நுண் நெகிழி
“எங்கும் நிறைந்திருப்பான் இறைவன்” என்பார்கள். இறைவனை ஓவர்டேக் செய்து கொண்டு இன்னொரு விஷயம் உலகம் முழுக்க நிறைந்து வருகிறது. அது தான் நுண் நெகிழி. ஆங்கிலத்தில், மைக்ரோ ப்ளாஸ்டிக் (Micro plastic).
ப்ளாஸ்டிக் தெரியும். அது என்ன மைக்ரோ ப்ளாஸ்டிக்? அளவில் மிகவும் சிறியதாக, அதாவது 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் இருக்கும் ப்ளாஸ்டிக் துண்டுகளை மைக்ரோ ப்ளாஸ்டிக் என்கிறார்கள். நமக்குத் தெரிந்த ப்ளாஸ்டிக் அபாயங்களை விட, இந்த மைக்ரோ ப்ளாஸ்டிக் மூலம் உண்டாகும் அபாயங்கள் ரொம்பவும் அதிகம். நிலம், நீர், காற்று எனப் பஞ்சப்பூதங்களிலும், இந்த நுண் நெகிழி பூதம் ஒளிந்திருக்கிறது.
நுண் நெகிழியின் மூலம் என்ன? எங்கிருந்து கிளம்பி வந்தன இந்த நுண் நெகிழிகள்? மைக்ரோ பீட்ஸ் (Micro beads) என்னும் நெகிழி துகள்கள் முகப் பராமரிப்புக்கு பயன்படும் ‘ஃபேசியல் ஸ்க்ரப்’ (Facial Scrub) பசையில் பெருமளவு உள்ளன. பரபரவென நமது தோளில் உருளும் இந்தத் துகள்கள், முகத்தைக் கழுவிய பிறகு தண்ணீரில் உருண்டோடி, பிறகு நமது நீர் நிலைகளில் சென்று சேர்கிறது. ஒரு காலத்தில் பாதாம் பருப்பு, பயத்தம் பருப்பு என்று பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இப்போது அதற்குப் பதிலாக ப்ளாஸ்டிக்.
அதே போல், நாம் பயன்படுத்தும் துணிகளிலும் தற்சமயம் நெகிழிப் பயன்பாடு உள்ளது. இந்தத் துணிகளைத் துவைக்கும்போது அவை உடைந்து தண்ணீரில் கலந்து வெளியேறுகிறது. பயன்பாட்டில் இருக்கும் வேறு பலவகை நெகிழிகளும் பிற்பாடு உடைந்து, நுண் நெகிழியாக மாறி மழை போன்ற நீர் ஓட்டத்தில் கடலில் கலக்கிறது. நமது வாகனச் சக்கரத்தில் இருக்கும் ரப்பர் தொடர் ஓட்டத்தில் சாலையில் சிறிது சிறிதாகப் பிய்ந்து போகும் போதும், அவை நீரோட்டத்தில் கலந்து கடலில் கலக்கிறது.
கடல் தண்ணீரை எப்பகுதியில் எடுத்து ஆராய்ந்து பார்த்தாலும், அதில் நுண் நெகிழி துகள்கள் இல்லாமல் இருப்பதில்லை. ஆர்ட்டிக் பகுதியில் இருக்கும் பனியிலும் கூட இத்துகள்கள் உள்ளன. கடல்வாழ் உயிரினங்கள் வேறு வழியே இல்லாமல் நுண் நெகிழிகளை உண்கின்றன. அதன் பின், அவற்றைச் சாப்பிடும் மனிதன் உள்ளிட்ட பிற உயிரினங்களில் இந்த நெகிழி வந்து சேர்கிறது. கடல் உப்பு உள்ளிட்ட நமது உணவு பொருட்கள் பலவற்றில் இந்த நுண் நெகிழி துகள்கள் கலந்து நம் உடலில் கடந்த பல வருடங்களாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கிறது. இவை மனித கழிவுகளில் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் குழாய் தண்ணீர் மற்றும் பாட்டில் தண்ணீரை ஆய்வு செய்ததில் 80%க்கும் மேற்பட்ட சாம்பிள்களில் நுண் நெகிழியைக் காண முடிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து உட்கொள்வதால் உடல் பருமன், இன்சுலின் கோளாறுகள், மலட்டுத்தன்மை, கேன்சர் எனப் பல பெரிய பிரச்சினைகளை மனித உடல் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மருத்துவ நிபுணர்கள் மனித குலத்துக்கு நுண் நெகிழியால் ஏற்படும் / ஏற்பட இருக்கும் நீண்டகால உபாதைகள் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். பொது மக்களாகிய நாமும் இது குறித்த தீர்வுகளை இப்பொழுதே யோசித்து நடைமுறைபடுத்த தொடங்க வேண்டும்.
முதலில், நுண் நெகிழி குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். இது குறித்துக் குடும்பத்தாருடன், நண்பர்களுடன் பேச வேண்டும். நெகிழி பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க முயல வேண்டும். முடியாதபட்சத்தில், பயன்படுத்திய நெகிழிகளைச் சரியான முறையில் கையாண்டு, மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும். நுண் நெகிழி இல்லாத, பாரம்பரிய தேகப் பராமரிப்புப் பொருட்களைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். தனிநபர் வாகனப் பயன்பாட்டை முடிந்த மட்டும் குறைத்துக்கொண்டு, பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்த வேண்டும். ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீரைத் தவிர்த்துவிட்டு, வடிகட்டிய தண்ணீரை உட்கொள்ள வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் வடிகட்டிகள் (Water filter) நுண் நெகிழிகளை வடிகட்டுமா என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
வருங்காலத்தில் நுண் நெகிழிகள் மேலும் பெருகி, சுற்றுசூழலுக்கு ஏற்படுத்த போகும் சேதாரத்தை யோசித்துப் பாருங்கள். நமது வருங்காலச் சந்ததியினருக்கு நாம் கொடுக்கப் போகும் முக்கியச் சொத்து, நல்ல வாழும் சூழல் தான். அப்படி ஒரு நல்ல சூழலை அமைப்பது நம் கையில் தான் உள்ளது. மேலே கூறியது போல், முடிந்தவரை நெகிழி பயன்பாட்டைத் தவிர்ப்போம். பயன்படுத்திய நெகிழிகளைச் சரியாகக் கையாளுவோம். நுண் நெகிழியின் அபாயத்தை அறிவோம். நம் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடம் நுண் நெகிழியின் ஆபத்துக் குறித்துப் பகிர்வோம். நுண் நெகிழி என்ற எமனை எதிர்த்து போராடத் தொடங்குவோம்.
- சரவணகுமரன்