\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பெருந்தொற்றுக்கால இந்தியப் பயணம் – 2

(பாகம் 1)

அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த பிறகு, சாதாரணமாக நிகழும் பல விஷயங்கள் முதல் பார்வையில் வித்தியாசமாகத் தெரிந்தன. அனைத்துக் கடைகளும் திறந்து இருக்க, கடைக்காரர்களும் சரி, வாடிக்கையாளர்களும் சரி, மாஸ்க் இல்லாமல், பயம் இல்லாமல் சென்று வந்து கொண்டிருந்தனர்.

கொரோனா லாக் டவுன் தொடங்கிய காலத்தில், மாஸ்க் போடாத மக்களைப் போலீஸ்காரர்கள் விரட்டி பிடித்து அபராதம் வசூலித்ததை டிவியில் பார்த்திருக்கிறேன். இப்போது போலீஸ்காரர்களே மாஸ்க் போடாமல் கேஷுவலாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, கொரோனாவிற்கு இந்தியாவில் இருந்த மரியாதை புரிந்தது. வெகு சொற்பமானவர்களே மாஸ்க்கை சரியாக அணிந்து வெளியே சென்றனர். மற்றபடி, எல்லோரும் மாஸ்க் வைத்திருந்தனர். கையிலோ அல்லது பெரும்பாலும் நாடியில் அணிந்தே சுற்றி வந்தனர்.

ஏர்போர்ட்டில் பார்த்த நடைமுறைக்கும் வெளியில் பார்த்ததற்கும் பெரிய வேறுபாடு தெரிந்தது. ஏர்போர்ட் என்றில்லை, பெருநகரங்களில் இருக்கும் பெரிய நிறுவனங்களில் மாஸ்க், சானிடைசர் என்று கொரோனா சம்பிரதாயங்களைக் கடைபிடிக்கிறார்கள். மற்ற இடங்களில் இந்தியாவின் வழக்கமான முழுச் சுதந்திரக்காற்றை மக்கள் சுவாசிக்கிறார்கள். மற்ற நாடுகளில் கட்டுப்பாடுடன் இருந்துவிட்டு, புதிதாக ஊருக்கு வருபவர்களுக்குத் தான் இதைக் காண்பதற்குப் பயமாக இருக்கிறது.

ஊருக்குச் சென்ற ஒரு வாரம் சொந்த காரியங்களைக் கவனித்துக்கொண்டு வீட்டில் இருந்தேன்.பின்பு, பெங்களூரில் VFS ஆபிஸ் செல்ல வேண்டி இருந்தது. பேருந்தில் செல்ல நினைத்து, ரெட் பஸ் இணையத்தளத்தில் டிக்கெட் தேடினேன். முன்பு ஒரு டஜனுக்கு மேல் பேருந்து சேவைகள் எங்கள் ஊரிலிருக்கும். இப்போது நாலைந்து பேருந்துகளை மட்டும் காண முடிந்தது. அதில் சில பேருந்துகளில் கோவிட் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக ஒரு குறியீடு போட்டு குறிப்பிட்டிருந்தார்கள். அதாவது, பணியாளர்கள் மாஸ்க் அணிந்திருப்பார்கள், டெம்ப்ரேச்சர் சோதனை எடுப்போம், சானிடைசர் கொடுப்போம் என்பது போல வாக்குறுதிகள். அடடா! ரொம்ப நல்லவிங்களா இருக்காங்களே! என்று அதை நம்பி அது போன்ற ஒரு பேருந்தில் டிக்கெட் எடுத்தேன். ரொம்ப நாள் முன்பு கொடுத்த வாக்குறுதி போல!! அதில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த விஷயமும் இல்லை. எல்லோரையும் போல் அவர்களும் மாமூல் வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பார்கள் போலும்.

பொதுவாகப் பெங்களூர் VFS அலுவலகத்தில் கூட்டம் அலைமோதும். இப்போது அந்த அலுவலகம் வெறிச்சோடி இருந்தது. இணையத்தில் இந்த அப்பாயின்மெண்ட் கிடைக்க, பல வாரங்களாக அவ்வளவு போராட வேண்டியிருந்தது. அதற்கு நேர் மாறாக இங்கு அலுவலகம் காலியாக இருந்தது. அப்பாயின்மெண்ட் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே சென்றதால், தயக்கத்துடன் அங்கிருந்த காவலரிடம் விசாரித்தேன். முதலில் கையில் இன்ஃப்ராரெட் ஒளியை பீய்ச்சி உடல்வெப்பத்தைச் சோதனை செய்தார். அடுத்தது, கையில் சானிடைசர் கொடுத்துத் தேய்த்துக்கொள்ளச் சொன்னார். பிறகு, ஆவணங்களை வாங்கிச் சரிப்பார்த்துவிட்டு உள்ளே போகச் சொன்னார்.

அதன் பிறகு, மெட்டல் டிடெக்டர் பரிசோதனை. அதையடுத்து, பாஸ்போர்ட் மற்றும் விசா சம்பந்தப்பட்ட படிவங்களை நம்மிடமிருந்து வாங்கும் இடத்திற்குச் சென்றேன். முன்பு, இங்கு வந்திருந்த போதெல்லாம் நீண்ட வரிசைகள் இரண்டு-மூன்று இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்தச் சமயம், நான் மட்டும் தான் அந்த அறையில் ஆவணங்களைச் சமர்பிக்க வந்திருக்கிறேன். வாங்குவதற்கு இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். போன வேகத்தில் மடமடவென வாங்கினார்கள். மூன்று வாரத்திற்குள் பாஸ்போர்ட் திரும்ப கிடைக்கும் என்றார்கள். இதுவும், பொதுவாக ஒரு வாரத்திற்குள் கிடைக்கும். மூன்று வாரங்கள் என்றாலும், இந்த நேரத்தில் கிடைத்தால் போதும் என்பது போல் இருந்தது.

பெங்களூரில் கார் ஓட்டுபவர்கள் அனைவரும் மாஸ்க் போட்டுக்கொண்டு ஓட்டுவதைக் காண முடிந்தது. தனியாகக் கார் ஓட்டிக்கொண்டு போனாலும், மாஸ்க் இல்லாவிட்டால் போலீஸ் பிடிக்கிறார்களாம். பெரும்பாலும், வீட்டைவிட்டு வெளியே வரத் தேவையில்லை என்ற அளவிற்கு, ஸ்வீக்கி, சொமாட்டோ போன்ற உணவு, மளிகை சாமான்கள் டெலிவரி செய்யும் இணையச் சேவைகள் பெருகி உள்ளன. டெலிவரி செய்பவர்களின் உடல்நிலை விபரங்களையும் அதில் பகிர்கிறார்கள். வெளியே சென்று தான் ஆக வேண்டும் என்பது போன்ற நிலை வந்தாலும், மொபைல் மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கு ஏற்ப, சிறு கடைகளிலும் பேடிஎம், கூகிள் பே, அமெசான் பே, ஃபோன்பே என ஏகப்பட்ட ஸ்டிக்கர்களைச் சுவற்றில் ஒட்டி வைத்திருக்கிறார்கள். ஒரு பக்கம் இப்படி வெளியே செல்லாமல் வீட்டில் இருந்தே தேவையான பொருட்களை வாங்கும் வசதியிருந்தாலும், மக்கள் வெளியே பெருமளவில் சென்று வருவதும் அப்படியே தான் இருப்பதைக் காணும்போது, இது வசதி பொறுத்தது அல்ல, மனநிலை பொறுத்தது என்பதைப் புரிந்துக்கொள்ள முடிந்தது.

நான் ஊரில் இருந்த சமயத்தில் தான், UK வகைக் கொரோனா பற்றிய செய்திகள் வெளிவந்து, சில நாடுகளிடையே விமானச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தியா அமெரிக்கா இடையேயான விமானச் சேவையில் நல்லவேளையாக எந்தத் தடையும் வரவில்லை. இது போன்ற தடங்கலோ, நினைப்போ மற்ற சமயங்களில் இருக்காது என்பதால் இதுவும் இந்தப் பயணத்தில் புதுசு.

ஒவ்வொரு விழாவுக்கும், நிகழ்வுக்கும் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் கோவிட் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் வந்துக்கொண்டிருந்தன. வெளிப்புறத்தில் கூட்டத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது, பொங்கல் கரிநாளுக்கு ஊர் சுற்றக்கூடாது எனப் பல கட்டுப்பாடுகளைச் செய்திகளில் காண முடிந்தன. இது போன்ற நாட்களில் கூட்டம் சேரும் சுற்றுலா இடங்களை அரசு மூடி வைத்ததையும் அறிய முடிந்தது. இம்மாதிரியான நடவடிக்கைகளின் பின் உள்ள நல்லெண்ணத்தைப் புரிந்துக்கொள்ள முடிந்தாலும், அதே நேரத்தில் 2021 பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைக் பேதமில்லாமல் அனைத்து கட்சிகளும் கூட்டம் கூட்டி நடத்திவருவதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாதது ஆச்சரியமளித்தது. சுற்றுலாத்தலங்களை மூடி வைத்தாலும், கோவில், தியேட்டர், மார்க்கெட் போன்ற இடங்கள் முழுமையாகத் திறக்கப்பட்டு ஜனத்திரளால் பண்டிகைக் காலத்தில் நிரம்பியிருந்தன. கொரோனா வைரஸ் எங்குச் செல்ல வேண்டும், எங்குச் செல்லக் கூடாது என்று அதற்கு ஏதும் வழிக்காட்டுதல் கொடுத்திருந்தார்களோ, தெரியவில்லை!!

