மீண்டும் சுவாசிக்க முடிகிறதா?
“இன்று நாங்கள் மீண்டும் சுவாசிக்கிறோம். நிறம், இனம் எனும் பாகுபாடுகளைக் கடந்து, கீழே வீழ்த்தப்பட்டு, கால்களுக்கடியில் நசுக்கப்பட்டு, மிதிக்கப்படும் ஓவ்வொருவருக்கும் இந்தத் தீர்ப்பு நம்பிக்கையளித்துள்ளது. ஜார்ஜ், டி-ஷர்ட்களில் பதிக்கப்பட்ட படமாக மட்டுமே இருந்துவிடக்கூடாது என்று ஒவ்வொரு நாளும் வேண்டிக்கொண்டதற்கு விடை கிடைத்துள்ளது. ஜார்ஜின் மரணம் எங்களுக்குப் பெரும் இழப்புதான்; ஆனால் அவர் மாற்றத்திற்கான வரலாற்றில் இடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது” – ஃப்ளாயிட் சகோதரர்களின் இந்த வார்த்தைகள், மினியாபொலிஸ் நீதிமன்றத்தின் முன் குழுமியிருந்த கூட்டத்தினரின் ஆரவாரத்தோடு நாடெங்கும் பரவியது,
சென்ற ஆண்டு மே மாதம் 25ஆம் நாள், மினியாபொலிஸ் நகரில் மளிகைக் கடை ஒன்றில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் 20 டாலர் கள்ள நோட்டு ஒன்று தந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரை விசாரிக்க வந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்ய முயன்றனர். இந்தக் கைதுக்கு மறுத்த ஜார்ஜை, ஒரு காவலர் கீழே தள்ளி அவரது கழுத்தில் முழங்காலால் அழுத்தினார். ‘என்னால் சுவாசிக்க முடியவில்லை’ என்று ஜார்ஜ் கதறியழுத போதும் தொடர்ந்து 9 நிமிடங்களுக்கு மேல் அவரை நகர விடாமல் காலால் அழுத்தியதால் அவர் இறந்துபோனார். இதில் இறந்து போன ஜார்ஜ் ஃப்ளாயிட் கறுப்பினத்தவர். அவர் கழுத்தில் முழங்காலால் அழுத்தியது டெரக் ஷாவின் என்ற வெள்ளையினத்தவர். அவரது இந்தச் செய்கையைக் கண்டிக்காமல், சம்பவத்தை வேடிக்கை பார்த்த இதர காவலர்களும் வெள்ளையினத்தவர். பட்டப்பகலில், ஊரின் மையப் பகுதியில் நடந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ந்து, அங்கிருந்த மக்கள் ‘ஜார்ஜை சுவாசிக்க விடுங்கள், எங்கள் கண் முன் அவரை சாகடிக்காதீர்கள்’ என்று போலிசாரை மன்றாடிக் கேட்டனர். ஜார்ஜின் குரல் அடங்கி அவரது உடலசைவுகள் நிற்கும் வரை, அவரது கழுத்தில் காலை வைத்து அழுத்திக் கொண்டிருந்த காவலர் டெரக் ஷாவினின் சலனமற்ற முகம் காணொளியாக உலகமெங்கும் பரவியது.
அவசர ஊர்தி அங்கே வருவதற்குள் ஜார்ஜ் இறந்துவிட்டிருந்தார். “உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கலாம்” என்று மருத்துவர்களால் பதியப்பட்டது. சட்ட ரீதியாக “காவல் துறையின் பிடியில் இருக்கும்போது, காவலரின் கட்டுப்பாட்டு முயற்சியால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்” என்று பதியப்பட்டது.
அமெரிக்காவை உலுக்கிய ஜார்ஜ் ப்ளாயிடின் மரண வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஏப்ரல் இருபதாம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. டெரக் ஷாவினுக்கு, இரண்டாம் நிலை திட்டமிடாத கொலை (second degree murder), இரண்டாம் நிலை மனித வேட்டையாடல் (manslaughter) மற்றும் நோக்கமற்ற மூன்றாம் நிலைக் கொலை முயற்சி (third degree murder) என்ற மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மார்ச் 29 ஆம் நாள் துவங்கிய வழக்கு விசாரணையில் 5 ஆண்கள், 7 பெண்கள் கொண்ட 12 நபர் தீர்ப்பாயக் குழு (ஜூரி) நியமிக்கப்பட்டது. இவர்களில் 6 வெள்ளையினத்தவர், 4 கறுப்பினத்தவர், 2 கலப்பினத்தவர். இந்தத் தீர்ப்பாயக் குழுவின் பன்னிரெண்டு உறுப்பினர்களும் ஒருமித்த கருத்தோடு டெரக் ஷாவினின் தீர்ப்பைத் தெரிவித்திருந்தனர். டார்னெலா ஃப்ரேசியர் எனும் 17 வயதுப் பெண், ஜார்ஜ் ஃப்ளாயிடின் சம்பவத்தின் போது துணிச்சலுடன் டெரக்கையும் மற்ற காவலர்களையும் கேள்விக் கேட்டதுடன் அதை அப்படியே காணொளியாகப் பதிவு செய்ததுதான் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாகக் கருதப்பட்டிருந்தது. ஒருவேளை, இந்தக் காணொளி இல்லையென்றால் ‘போலிஸ் விசாரணையின் போது மருத்துவக் காரணங்களால் ஒருவர் உயிரழப்பு’ என்ற அளவில் இந்த மரணம் முடிந்திருக்கக்கூடும்.
மினசோட்டா ஆளுநர் டிம் வால்ட்ஸ், தீர்ப்பு வெளியாகும் முன்னரே, ‘ஃப்ரேசியரின் காணொளி டெரக் சிறைக்குச் செல்வதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கக்கூடும்’ என்று பாராட்டியிருந்தார். தீர்ப்பு வெளியான தினத்தன்று பேசிய அதிபர் ஜோ பைடன், “வீர இளமங்கை” என்று டார்னெலைப் பாராட்டியிருந்தார்.
தீர்ப்பு வெளியான ஒரிரு தினங்களுக்கு முன்பாகவே மினியாபொலிஸ் நகரமும், ஹெனபின் கவுண்டியும் (கோட்டமும்) கடுமையான பாதுகாப்புக்குக் கொண்டுவரப்பட்டன. தீர்ப்பு வேறு மாதிரியாக வந்துவிடக் கூடாதே என்ற பதட்டமும், அச்சமும் சுற்றுப்புற நகர மக்களைத் தொற்றிக்கொண்டது. ஃப்ளாயிட் மரணித்த இடத்தில் மக்கள் பெருந்திரளாகக் கூடி, விசேடப் பிரார்த்தனை செய்தவாறு தீர்ப்புக்காகக் காத்திருந்தனர். டெரக் ஷாவின் தண்டிக்கப்பட வேண்டியவர் என்று நாட்டு மக்கள் அனைவரும் கருதினாலும், இன துவேஷம் மற்றும் சட்டத் துளைகளுக்குள் டெரக் விடுவிக்கப்பட்டு விடுவாரோ என்ற சந்தேகமும் சூழ்ந்திருந்தது.
நல்ல வேளையாக போலிசாரை “மிகவும் நயமாக இருக்காதீர்கள்” என்று தூண்டிய முந்தைய அதிபர் இன்று பொறுப்பிலில்லை. இன்றைய அதிபர் ஜோ பைடன் “இந்தத் தீர்ப்பு மாற்றத்தின் அறிகுறியாக இருக்கட்டும். இந்த வழக்கின் தீர்ப்போடு நம் வேலை முடிந்துவிட்டது என்று கருதிட முடியாது” என்று குறிப்பிட்டார். அவர் கூறியது முற்றிலும் உண்மை.
ஃப்ளாயிடின் கொடுரமான மரணத்துக்குப் பின்னரும் நிற / இன துவேஷங்கள், குறிப்பாகக் கறுப்பினத்தவர் மீதான காவல் துறையினர் கண்ணோட்டம் மாறியதாகத் தெரியவில்லை. இதே மினியாபொலிஸ் நகரில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த அதே வாரத்தில் டாண்டே ரைட் எனும் கறுப்பினத்தவர் காவலரால் சுடப்பட்டு இறந்தார். போக்குவரத்து விதி மீறலுக்காக நிறுத்தப்பட்டு விசாரிக்கப் படும் வேளையில் தப்பிச் செல்ல முயன்றவரை செயலிழக்கச் செய்ய ‘டேசர்’ எனப்படும் மின்சாரத் துப்பாக்கிக்குப் பதில் தவறுதலாக நிஜத் துப்பாக்கியை இயக்கிவிட்டதாக இதில் ஈடுபட்ட பெண் காவலர் தெரிவித்திருக்கிறார்.
ஃப்ளாயிட் வழக்கின் தீர்ப்பு வெளியான அதே தினத்தன்று கொலம்பஸ் ஒஹையோ நகரில் மாகியா ப்ரையண்ட் எனும் 16 வயது சிறுமி போலிசாரால் சுடப்பட்டு இறந்தார். தன் வீட்டருகே இருக்கும் மற்ற பெண்களால் தாக்கப்பட்டதாக போலிசாரை அழைத்தவரே மாகியா தான். போலிசார் வந்ததும் அவர்களிடம் நடந்ததைச் சொல்ல அவர்களை நெருங்கியபோது போலிசார் அவளைத் தூரமாகவே நிற்கச் சொல்லியுள்ளனர். இதைக் கவனியாமல் அவர்களை நெருங்கிய மாகியா போலிசாரால் சுடப்பட்டு இறந்தார்.
அமெரிக்கா மட்டுமல்லாது பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் கறுப்பினத்தவர் மீதான போலிசாரின் அடக்குமுறையும் அத்துமீறலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் இவ்வகையான வன்முறைகள் மறைக்கப்பட்டு விடுகின்றன. இந்த மரணங்களுக்காகக் குரலெழுப்பும் ஒரு சிலரும் நசுக்கப்பட்டுவிடுகின்றனர். டார்னெலாவின் காணொளியும், அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களும் ‘கறுப்பர் வாழ்வும் முக்கியம்’ என்பதை வலியுறுத்தி நிற / இனப் பாகுபாட்டை அகற்றும் நோக்கில் வைக்கப்பட்டிருக்கும் சிறு அடிகள் மட்டுமே.
டெரக்குக்கான தண்டனை இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும். சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்த மற்ற காவலர்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதம் நடைபெறலாம். டெரக் ஷாவின் எனும் தனி நபருக்கு வழங்கப்படும் தண்டனையாகக் கருதாமல் போலிசார் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும், சட்டங்களுக்கும், சமூகத்துக்கும் விடப்படும் எச்சரிக்கையாக இந்தத் தண்டனை அமைவது அவசியம். கறுப்பினத்தவர் மீதான காழ்ப்புணர்ச்சியை அகற்றுவதே ஃப்ளாயிடின் மரணத்திற்கு நாம் செய்யும் பிராயச்சித்தமாக இருக்கட்டும்.
- ஆசிரியர்.