இதயத்தில் முள் தோட்டம் (தொடர் கதை – பகுதி 3)
மூன்று மாதங்கள் மிக வேகமாக ஓடிவிட்டது. டி.எஸ்.பி ராஜீவுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. எந்தப் பக்கம் சென்றாலும் ஒரு முட்டுச் சுவர்! அவருக்கு மேலிடத்திலிருந்தும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களிலிருந்தும் நிறைய பிரஷர் வர ஆரம்பித்தது. அதனால் சந்தேக நபர்களில் சிலரை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. எந்த ஆதாயமும் இல்லை, அவர்கள் அவரை மேலும் குழப்பும் விதமாகப் புதிய “லீட்ஸ்” கொடுத்தனர். அவரது நேரத்தை மேலும் அது வீணடித்தது.
அன்று புதன்கிழமை. அவர் வேலை அழுத்தத்திலிருந்து விடுபட, ஒரு நாள் விடுமுறை எடுத்தார். டிவியில் “கலகலப்பு 1” படம் ஓடிக் கொண்டியிருந்தது. அவர் சோபாவில் “ஹாய்யாக” உட்கார்ந்துகொண்டு, பீட்சா சாப்பிட்டுக்கொண்டே என்ஜாய் பண்ணிக்கொண்டிருந்தார். டி.எஸ்.பி ராஜீவ் ஒரு வித்தியாசமான பேர்வழி. அவர் இலக்கியப் புத்தகங்களை மிகவும் விரும்பிப் படிப்பார். கிரைம் புத்தகங்கள் அறவே பிடிக்காது. அவர் நகைச்சுவை திரைப்படங்கள் என்றால் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார். அதிரடி திரைப்படங்கள் வேப்பங்காய்!!! ஆனால் அவர் சென்னை மாநகரத்தின் நம்பர் ஒன் குற்றவியல் நிபுணர்! நடிகை கவிதா நடித்த சீரியஸ் ரோல் திரைப்படங்களை விட நகைச்சுவை திரைப்படங்கள் பெரிய அளவில் பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்றன. டி.எஸ்.பி ராஜீவுக்கு அவள் நடித்த நகைச்சுவை திரைப்படங்கள் ரொம்ப பிடிக்கும். இந்த வழக்கை விரைவாக தீர்க்க அவர் நினைப்பதற்க்கு அதுவும் ஒரு காரணம்!
மீனா யாரையோ திட்டிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.
“என்ன நடந்தது? எவ்ரிதிங் ஓகே?” எனக் கேட்டார் ராஜீவ்.
“காய்கறி வண்டிக்காரனுடன் சண்டை. நானும், நம்ம தெருவில இருக்கிற சிலபேரும் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு, அந்த ஆளோட பெரிய சண்டை போட்டோம். ஒரே கெட்டு போன காய்கறிகள், இரண்டு நாள் கூட தாங்காது.”
“அதனால இப்ப என்ன? அதனாலதான் உழவர் சந்தைக்குப் போக ஆரம்பித்தோம்!. “
“ராஜீவ், அலோவ் மீ டு கம்ப்ளீட்” என்று சற்று கோபமாக சொன்னாள்.
“சரிம்மா, சொல்லு” என்று பம்மினார் ராஜீவ்!
“அத நினைப்பில வச்சுக்கிட்டு நம்ம தெருப் பக்கம் வரதே இல்லை. எனக்கு அவசரமா தக்காளி தேவைப்பட்டுது. நான் அவனைப் பக்கத்து தெருவில பார்த்தேன். பழசை மனசுல வச்சுக்கிட்டு தரமாட்டேன்னு சொல்லிட்டான். நான் உங்கள் பெயரைப் பயன்படுத்த மாட்டேன் என்று உங்களுக்குத் தெரியும்.” என அவள் சொல்லும்பொழுதே, ராஜீவ் சோபாவில் இருந்து துள்ளிக் குதித்து எழுந்தார். அவர் தனது செல்ஃபோனில் ஷண்முகத்திற்கு கால் செய்தவாறே அலுவலக அறைக்குள் சென்றார். மீனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் மேலும் விரக்தியடைந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். சிறிது நேரம் சென்றது.
கிச்சனில் இருந்த மீனாவின் பின்பக்கத்திலிருந்து ஒரு குரல் “மீனா டியர், ஐ திங்க் யு கிராக்ட் த கோட்!!! விவரம் அப்பறமா சொல்றேன்.” என்று சொல்லிக்கொண்டே அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார் ராஜீவ்.
மீனா மனதிற்க்குள் ” நான் தக்காளி கிடைக்கலைன்னு சொன்னேன், ஆனா இவர் நான் கேஸை சால்வ் பண்ணிட்டேன்னு சொல்றாரு! அதனாலதான் ஒரு போலீஸ்காரரை கல்யாணம் பண்ணிக்காதேன்னு எங்க அம்மா சொன்னாங்க போல!” நினைத்துக் கொண்டாள்.
அவர் தனது சொந்த காரை ஓட்டிக் கொண்டே கவிதா வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தார். ராஜேந்திரன், தன்ராஜ் மற்றும் மாணிக்கத்தை அவள் வீட்டிற்கு முன்னால் ஆஜராகும்படி சொன்னார். சிறிது நேரத்தில் அவர் கவிதா வீட்டை வந்தடைந்தார்.
“இந்த கேஸ்ல எனக்கு ஒரு முக்கியமான துப்புக் கிடைச்சிருக்கு” என்று சொல்லிவிட்டு, தன் வீட்டில் நடந்ததை ஒன்று விடாமல் அவர்களிடம் சொன்னார்.
“கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னாடி இங்கே ஒரு அயர்ன் தள்ளுவண்டி கடை இருந்துருக்கு. இந்த தெருவில் உள்ள எல்லாரும் அவன்கிட்டதான் அயர்ன் பண்ண ட்ரெஸ்ஸை கொடுப்பாங்க. ஒரு நாள் கவிதா மேரேஜ் டிரஸை அயர்ன் பண்ணச் சொல்லி அவன் கிட்ட கொடுத்திருக்காங்க. தட்ஸ் ஹர் ஃபேவரிட் அண்ட் சென்டிமென்டல் டிரஸ்! அவன் குடிபோதையில ட்ரெஸ்ஸை கொஞ்சம் பொசுக்கிட்டான். அந்த கோபத்தில அவனை “பளாரென்று’ அறைந்து இருக்காங்க. அதுக்கப்புறம் அவனை அந்தத் தெருவிலிருந்து வேலை செய்யறதையும் நிப்பாட்டிட்டாங்க” என்றார் ராஜீவ்.
“சரி சார், இது இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு நிகழ்ச்சி. இந்த அளவுக்குப் போயிருப்பான்னு நினைக்கிறீங்களா?” எனக் கேட்டார் ராஜேந்திரன்.
“மை கான்ஃபிடன்ஸ் லெவல் இஸ் அபௌட் 30%. கவிதா அவனை அறைந்ததுக்கும், கொலைகாரன் அவளை அறைந்ததுக்கும் ஏதோ ஒரு லிங்க் இருக்கறதா என் மனசுல படுது. அவன் வீடு எங்கே இருக்குன்னு இப்ப கண்டு பிடிக்கணும்”
அவரும் அதற்கு மேல் தன் மேலதிகாரியைக் கேள்வி கேட்க விருப்பப்படவில்லை. ஆனால் ராஜீவின் உள்ளுணர்வின் அடிப்படையில் அவர் யூகித்தது, பல சமயங்களில் கரெக்டாகவே முடிந்திருக்கிறது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். தன்ராஜ் அந்தத் தெருவில் வேலை பார்க்கும் வாட்ச்மேன்களையும் ஹவுஸ் மேட்ஸ்களையும் கவிதாவின் வீட்டிற்கு முன் வரவழைத்தார். அவர்களிடம் அந்தத் தெருவில் கிட்டத்தட்ட இரு வருடங்களுக்கு முன் வேலைப் பார்த்த இஸ்திரிக்காரனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர்.
அங்கு வீட்டு வேலை செய்யும் ஒரு பெண்ணிற்கு அவன் இருந்த இடம் தெரிந்தது.
“அய்யா, அந்த ஆள் பெயர் வெள்ளைச்சாமி. அந்த ஆளும், அவன் பொண்டாட்டியும் ஒன்னாதான் வருவாங்க. நான் அவன் பொண்டாட்டி கிட்ட பல தடவை பேசியிருக்கேன். இங்கேயிருந்து கிட்டத் தட்ட ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேளம்பாக்கம் முனீஸ்வரன் கோவில் பின்னாடித்தான் வசிப்பதாக ஒருமுறை அவ என்கிட்ட சொன்னாள். கரெக்டான அட்ரஸ் தெரியாது. அவங்க அந்த மாதிரி ஆள் கிடையாது சார்! ” என்று முடித்தாள் .
“நாங்க அதைப் பாத்துக்கிறோம். அது உன் வேலை இல்லை.” என்று சொல்லிக்கொண்டே அவர் ஒரு கான்ஸ்டபிளிடம் “இவங்க யாரும் நாங்க அந்த இடத்துக்கு போறவரைக்கும், இங்கேயிருந்து நகரவோ இல்ல ஃபோன் பேசவோ கூடாது. அப்படியே ஒரு டிரைவரை வச்சு என் காரை வீட்டில சேர்த்துரு” என்று சொல்லி விட்டு எல்லோரும் மாணிக்கத்தின் ஜீப்பில் கேளம்பாக்கம் முனீஸ்வரன் கோவில் பக்கம் செல்ல ஆரம்பித்தனர்.
கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்குப் பிறகு குறுகிய தெருக்கள் நிறைந்த ஏரியாவிற்குள் ஜீப் செல்ல ஆரம்பித்தது. தன்ராஜ் சில பேரிடம் விசாரித்து வெள்ளைச்சாமியின் வீட்டைக் கண்டு பிடித்துவிட்டார். அவன் வசிக்கும் தெருவில் போலீஸ் ஜீப் செல்ல முடியாததால் மெயின் தெருவிலேயே ஜீப்பை நிறுத்திவிட்டு உள்ளே நடந்து செல்ல ஆரம்பித்தனர். அவன் வீட்டை நெருங்கினர். வீட்டு வாசலில் யாரோ ஒரு பெண் தரையில் உட்கார்ந்து கொண்டு அயர்ன்பாக்ஸை கிளீன் பண்ணிக்கொண்டிருந்தாள். அவள் போலீசைப் பார்த்ததும்.
“மச்சான் போலீஸ் வந்திருக்காங்க!!! பின்பக்கமாக ஓடிப் போ” என்று சொல்லி கொண்டே அவசர அவசரமாக உள்ளே ஓடினாள். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனும், தன்ராஜுவும் வீட்டின் பின் பக்கத்திற்கு ஓடினர். ராஜீவ் முன் பக்கத்தின் வழியே வீட்டுக்கு உள்ளே நுழைந்தார். அதற்குள் பின் பக்கமாக தப்ப நினைத்த வெள்ளைச்சாமியை மடக்கி, அவனை போலீஸ் வண்டியில் ஏற்றினார்கள்.
சிறிது நேரத்தில் அவனை முட்டுக்காடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணையைத் தொடங்கினர்.
ராஜிவ் அவனை பார்த்து ” வெள்ளைச்சாமி நீ ஏன் கவிதாவை கொலை பண்ண சொல்லு”
” சார் எனக்கு இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நீங்க ஏன் என்னை இங்க புடிச்சிட்டு வந்து இருக்கீங்கன்னு எனக்குப் புரியல”
உடனே ராஜேந்திரன்” சார் இவன் இப்படி கேட்டா பதில் சொல்ல மாட்டான். நம்ம போலீஸ் வேலையை காட்ட வேண்டியதுதான்” என்று கோபமாக சொல்லிக்கொண்டே அவனை நெருங்கினார். அதற்குள் ராஜீவ் அவரது தோளை சற்றுப் பிடித்து பின்னே போகும்படி சைகை கொடுத்தார்.
” வெள்ளைச்சாமி, நீ இந்தக் கொலையைப் பண்ணாட்டி, உன் பொண்டாட்டி ஏன் எங்களை பார்த்தவுடனே, நீ தப்பிச்சு போய்க்கோ என்று குரல் கொடுத்தா?”
” சார், போலீஸ்னா அவளுக்கு கொஞ்சம் பயம். நான் நைட்டு சரக்கு போட்டு பிரச்சனை பண்ணதால, நீங்க வந்து இருக்கீங்கன்னு நினைச்சு கத்தி இருக்கலாம்”
“சரி இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னோட கைரேகை அப்புறம் சில டெஸ்ட் எடுக்கப் போறோம். உன் கைரேகையும் குற்றவாளியின் கைரேகையும் மேட்ச் ஆகக் கூடாதுன்னு வேண்டிக்கோ! ஒருவேளை மேட்ச் ஆச்சுன்னா, அப்புறம் உனக்கு இருக்கு! ராஜேந்திரனும் தன்ராஜூவும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நீ ஒழுங்கா அதுக்கு முன்னாடி ஒத்துகிட்டா, வக்கீல்கிட்டயும், நீதிபதிகிட்டயும் பேசி, உனக்கு கிடைக்கிற தண்டனையோட கடுமையைக் குறைக்கிறதுக்கு வழி பண்ணலாம்” என்று சொல்லிவிட்டு தனது சகாக்களுடன் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.
விசாரணை அறையின் வெளியே அவர் ராஜேந்திரனிடம் “இவன்தான் குற்றவாளி என்று தெள்ளத் தெளிவாக என்னால் சொல்ல முடியவில்லை. அதனாலதான் உங்களை அவனை ஒன்னும் செய்ய வேண்டாம் என்று சொன்னேன். ஐ ஹோப் யு அண்டர்ஸ்டாண்ட் மீ“
” எனக்குப் புரிஞ்சுது சார்“
சிறிது நேரத்தில் கைரேகை மற்றும் டி.என்.ஏ நிபுணர்கள் வந்து, வெள்ளைச்சாமியின் கைரேகை மற்றும் டிஎன்ஏ சாம்பிள்களைச் சேகரிக்க ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் ஒரு கான்ஸ்டபிள் வெள்ளைச்சாமி அவர்களைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னான். அவர்கள் அவசரம் அவசரமாக அவனைப் பார்க்க உள்ளே சென்றனர். அங்கே கண்களில் கண்ணீருடன் வெள்ளைச்சாமி உட்கார்ந்திருந்தான்.
” சார், நீங்க சொன்ன மாதிரி நான் குற்றத்தை ஒப்புக்கிட்டா, ஜட்ஜ் ஐயாகிட்ட பேசி தண்டனையை கம்மி பண்ணலாமா சார்? எனக்கு ரெண்டு பசங்க சார்! தூக்குக்குப் போக விருப்பமில்லை” என பரிதாபமாகக் கேட்டான்.
“முதல்ல நீ நடந்ததை ஒன்று விடாமல் சொல்லு, அப்புறம் அதை பத்தி பேசலாம்.”
” சார், நான் அந்தத் தெருவில வேலை பார்த்துட்டு இருக்கிறப்ப, ஒரு நாள் அவங்க வீட்டு வாட்ச்மேன் அவங்களோட பட்டுப் புடவையைக் கொடுத்து அயர்ன் பண்ணச் சொன்னான். நானும் கொஞ்ச நேரத்துல அயர்ன் பண்ணி அவன்கிட்ட கொடுத்துட்டேன். கிட்டத்தட்ட ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு கவிதா மேடம் என்னைக் கூப்பிட்டாங்கன்னு அவன் சொன்னான். என் பசங்களும், பொண்டாட்டியும் வந்திருந்தாங்க. அவங்க கவிதாவை நேரில பார்த்ததில்லைன்னு சொன்னாங்க. அதனால அவங்களையும் கூட்டிட்டு அவங்க வீட்டுக்குப் போனேன். அவங்க கேட்டுக்குப் பக்கத்துல நிப்பாட்டி வச்சுட்டு நான் மட்டும் உள்ளே போனேன். கவிதா மேடம் கோவமா வெளியே வந்து, புடவையின் ஒரு பார்டர் ஏரியாவை நான் பொசுக்கிட்டேன்னு சொல்லித் திட்டினாங்க. நானும் பதிலுக்கு ஏதோ சொன்னேன். திடீர்னு பேசிகிட்டே இருந்தவங்க, பளாரென்று என் கன்னத்தில் அறை விட்டாங்க. எனக்கு ஒன்னும் புரியல. என் பசங்களும், பொண்டாட்டியும் அதைப் பாத்துட்டாங்க. நான் பதிலே சொல்லாம, அந்த இடத்தை விட்டு கிளம்பிட்டேன். கொஞ்ச நாள்ல என்ன அந்த ஏரியாவுக்கு வரக்கூடாதுன்னு சொல்லி அங்கிருந்து என்னை அனுப்பிச்சிட்டாங்க” என்று சொல்லி முடித்தான்.
” சரிடா நீ பண்ணது தப்பு, அதான் அந்த அம்மா உன்னை அடிச்சாங்க” எனக் கேட்டார் ராஜீவ்.
“சார் நான் பண்ணது தப்பா இருந்தாலும், அந்த அம்மா எப்படி என் பசங்க,பொண்டாட்டி முன்னாடி கை நீட்டி அடிச்சிருக்கலாம்?”
அவன் சொல்லியது ராஜீவுக்குச் சரியெனப் பட்டாலும், அதை அவர் காட்டிக்கொள்ளாமல் ” நீ அன்னிக்கே கேட்டிருக்கணும், இல்ல கொஞ்ச நாள் கழிச்சு கேட்டிருக்கணும். ஏன்டா ரெண்டு வருஷம் கழிச்சு கொலை பண்னே ?”
” சார், அது பெரிய இடம். நியாயம் கிடைக்காதுன்னு நினைச்சேன் . அதுக்கு அப்புறம் என் பொண்டாட்டி என்னை மதிக்கிறதேயில்ல. ஏதாவது சண்டை வந்தாக் கூட, நீ ஒரு பொம்பள கையால அடி வாங்கினவன்தானே எனக் கேவலமாப் பேசறா. அந்த அம்மா மேல ரொம்ப நாளாக் காண்டுலதான் இருந்தேன். போலீஸ் என்னைக் கண்டுபிடிக்காம இருக்கணும்னா, கொஞ்ச நாள் கழித்துதான் பழிவாங்கணும்னு நினைத்தேன். அப்புறம் கொஞ்ச நாள் இந்த விஷயத்தை மறந்துட்டேன். ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடி, என் மாமா ஊரிலேந்து வந்தாரு. அன்னிக்கு நாங்க தண்ணியடிச்சுட்டு வீட்டுக்கு வந்தோம். ஏதோ வீட்ல வந்த சண்டையில, என் பொண்டாட்டி என்ன ரொம்ப தரக்குறைவா பேசிட்டா அதுவும் என் மாமா முன்னாடி அந்த விஷயத்தை சொன்னதை என்னால தாங்கிக்கவே முடியல. என் லைஃப் ஃபுல்லா இவள்கிட்ட பேச்சு வாங்காம இருக்க, எனக்கு வேறு எந்த வழியும் தெரியல. அந்த கவிதாவைத் தண்டிக்கிறது தான் ஒரே வழின்னு புரிஞ்சுகிட்டேன். ஆனா அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப எனக்குப் புரியுது.” என்றான் வெள்ளைச்சாமி.
“காலங்கடந்து உனக்கு புத்தி வந்திருக்கு. நீ ஒருவேளை உன் பொண்டாட்டிய அதுக்கப்புறம் ஒழுங்காக நடத்தி இருந்தா, அடிக்கடி அதை பத்தி பேசி இருக்க மாட்டாள். உன் மேலயும் பல தப்பு இருக்கு. சரி நீ எப்படி கவிதா புருஷன் வீட்டில இல்லாத நாளை, கரெக்டா கண்டு பிடிச்சு அந்த கொலையை பண்ண? உனக்கு வேற யாராவது உதவி பண்ணாங்களா” என்று சற்று ஆச்சரியத்துடன் ராஜீவ் கேட்டார்.
” எனக்கு வேற யாரும் ஹெல்ப் பண்ணல. இந்த ஏரியாவுல இன்னொரு சினிமா ப்ரொடியூசர் இருக்காரு. அவர் பெயர் குருசாமி. அவர் சண்முகத்தோட நண்பர். அடிக்கடி அவரைப் பார்க்க சண்முகம் சார் அவர் வீட்டுக்கு வருவாரு. ஒரு நாள் குருசாமி சார் வீட்டு துணிகளை எடுத்துக் கொண்டு அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்ப குருசாமி சார் ஃபோன்ல சண்முகம் சார் கிட்ட பேசிகிட்டு இருந்தாரு. அந்த மாசத்துல ஒரு நாள் பாண்டிச்சேரியில ஏதோ ஒரு புரொடியூசர் யூனியன் ஃபங்ஷன் இருக்குன்னும், அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா போகிறதாகவும் பேசிக்கிட்டாங்க. அந்த நாளும் தேதியும் மட்டும் மனசுல நான் வாங்கிக்கிட்டேன். ” என்று சொல்லிவிட்டு குடிக்க கொஞ்சம் தண்ணிர் கிடைக்குமா எனக் கேட்டான்.
ராஜீவ் பக்கத்திலிருந்த கான்ஸ்டபிளிடம் அவனுக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரும்படி கேட்டார். சிறிது நேரத்தில் வந்த தண்ணீரைக் குடித்துவிட்டு, அவன் தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
ராஜீவ் அவனைப் பார்த்து, ” கொலை நடக்கிறதுக்கு முன்னாடி நீ அந்த இடத்தில போய், ஏதாவது பார்க்கப் போனியா? அங்கு வேலை பார்க்கிற வாட்ச்மேன்கள் சந்தேகப்படுகிற மாதிரி யாரையும் பார்க்கலைன்னு சொன்னார்கள்”
” இல்ல சார், அங்க இருக்கிற சில வாட்ச்மேன்களுக்கு என்ன நல்லாத் தெரியும். அதனால நான் அந்தப் பக்கமா கொலை செய்யப் போறதுக்கு முன்னாடி நான் போகல. அந்த தெருப் பின்பக்கம் எல்லாம் எனக்கு அத்துபடி. அதனாலதான் ரெண்டு பிளாஸ்டிக் சேர் எடுத்துட்டு போனேன். எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிவரை, வாட்ச்மேன் ஷிப்ட் மாறும் டைம் என்று எனக்குத் தெரியும் அதனாலதான் அந்தச் சமயத்தில போனேன். கொஞ்சம் தைரியம் வர சரக்கு போட்டுகிட்டேன்.”
“நீ சுவர் ஏறி குதிச்சிப்ப, உள்ள யாரும் இல்லையா? ஏன் கவிதா உன்னை பார்த்து சத்தம் போடல” எனக் கேட்டார் ராஜேந்திரன்.
“நான் சேர்ல ஏறி எட்டிப் பாத்தப்ப அவங்க வீட்டுப் பின் பக்கத்துல உட்கார்ந்து தண்ணி அடிச்சுட்டு இருந்தாங்க. அவங்களுக்கு தெரியாம குதிக்கிலாமுன்னு நெனச்சேன். அவங்களே கொஞ்ச நேரத்துல இன்னொரு பாட்டில் எடுக்க உள்ளே போனாங்க. அந்தச் சமயத்தை யூஸ் பண்ணிக்கிட்டு உள்ளே குதித்தேன். அங்கு இருந்த ஒரு மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சிகிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க பின்பக்கமாக வந்து வாயை டக்ட் டேப்பால் அடைத்தேன். அவங்க முன்னாடி வந்து நின்னு, என்னை அவமானப்படுத்தியதைச் சொல்லி, கன்னாபின்னான்னு திட்டினேன். அவங்க ஏதோ சொல்ல வந்தப்ப, என்ன திட்ட வர மாதிரி தெரிஞ்சுது. கோவம் வந்து, “பளார், பளார்” என்று என் கை உறையைக் கழற்றி விட்டு அடிச்சேன். அதிலே பாதி மயக்கம் ஆயிட்டாங்க. அப்புறம் நான் கொண்டு வந்த கயிறை வைச்சு, அவங்க கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டேன். அப்படியே அங்கேயிருந்து சுவர் ஏறி குதிச்சு, கொஞ்சம் தள்ளி வச்சுயிருந்த டிவிஎஸ் 50 எடுத்துட்டு கிளம்பி போயிட்டேன்.” என்று சொல்லிவிட்டு மீதி தண்ணீரையும் குடித்து முடித்தான்.
“உன் பொண்டாட்டிக்கு இந்த விஷயம் எப்படி தெரியவந்தது. இதுல அவளுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்கா?” எனக் கேட்டார் ராஜீவ்
“சார் என் குலசாமி கருப்பண்ண சாமி சத்தியமா அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீட்ல வந்து அவகிட்ட சொன்னப்ப என்ன அடி அடின்னு அடிச்சா! காலையில போதை தெளிஞ்சதுக்கப்புறம்தான் நான் பண்ணது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரிஞ்சது. டெய்லி பேப்பர்ல கவிதா சம்பந்தப்பட்ட ஏதாவது செய்தி வந்து இருக்கான்னு செக் பண்ணுவோம். மூணு மாசம் ஆகியும், போலீசாரால ஒன்னும் கண்டுபிடிக்க முடியலைன்னு தெரிஞ்சுக்கிட்டோம். நாங்க தப்பிச்சோம் என்று நினைச்சோம். ஆனா உங்ககிட்ட எப்படி மாட்டிக்கிட்டேன் என்று எனக்கே தெரியல! இதுல இருந்து வெளிய வரத்துக்கு வழி சொல்லுங்க சார்”. என்று கெஞ்சி கதறி அழ ஆரம்பித்தான்.
அதற்கு ராஜீவ் ” இப்பொ அழுது பிரயோஜனமில்லை. உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும் ” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.
“தன்ராஜ், சார்ஜ் ஷீட் ரெடி பண்ணுங்க, அப்படியே கோர்ட் ஃபார்மாலிட்டீஸ்யும் ஸ்டார்ட் பண்ணுங்க. அவனா ஒத்துக்கிட்ட மாதிரி எழுதுங்க. அவனை அட்லீஸ்ட் தூக்கு தண்டனையிலிருந்து காப்பாத்த ட்ரை பண்ணலாம். நான் இப்பக் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு ராஜேந்திரனுடன் அந்த ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார். போலீஸ் ஜீப்பில் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.
ராஜேந்திரன் ராஜீவ்வை பார்த்து “கங்கிராஜுலேசன் சார்!!! இந்த கேஸை சூப்பரா சால்வ் பண்ணிடீங்க!”
“ராஜேந்திரன், இட் இஸ் ஏ டீம் எஃபோர்ட்!”
“சார், எனக்கு என்ன ஆச்சரியமா இருக்குன்னா, நம்ம தன்ராஜ் இந்த மாதிரி தெருப் பிரச்சனை பற்றி விசாரிச்சு இருக்காரு. ஆனா இந்த விஷயம் வெளிய வரவே இல்ல. ஒருவேளை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததால, அதை யாரும் சீரியஸாக எடுத்துக்கலைன்னு நினைக்கிறேன். வெள்ளைச்சாமி இந்த மாதிரி காரியமெல்லாம் செய்யற ஆள் இல்லை என்று அவங்க நினைத்திருக்கலாம்! ஆனா இந்த இடியட் கவிதா பண்ண சின்ன தப்புக்கு அவன் இந்த அளவுக்குப் போயிருக்கக் கூடாது”
“கிரேஜ் நத்திங் பட் கிரேஜ். மனக்கசப்பு ஒரு கொடுமையான வியாதி. நம்ம மனசுல மனக்கசப்பு வைத்திருப்பது இதயத்தில் முட்கள் நிறைந்த தோட்டத்தை வளர்ப்பது போன்றது என்ற கூற்றை எங்கோ நான் படிச்சிருக்கேன். இவன் விஷயத்தில் அது நூற்றுக்கு நூறு உண்மையா போயிடுச்சு. அவ அடிச்ச வலி அவன் மனச விட்டு போகவே இல்ல. அதுக்கு அப்பப்ப அவனோட பொண்டாட்டி உரம் போட்டு மேலும் வளர வச்சிட்டா! கவிதாவை மன்னிச்சு விடுகிற அளவுக்கு இவன்கிட்ட பெருந்தன்மையும் இல்லை. ரொம்ப வித்தியாசமான ஒரு கேஸ் . ஐ அம் கிளாட் வீ சால்வ்ட் இட் . ” என்று சொல்லியபடியே பெருமூச்சு விட்டார். ஒரு இன்கமிங் கால் வந்தது.
“ஹலோ மீனா, என்ன விஷயம்? வீட்டுக்கு இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவேன் “
“மாணிக்கம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஃபோன் பண்ணி, எல்லா விவரமும் சொன்னான். நீங்க அவசர அவசரமாக போன காரணம் இப்பதான் புரிஞ்சது. சாரி டியர். “
“தட்ஸ் ஃபைன்”
” நான் முதல்ல அந்த காய்கறி வண்டிக்காரன் கூட சமாதானமா போய்க்கிறேன்” என்று சற்று பதட்டத்துடன் மீனா கூறினாள்.
“அப்ப அவனை அடுத்த வாரம் வீட்டுக்குக் கூப்பிட்டு ஒரு விருந்து வை” என்று சிரித்தவாறே சொல்லிவிட்டு ஃபோனை கட் பண்ணினார்.
முற்றும்
மருங்கர்