பொதுவாக, விசா வேண்டி கொடுத்திருக்கும் பாஸ்போர்ட்டை அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைத்துவிடுவார்கள். ஆண்டு இறுதி விடுமுறை காலம் மற்றும் குறைவான தூதரகப் பணியாளர்கள் போன்ற காரணங்களால், என்னுடைய பாஸ்போர்ட் கிடைக்க மூன்று வாரங்களாகி விட்டது. இதனால் மேலும் ஒருவாரம் இந்தியப் பயணத்தை நீட்டிக்க வேண்டியிருந்தது. இதே சமயத்தில் அமெரிக்க அரசியல் வானில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குப் பயணம் செய்பவர்கள் கோவிட் பரிசோதனை செய்து, நெகட்டிவ் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என்ற விதி, ஜனவரி 26ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்ற செய்தி வெளிவந்திருந்தது.

இந்தச் செய்தியைக் கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. இந்தியாவிற்குள் நுழைய வேண்டுமென்றால், அதாவது குவாரண்டைன் இல்லாமல் நேரே வீடு செல்ல வேண்டுமென்றால், கோவிட் நெகட்டிவ் ரிசல்ட் அவசியம் என்ற விதி பல மாதங்களாக நடைமுறையில் உள்ளது. இது போன்ற நடைமுறை தான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகளிலும் இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். அதனால் அமெரிக்காவிலும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். இனி தான் இது உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் நடைமுறைக்கு வர இருக்கிறது என்று கேள்விப்பட்டபோது ஆச்சரியம் வருவது இயல்புதானே!!

26ஆம் தேதிக்கு முன்பு, நான் அமெரிக்காவுக்குத் திரும்ப இருந்ததால், அவசியமாகக் கோவிட் சோதனை எடுத்திருக்கத் தேவையில்லை. இருந்தாலும், ஒரு தனிப்பட்ட திருப்திக்காகச் சோதனைக்குச் சென்றேன். அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் கோவிட் சோதனை எடுக்கிறார்கள். அரசு மருத்துவமனையில் எடுத்தால், முடிவு தெரிய சில பல நாட்கள் ஆகுமாம். அதனால் பெரும்பாலோர் வெளியே தனியார் லேப்களில் எடுக்கிறார்கள், எடுக்கப் பரிந்துரைக்கிறார்கள். நானும் ஒரு தனியார் லேப்பில் எடுக்கச் சென்றேன். ஆதார் கார்டு, பாஸ்போர்ட், மொபைல் போன் என ட்ராக் செய்வதற்குப் பல எண்களைக் கேட்கிறார்கள். ரிசல்ட் மட்டும் பாஸிட்டிவ் என்று வந்தால், அவ்வளவுதான். எங்கிருந்தாலும் நம்மைப் பிடித்துவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அது வேறு ஒரு கலக்கத்தை உண்டாக்கியது.

நல்லவேளையாக, அன்று இரவு ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்தது. பரீட்சை ரிசல்ட் வந்த போது கூட, அவ்வளவு நிம்மதி வந்ததில்லை. அன்று வந்தது. பின்ன, இதற்காகத் திரும்பவும் பயணத்தை மாற்றியமைக்கவேண்டுமே!! அது போல் எதுவும் நேராமல், திட்டமிட்டபடி ஊர் திரும்ப, பயணத்தைத் தொடங்கினேன். கிளம்பும் போது இருந்தது போல் இல்லாமல், பாஸ்போர்ட், விசா தவிர வேறெந்த சோதனையும் இல்லாமல் வீடு திரும்ப முடிந்தது. ஒரு மாதம் கழித்து வீடு திரும்பினாலும், மனைவி, குழந்தைகளைத் தொட்டு அணைக்காமல் நேரே பாத்ரூம் சென்று கதவை அடைத்துக்கொண்டது தான் எல்லோருக்குமே சிரமமாக இருந்தது.

 

(முற்றும்)

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad