செம்மாணிக்க சிறு கழுத்து தேன் குருவி (Ruby-throated hummingbird (Archilochus colubris))
எமது மாநிலத்தில் மே மாதம் என்றால் தாவரங்கள் துளிர்த்துப் பூத்துக் குலுங்க, தேனீக்கள் ரீங்காரம், பாடும் பரவசப் பட்சிகள் கேட்க, விதம் விதமாகக் கூடு கட்டி முட்டைகள் இட்டு குஞ்சுகள் வெளிவரும் காலம் எனலாம். இதன் போது வெளியில் பொடிநடை போட்டு அயல் அருவிக் காடுகள், பூங்காக்கள், ஏன் உங்கள் வீட்டுப் பின் பகுதியில் பறவைகள் பலவற்றைப் பார்த்து அனுபவிக்கலாம். ஆம் இது இளவேனில் கால இன்பமயம்.
அமெரிக்கக் கண்ட வெப்ப வலயத்தில் பலநூறு தேன் குருவிக் கூடுகள் காணப்படினும், எமது மத்திய புல் சமவெளிகளில் (central plains) நடமாடும் தேன் குருவிகள் சில வகை தான். இவை சிறிய பறவைகளாயினும் கனடாவிலிருந்து கோஸ்டரீகா வரையும் வருடாந்தம் போய்வரும். எமது உலக காலநிலை மாற்றங்கள் இந்தச் சிறிய பட்சிகள் பறக்கும் பாதைகளையும் பாதிக்கின்றன. இன்று நாம் மினசோட்டா மாநிலத்தின் மேற்குப் பகுதிகளை எடுத்துப் பார்த்தால் விவசாயம், சூழல் மாற்றங்களால் ஏறத்தாழ 15% சதவீதம் தேன் குருவிகள் வாழ்விடங்கள் அழிந்து விட்டன.
இம்முறை நாம், உருவத்தில் சின்னஞ் சிறிதாயினும் அழகில் பென்னம் பெரிய செம்மாணிக்க சிறிய கழுத்து தேன் குருவி பற்றிப் பேசுவோம். இந்தப் பறவைகள் மினசோட்டா மாநிலத்தின் மிக சிறிய பறவை வர்க்கங்களில் ஒன்றாகும். இந்தக் குருவிகள் தலையிலிருந்து வால் வரை, வெறும் மூன்றே மூன்று அங்குலங்கள் தாம். மேலும் அதன் சொண்டு இன்னும் ஒரு அங்குலம் நீளம் தரும். இந்தத் தேன் குருவி தலை மேலும், பக்கங்களிலும் வானவில் பிரகாச பச்சை நிறத்தையும், ஆண் பறவைகள் அவற்றின் தொண்டையில் பிரகாச செம மாணிக்கச் சிவப்பு சிறு இறுகுகளையும் கொண்டு காணப்படும். பெண் குருவிகள் மங்கிய நிறங்களையும் தொண்டையிலிருந்து வால் வரை கீழே வெள்ளை நிற இறுகுகளையும் கொண்டு காணப்படும்.
இந்தப் பறவைகள் சூரிய ஒளியில் ஜொலிப்பதைப் பார்க்கவே ஆனந்தமாகயிருக்கும் பொதுவாக தேன் குருவிகள் எமது மாநிலத்தில் காடு,தோட்டங்கள்,பழச் சோலைகள், ஏன் உங்கள் வீட்டின் பின்கட்டில் பல மரங்கள் இருக்குமானால் அங்கும் காணமுடியும். பூக்கள் காணப்படும் வெளித்திடல்களிலும், தேன் குருவி உணவூட்டிக் கூடுகளுக்கு வந்து போயினும், தம் சிறிய கூடுகளை அடர்த்தியான தாவரங்கள் இருக்கும் இடங்களில் தான் பொதுவாகக் கட்டும்.
வழக்கமாகத் தேன் குருவிக்கூடுகள் நிலத்திலிருந்து 5-50 அடி உயரத்தில் அடர்த்தியான மரம்,செடிக்குள் கட்டும். சராசரியாக கூடுகள் 10-20 அடிக்குள் காணப்படும். நீங்கள் மினசோட்டா பூங்காக்கள், காடுகளிலுள்ள சிறிய மரங்கள், செடிகள் உள்ளே உற்றுப் பார்த்தால் தேன் குருவிக்கூடுகள் தெரியும். வழக்கமாகக் குறுக்காக, அல்லது கீழிறங்கும் கோப்புகளில் தான் பெண் குருவிக் கூட்டைக் கட்டும். கூடு உள்ளே மிருதுவானப் புற்கள் கொண்டு சிறிய கோப்பை போன்ற அமைப்புடன் காணப்படும். வெளியே தாவர நார்கள்,சிலந்தி வலைகள், அதன் மேல் உலர்ந்த இலைகள், லைக்கன் Lichen போன்றவற்றினால் மறைத்துக் கொள்ளும். வெளி விலங்குகள், பறவைகள் கண்ணிலிருந்து கூட்டைக் காப்பாற்றுவதே இதன் பிரதான நோக்கு.
எமது பிரதேச தேன் குருவிகள் வெப்பக் கால நிலையை விரும்புவன. அவற்றின் சிறிய உடல்கள் மறை பாகை குளிரில் மினசோட்டா மான்கள் போல் திளைத்துக் கொள்ள அருகதை அற்றவை. பனி காலத்தை இந்தச் சிறிய பறவைகள் மத்திய அமெரிக்கக் கண்டத்தில் செலவழித்து மீண்டும் மே மாதம் இவ்விடம் திரும்பும். தேன் குருவிகள் மினசோட்டாவிலிருந்து கனடா வரை கிழக்கு அமெரிக்கப் பிராந்தியங்களில் கூடுகட்டி முட்டையிடும். வெள்ளை சிறு முட்டைகள் பெண் பறவையால் பராமரிக்கப்பட்டு ஏறத்தாழ 11-16 நாட்களில் குஞ்சுகள் பொரிக்கும். சிறிய பறவைகள் அவற்றின் தாயால் பிரதானமாக உணவூட்டப்படும். இளங்குஞ்சு சுமார் 20-22 நாட்களில் தானாகப் பறக்க ஆரம்பிக்கும். தேன் குருவிகள் வருடத்தில் 1-2 இரண்டு கூடுகள் வரை கட்டும். வெகு சில சமயம் 3 கூடுகள். பிரதான திகைப்பு என்னவென்றால் சில சமயம் பெண் குருவிகள் தனது குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும் அதே தருவாயில் இன்னும் ஒரு கூட்டையும் கட்டுமாம்.
இந்தப் பறவைகள் தம் துணையை நாடும் இந்தக் காலகட்டத்தில் பல சிறிய கீச்சங்களையும், விரைவாக அங்குமிங்கு பறந்து துரத்துவதையும் காணலாம். இந்தக் குருவிகள் உருவத்தில் சிறியது ஆயினும் சிறகடிப்பில் நொடிக்கு 200 தடவை அடித்துக்கொள்ள வல்லன. வழக்கமாகத் தேன் குருவிகள் ஆகஸ்ட் மாதக் கடைசியிலிருந்து செப்டம்பர் மாதம் குளிர் காற்று அடிக்க மீண்டும் தெற்கு நோக்கி மத்திய அமெரிக்காவிற்குப் பறக்கும்.
அந்தப் பறவைகள் உருவத்தில் சிறிதெனினும் தனது கூடுகளைப் பாதுகாப்பதில் மிகவும் கச்சிதமாகக் கழுகைக் கூடத் தாக்க வல்லன. தேன் குருவிகள் தேன் மற்றும் சிறிய பூச்சி புழுக்களையும் உணவாக எடுத்துக் கொள்ளும். இவை சிறிய குருவிகள் என்ற படியால் பல சமயம் சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிகளையும் ஒரு பிடி பிடித்து உண்ணும்.
இந்த அழகிய பறவைகளை நீங்கள் தினமும் பார்க்க விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது சிறு விஷயங்களே. உங்கள் வீட்டுப் பூங்காவில் நீண்ட குழாய் போன்ற தேன் சிந்தும் பல பூக்கன்றுகளை வளர்க்கலாம். இதை விடச் சிறிய தேன் குருவி உணவூட்டி கலங்களை விட்டு ஜன்னல் அருகே வைத்து, 1 பாகம் சீனியுடன் 4 பாகம் தண்ணீர் நன்கு கலந்து வைக்கலாம். வழக்கமாகச் சூடான காலநிலையின் போது நீரை மாற்றிக் கொள்வது நலம்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிறது பழமொழி. நாம் மினசோட்டாவில் பருவகாலம் அவதானித்து தேன் குருவிகள்,தாராக்கள், வாத்துக்கள் பார்ப்பதும். இயற்கையை அனுபவிப்பதும் இன்பமான விஷயம் அல்லவா.
-யோகி
உச்சாத்துணை