantine) இல்லாமல் வீடு செல்ல வேண்டும் என எழுதி அனுமதி கேட்கிறோம். சில மணி நேரத்தில் அனுமதி மின்னஞ்சல் நமக்கு வந்து சேரும். அரசாங்க குவாரண்டைன் தவிர்த்து நேரே வீடு செல்ல, இந்த அனுமதி தேவை. அதை ப்ரிண்ட் செய்து கொண்டேன்.
அமெரிக்காவில் விசாவில் இருப்பவர்கள் ஒவ்வொரு நீட்டிப்புக்கு (Extension) பிறகும், இந்தியாவிற்குச் சென்று திரும்பும் போது, அமெரிக்கத் தூதரகம் சென்று, தங்களது பாஸ்போர்ட்டில் புதிய விசா பெற்று வர வேண்டும். கோவிட் காரணமாக இந்தியாவில் அமெரிக்கத் தூதரகங்கள் மூடிக்கிடப்பதால், இந்தியா சென்ற பலரும் விசா பெற்று திரும்ப வர முடியாமல் இருக்கிறார்கள். நானும் சமீபத்தில் விசா நீட்டிப்பு செய்திருந்ததால், புது விசா வாங்க வேண்டியிருந்தது. அதனால் பயணம் செய்து திரும்ப, புது விசா எப்படி வாங்குவது என்று விசாரித்தேன். தூதரகங்கள் மூடி இருந்தாலும், ஆகஸ்ட் மாதம் முதல் ‘ட்ராப் பாக்ஸ்’ (Drop box) வசதி பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. ட்ராப் பாக்ஸ் வசதி மூலம் நேரடியாக தூதரகம் செல்லாமல், VFS அலுவலகம் மூலம் விசா பெற்று வரலாம். பொதுவாக, ட்ராப் பாக்ஸ் வசதி என்பது ஒரே வகை விசாவில் இருப்பவர்கள், கடந்த ஒரு ஆண்டிற்குள் விசா நீட்டிப்புச் செய்தவர்கள், ஒரே தூதரகத்தில் விசா பெறுபவர்கள் எனச் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் வசதி ஆகும். இந்த நிபந்தனைகள் எனக்குப் பூர்த்தி ஆனதால், என்னால் ட்ராப் பாக்ஸ் வசதியைப் பெற முடியும் என்று தெரியவந்தது. ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருந்தது.
முன்பெல்லாம் ட்ராப் பாக்ஸ் வசதி பெற, எச்சமயத்திலும் VFS அலுவலகம் சென்று, பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களைச் சமர்பித்துவிட்டு வரலாம். VFS அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் தூதரகம் போய், அங்குச் சரி பார்க்கப்பட்டு, விசா ஒட்டப்பட்டு, நமக்குத் திரும்ப அனுப்பி வைக்கப்படும். ஆனால், தற்போதோ VFS அலுவலகம் செல்லவே, அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டியுள்ளது. அதுவும், தற்சமயம் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளதாகத் தெரிந்தது. அப்பாயிண்ட்மெண்ட் பதிவு செய்வதற்கு, டெலிகிராம் ஆப்பில் குழு அமைத்து பலர் செயல்பட்டு வருகிறார்கள். அந்தக் குழுவில் இணைந்து, எப்போது நேரம் கிடைக்கிறது என்று பார்த்து அப்பாயிண்ட்மெண்ட் பதிவு செய்துக்கொண்டேன். இதைச் சுருக்கமாகச் சொல்லி விட்டாலும், நிறையவே மெனக்கெட வேண்டியிருந்தது.
எனது பயணத்தின் வழி, சிகாகோ – டெல்லி என்பதாக இருந்தது. சிகாகோவில் விமானம் ஏறுவதற்கு முன்பு, உடலின் வெப்பத்தைச் சோதனை செய்தார்கள். மாஸ்க், ஷீல்ட் கொடுத்துக் கட்டாயம் அணிய சொல்கிறார்கள். குறிப்பிட்ட இருக்கைகளில் உட்காருபவர்களுக்கு வெள்ளை நிற அங்கி கொடுத்து போட சொல்கிறார்கள். இருக்கையில் அமர்ந்தவுடன், ஒரு பை நிறைய ஸ்னாக்ஸ், ஜூஸ் போட்டு கொடுக்கிறார்கள். விமானப் பணியாளர்களின் நடமாட்டத்தைக் குறைப்பதற்கு இப்படி ஒரு திட்டம். மற்றபடி, இருமுறை வந்து உணவு கொடுக்கிறார்கள். கிட்டத்தட்ட பதினான்கு மணி நேர பயணம் முழுக்க மாஸ்க், ஷீல்ட் அணிந்து இருப்பது கொடுமையான அனுபவம் தான். ஏற்கனவே, இறப்பின் காரணமாக இருக்கும் மன உளைச்சலுடன், இது போன்ற வலி உளைச்சலும் சேர்ந்து எப்போது இறக்கிவிடுவார்கள் என்று கடிகாரத்தைப் பார்த்தபடி நேரத்தைக் கடத்தினேன்.
இப்படியெல்லாம் மற்ற நிறுவனங்களைத் தடை செய்துவிட்டு ஓட்டினால் தான், இப்படிக் கூட்டமாக ஏர் இந்தியாவுக்குப் பயணிகள் கிடைப்பார்கள் போலும். அந்த லட்சணத்தில் விமானத்தின் உட்புறத்தைப் பராமரிக்கிறார்கள். அந்த இருக்கைகளைப் பார்த்தால், டவுண் பஸ் போலவே தோற்றமளித்தது. மற்றபடி, விமானத்தின் இன்ஜின், இறக்கை, டர்பைன், டயர் போன்ற முக்கிய விஷயங்களை நன்றாகப் பராமரிப்பார்கள் என்று நம்புவோமாக.
இந்தியாவில் இறங்கியவுடன் உடல் வெப்பம், ஆக்சிஜன், அமெரிக்காவில் எடுத்த பரிசோதனை முடிவுகள், சுவிதா அனுமதி ஆகியவற்றைச் சரி பார்க்கிறார்கள். எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில், நம்மை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். இல்லாவிட்டால், அங்கேயே தனிமைப்படுத்தும் ஏற்பாடு செய்து வைத்துவிடுவார்கள். இதுவரை எங்கும் மாஸ்க் தான்.
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தால், ஊபர், ஓலா போன்ற டாக்ஸி, ஆட்டோக்களின் ட்ரைவர்கள் மாஸ்க் அணிந்து வருகிறார்கள். முன்னால் இருக்கும் இருக்கைக்கும், பின் இருக்கைக்கும் இடையில் கண்ணாடித்தாளில் தடுப்பு வைத்து ஓட்டுகிறார்கள். இதையெல்லாம் காணும் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. ஆனால், அந்தத் திருப்தி ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. ஏர்போர்ட் வண்டியிலிருந்து ஊருக்குள் இறங்கினால், ஊர் சகஜ நிலைக்குத் திரும்பியிருக்கிறது. நூற்றில் ஐந்து பேர் மாஸ்க் போட்டு இருந்தால் ஆச்சரியம் தான். அதிலும் பலர் நாடிக்கு தான் மாஸ்க் போட்டிருந்தார்கள். கூட்டத்தில் கொரோனாவை காலில் போட்டு மிதித்துக் கொன்ற ஆணவத்துடன் சுற்றிக்கொண்டிருந்தார்கள் மக்கள்.
(தொடரும்)
- சரவணகுமரன்