Dr.டேஷ் நிறுவனத்தின் தொண்டு உதவி
டாக்டர் டேஷ் (Dr.Dash Foundation) தொண்டு நிறுவனமானது வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தொண்டு நிறுவனமானது சேவை மனப்பான்மையுடன் பல்வேறு அமைப்புகளுக்கும், இந்திய அமைப்பு நிறுவனங்களுக்கும், அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் இசை இயல் நடனங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. முக்கியமாக இந்த நிறுவனத்தை நடத்துபவர் டாக்டர் டேஷ் என்பவர் மினசோட்டாவில் அமைந்துள்ள ஹிந்து மந்திர் கோவில் அவைத் தலைவராக (Chairman) உள்ளார்.
பொதுவாக டிசம்பர் மாதங்களில், விடுமுறை தினக் கொண்டாட்டங்களுக்கிடையே மக்கள் பரிசுகளை மாற்றிக் கொள்வதும் பரிசுகள் கொடுப்பதும் வழக்கமாக உள்ளதை அறிந்திருப்போம். டாக்டர் டேஷ் நிறுவனம் கடந்த டிசம்பர் திங்கள் விடுமுறை தினங்களில் மினசோட்டா மாநிலத்தில் உள்ள கோவிலுக்கு வரும் இந்திய மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) விடுமுறை பரிசுப் பொருளை தன்னார்வத் தொண்டர்கள் மூலம் அவர்கள் இல்லங்களுக்கு சென்று வழங்கியது.
கோவிலுக்கு வரும் மூத்த குடிமக்களுக்கு கோவில் நிர்வாகம் பல விதமான திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு வாரமும் பல்வேறு தன்னார்வத் தொண்டர்கள் தங்களது வாகனங்களில் மூத்தகுடி மக்களைக் கோவிலுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். இந்தச் சேவையை மனதில் கொண்டு டாக்டர் டேஷ் (Dr.Dash Foundation) தொண்டு நிறுவனம், புதிய வாகனம் ஒன்றை கோவிலுக்கு இலவசமாக அளித்துள்ளது. இந்த வாகனத்தின் மூலம் தன்னார்வத் தொண்டர்கள் மூத்த குடிமக்களை, அவர்களது இல்லத்திலிருந்து கோவிலுக்கு அழைத்து வந்து தரிசனம் முடித்த பின்னர் அவர்களை வீட்டில் இறக்கி விட்டுவிடுகின்றனர். புதிதாக வாங்கப்பட்ட வண்டியைக் கோவில் நிர்வாகத்திடம் டேஷ் நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர்.
அந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு.
ராஜேஷ் கோவிந்தராஜன்