\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வேலைத் தளத்திற்கு போக முடியாத போது விடுபடுவது என்ன?

சென்ற 30 வருடங்களில் நான் பல தரப்பட்ட பதிப்பகங்களில் தொழில் பார்த்து வந்துள்ளேன். இவற்றில் பல நிறுவனங்கள் பல்லாயிரம் ஊழியர்களைக் கொண்டவை. தற்போது நான் பணிபுரியும் நிறுவனம் சமூகச் சேவை தாபனம் இதன் மினியாப்பொலிஸ் காரியாலயம் 80 ஊழியர்களைக் கொண்டது.

கணினி மூலம் பணியாற்றும் சில ஊழியர்கள் போன்று நானும் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக வீட்டிலிருந்தபடியே தொலைபேசி கணினி வழியே, ZOOM, MS Team போன்ற மென்பொருட்கள் மூலம் வேலை செய்து வருகிறேன். எனது நண்பர்களில் பலர், ஏன் நமது பனிப்பூக்கள் சஞ்சிகையின் பெரும்பான்மையான எழுத்தாளர்களும், வட அமெரிக்க வாசகர்களும் கூட வீட்டிலிருந்து தான் பெரும்பாலும் தொழிற்பட்டு வருகின்றனர். இதற்கு விதிவிலக்கு மினசோட்டா ராச்செஸ்டர் மேயோ கிளினிக் இன்னபிற மருத்துவப் பணியில் உள்ளவர்கள், வங்கி, .சில்லறை வியாபார மற்றும் உணவகங்களில் பணிபுரியும் மக்கள்.

அதே சமயம் எமக்குத் தெரிந்த சில சிகாகோ வாழ் நபர்கள், குறிப்பாகச் சட்டத்தரணிகள் வரும் ஜூலை மாதத்திலிருந்து படிப்படியாக வேலைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் மினசோட்டாவில் எனது காரியாலயம் அடுத்த மூன்று மாதங்களில் பெரும்பாலான பணியாட்களுக்கு தொழில் பாட்டில் மாற்றம் இருக்காது என்று அறிவித்துள்ளது. ஆயினும் ஊழியர்கள் விரும்பினால் சில நாட்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் பொருட்டு தடுப்பூசி எடுத்த ஆதாரங்களிருந்தால் உதவியாக இருக்கும், ஆயினும் அது கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது.

நான் எனது வேலை சகபாடிகள், மற்றும் தெரிந்த சட்டத்தரணிகள், ஊடகத்தார், பெருநிறுவன பணியாளர்களுடன் இதைப் பற்றி உரையாடிய போது, கலவையான கருத்துகள்  வெளிவந்ததை அவதானித்தேன். இவற்றில் சிகாகோ சட்டத்தரணி நண்பர் கூறியது தனித்து நின்றது. அவர் “நான் எழுதும் சட்ட படிமங்கள் , ஆவணங்களை வீட்டிலிருந்து, பல இரவுகள் ஆராய்ந்து எழுதும் வசதி இருப்பினும், பலமாடி உயர சிகாகோ நகர தனியார் சட்டவியல் காரியாலயத்திலிருந்து தொழிற்படுவது போல் வராது” என்றார். அவர் முப்பத்தைந்து வயதுடைய சட்டத்தரணி. அதற்கு அவர் கூறிய காரணம் “நேரடியாக ஆபீஸ் சகபாடிகள் குறிப்பாக சட்ட உதவியல் அலுவலர் ஒத்தாசையோடு வேலை செய்வது எளிதாகயிருக்கும்” என்பது தான்.

இதே கேள்வியை மினசோட்டா, கலிபோர்னியா, ஆஸ்டின், அட்லான்டா வாழ் ஏறத்தாழ அதே வயது கணினி தொழில்நுட்பவியலாளர்களைக் கேட்ட போது அவர்களின் பதில்கள் வித்தியாசமாக இருந்தது. அவர்கள் ஏற்கனவே உலகளாவிய தொழிலாளர்களுடன் வேலை செய்வது சர்வ சாதாரணம். எனவே அவர்கள் அலுவலகம் சென்று செயல்பட வேண்டியது அவசியமில்லை என்றார்கள். உதாரணமாக சிலர்  இந்தியா, கிழக்கு ஐரோப்பிய தொழிநுட்பவியலாளர் உடன் இரவு,பகல் என்றில்லாமல் தொடர்பு கொள்வார்கள். ஆதலால் சிலர் தமக்கு நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்வது பிடிக்கிறது என்கிறார்கள். இவர்களில் மேலும் சிலர் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் தமக்குப் பிடித்த இடங்களுக்கு உல்லாசமாகப் பயணம் செய்து  அங்கிருந்தவாறே வேலை செய்யலாம் என்றார்கள்.

இது 30-35 வருட காலம் அலுவலகச் சூழலிலிருந்து பணிபுரிந்த எனக்கு வித்தியாசமான விடயமாகவே தெரிந்தது. இது தலைமுறை வித்தியாசமாக இருக்குமோ என்றும் யோசித்தேன். காரணம் என்னைப் பொறுத்த அளவில் அலுவலகச் சூழலில் பல வெற்றிகளை மற்றவர் ஊழியர்களுடன் உடன் பகிர்ந்து இன்புற்றதையும், அதே சமயம் வேலை பளு, சிக்கலகளை குழுமமாக தாங்கி ஒருவர்க்கு ஒருவர் துணை நின்று நம்பிக்கைத் தெரிவித்துக் கொண்ட பல சம்பவங்களும் ஞாபகங்களும் வந்தன. எனவே தனியாக தொழிற்படுவது சற்று அசாதாரணமானது என்று எனக்கு தோன்றியது.

மேலும் சில அன்றாட நிகழ்வுகள். உதாரணமாக மற்ற தொழிலகங்கள் போன்ற ஊடகத்துறையில் பல சிரிப்புக்கு உரிய விடயங்கள், சிரிப்பின் பின்னர் சிந்தனைக்குரிய விஷயங்கள், குறிப்பிட்ட வரையறையில் கடினமாக உழைத்து பதிப்புக்களை மின்னவலயம் மூலம், மற்றும் அச்சுப் புத்தகங்கள் ஆக சுடச்சுட வெளியிடுதல், அதை உபயோகிப்பவர்கள் வியப்பை, மகிழ்ச்சிகளை உடன் குழுவாக வர்த்தக வைபவங்கள் பொழுது அறிதல் போன்ற யாவும் மக்களின் நேரடி கூடல்களைச் சார்ந்த நடவடிக்கைகள். இவை ZOOM கலந்துரையாடல்களில், அல்லது மெய்நிகர் மாநாடுகளில் (virtual conferences) கிடைத்ததாக தெரியவில்லை. இது நாம் வருடாந்தம் நூற்றுக்கு மேற்பட்ட மாநாடுகள் நடத்துவதில் இருந்து வரும் நேரடி அவதானிப்பு.

சில நிருபர்கள், பத்திரிகை எழுத்தாளர்கள், புள்ளிவிபரவியலாளர்கள் தமக்குத் தனித்துத் தொழிற்படும் சௌகரியமும், அதே சமயம் வேண்டும்பொழுது உடனடி கூட்டங்களை MS Team, WebEx மூலம் போடுவது பிடிக்கும் என்று கூறினர். இது நிச்சயமாக அவரவர் தொழிலின் இயல்பாட்டை ஒற்றி நமது நவீன தொழிலாளர்கள் இயங்க விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது.

அது மட்டுமல்ல தொழிலக சந்தோஷ ஒன்று கூடல்கள், பிறந்த நாள், மற்ற செய்திகளை நேரடியாக முகத்துக்கு முகம் கொண்டாடல் கூட ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனலாம். இல்லை இதுவும் அவரவர் கணினியில். அவரவர் கொண்டு வந்த உணவுகளுடன் கொண்டாடப்படுகிறது எனலாம். வசதியான சில வேலைத் தளங்கள் விசேட சேவைகள் மூலம் தொழிலாளர்கள் வீடுகளுக்கும் பண்டங்களை ஏற்கனவே அனுப்பி வைத்து குறித்த நாளில் கொண்டாட முனைகிறார்கள். இப்பேர்பட்ட கணினி ஒன்று கூடல்கள் ஓரளவு அலுவலகச் சூழலை உருவாக்கினும், இது நேரடியாக வேலைத்தளத்தில் மக்கள் ஒருவருடன் ஒருவர் பக்கப் புறத்தில் குசாலம் விசாரிப்பது போல் வர முடியாது. இதன் ஒரு காரணம் ஏற்கனவே வேலை சார்பாக 7-8-10 மணித்தியாலம் கணினி முன் குந்தி விட்டு, அதன் பிறகு வேலை நண்பர்களைத் தேடி பிடித்து பேசுவது எல்லோரது குறிக்கோளாகவும் இருக்க முடியாது.

இதற்கு இன்னொரு உதாரணம். அண்மையில் வேலைத் தளத்தில் புதிதாக ஒரு செயல்திட்டப்பணி மேலாளரை (Project Manager) வேலைக்கு அமர்த்தினேன். இவர் இலகுவாக மற்றவர்களுடன் பழகும் சுபாவம் உள்ளவராக இருப்பினும், வேலையை முற்று முழுதாக கணனித் தொடர்புடன் ஆரம்பித்து அதே சமயம் சக வேலையாளர்களுடன் பணியாற்றுவதில் பல நடைமுறைச் சிரமங்களைச் சந்தித்ததை அவதானிக்க முடிந்தது. இவற்றில் பல விஷயங்களை நேரடியாக காரியாலயத்தில் சகபாடிகளுடன் ஆரம்பித்து இருந்தால் இலகுவாயிருக்கும் என்பது எனது சிந்தனை.

தற்போதையச் சூழலில் நாம் ஒரு சாரார் ஏற்கனவே ஒன்று கூடி வேலை செய்த அனுபவங்களை நாம் தற்போது தனித்திருப்பினும், முன்னய செயல்கள் காரணமாக எம்மில் ஒருவர்க்கு ஒருவர் இடையே நம்பிக்கை உண்டு பண்ணி அதனூடு வளரக் கூடியதாக உள்ளது. அதே சமயம் புதிதாக கணினி மூலம் மாத்திரம் ஆரம்பிப்பவர்கள் தமது சகபாடிகள் நம்பிக்கை, வேண்டிய ஒத்தாசைகள் பெற பலநாட்களாகும் என்று தோன்றுகிறது. இது புதிதாக வேலையில் நுழைபவர்களின் மீண்டும் நேரடியாக யாவரும் ஒன்று கூடும் சந்தர்ப்பம் வரும் வரை நீடிக்கலாம். இது புதிய ஊழியர்களுக்கு சாதகமானதல்ல.

என்னைப் பொறுத்த அளவில் பக்கத்தில் சகபாடி ஊழியர்களுடன் தொழில் பார்க்க முடியாமை வருத்தத்திற்கு உரியது. முக்கியமாக நாம் சமூகவியல் இணைவுகளைப் பிரதானமாகக் கொண்டு வாழும் மனித இனம். எனவே எமது வாழ்வில் மற்றவர்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளுதல், மற்றும் முகத்திற்கு முகம் கண்டு கொள்ளும் போது நாம் பரிமாறும் சொற்களுக்கு அப்பாற்பட்ட சமிக்ஞைகள் (non-verbal-communication) எமது செயல்பாட்டிற்கு அவசியம் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இவையே வேலைத் தளத்திற்குப் போக முடியாததால் வந்த சில பரி விளைவுகள்.

யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad