\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

முதிர்காதல்

புத்தாடை அணிந்து புறப்பட்டுச் செல்கையில்

புழுதி பறந்திடும் புல்லட்டின் வேகத்தால்!

புரவியில் விரைந்திடும் புருஷோத்தமன் என

புன்னகை மத்தியில் புருஷனாய் வரித்திட்டாள்!

 

நடைபாதை போகையிலே நளினமாய்த் தொடர்ந்திடுவான்!

நகைத்துத் திரும்பிடிலோ நயமாய் மறைந்திடுவான்!

நமுட்டுச் சிரிப்புடனே நயனமிவன் மீதிருக்க

நம்பிக்கை ஒளிதந்து நட்பாய் இதழ்குவித்தான்!!

 

காலையில் எழுகையில் காளையின் நினைப்பு!

கால்வண்டிப் பயணத்தில் காதலனைத் தேடல்!

காலம் முழுக்கக் காதலாய் வாழ்வோமென

காரிகை அவளும் காந்தர்வமாய் மணந்திட்டாள்!

 

வழிபாட்டுத் தலங்களிலும் வழிபடும் வேளையிலும்

வளையலைத் திருத்தும்வகை வதுயிவனை விழுங்கிட்டாள்!

வயதின்னும் ஆகவில்லை வளைக்கரம் நீட்டிட

வரனிவனே எனமனதில் வரைந்தே முடித்திட்டாள்!

 

அரசல் புரசலுமாய் அவளின் காதலது

அவர்களின் காதுவிழ அண்டமே அதிர்ந்தது!

அலறல்கள் பலவும் அதட்டல்கள் பலவும்

அனைத்தையும் உதறியே அவனுடன் கைகோர்த்தாள்!!

 

ஆண்டுகள் பலவும் ஆறுபோல் உருண்டோட

ஆர்ப்பாட்டம் இல்லாது ஆக்கினைகள் நடந்தேற

ஆண்மகன் இன்பமாய் ஆதரிக்கும் பெண்மையுடன்

ஆலயம்போல் இல்வாழ்வு ஆர்ப்பரித்து வாழ்ந்திருந்தனர்!

 

பிள்ளைகள் இரண்டும் பிறந்து மகிழ்வித்திட

பிறர்க்கேதும் துன்பமும் பிழைகளும் இழைத்திடாது

பிரியமுடன் இருவரும் பிணைந்து மகிழ்ந்திட

பிரகாசமான வாழ்வைப் பிரபஞ்சத்தில் அடைந்தனர்!

 

என்றும் காதலாய் எதிலும் இணக்கமாய்

என்பும் பிறற்கீந்து எப்போதும் அன்போடு 

எழுபது அகவையை எட்டிப் பிடிக்கையிலும்

எழில் குறையாமல் எளிமையாய் வாழ்ந்தனர்!

 

காதலரின் கன்னக்குழி காலத்தால் கோடுகளாயினும்

காதுகளின் கேட்கும்திறன் காணாமற் போயிடினும்

கால்வயிறு தான்பெருத்து காதமது வளர்ந்திடினும்

காதலது குறையாது! காரிருளால் மறையாது!!

       வெ. மதுசூதனன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad