\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மாஸ்டர்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகத் திட்டமிட்டப்பட்டு, பிறகு கொரோனா லாக்டவுனில் திரையரங்குகள் மூடப்பட, மாஸ்டர் படத்தின் ரிலீஸும் தடைப்பட்டு நின்றது. அதன் பிறகு, திரையரங்குகள் எப்போது திறக்கப்படுமோ, படம் எப்போது வெளியாகுமோ என்பது தான் கடந்த ஆண்டுக் கொரோனா தடுப்பூசியை விட விஜய் ரசிகர்களது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. நடுவில் ஒரு பக்கம் ஓ.டி.டி பேச்சுவார்த்தைகள் நடக்க, இப்படத்தை வீட்டிலிருந்தே பார்க்க வேண்டி வருமோ, வழக்கமான திரையரங்கு கொண்டாட்டத்தை அனுபவிக்க முடியாதோ என்ற வருத்தம் ரசிகர்களைத் தொற்றிக்கொண்டது.

ஒருவழியாக ஐம்பது சதவித இருக்கைகளுடன் திரையரங்குகள் திறப்பதற்கான அரசாணை வெளிவர, படம் திரையரங்கில் வெளிவருவதற்கான முயற்சிகள் ஆரம்பித்தன. பொங்கலுக்குப் படத்தை வெளியிடுவது என்ற முடிவெடுத்தவுடன், திரையரங்கு இருக்கை எண்ணிக்கை என்பதை நூறு சதவிகிதம் என்று உயர்த்த கோரி படக்குழுவினர் முயற்சி எடுத்தனர். படத்தின் நாயகனான நடிகர் விஜய், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து இதற்கான கோரிக்கையை வைத்தார். வரவிருக்கும் தேர்தலை முன்வைத்து, அவரும் நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட, மருத்துவர்கள் மற்றும் இன்ன பிற துறையினரிடம் இருந்து அதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, இந்த ஆணை திருப்பி வாங்கப்பட்டது.

ஆனாலும் படம் பொங்கலுக்குத் திரையரங்கில் வெளிவந்தப்போது, எந்தச் சட்டத்திட்டமும் கடைப்பிடிக்கப்படவில்லை. திரையரங்குகளில் இருக்கும் இருக்கைகள் போதாமல், எக்ஸ்ட்ரா இருக்கை போட்டு, இருக்கை சதவிகிதத்தை நூறுக்கு மேலே கொண்டு போனார்கள். படத்திற்குத் திரையரங்கில் அப்படி ஒரு வரவேற்பு இருந்தது. அதே சமயம், மருத்துவர்கள் உள்ளிட்ட சிலர் பயந்தது போல், இதனால் கொரோனா எண்ணிக்கை இதுவரை (படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகிறது) கூடியது போல் இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

என்னதான் திரையரங்குகள் திறக்கப்பட்டு, மக்கள் கூட்டத்தைத் திரையரங்குக்கு மாஸ்டர் அழைத்துவந்தாலும், அதற்கான உண்மையான கணக்குகளைத் திரையரங்குகள், மாஸ்டர் தயாரிப்பாளருக்கு வழங்கவில்லையாம். இதனால், ஒரு மாதம் கழித்து ஓடிடியில் வெளியிட வேண்டிய படத்தை, தயாரிப்பாளர் இரண்டே வாரத்தில் அமேசான் ப்ரைமில் வெளியிட்டார். தற்சமயம் படம் திரையரங்கு, ஓடிடி இரண்டிலுமே ஓடுகிறது.

சரி, இனி படத்திற்குள்ளே செல்வோம்.

சென்னையில் உள்ள ஒரு மேல்தட்டுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் ஜேடிக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. ஆனால், கல்லூரியில் இருக்கும் பிற பேராசிரியர்கள் அவருக்கு எதிர் முகாமில் இருக்கிறார்கள். குடி, தூக்கம் என்றிருக்கும் வித்தியாசமான பேராசிரியரான ஜேடி, அவர்களது எதிர்ப்பை மீறி கல்லூரி தேர்தலை நடத்த, அதில் ஏற்படும் பிரச்சினையால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டு, நாகர்கோவிலிலிருக்கும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். அந்தப் பள்ளியிலிருக்கும் சிறுவர்களை, தவறான வழியில் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பவானியுடன் ஜேடி மோதி, அச்சிறுவர்களை அங்கிருந்து மீட்டெடுப்பதே மிச்சக்கதை.

ஜேடியாக விஜய். பவானியாக விஜய் சேதுபதி. நாயகனுக்கு இணையான வேடம், எதிர்நாயகனுக்கு. கதை தொடங்குவதே விஜய் சேதுபதியுடம் இருந்துதான். சில இடங்களில் நாயகன் யார் என்ற சந்தேகமே வந்துவிடுகிறது, விஜய் சேதுபதி நடிப்பைப் பார்க்கும் போதும், அதற்கான ரசிகர்களின் வரவேற்பைக் காணும்போதும். நகைச்சுவை கலந்த வில்லத்தனம் ஆகட்டும், முரட்டுத்தனமான குத்துவிடும் அதிரடி ஆகட்டும், அசால்டாகச் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.

தனக்குச் சமமான வேடம், அதில் விஜய் சேதுபதி எனும் மற்றொரு முன்னணி நடிகர், ஆகியவற்றை ஒப்புக்கொண்டு இப்படத்தில் நடித்திருப்பது விஜய்யின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. இனிமேல் இதுபோல் ஒப்புக்கொண்டு நடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஆனால், ரசிகர்களுக்கு அவரது வழக்கமான படம் போல் இல்லாமல், இது வித்தியாசமானதாக அமைந்துள்ளது. விஜய்யை ரசித்த அதே அளவுக்கு, அவர்கள் விஜய் சேதுபதியையும் ரசித்தார்கள். காலம் கூடக்கூட சுவை கூடும் மதுரசமான ‘வைன்’ போல் வயதாக வயதாக அழகாகிக்கொண்டே, ஆட்டம்பாட்டத்துடன் நடிப்பையும் மெருக்கேற்றிக்கொண்டுச் செல்லும் தங்களது ஆதர்ச நாயகனைக் கண்டு மகிழ்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

இவர்களுக்கு அடுத்தபடியாகக் கவனத்தைக் கவர்பவர், அர்ஜூன் தாஸ். அவருடைய நடிப்பில் பாதி வேலையை அவரது குரலே செய்துவிடுகிறது. சிறுவயது விஜய் சேதுபதியாக மாஸ்டர் (தற்போது யங்ஸ்டர்) மகேந்திரன் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் அடித்தளத்தைச் சரியாக அமைக்க உதவியிருக்கிறார். மற்றபடி பிற நடிகர்கள் அனைவரும் கெஸ்ட் ரோல் வகையறாக்கள் தான். மாளவிகா, ஆண்டிரியா, சாந்தனு, தீனா எனப் பெரும் நடிகர்பட்டாளம் இருந்தாலும், சில காட்சிகளில் தலையைக் காட்டிவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

படத்தின் இன்னொரு நாயகன் என்று அனிருத்தை தாராளமாகச் சொல்லலாம். பாடல்கள், பின்னணி இசை என்று வெளுத்துக்கட்டியிருக்கிறார். இரு முக்கியக் கதாபாத்திரங்களையும் இணைத்தபடியான கதை நகர்வு, முடிவில் இரண்டும் ஒன்றிணைவது என்ற சுவாரஸ்யமான திரைக்கதையை இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து அமைத்திருக்கிறார்கள் இயக்குனர் ரத்னகுமாரும், வசனகர்த்தா பொன் பார்த்திபனும். ஜேடி பாத்திரப்படைப்பு இன்ஸ்ட்ரட்டிங். சொந்தக் கதை என்று பழைய சினிமா கதைகளைச் சொல்வது சிரிக்க வைக்கும் காமெடி. அதிலும், அஜித்தின் காதல் கோட்டை கதையைச் சொல்லி, அதில் முடிவில் நாயகி வாயால் ஒரு லாஜிக் கேள்வியைக் கேட்க வைத்திருப்பது ரசிகர்களைக் குஷிப்படுத்தியிருக்கும். அதே போல், விஜய் கேரியரில் விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத கில்லி கபடி பாடலை, சரியாக இப்படத்தில் நுழைத்திருப்பது புத்திசாலித்தனம்.

கமர்ஷியல் அம்சங்கள் இவ்வளவு இருந்தாலும், படம் கச்சிதம் என்று முடியாமல் போனதற்குப் படத்தில் தொடர்ந்து அடிக்கடி வந்து செல்லும் சண்டைக்காட்சிகளைச் சொல்ல வேண்டும். படமாக்கம் நன்றாக இருந்தாலும், ஓவர் டோஸ். அதிலும் அம்பு விட்டு லாரிகளைக் கவிழ்ப்பதெல்லாம் ஓவரோ ஓவர். குடும்பத்துடன் வருவார்கள் என்று பொதுவாக விஜய் படத்தில் அதீத வன்முறை, கெட்ட வார்த்தை போன்றவற்றைத் தவிர்ப்பார்கள். இதில் அதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை.

முதல் பாதி முழுக்கக் குடி போதையில் இருந்துவிட்டு, இறுதியில் குடி அரசியலை லைட்டாகப் பேசியிருக்கிறார்கள். மாஸ் கமர்ஷியல் படம் என்ற அளவில் ரசிகர்களை வரவேற்பைப் பெற்று வெற்றிப் பெற்றிருக்கிறாகள். கொரோனாவிற்குப் பிறகான காலகட்டத்தில் திரையரங்குகளின் நிலையென்ன என்றிருக்கும் போது, ரசிகர்களைத் திரையரங்கு நோக்கி பெருமளவு வர வைத்திருப்பதில் ‘மாஸ்டர்’ முக்கியப் படமாகியிருக்கிறது. அதே போல், ஓ.டி.டி.யில் வெகுவிரைவில் வெளியானாலும், ஆர்வம் கொண்ட ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என்பதில் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பாடம் நடத்தியிருக்கிறார் இந்த மாஸ்டர்.

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad