\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உயரம்

Filed in கதை, வார வெளியீடு by on April 2, 2021 1 Comment

 

என்னை எதுக்கு காப்பி ஷாப்புக்கு வரச்சொன்ன.கௌதம் ……..”

இருவருக்கென  போடப்பட்ட நாற்காலியில் ப்ரீத்திக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த கெளதம் காப்பியில் பறந்துகொண்டிருந்த ஆவியைப் பார்த்தவாறு இருந்தான்.

வீட்டுல வேண்டான்னு சொல்றாங்க …..அ.. அதுதான் …”

ஓ…….. அப்ப பிரேக் அப்.. அப்படித்தானே …. நல்லாயிருக்கு கெளதம் “

ப்ரீத்தி……. புரிஞ்சுக்கோ  அதுக்காக நான் உன்ன கூப்பிடுல ……..நம் இப்போ என்ன பண்றதுனு கேக்கத்தான் கூப்பிட்டேன் ………..”

நீ ஆம்பள தான …….என்ன பண்ணறதுனு என்னைக்  கேக்கற ……..லவ் பண்ணறப்போ  மட்டும் அத கிழிச்சுருவேன் இத கிழிச்சுருவேன் சொன்ன…”

ப்ரீத்தி …………..”

கட் கட் ………….ஷாட் ஓகே …………..”

ஆர் . எஸ்.புறம் சாலையில் தோல் பையுடன் நின்றுகொண்டிருந்த சுருதி ஷூட்டிங் நடக்கும் இடத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான்கடி மட்டுமே வளர்ந்திருந்த சுருதி, தன் நிலை கண்டு வருந்தாமல் வாழ்வில் உயரப் போராடினாள். அவளுக்குத் தகுந்தாற் போல பணி வாய்க்காமல் போனதால். கலைக்களஞ்சிய புத்தகங்களைப் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் சில சமயம் பூங்காக்களிலும் கூட விற்பதுண்டு. காலையில் உணவைச் சிறிய பெட்டியில் பூட்டிக்கொண்டு தன் பணியைத் துவங்குவாள். ஒரு புத்தகத்திற்கு ஐம்பது ரூபாய் கூலி என்ற விதத்தில் எப்படியாவது இரண்டு புத்தகத்தை விற்றுவிடுவாள். அதிகபட்சமாக நான்கு புத்தகம் , இரக்கப்படுபவர்கள் எப்படியும் ஒரு நாளைக்கு ஒருவர் என பார்க்கநேரிடும் . நூலகங்களில் இருக்க வேண்டிய புத்தகங்கள் இன்று தெருவுக்கு வந்துகூட விலைபோவதில்லை என்பது தான் இன்றைய நிலைப்பாடு. கணினிகளின் ஆக்ரமிப்பு இப்போது புத்தக வாசிப்பைக் குறைத்துவிட்டது.

நெடுநேரமாய் போராடியும் இன்று எந்தப் புத்தகமும் விலைபோகவில்லை. 

சினிமா யூனிட்டில் இருந்தவர்களிடம் பேச்சுக்கொடுத்தாள், ஒதுங்கிகொண்டார்கள், அவள் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டாள். குள்ளமாய்ப் பிறந்தவர்கள் நிலைக்கு இறங்கி வர யாரும் விரும்புவது இல்லை. 

காப்பிக் கடையின் முகப்பில் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு டைலாக்கை மனப்பாடம் செய்துகொண்டிருந்த கதாநாயகனிடம் சென்று பேச்சுக் கொடுத்தாள்.

சார் ……….என் பேரு சுருதி ..என்கிட்டே என்சைக்ளோபீடியா புக் இருக்கு வாங்கிக்கிறிங்களா .. “

கவனம் உடைந்து விடாமல் காகிதத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவன், குரல் கேட்டதும் கனவிலிருந்து சட்டென்று விலகிக்கொண்டவன் போல அவளைப் பார்த்தான்.

மார்கெட்டிங்கா……….. .இல்ல …நான் இதெல்லாம் படிக்கிற பழக்கம் இல்ல…சோ ப்ளீஸ் …..” என்று முடித்துக்கொண்டான்.

சார் ….” என்று சற்று குரல் தாழ்த்தி விண்ணப்பித்தாள்.

மனப்பாடம் செய்வதில்  மூழ்கிக்கொண்டான் கதாநாயகன்.

அதே கடையின் கடைசி இருக்கையில் ஒப்பனை சரிபார்த்துக்கொண்டிருந்த கதாநாயகியிடம்  நெருங்கினாள் சுருதி.

மேடம் நீங்க ரொம்ப நல்லா வசனம் சொன்னிங்க … நான் தூரத்திலிருந்து உங்கள ரசிச்சேன்”

தேங்கியு  ,பை தி வே  நீ …………..”

மேடம் என் பெரு சுருதி .நான் புக்ஸ் வித்துட்டு இருக்கேன்….”

ஓ அப்படியா நீ உள்ள வரும் போது, யாரும் உன்ன கேட்கலையா ….”

ஓ அதுவா மேடம் நான் இருக்கற ஹைட்டுக்கு என்னை யாருக்கும் தெரியாது …அதுவும் மனுசங்க இப்பெல்லாம் குனிஞ்சு எதையும் பார்க்கறது இல்ல…”

இது……….. எப்படி………… .” என்று தன் பார்வையில் உயரத்தை அளந்துகொண்டாற்போல கேட்டாள்.

நான் ஸ்கூலுக்கு போகும்போதுதான் இதை கண்டுபிடுச்சாங்க என்ன பண்ண, .அதோட வாழ கத்துக்கிட்டேன்.”

உனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லையா ..”

நினைச்சாத்தானே  கஷ்டம் நிமிர்ந்து நின்னா நம்ம விட உசரம் எதுவுமே இல்ல ….வாழ்க்கையை  எப்படி வேணும்னாலும் வாழலாம் நம்ம நினைச்சா…”

ஷாட் ரெடி…….. 

சரி மா நான் ஷூட்டுக்கு போகணும் ……..நேரமாச்சு …………….”

எப்படியும் இன்றைக்குப் புத்தகம் விற்று போகும் என்ற நம்பிக்கையில் திரும்பவும் கொதித்து கொண்டிருந்த  தார்சாலையில் தன் பயணத்தை மேற்கொண்டாள் சுருதி.

கதாநாயகிக்கு மனப்பாடம் செய்து கொண்ட டயலாக் மனதில் அலைக்கழித்துக் கொண்டிருந்தது .

என்னடி ப்ரீத்தி…… பிரேக் அப் ஆயிருச்சுனு கவலைப்படுறியா ..என்ன பண்ண எல்லாம் விதின்னு நினைச்சுக்க வேண்டியது தான் ஏழு வருஷ காதல்  கஷ்டமாத்தான் இருக்கும்….” என்று ப்ரீத்தியின் தோழி சமாதானம் செய்துக்கொண்டிருந்தாள். டயலாக்கை மறந்தவளாய் ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தாள் ப்ரீத்தி.

 டைரக்டர் கட் சொல்வதற்கு எத்தனிக்கும் போது…………….

எதுடி கஷ்டம்  நிமிர்ந்து நின்னா நம்ம விட உசரம் எதுவுமே இல்ல ….வாழ்க்கையை  எப்படி வேணும்னாலும் வாழலாம் நம்ம நினைச்சா…”

ட்ராலி மூவ் ஃபார்வர்ட் ……………………….”

கைத்தட்டலில் அதிர்ந்தது படப்பிடிப்புத் தளம்

சன்மது

 

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Devavratan says:

    Good Story! The story clearly shows how the world is clever enough to use instances that suit them.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad