\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

2021 ஆஸ்கார் விருதுகள்

உலககெங்கிலும் இருக்கும் திரைப்படக் கலைஞர்களாலும், ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு, கவனிக்கப்படும் ஆஸ்கார் விருதுகளுக்கான விழா, கடந்த வாரயிறுதியில் ஏப்ரல் 25ஆம் தேதியன்று லாஸ் ஏஞ்சல்ஸில், யூனியன் ஸ்டேசன் மற்றும் டால்பி திரையரங்கில் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்த 93 ஆம் ஆண்டிற்கான இந்த விழா, கோவிட் காரணமாக ஏப்ரலுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. திரையரங்கில் வெளியான படங்கள் மட்டுமின்றி, கடந்தாண்டும், இந்தாண்டும் கோவிட் காரணமாகத் திரையரங்கில் வெளியாகாமல், பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் இந்தாண்டு ஆஸ்கார் தேர்வில் இடம்பிடித்தன. இதற்காக வழக்கமாக இருக்கும் சட்டத்திட்டங்கள் இந்தாண்டு மாற்றியமைக்கப்பட்டன.

சிறந்த திரைப்படத்திற்கான விருதை ‘Nomadland’ என்ற அமெரிக்கத் திரைப்படம் பெற்றது. கணவனை இழந்து, வேலையையும் இழந்த ஒரு வயதான பெண், தனியாக ஒரு வாகனத்தில் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று, பல்வேறு வகை மனிதர்களைச் சந்திக்கும் பயணக்கதை இது. சீனாவைச் சேர்ந்த பெண் இயக்குனரான க்ளோயி ஜாவ் (Chloé Zhao) இயக்கிய அமெரிக்கப்படமான இதில் ப்ரான்செஸ் மெக்டார்மெண்ட் (Frances McDormand) நடித்திருந்திருந்தார். இப்படத்தை இயக்கிய க்ளோயிக்கே, இந்தாண்டின் சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்தது. முதன்முறையாக ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் இயக்குனர் இவ்விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல், இப்படத்தின் நாயகியான ப்ரான்செஸ் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். இவர் பெறும் மூன்றாவது ஆஸ்கார் விருது இதுவாகும். மொத்தமாக மூன்று விருதுகளைப் பெற்ற இத்திரைப்படம் முன்னதாகக் கோல்டன் குளோப் விருதையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் பல திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது கடந்தாண்டு மறைந்த பிரபல நடிகரான போஸ்மெனுக்குக் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆண்டனி ஹாப்கின்ஸுக்கு அவ்விருது வழங்கப்பட்டது. அவர் நிகழ்ச்சிக்கு வராத நிலையில், அவர் சார்பில் ஜாக்யூன் பெற்றுக்கொண்டார். இது இவருக்குக் கிடைத்த இரண்டாவது ஆஸ்கார் விருதாகும்.

சோல் (Soul) திரைப்படம் சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதையும், அனதர் ரவுண்ட் (Another Round) என்ற டானிஷ் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதையும், மை ஆக்டோபஸ் டீச்சர் (My Octopus Teacher) சிறந்த டாக்குமெண்டரி வகைப் படத்திற்கான விருதையும் பெற்றன. கிரிஸ்டபர் நோலனின் டெனட் (Tenet) சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான விருதை பெற்றது. மங்க் (Mank) படத்திற்காகச் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ப்ரொடக்‌ஷன் டிசைன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. சோல் (Soul) படத்தின் இசையமைப்பாளர்களான ட்ரெண்ட், அட்டிகஸ் மற்றும் ஜான் ஆகியோருக்கு சிறந்த இசைக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியாவிலிருந்து மலையாளத் திரைப்படமான ஜல்லிக்கட்டு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எப்போதுமே இவ்விருதுக்கு உலகம் முழுதுமிருந்து கடும் போட்டி இருக்கும். அது போல, இவ்வருடமும் பலத்தப் போட்டி இருந்ததால் இந்தியாவின் ஜல்லிக்கட்டால் கடைசிக்கட்டத்திற்கு முன்னேற முடியவில்லை. அதே போல், சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தையும் அந்தப் படக்குழு இவ்வருடப் போட்டிக்கு திரையிட அனுப்பியிருந்தனர். இந்தப் படமும் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

சிறந்த டாக்குமெண்டரி படத்திற்கான விருதைப் பெற்ற ‘மை ஆக்டோபஸ் டீச்சர்’ படத்தைத் தயாரித்து, நடித்திருந்தது க்ரேக் பாஸ்டர் என்ற தென் அமெரிக்க இயக்குனர். இவருடைய மனைவி ஸ்வாதி தியாகராஜன் அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்த சூழலியல் துறை பத்திரிக்கையாளர் மற்றும் இப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியும் ஆவார். இப்படம் நெட்ப்ளிக்சில் காணக்கிடைக்கிறது. இந்தாண்டு ஆஸ்கார் விருது பட்டியலில் நம்மூர் தொடர்பு இது ஒன்றுதான்.

  • சரவணகுமரன்.

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad